பக்கங்கள்

ஞாயிறு, 10 ஜூன், 2018

பண்பாட்டுத் தொடர்பியல் அசைவுகள்

பண்பாட்டுத் தொடர்பியல் அசைவுகள்:
தொடர்பியல் தளத்தில் திருமண சடங்கு மற்றும் உணவு

அ.ஆரோக்கியராஜ்

அறிமுகம்:
பண்பாடு என்பது மக்கள் வாழ்வியலின் தொகுக்கப்பட்ட ஒரு கருத்தியல் சார் நெறிமுறை வடிவமாகும். அது மக்களின் சமய நம்பிக்கை, வழக்காற்றியல், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மொழி, வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றது. பண்பாட்டின் செயல் தன்மை என்பது ஒரு நபர்/இனக்குழு மற்றொரு நபர்/இனக்குழுவோடு தொடர்பு கொள்ளுதல், கூட்டு அடையாளங்களை உருவாக்குதல் ஆகியனவாக இருக்கின்றது. இதனை திருமண நிகழ்வினோடு ஒப்பிட்டு பார்க்கையில் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையேயான சம்மந்தம் கலத்தல், மணமக்களுக்கு கணவன் மனைவி என்ற அடையாளம், பெற்றோருக்கு சம்பந்தி என்ற அடையாளங்களை உருவாக்குகின்றது. தொடர்பியல் என்பது ஒரு செய்தியை பரிமாறிக் கொள்ளுதல், அடையாள வேறுபாடுகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. தொடர்பியலுக்கும் பண்பாட்டிற்குமான உறவு என்பது மிக நுட்பமானது. பண்பாடு தொடர்பியல் வாயிலாக உருவாக்கப்படுகின்றது. தொடர்பியல் பண்பாட்டின் உட்கூறுகள் மூலம் நடைபெறுகின்றது. ”பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சின்ன அசைவின் மூலம் நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றது.” (தொ.பரமசிவன், 2016:96) அத்தகைய அசைவுகள் (சடங்குகள்) தொடர்பியல் தளத்தில் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

பண்பாட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக சடங்குகள் உள்ளன. அவற்றுள் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளும் அடங்கும். பண்பாடு என்பது தனித்து ஒரு முழுமையான தொடர்பியல் ஊடகமாக இருப்பதில்லை. பண்பாட்டுக்கும் தொடர்பியலுக்கும் இடையே ஒரு பற்றாக்குறை, போதாமை இருக்கின்றது. அதனை மிக நுட்பமாக நிறைவு செய்யும் ஒரு பற்றுக்கோளாக சடங்குகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு மொழியை ஒரு தொடர்பியல் கருவியாக கருதினால் அதனால் முழுமையான தொடர்பியலை தனித்தே நிகழ்த்த இயலாது. இரு வேறு மொழி பேசுபவர்களுக்கு இடையே எழும் சிக்கலைவிட ஒரே மொழி பேசும் குழுவினரிடையே கூட மொழியால் முழுமையாக தனித்தே இயங்க(தொடர்பு கொள்ள) முடியவில்லை. அதற்கு உருவகங்கள் போன்றவை தேவைப்படுகின்றன. தான் விரும்பும் தலைவனின் தன்மைகளை வெளிப்படுத்த மொழியால் இயலமுடியவில்லை. ‘புரட்சி புயல்’ ‘எழுச்சி சூரியன்’ போன்ற சொல்லாடல்கள் இதற்கு உதாரணம். ஒரு நடிகனை தலைவனை அவன் தன்மைகளை விளிக்க புயல், சூறாவளி, நட்சத்திரம், சூரியன், சிங்கம் போன்ற சொற்கள் தேவைப்படுகின்றன. இதனை மொழியின் குறைபாடு (Language Deficiency) என குறிப்பிடுகின்றனர். இங்கு மொழியின் செழுமையாக உருவகங்கள் இருக்கின்றன. அது போல ஒரே குமுகத்தினரிடையே கூட பண்பாடு முழுமையான தொடர்பியலை நிகழ்த்தவில்லை. இங்கு பண்பாட்டின் மேன்மை (Sublime) பொருந்திய ஒரு வடிவமாக சடங்குகள் திகழ்கின்றன. காதலர்கள் மனம் ஒத்து சேர்ந்து வாழ்ந்தாலும், அதனை சமூக அளவில் அங்கீகரிக்க திருமணம் எனும் சடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மக்கள் கருதுகின்றனர். இங்கு சமூகவயமாதலில் மிக முக்கியமானதாக சடங்குகள் உள்ளன.

ஒரு தனி மனிதன் சமூகவயமாதலில் குடும்ப அமைப்பு என்பது மிக முக்கியமானதாக திகழ்கின்றது. குடும்ப அமைப்பினை உருவாக்குவதில் மிக முக்கியமான அம்சமாகவும், தமிழக பண்பாட்டில் மிக மதிப்புமிக்க ஒரு சடங்காகவும் திருமணம் இருக்கின்றது. கீழைத்தேய சமூகத்தில் துறவு நெறிகளை போதித்த பௌத்தம், சமணம் போன்ற சமயங்களை வீழ்த்த வைதீக சமயங்கள் மிக முக்கியமான கருத்தியலாக திருமணத்தினை முன்னிறுத்தியன என்ற புரிதல் திருமணத்தை இன்னும் அதிநுட்பமாக அறிந்து கொள்ள வழிவகை செய்யும். இன்று திருமணத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பந்தி உணவு. இந்த கட்டுரை திருமணம் குறித்த சமூக விழுமியங்களையும் அது உணவில் பிரதிபலிக்கும் தன்மைகளையும் பண்பாட்டியல் ஆய்வுப் பார்வையில் விவரிக்க முயல்கின்றது. குறிப்பாக விருத்தாசலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வழக்கத்தில் இருக்கும் ’கடலை உடைத்துக் கல்யாணம்’ என விளிக்கப்படும் திருமணங்களில் பந்தியில் இடம்பெறும் பொட்டுக்கடலை, வேர்கடலை மிட்டாய் போன்ற பயறு வகைகள் உருவாக்கும் தொடர்பியல் அசைவுகளையும் அது குறித்த உணவு பண்பாடு மற்றும் சமூக விழுமியங்கள் ஆகியவற்றை சமயங்களின் பின்னணியில் விவரிக்கின்றது.

தமிழர் திருமணம் எனும் கருத்தியல்:
தமிழர்களின் வாழ்வியல் சடங்குகளில் மிக பிரதானமான ஒன்றாக திருமணம் இருக்கின்றது. திருமணம், கலியாணம், இணையேற்பு விழா ஆகியன மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் சொற்களாகும். கலி+ஆணம் = கல்யாணம் என்ற இந்த சொல் மக்களிடையே அதிகம் புழக்கத்தில் உள்ள சொல்லாகும். ‘கலி’ என்பது மகிழ்ச்சி, எழுச்சி, விழா, வலி என்ற பொருளையும்; ’ஆணம்’ என்பதற்கு நேயம், பற்றுக்கோடு என்று பொருள் உண்டு. (அன்பு பொன்னோவியம், 2007:368) இதனை மங்கல நாள் என குறிப்பிடுகின்றனர். “இல்லற மல்லது நல்லற மன்று” என ஔவையாரும் “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை” என திருவள்ளுவரும் வீடுபேற்றினையும் திருமண வாழ்வின் முக்கியத்துவத்தினை குறிப்பிடுகின்றனர்.
தமிழரிடையே கொடை மணம், களவு மணம், கவர்வு மணம் ஆகிய முறைகள் இருந்தன. (தேவநேயப்பாவணர், 2000:8) தொல்காப்பியத்தில் எண்வகை திருமண முறைகளை குறிப்பிடப்படுகின்றது. வட மொழி நூல்கள் பிரம்மம், பிரஜாபத்யம், ஆர்ஷம், தைவம், கந்தர்வம், ஆசுரம், ராட்சசம், பைசாசம் ஆகிய எண்வகை திருமண முறைகள் இருந்தன என குறிப்பிடுகின்றன. (அன்பு பொன்னோவியம், 2007) திருமண மரபு பரிணமித்த வரலாற்றில் மூன்று நிலைகள் இருந்தன என தொல்காப்பியம் சுட்டுகின்றன. 1. களவு, 2. நால்வருணத்தாருக்கும் ஒரே வகைச் சடங்கு, 3. சூத்திரருக்கு மட்டும் தனி சடங்கு. இதிலிருந்து வெளிப்படும் மிக முக்கியமான விடயம் ’சடங்கு’. இங்கு சமூக அமைப்பிற்கு தனது அதிகார படிநிலைகளை தக்க வைக்கும் ஒரு உத்தியாக ஆயுதமாக சடங்குகள் உருப்பெற்றதை அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்களில் எந்த வித சடங்குகளும் அற்ற களவு மணமுறை இருந்ததை காண முடிகின்றது. சைவம், வைணவம் போன்ற வைதீக சமயங்கள் தமிழர்களிடையே கருத்துரு பெற ஆரம்பித்த பிறகு சடங்குகள் ஒரு புனிதத் தன்மை என்ற பெயரில் ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொண்டது. சிலப்பதிகாரத்தில் தீ வளர்த்து, பார்ப்பனர்களைக் கொண்டு வேதம் ஓதி திருமண முறை இருந்ததை அறிய முடிகின்றது. கொடுப்பது, எடுப்பது என்ற சொல்லாடல்கள் பெற்றோர் நிச்சயித்த திருமணங்களை சுட்டுகின்றன. மணமுறை என்பது ஒவ்வொரு குமுகத்தினரிடையே வேறுபட்டு காணப்படுகின்றன.

தமிழ் இலக்கியங்கள் தமிழர் வாழ்வை அகம், புறம் என வகுத்தனர். அகம் என்பது களவு, காதல் வாழ்க்கையையும், புறம் என்பது போர், பொருளீட்டல் போன்ற வீரம், உழைப்பு சார்ந்த வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றன. அதன் பிறகு உருவான திருக்குறள் உள்ளிட்ட நீதி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை வலியுறுத்திக் கூறின. இதில் மக்கள் வாழ்வுக்கு தேவையான வாழ்க்கை நெறிகள் வலியுறுத்தப்பட்டன. இதில் குடும்பம், இல்வாழ்க்கை, வீடு பேறு என்பவை வாழ்வின் ஓர் அம்சமாக இருந்தன. அதன் பிறகு உருவெடுத்த பக்தி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என குடும்ப அமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி வந்தன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த மதங்கள் ஆகும். (தொ.பரமசிவன், 2016:99) சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் துறவு நெறியை போதித்தன. ஆனால் அவை மக்களிடையே செல்வாக்கு பெறவில்லை. தொல்காப்பியம் கணவனும் மனைவியும் வாழ்நாளின் இறுதிவரை சேர்ந்து வாழ்ந்து அறஞ்செய்ய வேண்டும் என குறிப்பிடுகின்றது. சமணமும் பௌத்தமும் செல்வாக்கு பெற்றிருந்தாலும் அவை போதித்த துறவு நெறி என்பது மக்களால் ஏற்கப்படாததாக இருந்தது. சமணம் பௌத்தம் போதித்த துறவு நெறிக்கு மாறாகக் குடும்பம் என்ற நிறுவனத்தினைப் பேணியது பக்தி இயக்கத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஒன்று என தொ.பரமசிவன் (2016) குறிப்பிடுகின்றார். பக்தி இயக்கங்களில் எழுச்சிக்கு பிறகு திருமணங்களில் வைதீக சடங்குகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன.

அரசு-சமூக வளர்ச்சியின் மிக முக்கியமான அம்சமாக குடும்பங்களும் திருமண நிகழ்வுகளும் இருக்கின்றன. இன்று திருமணம் என்பது சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை தொடர்ந்து ஒரு நிலைப்புத் தன்மையோடு இருக்கச் செய்யும் பண்பாட்டு ஒடுக்குக் கருவிகளாக திருமணம் மற்றும் குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. ”ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு” என குடும்பத்தினை ஐக்கிய நாடுகளின் அமைப்பு வரையறை செய்துள்ளது. சமூக வயமாக்கலும் (Socialization) பண்பாட்டு வயமாக்கலும் (Enculturation) குடும்பத்தில் இருந்து தான் தொடங்குகின்றன. (பக்தவச்சல பாரதி, 2007:342) ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சமூக மனிதனின் ஆதிக்கம் உறைந்து போய்க் கிடக்கின்றது. திருமணம் என்பது மனித வாழ்வினை முழுமையாக்கும் ஒரு கருத்தியல் என கருதப்படுகின்றது. இன்று பதின்ம வயதினைக் கடந்த ஒவ்வொருவருடைய பெற்றோரின் முக்கிய கடமையாக திருமணம் செய்து வைத்தல் இருக்கின்றது. பாலியல் ஒழுக்கத்தையும் தேவையையும் உறுதிபடுத்தும் ஒரு அமைப்பாக திருமணம் உள்ளது.

உணவு, சடங்கு, தொடர்பியல்:
இனக்குழு சமுதாயத்தில் சடங்கே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே சடங்காகவும் அமைந்தன. அச்சடங்குகள் இனக்குழு சமுதாயத்தை இயக்கின. இணைத்தன. அச்சமுதாயம் உருவாக்கிய மதிப்புகளை உறுதி செய்தன. (சுப்ரமணியன், கா. 2011:10) இச்சடங்குகளில் பலி இடுதல், கூடி உண்ணுதல் போன்றவை தவறாமல் இடம் பெற்றிருந்தன. சமூக ஒருங்கிணைப்புக்கு அடிப்படையாக சடங்குகள் இருக்கின்றன. மக்கள் குழுவாக இணையும் பொழுது அங்கு ஒரு முக்கியச் செயல்பாடாக உணவு அமைந்துவிடுகின்றது. இது போல திருமண நிகழ்வுகளில் பந்தி உணவு முக்கியத்துவம் பெறுகின்றது. பந்தி என்பது வரிசையில் அமர்ந்து உண்ணுதல் என்று பொருள். (ஆ. சிவசுப்ரமணியன், 2010:1) பொதுவாக எல்லா சமயத்தினரும் பந்தி உணவினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் சாதிய மேலாண்மை, பொருளாதார வேறுபாடு என்பவை மக்களிடையே, மக்கள் மீது ஓர் அதிகார/ஆதிக்கத்தினை உண்டு பண்ணியது. இசுலாமிய வழிபாட்டில் கந்தூரி விருந்திலும் நொன்புக் கஞ்சி வழங்குவதிலும் இத்தகைய வேறுபாடுகள் களையப்படுகின்றன என ஆ. சிவசுப்ரமணியன் (2010) குறிப்பிடுகின்றார். அம்மன் கோயில் கூழ் ஊற்றும் நிகழ்வுகூட இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமணம் எனும் நிகழ்வானது மணப்பேச்சு, மண உறுதி, மணவிழா என மூன்று நிலைகள் இருக்கின்றன. (தேவநேயப்பாவணர், 2000:17-19) மணவிழாவின் போது பந்தல், அரசாணிக்கால், காப்பு கட்டுதல் போன்ற முன்னிகழ்ச்சிகளும், தெய்வத்தின் முன்னிலையில் தாலி கட்டிக் கொள்ளுதல் (கரணம்), வந்தோருக்கு உணவளித்து தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவை கொடுத்தல் போன்ற பின்னிகழ்ச்சிகளும் முக்கியமான சடங்குகள் ஆகும். கரணத்தோடு கூடிய திருமணத்தை வதுவை மணம் என அழைக்கப்படுகின்றது. வதுவை மணத்தில் பரிமாறப்பட்ட உணவு குறித்து அகநானூற்று பாடல் அளிக்கும் செய்தி
“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை / பெருஞ்சோற் றமலை நிற்ப …” (அகநானூறு:86)
உளுத்தம் பருப்போடு சேர்த்துச் சமைத்த கொழுமையான குழைந்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ என இப்பாடல் பதிவு செய்கின்றது. அகநானூறு 136 வது பாடல் இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெண்சோற்றையும் அளித்தனர் என பதிவு செய்கின்றது. இன்று அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப உணவு பரிமாறுகின்றனர். திருமண விருந்து அக்காலத்தில் வேளைக்கணக்காயிராது. நாட்கணக்காயிருக்கும். எளியர் ஒரு நாளும், செல்வர் ஏழுநாள் வரையும் விருந்தளிப்பர் என தேவநேயப்பாவாணர் (2000) பதிவு செய்கின்றார்.

தமிழகத்தில் பெருவாரியான சமூத்தினரிடையே ‘கடைக்குட்டிக்கு கடலைமிட்டாய் கலியாணம்’ என்ற சொல்லாடல் வழக்கில் உள்ளது. திருமணம் என்பது பெற்றோர், பெரியோர் நடத்தி வைப்பதாகவே இருக்கின்றது. பெற்றோரின் மிக முக்கியமான கடமையாக தான் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல் என கருதுகின்றனர். அப்படி எல்லா குழந்தைகளுக்கும் திருமணம் செய்துவைத்த பிறகு கடைசிப் பிள்ளையின் திருமணத்தின் போது பெற்றோர் தங்கள் வேலையை நிறைவேற்றிவிட்ட ஒரு திருப்தி அடைகின்றனர். அத்தகைய திருமணத்தில் பந்தியில் வழக்கமாக பரிமாறப்படுகின்ற உணவு வகைகளுடன் சேர்த்து கடலை மிட்டாய் அல்லது பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவை வைப்பது வழக்கம். இதனை ’கடலை உடைச்சி கலியாணம்’ என்றும் விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் குறிப்பிடுகின்றனர்.
பொட்டுக்கடலை அல்லது கடலை மிட்டாய் வைக்கப்படுவதின் காரணம், எங்கள் வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம் என்ற செய்தியை குறிக்கும் வகையில் இவை பரிமாறப்படுகின்றது. கொங்கு பகுதியினர் தரும் விளக்கம் என்பது, “இது கடைசி திருமணமன்று. அடுத்த இவர்கள் பிள்ளை பெற்று பேரக்குழந்தைகளின் திருமணமும் நடைபெறும். அதன் தொடர்ச்சியின் அறிவிப்பாக இவை பரிமாறப் படுகின்றன” என கூறுகின்றனர். இங்கு திருமணம் என்பது ஒரு குழுவுக்கான தொடர்பியல் தளம் என்ற அளவில் மட்டுமில்லாமல், குழுவிற்கு வெளியேயுமான தொடர்பியலை நிகழ்த்துகின்றது. அந்த தொடர்பியலை முழுமையாக்குபவையாக இத்தகைய சடங்குகள் இருக்கின்றன. அது உணவின் மூலம் மிக நுட்பமாக வெளிப்படுகின்றது.

இறுதியாக:
திருமணங்களில் பரிமாறப்படும் பந்தி உணவு தொடர்பியல் தளத்தில் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. திருமணம், குடும்பம் ஆகியவற்றின் மூலம் வைதீக மதங்கள் செல்வாக்கு பெற ஆரம்பித்து அதனூடே ஆன சடங்குகள் மூலம் தனது ஆதிக்கத்தினை மக்கள் மீது செலுத்தி வருகின்றது. இதனை எதிர்த்து பின்னாட்களில் திருமண முறைகளில் சீர்திருத்தங்கள் ஏற்பட ஆரம்பித்தன. சித்தூர் மார்க்கசகாய ஆச்சாரியார் பிராமணியத்தையும், மறைமலையடிகளும், திரு.வி.கலியாணசுந்தரனாரும் அஃதுடன் ஆரிய மொழியையும் எதிர்த்து புரட்சி செய்தனர். பெரியார் ஈ.வெ.ரா. இவற்றோடு வீண்சடங்குகளை விலக்கி, திருமணக் கரணத்தைத் (தாலி கட்டுதல்) திருத்தி புரட்சி செய்தார். தமிழர் பண்பாட்டில் இருந்து அந்நியப்பட்ட சடங்குகள் யாவும் தமிழர்களை ஒடுக்கி அதிகாரப் படிநிலைகளை உண்டு பண்ணும் ஒரு கருத்தியல் வடிவமாக இருக்கின்றது. அவ்வகையில் திருமணம் குறித்த சடங்குகள் சாதி வேறுபாடு, பெண்ணடிமை போன்ற கருத்தியல்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

திருமணங்கள் என்பது வீடுகளில், ஊர் மந்தையில் நடைபெற்றன என நாட்டார் தரவுகளில் இருந்து அறிய முடிகின்றது. மக்களுக்கான பொதுவெளி மீதான உரிமைகள் மறுக்கப்பட ஆரம்பித்த போது இங்கு திருமண மண்டபங்கள் உருவாகின. திருமண பந்தியில் பல வகையான உணவு வகைகள் இடம் பெற ஆரம்பித்தன. ஆயினும் வீட்டின் கடைசிப் பிள்ளைக்கு திருமணம் நடக்கும் போது பந்தியில் கடலை மிட்டாய், பொட்டுக்கடலை போன்ற பயிறு வகைகளை வைக்கும் சடங்கு என்பது ஆதிப் பண்பாட்டின் ஒரு தொடர்சியாகக் கருதப்படுகின்றது. இது இறப்புச் சடங்கில் அளிக்கப்படும் பயிறு வகைகளுடன் ஒரு தொடர்பு இருப்பதை அறிய முடிகின்றது. பெற்றோர் தம் வாழ்வு முழுமை (முக்தி) பெற்றதாக கருதி இதை செய்வதாக கருத இயல்கின்றது.

துணை நூற்பட்டியல்:
அன்பு பொன்னோவியம். (2007). உணவில் ஒளிந்திருக்கும் சாதி, சித்தார்த்தா பதிப்பகம்.
சிவசுப்ரமணியன், ஆ. (2010). பிள்ளையார் அரசியல்: மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள், பாவை பதிப்பகம்.
பரமசிவன், தொ. (2016) பண்பாட்டு அசைவுகள், முதல் பதிப்பு: 2001, காலச்சுவடு பதிப்பகம்.
பக்தவத்சலபாரதி, சீ. (2011) பண்பாட்டு மானிடவியல், அடையாளம் பதிப்பகம்.
மாடசாமி, ச. (2015). தமிழர் திருமணம்: அன்று முதல் இன்று வரை, எட்டாம் பதிப்பு, பாரதி புத்தகாலயம்.
தேவநேயப்பாவாணர், ஞா. (2000) தமிழர் திருமணம், பதிப்பாசிரியர்: அ. நக்கீரன், முதற்பதிப்பு:1956, தமிழ்மண் பதிப்பகம்.
சுப்ரமணியன், கா. (2011). சங்ககாலச் சமுதாயம், நியூ செஞ்சுரியன் புக் ஹவுஸ், ப.10.  



1 கருத்து: