பக்கங்கள்

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தொடர்பியல் தளத்தில் உணவகம்: சமகால பண்பாட்டு அரசியலும் தொழிலாளர் முறையும்

. ஆரோக்கியராஜ்
முனைவர் பட்ட ஆய்வாளர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை


அறிமுகம்:
அனைத்தும் வணிக மயமாகிப் போன சூழ்நிலையில் பண்பாட்டுக் கூறுகளின் தன்மையும் அவற்றின் அற மதிப்பீடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்க வேண்டிய தேவை உருவாகின்றது. கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் நுழைய அனுமதி மறுப்பதில் இருந்த எதிர்ப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான செயல்பாடாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று சிறப்பு கட்டண தரிசனம் என்ற முறை எந்த வகையான ஒதுக்குதலை நிகழ்த்துகின்றது என்பது இன்றைய அரசியலை புரிந்து கொள்ள உதவும். மநு தர்மத்தின்படி ஒரு சமூகத்தினர் கோயிலுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை இன்றைய வணிக சமூகம் அதை மற்றொரு வகையில் மீள் உருவாக்கம் செய்துள்ளது. சமூகம் பல மாற்றங்களை அடைந்து வந்த போதிலும் சமூகத்தில் இருக்கின்ற அதிகார கட்டமைப்பு தன்னை தொடர்ந்து தகவமைத்துக் கொண்டே வருகின்றது. இத்தகைய சூழலில் உலகமயமாக்கல், மதம், மநுதர்மம் குறித்த விவாதங்களை இக்கட்டுரை விவாதிக்க முயல்கின்றது.
இந்திய சமூகத்தில் சாதியின் தோற்றம் என்பது தொழில் அடிப்படையில் பகுக்கப்பட்டது. அது பிறகு பிறப்பின் அடிப்படையில் மாறியது என்ற கருத்தினை வெகு மக்கள் தளத்தில் நம்ப வைக்கப்பட்டுள்ளது. இன்ன தொழில் செய்பவர் இன்ன சாதியினர்; அந்த குடும்பத்தினர் அதை தொடர வேண்டும் என்ற கருத்து பெரும்பாலான மக்களிடையே நம்ப வைக்கப்பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் சாதி பார்ப்பதும், சாதி ரீதியாக இன்ன தொழிலை இவர்கள் தான் செய்ய வேண்டும் என பணிப்பதும் சமூக இணக்கத்திற்கு எதிரானதாகவே அமையும். அது சமூகத்தில் அதிகாரப் படிநிலைகளை உருவாக்கி மக்களை அடிமைப்படுத்துவதற்கு வழிவகை செய்யும். நவீன சமூகமாக அடையாளப் படுத்திக் கொள்கின்ற சமூகம் உலகமயமாக்கலிலும் எவ்வாறு தனது மநுதர்ம கொள்கைகளைக் கடைபிடிக்கின்றது என்பது குறித்த புரிதல் அவசியமாகின்றது. தொழில் முறையின் மூலம் சமூகத்தில் சாதி என்ற கருத்தாக்கம் இன்றளவும் நிலைபெற்று வருகின்றது. கழிவறை சுத்தம் செய்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பணியாட்கள் என்ற பணிகள் பல அளவில் சாதியத்தை தக்க வைக்கும் ஒன்றாக இருக்கின்றது. ஆக ஒரு சமூகத்தின் தொழில் முறை என்பது அச்சமூகத்தின் அதிகார படிநிலைகளை காட்டும் ஒரு காரணியாக இருக்கின்றது.
இன்று தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளம் தலைமுறைகளுக்கான வேலைவாய்ப்புள்ள கல்வி என்றால் நர்சிங், டீச்சர் ட்ரெய்னிங், கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனஜ்மெண்ட் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தான். இவை பெரும்பாலும் சேவைத் துறையாகவே இருக்கின்றது. இந்த வகையான பாடப்பிரிவுகள் உண்மையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு மட்டும் அளிக்கவில்லை. அவர்கள் முன்னேற்றத்தை அவர்கள் உரிமையை பறிக்கக் கூடியதும் கூட. அந்த வகையில் இன்று மிகப் பெரிய வணிக நிறுவனமாக இருப்பது உணவகங்கள். இதன் வலைப்பின்னல் என்பது உலகமயமாக்கலோடு நேரடி தொடர்புடையது. பண்பாட்டு தளத்தில் உணவகங்களில் நடைபெறும் தொடர்பியல் அம்சங்களில் அங்குள்ள தொழிலாளர் முறையும் அவசியமானது. தொழிலாளர் முறை என்பது சமூகத்தின் கருத்தியலை பிரதிபலிக்கும் ஒன்று. இந்த தளத்தில் இருந்து கொண்டு தொடர்பியல் பற்றிய விவாதம் என்பது பன்புலப் பார்வையை விசாலப்படுத்தும். அந்த நோக்கில் இக்கட்டுரை இருக்க முயல்கின்றது.
சாதீய சமூகமும் தொழில்முறையும்:
தொழில், உழைப்பு என்பது மக்களின் சமூக வாழ்வுக்கு மிக தேவையான ஒன்றாக ஆகின்றது. தொல் பழங்குடி நிலையில் இருந்த போது வேட்டையாடுதல், காடுகளில் சுற்றித் திரிந்து தமது உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். வேளாண் சமூகம், இன்றைய நவீன சமூகம் என பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இதில் சமூகத்தில் உருவான தொழில் முறையும் ஒரு முக்கியமான காரணி. மனிதன் தத்தமது உடல் சக்தி, அறிவுத்திறனுக்கு ஏற்றவாறு செய்யத் தொடங்கினர். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. எவரும் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருந்தது. சாதி அமைப்பு உருப்பெற தொடங்கியதும் சாதி அடிப்படையில் தொழில் முறைகள் பகுக்கப்பட்டன.
நால் வர்ண சாதிய முறையை இன்றளவும் இச்சமூகம் பின்பற்றி வருகின்றது. பார்ப்பனன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என நால்வர்ண சாதி பகுப்பு இருக்கின்றது. இந்த நால் வர்ணத்தில்  சேராதவர்கள் பஞ்சமர் என்று அழைக்கப்பட்டனர். முதல் மூன்று வர்ணத்தவருக்கு சேவை செய்யும் பொருட்டு ஏனைய சாதியினர் பணிக்கப்பட்டனர். ‘பள்ளு பறை பதினெண் குடிமக்கள்என்று வகைப்படுத்தி இவர்கள் மற்ற சாதியினருக்கு சேவை செய்ய பணிக்கப்பட்டனர். இது குறித்துஅபிதான கோசம்எனும் நூலில்ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் குடிகள் இருக்க வேண்டும்என்பதைக் குறிக்கின்றது. பஞ்சமர்கள், சூத்திரர்கள் ஆகியோர் மற்ற மூன்று வர்ணத்தவருக்கு பணிவிடை செய்ய வேண்டும். மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்பது மநு தர்மம் சொல்லும் நீதி.
தொழில் வேறுபாடுகளின் தன்மை குறித்து நெஸ்பீல்டு அவர்களின் கருத்து, “தூய்மை, தீட்டு ஆகிய தன்மைகளைக் குறித்து சாதி அமைப்பும் அதன் செயல்பாட்டையும் அறுதியிடும் காரணியாக தொழில்கள் உள்ளன.” என்கிறார். பெரியார் அம்பேத்கர் போன்றவர்கள் அழிக்க முற்பட்ட சாதியை இன்றைய நவீன சமூகம் உலகமயமாக்கல் என்ற பெயரில் மீட்டுருவாக்கம் செய்து வருகின்றது. தொழில் என்பது ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு மூளையையோ உடலையோ வருத்திச் செய்யும் செயலைக் குறிக்கும். ஒரு நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தம் இட நிலைக்கு ஏற்ப உழைப்பினில் ஈடுபடுகின்றனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என திணையைப் பொறுத்து தொழில் இருந்தது. அது சாதியாக உருப்பெற்ற போது சமூக முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்தது. அது இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. அது நம் வாழ்வின் அன்றாட செயல்பாடுகளிலும் இடம்பிடிக்கின்றது. மருத்துவமனைகளில் மருத்துவர் யார், செவிலியர் யார்; அவர்கள் எந்த பின்புலத்தில் இருந்து வருகின்றார்கள் என்பவை நாம் அன்றாடம் கவனிக்கத் தவறும் சாதீய அமைப்பின் விளைவுகள். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இவ்வாறாக தொழில் ரீதியான சாதிய அமைப்பின் தன்மைகளை அது உண்டு பண்ணியுள்ள ஏற்றத்தாழ்வுகளை பல இடங்களில் காண முடிகின்றது. அது மக்களின் உணவுப் பழக்கத்திலும் வெளிப்படுகின்றது.
உணவகங்களில் தொழில் முறைகளும் தொடர்பியல் படிநிலைகளும்:
இன்று உணவகங்கள் என்பது பண்பாட்டு பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான அலகாக உள்ளது. ஒரு சமூகத்தின் அசைவியக்கங்களை அறிந்து கொள்ள அவர் தம் உணவுப் பண்பாட்டை கூர்ந்து நோக்க வேண்டும். உண்மையில் பண்பாட்டாய்வு என்பது வீட்டு அடுக்களையிலிருந்து தொடங்க வேண்டும் என தமிழ் பண்பாட்டாய்வாளர் தொ. பரமசிவன் குறிப்பிடுகின்றார். வீடுகளில் சமைக்கப்படுகின்ற உணவு என்பது பெண்கள் சமைப்பதாகவே இருக்கின்றது. வீடுகளில் இருக்கும் தொழில் முறை என்பது ஆண் என்பவன் தொழில் செய்து பணம் ஈட்ட வேண்டும். பெண் என்பவள் சமைத்து, வீட்டை சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும் என நியதியாக உள்ளது. இந்த முறைமையில் உள்ளது ஆண்மை என்கிற அதிகாரம். அது தான் குடும்பத்தில் ஆதிக்கத்தையும் பாலின பாகுபாட்டையும் உருவாக்கி பெண்ணடிமைத் தனத்தை உருவாக்குகின்றது.
தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் என்பது தனித்த அடையாளம். தமிழகத்தில் உணவு என்பது விற்பனைப் பண்டம் அல்ல. உணவையும் நீரையும் விற்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டது. இலையில் உணவிட்டு விருந்தினரை உபசரிப்பது தமிழர் மரபு. சாப்பிட்ட பிறகு இலையை உள் பக்கமாக மடித்தல், வெளிப்பக்கமாக மடித்தல் என்பது உணவு பரிமாறியவருக்கும் சாப்பிட்டவருக்குமான தொடர்பை பிரதிபலிக்கும் ஒன்றாக இருந்தது. சாப்பிட்ட இலையை சாப்பிட்டவரே எடுக்கக் கூடாது, விருந்து பரிமாறியவர் தான் இலையை எடுக்க வேண்டும். அப்போது தான் அந்த விருந்து முழுமையானதாக கருதப்படுகின்றது. உணவு பரிமாறுதல் இலையெடுத்தல் என்பது அவ்வீட்டு பெண்கள் தான் செய்ய வேண்டும். அதனால் தான் சமையலுக்கு மாதுகரம் என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால் பெரிய விருந்துகளில் சமைப்பது ஆண்கள் தான். அதனை நளபாகம், பீமபாகம் என்றழைக்கின்றனர்.
தமிழகத்தில் உணவகங்களின் தோற்றம் என்பது நாயக்கர் ஆட்சிக்கு பிறகு உருவாக ஆரம்பித்ததாக கருதப்படுகின்றது. அது வரை இருந்த அன்னசத்திரங்கள் உணவகங்களாக மாற ஆரம்பித்தது. 1940களில் உணவகங்கள் என்பது பெண்கள் பரிமாறும் வெளியாக இருந்தது. தரையில் அமர்ந்து உண்ணும் வழக்கம் தான். பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கேயான பிரத்யேக வெளியாக இருந்தது. 1960களில் மேசை நாற்காலிகள் உணவகங்களில் இடம் பெற ஆரம்பிக்கின்றது. ஆண்கள் சப்ளையர்களாக உணவு பரிமாறினர். அந்நாட்களில் சர்வர் என்ற தொழில் ஒரு ஏழை எளிய மக்களின் தொழிலாக உருவாக ஆரம்பித்தது. சர்வர் சுந்தரம் என உள்ளிட்ட திரைப்படங்கள் இதை திரையில் பதிவு செய்துள்ளன. திராவிட இயக்க அரசியல் எழுச்சி பெற தொடங்கிய பிறகு உணவக வெளியில் சாதி ரீதியான அடையாளப் படுத்தல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவானது. இன்று நட்சத்திர உணவு விடுதிகள், இரவு நேர கொண்டாட்ட விடுதிகள், சாலையோர தள்ளு வண்டிக் கடைகள் (கையேந்தி பவன்கள்), வீட்டுக்கே வந்து உணவினை வழங்கும் இணைய சேவைகள் என தமிழர்களின் உணவு பரிமாறும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நுகர்வுப் பண்பாடு உருவாக்கியுள்ளது.
இன்று நகரம் தொடங்கி சிற்றூர் வரை எல்லா ஊர்களிலும் உணவகங்கள் என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. ஒரு ஊருக்கு கோயில், பள்ளிக்கூடம் போல தேநீர் கடைகளும் உணவகங்களும் மிக அவசியமானதாக இன்று உள்ளது. தேநீர் கடைகளும் உணவகங்களும் அந்த ஊரின் சாதி அமைப்பை பிரதிபலிக்கும் வெளியாக இருக்கின்றது. கிராமங்களில் இரட்டைக் குவளை முறை, சாதீய உணவகங்கள் என இவை வெளிப்படுகின்றன.
சிற்றூர்களில் உணவகங்களின் அமைவிடம் என்பது ஊரின் மையப்பகுதியிலோ குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் புழங்கும் வெளியிலோ தான் இருக்கின்றது. அந்த உணவகங்களை நடத்துவது பெரும்பாலும் உயர் சாதியினராகவோ இடைச் சாதியினராகவோ இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் பெரும்பாலும் உணவகங்கள் நடத்துவது இல்லை. உணவக வெளி என்பது அதை ஊர் - சேரி என்ற பாகுபாட்டை பிரதிபலிக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. இதை உணவகங்களில் இருக்கும்சாப்பிட்டவுடன் இலையை எடுக்கவும்என்ற பலகைகளில் கூட பார்க்க முடிகின்றது. இதனை இரு வகையான வாசிப்புக்கு உள்ளாக்க முடிகின்றது. ஒன்று மனித மாண்பு, ஒருவர் சாப்பிட்ட இலையை இன்னொருவர் எடுக்காமல் அவரே எடுப்பது என்ற எண்ணம். மற்றொன்று இன்று உணவகத்தில் எல்லா சாதியினரும் சாப்பிடுகின்றனர்.இவன் சாப்பிட்ட இலையை நான் எடுப்பதா என்ற சாதித் திமிர். பெரிய பெரிய உணவகங்களில் சாப்பாடு பரிமாற ஒருவர் இலையை எடுக்க ஒருவர் என தொழிலாளர்கள் இருக்கின்றனர். இங்கு இலையை எடுப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியினராகவோ வடமாநிலத் தொழிலாளராகவோ இருக்கின்றனர்.
நட்சத்திர உணவகங்களில் உணவு பரிமாறுதல் கலையாக பார்க்கப் படுகின்றது. அதற்காக பாடப்பிரிவை உருவாக்கி அதற்கென கல்லூரிகளும் ஊருக்கு ஊர் உள்ளது. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்து ஏழைக் குடும்பத்து பிள்ளைகளாகவே இருக்கின்றனர். அவர்கள் உணவு சமைத்தல், பரிமாறுதல், விடுதி அறைகளை பராமரித்தல், வாடிக்கையாளர்களிடம் முகம் சுழிக்காமல் சேவை செய்வது போன்றவை தான் அவர்கள் பாடமாக கற்கின்றனர். பார்ப்பனர், வைசியர், சத்திரியர் என்ற மூன்று வர்ணத்தவருக்கு சேவை செய்ய வேண்டும் என மநு தர்மம் எவ்வாறு சாதி ரீதியான ஒடுக்கதலை உண்டு பண்ணியதோ அதை இன்று முதலாளித்துவம் காலத்திற்கேற்ப மறு உருவாக்கம் செய்துள்ளது.
மநு தர்மத்தின் நவீன வடிவாமாக முதலாளித்துவம் உள்ளது. இவை இரண்டும் சமூகத்தின் தொழில் முறையை சாதியத்தினையும் ஆதிக்கத்தினையும் நிலைப்படுத்தும் காரணியாக கொண்டுள்ளது. இன்று உணவகம் மிகப்பெரிய பொருளாதார வலைப்பின்னலைக் கொண்டுள்ளது என்றால் அது உருவாக்கியுள்ள வேலை வாய்ப்புகள் தான். ஆனால் அவை மீண்டும் உருவாக்கியுள்ள தொழில் முறைமைகள் சாதியத்தின் மறு வடிவமே. இருந்தும் இதில் உள்ள ஒரு அம்சம் அது வாய்ப்புகளை எல்லோருக்கும் திறந்து வைத்துள்ளது. ஆனால் இன்னும் எல்லோருக்கும் கிட்டும் வண்ணம் சென்றடையவில்லை.
இறுதியாக:
வீடுகளில் உணவு சமைக்கும் போதும் பரிமாறும் போதும் அந்த வேலையை பெண்கள் தான் செய்ய வேண்டும் என பெண்ணடிமைத் தனத்தை கொண்டிருப்பதும், உணவகங்களில் இலையை எடுக்க ஒரு சாதி, சமைக்க ஒரு சாதி என சாதி அமைப்பை பின்பற்றுவதும் ஆதிக்கத்தை நிலை பெறச்செய்யும் ஒரு செயலாகும். வர்ணாசிரமக் கோட்பாடும் முதலாளித்துவமும் ஒரு அளவில் ஒரே போல செயல் படுகின்றன. இரண்டுமே தங்களுக்கு சேவை செய்ய ஒரு சமூகத்தை கட்டுப்படுத்தி வருகின்றது.
மெக்டொனால்ட், கே.எஃப்.சி போன்ற உணவுச்சாலைகளில் உணவு பரிமாறுதல் என்பது கிடையாது. அங்கு சுயசேவை வசதி தான். இந்த வகையான உணவகங்கள் பெரு முதலாளிகளுக்கான லாபம் தான் நோக்கம் என்ற போதிலும் அது சில சாதகமான மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளது. சுயசேவை என்பதால் தனியே தொழிலாளர்களை பரிமாறுவதற்கு கொண்டிருப்பதில்லை. இது மாதிரியான சுயசேவை உணவகங்கள் தொழிலாளர், நுகர்வோர், முதலாளி ஆகிய உறவில் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குகின்றதாக கருதமுடிகின்றது.

இன்று எச்சில் இலையை எடுப்பது என்பது சாதீய தொழில் அமைப்பின் ஒரு குறியீடாகத்தான் இருக்கின்றது. இதை மநு தர்மமும் முதலாளித்துவமும் சேவை என தொழில்முறையை நிலைப்படுத்தி வருகின்றது. தொடர்பியல் என்பது ஒன்றில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவது, அதன்மூலம் அதிகாரத்தை நிலைபெறச் செய்வது. உணவகங்கள் இத்தகைய அதிகாரத்தை நிலை பெறச் செய்கின்றது.

(டிசம்பர் 16-17 டிசம்பர் 2017 அன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ‘ஆர்” பன்னாட்டு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக