இயக்குனர் மகேந்திரன் பிறந்த தினம்
ஜூலை 25
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தனி முத்திரை பதித்த ஒரு இயக்குனர் மகேந்திரன். இன்றைய தலைமுறையினருக்கு தெறி பட வில்லன் என அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவரது இருப்பை சாசனம் போட்டு காட்ட உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் உள்ளன.
இவர் ஏன் தமிழின் மிக முக்கியமான இயக்குனர்:
சினிமா என்பதை காட்சி ஊடகம் என்ற அளவில் சரியாக புரிந்து கொண்டு சிறந்த கலைப்படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர். 1960களில் கதை, வசனம் எழுதுபவராக தான் தன் திரையுலக வாழ்க்கையை தொடங்குகிறார். தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 1970 களின் பிற்பகுதியில் இயக்குனராக அறிமுகமாகிறார். பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் தனது முதல் படத்திற்கு எழுத்தாளர் உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலை தழுவி படமாக எடுக்கிறார். ரஜினி நடிகனின் மற்றொரு பரிமாணத்தை திரையில் காட்டினார்.
அடுத்த படமான உதிரிப்பூக்கள் மூலம் காட்சி மொழியில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கினார். அந்த பனத்தின் மொத்த வசனத்தையும் இரு பக்கத்தில் எழுதிவிட முடியும். அந்த அளவுக்கு காட்சி மொழியில் சிறந்த கலைப்படத்தை உருவாக்கி அதை வெள்ளி விழா படமாக வெற்றி பெறவும் செய்தார்.
இவர் கதைகளில் மனிதனின் அக உணர்வுகளையும் அதன் குணாதிசயத்தையும் நுட்பமாக காட்சி படுத்தி இருப்பார்.
முள்ளும் மலரும் படத்தில் தான் என்ற அகங்காரம் பிடித்த ஒரு அண்ணனின் கதையை சொல்லி இருப்பார். அந்த கதையின் நாயகன் இறுதிக் காட்சியில் தான் தோற்பதைக் கூட கர்வமாக நான் உனக்கு வெற்றியைத் தருகிறேன் என்பார்.
உதிரிப்பூக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரம் இறுதியில் தான் ஊராரால் சாவுக்கு தயாராகும் போது, "நான் பண்ண தப்புலயே மோசமான தப்பு உங்களையும் என்ன மாதிரி மாத்தினது தான்" என்று சொல்வான்.
அகந்தை கொண்ட இரு கதாபாத்திரங்களை வைத்து தமிழின் சிறந்த படங்களை அளித்திருப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக