பக்கங்கள்

வெள்ளி, 27 அக்டோபர், 2017

பாலை நிலத்துக் காதல்

தமிழ் ஊடகங்களில் பெண்கள் மீதான சாதி மற்றும் குடும்ப அமைப்பின் பண்பாட்டு வன்முறை


.ஆரோக்கியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
arockia.raj49@gmail.com
அறிமுகம்:
மனித குல வரலாறு என்பது போர் மற்றும் காதலின் மீது எழுதப்பட்ட ஒன்று என கிரேக்கத்து ஹோமர், சீன செவ்வியல் இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், இராமாயணம் போன்ற உலகின் பல இலக்கியங்களில் இருந்து அறிய முடிகின்றது. தொல்காப்பியம் தமிழர் வாழ்வுதனை அகம் புறம் என இரு பெரும் பிரிவுகளாக பகுத்துள்ளது. உளவியல் அறிஞர்கள் மனித மனத்தினை வன்மமும் காமமும் கலந்ஒன்று என கூறுகின்றனர். மனித உணர்வுகளில் மிக மெல்லிய உணர்வாக காதலையும், முரட்டுத்தனமான பெருமைபடக்கூடிய ஒரு செயலாக வீரத்தினையும் இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழர் வாழ்வில் இவைதான் முதன்மையா? இவை இரண்டு உணர்வுகள் மட்டும் முதன்மையாக பேச என்ன காரணம்? காதல் எனும் உணர்வு எவ்வாறு சமூக அரசியல் தளத்தில் இன்று வரை ஒரு முக்கிய கருத்தியல் வடிவமாக இருந்து வருகின்றது? மனிதக் காதல் எவ்வாறு பக்திக்காதலாக மாற்றப்படுகின்றது? காதல் எனும் உணர்வு மனித வாழ்வினை ஒரு அமைப்புக்குள் எவ்வாறு கொண்டு வருகின்றது? குடும்ப அமைப்பின் உருவாக்கத்தில் கூடவே இணைத்து வருகின்ற சாதி, அரசு அதிகார ஆதிக்கத்திற்கு காதல் எவ்வாறு ஒரு அடிப்படை உணர்வாக அமைகின்றது என்பன போன்ற கேள்விகள் தமிழர் வாழ்வியலை இன்னும் மிக நுட்பமாக அறிந்து கொள்ள உதவும்.

வீரம் காதல் என்ற இரு உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று இயையுடையது. இவை இரண்டும் அரசு உருவாக்கத்திற்கு மிக அடிப்படையாக விளங்குகின்றது. வீரம் எனும் உணர்வு காதலைச் சார்ந்து தான் இருக்கின்றது. ஆக அரசு-அதிகார கட்டமைப்பில் மிக முக்கியமான காரணியாக காதல் எனும் உணர்வு இருக்கின்றது. காதல் எனும் சொற்பதம்அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில்ஆகிய பொருட்களை தருகின்றன என அகராதி குறிப்பிடுகின்றன. (விசயகுமாரன், 2012)

சங்க இலக்கியம் தொடங்கி கவிதை, சிறுகதை, புதினம், நாவல், திரைப்படங்கள், செய்தி ஊடகங்கள், இணையம் ஆகிய அனைத்து வகையான தொடர்பியல் ஊடகங்களிலும் காதல் ஒரு பேசு பொருளாக இருக்கின்றது. அந்த காதல் மனித வாழ்வினை எந்த அளவுக்கு பிரதிபலிக்கின்றது என்ற கேள்வி மிக அவசியமானதாகின்றது. காதல் எனும் உணர்வினைப் போல அது குறித்த பிரதிபலிப்புகளும் அரசின் ஒரு பண்பாட்டு அதிகார வளையத்திற்குள்ளேயே இருந்து வருகின்றது. இன்று காதல் குறித்த வன்முறைகள் எவ்வாறு ஒரு அரசியல் செயல்பாட்டின் ஒரு வடிவமாக இருக்கின்றது. உதாரணமாக சாதி ஒழிப்பு பேசுபவர்கள் காதலின் பொருட்டு நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகளை கண்டித்தும், சாதி அமைப்புகள் காதலினை நாடகக்காதல் என்றும் கூறுகின்றனர்.

காதல், வன்முறை, ஆன்மீகம், சமயம், சாதி, நவீனம், முதலாளித்துவம் ஆகியவற்றிற்கிடையே மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. இதனை இன்று உள்ள திரைப்படங்கள், செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இறைபக்தி, சாதி மறுப்புத்திருமணம், ஆணவக்கொலைகள், வணிக வளாகங்களில் கொண்டாடப்படும் காதலர்தினங்கள், இணையக்காதல்கள், காமம், கள்ளக்காதல், கொலை ஆகியனவற்றிற்கான தொடர்பு என்பது ஒரு காதலின் அரசியல் செயல்பாட்டு தொகை வடிவமாக இருக்கின்றது. இன்று ஊடகங்களில் காதல் பற்றிய செய்திகள் என்பன காதல் திருமணம் செய்தவர்கள் வெட்டிக்கொலை, காதலிக்க மறுத்த பெண் மீது வன்முறை (வெட்டிக்கொலை, அமிலம் வீசுதல், கடத்தி பலாத்காரம் செய்தல்) கள்ளக்காதல் காரணமாக கொலை என இவ்வாறாகத்தான் இருக்கின்றது.

காதல் எனும் கருத்தியல்:
காதல் என்பது இன்னொரு உயிரின் இருப்பினை ஏற்றுக்கொள்வது, நேசிப்பது. அதன்மீது ஆதிக்கம் செலுத்துவது/பணிந்து போவது. ஆக காதல் என்பது இந்த உலகில் தன்னுடைய இருப்புக்கும் இன்னொரு உயிரின் இருப்பிற்குமான விழைவே ஆகும். ”ஒரு மரத்தில் இருக்கும் கூட்டைப் போல, கூட்டில் வாழும் பறவை போல. பறவை பறக்கும் ஆகாயம்என இயற்கையின் இத்தகைய பிரம்மாண்ட காட்சிகள் ஒவ்வொன்றும் இன்னொன்றின் இருப்பினை ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்று உணர்த்துகின்றது. ஆனால் இன்று மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பிரமாண்டம் என்பதே அதிகாரம் சார்ந்த விஷயம். சமயம், சாதி, பெருவணிகம் என்ற அதிகார மையங்கள் இன்றைய பிரமாண்டங்களை உருவாக்குகின்றது. இந்த பிரமாண்டங்கள் இன்னொரு உயிரின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. (தொ. பரமசிவன், சமயம்:16) (ரஸ்ஸல், பெர்ட்ரண்ட்) காதல் எனும் உணர்வு இன்னொரு உயிரின் இருத்தலின் பொருட்டு உருவாகும் விழைவு மட்டுமின்றி அது ஒரு அதிகார அமைப்பின் ஒரு உணர்வியல் உருவகம். அது சமூக பண்பாட்டு தளத்தில் மிக முக்கியமான அரசியல் வடிவமாக உள்ளது. ஆக காதல் என்பதை இருபாலர்களுக்கு இடையே ஏற்படும் இணக்கம், கவர்ச்சி, பற்று என்று மட்டும் புரிந்துகொள்ளாமல் அதனை அரசியல் தொகைப்பாட்டின் வடிவமாகக் கருதவேண்டும்.

காதல் கொண்டவர்களைகாதலில் விழுந்துட்டாங்கஎன கூறுவது வழக்கில் உள்ள சொல்லாடலாகும். ‘தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்எனத் தொடங்கும் திரைப்பாடல் போன்றவை கவனிக்கத்தக்கது. விழுவது என்பது தனது சுயகட்டுப்பாடு இன்றி பலவீனமடைந்து வீழ்வதாகும். ஆக காதல் என்பது அவ்வாறாகவா இருக்க வேண்டும்? காதலில் விழுந்து விடாமல், தன்னுள் இருக்கும் காதலை அறிவது எப்படி என சிந்திக்கவேண்டும் என ஜிஷெக் (2016) கூறுகின்றார். கீழைத்தேய மரபில் தன்னுள் இருக்கும் காதலை அறிதல் என்பது இறைக்காதல் என்ற நிலையில் இருக்கின்றது. ஆண்டாள் திருப்பாவை, பாரதியார் பாடல்கள் என பல தமிழ் இலக்கியங்களில் உள்ளன. தன்னுள் இருக்கும் காதலை அறிதல் என்பது இறைக்காதலாக உருமாறுகின்றது. நடைமுறையில் அந்த காதலுக்கு தடைகள் எதிர்ப்புகள் உருவானதின் காரணமாக, நீதியற்ற செயல்கள் ஆகியவை அதை இறைத்தன்மையாக மாற்றுகின்றன. மதுரைவீரன், காத்தவராயன் போன்றோர் கதைகள் இதற்கு சான்று.

இன்னொரு புறம் பெண்களை துரத்தி துரத்திக் காதலிக்கும் போக்கினை தமிழ்த்திரைப்படங்களில் தொடர்ந்து காட்சியாக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம் என்பது போன்ற மனநிலையை பொது தளத்தில் உருவாக்கியுள்ளது. அதற்கு  இந்த சமூக அமைப்பும் ஒரு பின்புலக்காரணியாக இருக்கின்றது. பெண் என்பவள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு உடையவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு காரணமாகின்றது. ஆனால் ஒரு பெண்என் பின்னால் வராதேஎன்று சொன்னால் கூட அதை எதிர்மறையாக புரிந்து கொண்டு அந்த பெண்ணை தொடர்ந்து பின்தொடர்வது. அதையும் மீறி அந்த பெண் அறைந்தாலோ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தாலும்மோதல்ல தான் காதல் ஆரம்பிக்கும்’ ‘இன்னைக்கு அடிக்கிற கைதான் நாளைக்கு அணைக்கும்என்பன போன்ற மனநிலையை திரைப்படங்கள் பொதுபுத்தியில் உருவாக்கி இருக்கின்றது.

தமிழ் ஊடகங்களில் காதல், வன்முறை:
சமகாலத்திய தமிழ் ஊடகங்களில் காதல் குறித்த சித்தரிப்பு எவ்வாறாக உள்ளது என்ற புரிதலுக்கு தமிழ்சமூக வரலாற்றின் பின்புல அரசியலையும் புரிந்துகொள்வது அவசியமாகின்றது. காதல் என்பது பெண்ணின் மீது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது ஒடுக்குதலை நிலைப்படுத்தி அரசு தன்னை ஒரு அதிகார நிலையிலேயேயும், மக்களை ஒரு பதற்ற நிலையுடனும் வைத்திருக்க முயல்கின்றது. இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த செய்திகள் தினமும் ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றன. அதை ஊடகங்கள் எவ்வாறு செய்தியாக்குகின்றன, ஆதிக்க மனநிலை கொண்ட சமூகம் அதை எவ்வாறு உள்வாங்குகின்றது. பொதுத் தளத்தில் அது உருவாக்கி இருக்கும் கருத்து நிலை என்ன? என்பன போன்ற கேள்விகள் விவாதத்திற்கு உரியன. அதில் ஊடங்களில் கையாளப்படுகின்ற சொல்லாடல்களின் அரசியல் என்பது ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது.

கற்பழிப்பு என்பதனை வன்புணர்வு என்றும், கௌரவக் கொலைகளை ஆணவக் கொலை என்றும், ஒருதலைக் காதலை, துரத்தி துரத்தி காதலித்தலை (Stalking) வன்தொடர்தல் என்சொற்றொடர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் விபச்சார அழகி, கள்ளக்காதல் போன்ற சொற்றொடர்கள் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிலவுடைமை சமுதாயம் உருப்பெற தொடங்கியதன் அடிப்படையாக, குடும்பம், கற்பு, பெண்ணின் புனிதம் போன்ற கருத்தாக்கங்கள் உருப்பெறத் தொடங்கின. நிலம், பெண் ஆகியன ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம், வளமை ஆகியனவாக கருதப்பட்டு அதன்மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட அகமண முறை காரணமாக அமைந்தது. சமூகத்தில் ஒரு ஒழுங்கை உருவாக்க முயன்றது. இன்ன சாதியினர் இன்ன சாதியினரோடு தான் உறவு கொள்ள வேண்டும் என்ஒழுங்கு. ஒழுங்கு என்பதே வன்முறை பொதிந்த ஒரு கருத்தியல் ஆகும். (கு. காரல்மார்க்ஸ், 2016) ஒரு பண்பாட்டில் எங்கு ஒழுங்கிற்கான தேவை உருவாகின்றதோ அங்கு இலக்கியங்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவான இலக்கியங்களின் தொடர்ச்சியாக இன்றைய ஊடகங்களும் திரைப்படங்களும் இருக்கின்றன.

இங்கு காதல் அரசியலின் தொகை வடித்தினை மூன்று பகுதிகளாக காணலாம்.
1. ஆண் திமிர்: ஆதிக்க எண்ணம் கொண்ட ஆண் மனநிலையும் கிட்டதட்ட இதே நிலையில் செயல்படுகின்றன. அதன் காரணமாக தன்னை பிடிக்காத பெண்ணை துரத்தி துரத்திக் காதலிப்பது, அமிலம் வீசுதல், கொலை செய்தல், கடத்தி வன்புணர்வு செய்தல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்திய சமூக மரபில் பெண் என்பவள் ஆணுக்கு அடுத்த படிநிலையில் இருப்பவள். ஆக ஒரு ஆண், ’பெண்ணை தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல விரும்பலாம் காதலிக்கலாம், அந்த பெண் விரும்பவில்லை என்றபோதும்என்ற மனநிலை இருக்கின்றது. காதல் என்பது சமத்துவத்தை உருவாக்க வேண்டும். மாறாக  வன்முறையை உருவாக்கக் கூடாது. ”உயிர்கள் யாவும் தம்தம் உரிமைகளையும், தேவைகளையும் பிறர் தடையின்றியும் பிறர்க்கு இடையூறு இன்றியும் பெறுவதும், ஒரு உயிர் மற்றோர் உயிர்க்கு உதவியாக வாழ்தலுமாம்என பெரியார் ஈ.வெ.ரா. (22.01.1928) கூறுகின்றார். பெரியார் கூறுவது போல அழியட்டும் ஆண்மை என்பதே சமூகநீதியையும் சுயமரியதையையும் சமூக விடுதலையையும் உருவாக்கும் வழியாகும்.

2.சாதி: குறுந்தொகைப் பாடல் கூறும் யாயும் யாயும் யாராகியரோஎன்று இருந்த காதல் சாதியப் படிநிலை உருப்பெற்ற பின்பு காதல் திருமணங்கள் செய்வது என்பது சாதிஅமைப்பிற்கு, அவமானமானதாக கருதப்பட்டு பெற்றோர்களே தம்பிள்ளைகளை கொலை செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனை சாதி அமைப்புகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. ஜீன்ஸ் பேண்ட் போடுவதானால் தம் வீட்டு பெண்கள் மயங்கி விடுகின்றனர். கூலிங்கிலாஸ் போட்டு காதல் நாடகம் போடுகின்றனர் என்ற அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். காதல் திருமணங்கள் நீண்ட நாட்கள் நீடிக்காது, விரைவில் பிரிந்து விடுகின்றனர். என்பன போன்ற காரணங்களை சாதி அமைப்புகள் முன்வைக்கின்றன. ’காதலிக்கலைனா பையன் வெட்டுறான், காதலிச்சா அப்பன் வெட்டுறான்என பெண்களுக்கு இரு வடிவங்களிலும் ஆபத்து இருந்து  கொண்டே இருக்கின்றது. சாதியும் மதமும் மனித குலத்திற்கு எதிரானது என்ற சிந்தனை எல்லோரிடமும் உருவாகுவது இன்றைய தேவையாகின்றது.

3. குடும்ப அமைப்பு: சாதியின் தொடர்ச்சியாக குடும்ப அமைப்பு இருந்து வருகின்றது. கணவன் எப்படிபட்டவனாய் இருந்தாலும் திருமணமான பின்பு பெண் என்பவள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவன் கூடவே வாழ்ந்தாக வேண்டும். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற சொல்லாடல் குறிப்பிடத்தக்கது. குடும்ப அமைப்பினை புனிதப்படுத்த இங்கு காதல் கள்ளம் கற்பிக்கப்படுகின்றது. ஒரு  பெண் ஒருவனை காதலிக்கிறாள். இந்த விடயம் வீட்டினருக்கு தெரியவர உடனே அவர்களின் உறவுக்கார பையனுக்கு அப்பெண்ணை உடனே திருமணம் செய்து  வைத்து விடுகின்றனர். இனி அந்தப் பெண் தனது காதலனை காதலிக்கக்  கூடாது என்ற கருத்தியலை சாதிய குடும்ப அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்த ஆதிக்க மனநிலையின் ஒரு வெளிப்பாடுதான் எதையும் விசாரிக்காமல் கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு என செய்திகள் வருகின்றன. அங்கு நடைபெற்ற கள்ளத் திருமணங்களையோ, குழந்தை திருமணத்தையோ ஊடகங்கள் மூடிமறைக்கின்றன. அந்த ஏழு நாட்கள், மௌனராகம், ராஜா ராணி போன்ற படங்கள் காதலைவிட குடும்ப அமைப்பு புனிதமானது என்ற ஆதிக் ககருத்தியலை உருவாக்கிய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கன.

இறுதியாக:
அன்றாடம் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் இடம்பெறுகின்ற செய்திகளில் கணிசமான அளவு பெண்கள் மீதான வன்முறைகளாக உள்ளது. இன்று தமிழ் ஊடகங்கள் அதனை ஒரு கவர்ச்சியூட்டும் ஒரு வியாபார யுக்தியாகவும் சாதி சமய ஆதிக்க கருத்துகளை திணிப்பதாகவும் இருக்கின்றன. பாலியல் தொல்லை, ஆபாசபடம், விபச்சாரஅழகி, பலாத்காரம், உறவுக்கு இணங்க மறுத்தல் போன்ற சொல்லாடல்களை தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட இன்றைய தமிழ் ஊடகங்களில் காண முடிகின்றது. இந்த மாதிரியான சொல்லாடல்கள் என்ன சொல்ல வருகின்றன. அந்த செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறிப்பிடாமல் இத்தகைய கவர்ச்சிகரமான வார்த்தைகள் வாசகர்களை கவர பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு மதமும் சாதிய படிநிலைகளும் தொடந்து ஆட்சி செலுத்துகின்ற இச்சமூகத்தில் காதல் என்பதே ஒரு அரசியல் தொகை வடிவம்தான். அதனால்தான்  தெய்வீகக் காதல் என்பன போன்ற கருத்துநிலைப்பாடு இங்கு இருக்கின்றது. அந்த தெய்வீகக் காதல் செய்த ஒரு பெண்ணை சாதியை காரணம் காட்டி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த பிறகும்கூட அந்த பெண் தன் காதலன் மீது காதல் வயப்பட்டால் அது கள்ளக்காதலாக மாற்றமடைகின்றது. இங்கு குடும்ப அமைப்பின் புனிதத்தினை காக்க காதலின் மீது களங்கம் கற்பிக்கப்படுகின்றது. குடும்ப அமைப்பு என்பது அரசின் அதிகார மையத்தின் மிக முக்கிய காரணியாக உள்ளது. இது பெண் அடிமைத் தனத்தையும் சாதியப் படிநிலைகளையும் தொடர்ந்து நிலைப்படுத்துவனாக இருக்கின்றன.

காதல் என்பது அன்பை உருவாக்காமல் குற்றங்களையும் கொலைகளையுமே இன்று உருவாக்கியுள்ளது. பாலை நிலத்தில் வறுமை ஏற்பட்டால் அங்கு குற்றங்கள் அதிகரிக்கும் என திணைக்கோட்பாடு கூறுகின்றது. இன்றைய தமிழக சூழலில் காதல் குறித்த குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இன்றைய தமிழர் மனத்தில் காதல் என்ற உணர்வு மட்டும் தனித்து பாலை நிலத்தில் இருக்கின்றது. மக்களும் மனிதமும் சவநிலையில் இருக்கின்றன.

துணைநூற்கள்:
பெரியார் (2010) அழியட்டும் ஆண்மை, பெரியார் திராவிட கழக வெளியீடு
கா. விசயரத்தினம் (2012) சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும்
கு. காரல்மார்க்ஸ் (2016) புத்தகம் பேசுது இதழ் நேர்காணல்

SlavojZizek (2016) Love as a Political Category

திங்கள், 2 அக்டோபர், 2017

காதல் பயணம்

உலகக் காதலர்களே!
இந்தியாவுக்கு இனி சுற்றுலா வந்தால் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டாம். அது ஒரு இந்(து)திய காதலின் நினைவுச் சின்னம் அல்ல.
ஏதேனும் ஒரு வீட்டின் சமையலறைக்கு செல்லுங்குள். எண்ணெய் கறை படிந்த சுவர்களைப் போல அங்கு சமைக்கின்ற பெண்ணிற்குள்ளும் சாதி காரணமாகவோ, வீட்டு கௌரவத்திற்காகவோ என மறைத்துக் கொண்ட ஒரு காதல் பிசுபிசுத்து படிந்திருக்கும்.
அந்த பிசுபிசுப்பினை உங்கள் கரங்களினால் தொட்டுப் பார்க்க வேண்டாம் என அறிவுருத்தப்படுகின்றீர்கள்.
அவள் சுடுகின்ற தோசையை சுற்றி ஊற்றப்படுகின்ற எண்ணெயைப் போல ஒரு வளையம் எப்போதும் அவளைச் சுற்றி பிண்ணப்பட்டிருக்கும். அந்த சமையலறையை கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.
உங்கள் அடுத்த இன்பச் சுற்றுலாவுக்கு எந்த இரயிலில் செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள்.
எங்கும் நீங்கள் காதலை பார்க்கப் போவதில்லை.
வேண்டுமானால் உடனே அந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிடுங்கள். அந்த இரயில் நிலையத்திலிருந்து கொஞ்ச தூரம் அங்குள்ள தண்டவாளத்தில் நடந்து செல்லுங்கள். கொலையுண்டுப்போன காதலின் பாடல்கள் தடக் தடக் என ஒலித்துக் கொண்டேயிருக்கும். உங்கள் மீசையை முறுக்கிக் கொண்டே அந்த ஓசையை கேட்டுப்பாருங்கள்.
எந்த ஊரின் கடைத்தெருவிற்கும் சென்று பாருங்கள். கூட்டநெரிசல் மிக்க அந்த வீதிகளில் எப்போதும் ஏதாவது காதலர்கள் கடந்து செல்வார்கள். அந்த காதலின் நினைவுகள் அங்குள்ள ஏதாவது ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சிசிடிவி கேமாராவில் பதிவாகியிருக்கும். இரத்தம் தோய்ந்த அந்த காட்சிகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இந்து இந்தியக் காதலை.
அந்த ஊரின் வெட்டவெளி மைதானத்திற்கு செல்லுங்கள். அங்கு நிர்வாணமாக்கப்பட்ட காதலர்கள் நிற்பார்கள். அவர்களை சுற்றி நின்று ஒரு கூட்டம் தாக்கிக் கொண்டிருக்கும். அதைப் பாருங்கள்.
இந்தியக் காதலை...
உங்கள் காதல் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள்.
இனி பிணங்கள் மிதக்கும் கங்கையில் மூழ்கி நீராடுங்கள்.
உங்கள் காதல் புனிதமடையட்டும்.
-- பாரதி ஆரோக்கியராஜ்