பக்கங்கள்

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

நீலத்திமிங்கலத்தின் வண்ணம்

எந்த வலையிலும் சிக்காமல்
வலைதளத்தில் உலவிக் கொண்டிருக்கும்
நீலத்திமிங்கலம்...
ஆண்பாலா பெண்பாலா
மெய்யா மெய்நிகரா
கார்ப்பரேட்களின் கூலியா
கலகம் செய்பவனா(ளா)
கற்பனையா கற்பனைகளை கட்டப்படுத்துபவனா(ளா)
அபாயகரமான இந்த நீலத்திமிங்கலம்
எந்த கடலில் இருக்கும்
உவர் நீரில் இருக்குமா
பைட்களில் இருக்குமா
அடர்ந்த வனாந்தரத்திலா
அடர்மிகு நகரிலா
அதன் கட்டளைகள் எங்கிருந்து எழுதப்படுகின்றன
நோவா பேழையிலா
குருஷேத்திரத்திலா
பள்ளி முதல் பணியிடம் வரை
உணவு முதல் ஆதார் வரை
எல்லா கட்டளைகளுக்கும்
கட்டுப்பட்டே பழக்கப்பட்ட சமூகம்
ஒரு திமிங்கலத்தின் கட்டளையை
ஏற்பதில் என்ன சங்கடம்
இந்த சமூகம் விழித்துக்கொள்ள முயல்கின்றதா
சவநிலைக்கு செல்கின்றதா
ஓட்டு போட்டுவிட்டு செல்பி எடுத்து
பேஸ்புக்கில் போட்டு முதல் கட்டளையை கடந்தவர்கள்
எத்தனை பேர் என
யாரேனும் அறிவீர்களா
செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொண்டு
செல்பி எடுத்தபோது அதன்
அடுத்த கட்டளையை நிறைவேற்றியதை
யாரேனும் உணர்ந்தீரா
இந்த உணவை உண்ணாதே
என சொன்னபிறகு
அந்த உணவை வைத்திருந்தனர் என
கொன்று குவித்த போது
இந்த விளையாட்டின் விபரீதத்தை
புரிந்து கொண்டீர்களா
நீலத்திமிங்கலம் கடற்பசுக்கென
சில விதிமுறைகளை விதித்து
கட்டுப்படுத்திய கட்டளைக்கு
எங்ஙனம் கட்டுப்பட்டீர்
என அறிவீர்களா
அது இருக்கும் கடலின் ஆழத்தில்
மூச்சுத்திணறி இறந்த
மீன் குஞ்சுகளையேனும் அறிவீர்களா
இன்னும் பல கட்டளைகள்
ஒவ்வொன்றிற்கும்
ஏன் ஒண்ணுக்கு போவதற்கும்
உன் அடையாளங்களை காட்ட வேண்டும்
இவ்வாறாக இன்னும் பல
இப்போது சொல்லுங்கள்
இந்த நீலத்திமிங்கல விளையாட்டில்
எத்தனையாவது லெவலை
கடந்துள்ளீர்கள்
உங்கள் விளையாட்டின் வண்ணம் அறிவீர்களா
பால் மணம் மாறா பிஞ்சுகளின் இரத்தம்
வெள்ளை மீது படிந்த சிவப்பு இரத்தம்
அதை புனிதமெனவும் நீங்கள் வணங்கலாம்
இந்த விளையாட்டில் இருந்து
எப்படி வெளியேறுவீர்கள்
- பாரதி ஆரோக்கியராஜ்
01.09.2017