பக்கங்கள்

செவ்வாய், 26 ஜூலை, 2022

நினைவின் இருத்தல்

 ஜூலை 26


ஒரு நாள்

ஒரு தினம்

ஒன்று போல இருப்பதில்லை

எல்லா நாளும் ஒன்றே தான், 

ஆனாலும் வேறு வேறு அனுபவங்கள். 

காலத்தினோடே நாட்களும் பயணிக்கின்றது

நிலத்தினூடே ஊர்களும் பயணிக்கின்றன

மனிதர்களுடன் நினைவுகளும் கடக்கின்றது

என்னிலிருந்து நானும் கடந்து வருகின்றேன்.


காலம் ஒரு சுமையாக

ஒன்றன்மேல் ஒன்று 

அடுக்கிக் கொண்டே செல்கிறது.

இன்றைய நாளின் சுமைகளை

புரட்டிப் பார்த்தால்

ஒரே நாள் வெவ்வேறு நிலங்களில்

உடைந்து விழுகின்றது.


இன்றைய நாளை கூகுள் படங்கள்

நினைவுச் சேகரமாக்கி காட்டுகின்றது. 

ஆன் திஸ் டே

அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்

கடந்த ஆண்டு இந்நாளில் 

இந்த புகைப்படங்களென அளாவித் திரிந்தேன்

ஒவ்வொரு நாளும் புகைப்படங்களாக 

நினைவில் மறக்கப்படுகின்றது. 

போனில் சேகரிக்கப்படுகின்றது. 


நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்நாளில்

உள்ஊர் வயலில் அந்த முள்எயிற்று ஆந்தை

ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில்பொழுதில்

என இயற்கை சூழ்ந்த ஒரு நகரில் விடியல். 

தமிழ் பால் பருகி ஆவின் பாலில் டீ குடித்து

கிராமத்து வயலில் ஆந்தை பார்த்து

நண்பர்களோடு மகிழ்ந்திருந்த அன்று,

விருப்பமற்று ஒரு விருப்பத்தில்

வீழ்ந்து எழுந்தேன்.


மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்நாளில்

கடற்கரை நகர் ஒன்றில் 

பிணங்கிக் கொண்ட ஒரு பிரிவில்

சமாதானம் செய்ய இயலாமல்

ஆகாயத்தை பார்த்து படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

இலைகள் படர்ந்த மரக்கிளைகள் கூட 

இதய வடிவில் வானை காட்டியது.

வானம் பார்த்து ஏங்கியது காதல்.

தூரத்தில் தெரிகின்ற 

தென்னை மர கீற்றுகளின் மீது 

கவிழும் சூரியனின் மஞ்சள் காட்சியை

கிளிக்கிக் கொண்டேன் படமாக. 


இரண்டாண்டுகளுக்கு முன் இந்நாளில்

லாக்டவுன் முடக்கத்தினால் 

சொந்த ஊரில் பொழுதுகள் கழிந்தன. 

மழலை மடியில் மழலையாக

மகிழ்ந்திருந்த நாட்கள். 

ஸ்நாப்சாட் பில்டர்களில் படம் எடுத்து

எங்கும் பகிராமல் 

நினைவில் சேகரித்த புகைப்படங்கள். 


ஓராண்டுக்கு முன் இந்நாளில் 

நதிக்கரையில் உள்ள ஊருக்கு

சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். 

அன்றும் அந்த நதியில்

சூரியன் வீழ்ந்துக் கொண்டிருந்தது. 

அந்தி வானம் மஞ்சள் பூசிக் கொண்டது. 


மஞ்சள் மகிழ்ச்சியின் வண்ணமா என அறியவில்லை. 

வீழ்ந்ததின் வலிகளை அழகாக்கும் 

துயர்களை வெளிச்சத்தில் இட்டு கழுவும்

ஒளி பொருந்திய வண்ணம்


இன்று இந்நாளில் 

சில்லென்ற ஒரு நகரில் 

மழைக்கால மாலையில்

தூரலை ரசித்துக் கொண்டு 

மனதில் சூரியகாந்தி மலரை எண்ணிக்கொண்டேன். 


இன்றைய இந்த நாளை 

கடந்த காலத்தின் நிலங்களில் இருந்து

திரட்டி என்னுள் ஒளித்துக் கொண்டேன். 


- பாரதி ஆ.ரா