பக்கங்கள்

வெள்ளி, 19 ஜனவரி, 2024

சதுக்கபூதம் vs Monster

Monster (2023)

Directed by Hirokazu Kore-eda

சிலப்பதிகாரத்தில் ஒரு பூதம் பற்றி சொல்லப்பட்டிருக்கும். அதன் பெயர் சதுக்கபூதம். நகரின் நான்கு சாலைகள் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் இந்த பூதம் இருக்கும். பொய் சொல்பவர்களையும் அறம் பிறழ்வோரையும் இப்பூதம் கொன்றுவிடும். பெண்களைப் பற்றி புறங்கூறுவோரை இப்பூதம் கழுத்தைத் திருகி கொன்றுவிடும்.

இப்படத்தின் கதை நிகழும் ஜப்பானின் ஒரு நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்படுகின்றது. அங்கிருந்து சவோரி என்ற தாயின் பார்வையிலிருந்து கதை தொடங்குகின்றது. கணவரைப் பிரிந்து தனியாக தன் மகன் மினாடோ வை வளர்த்து வருகிறார். தன்மகனின் நடவடிகையில் ஏற்படுகின்ற அசாதாரண மாற்றங்கள் பற்றி விசாரிக்கும் போது அவனது ஆசிரியர் தான் அதற்கு காரணமென பள்ளியில் முறையிட்டு அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வைக்கிறார்.

கதை மீண்டும் அந்த நகரின் சதுக்கத்தில் ஏற்படுகின்ற தீ விபத்தில் இருந்து தொடங்குகின்றது. பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஆசிரியரின் பார்வையில் இருந்து தொடங்குகின்றது. அந்த மாணவன் மினாடோ தன் சக மாணவன் யோரி யை தொந்தரவு (bullying) செய்வதாக ஆசிரியர் பார்க்கிறார். அதை பற்றி விசாரிக்கும் போது மற்றவர்களுக்கு அந்த ஆசிரியர் ஏதோ தவறு செய்தது போல தெரிந்தது. அப்பாவியான ஒரு ஆசிரியர் மீது தவறான புகாரால் அவர் வேலையை விட்டு நீக்கப்படுகிறார்.

கதை மீண்டும் அந்த நகரின் சதுக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தொடங்குகின்றது. மாணவன் மினாடோ வின் பார்வையில் இருந்து கதை விரிவடைகிறது. சக மாணவனான யோரி பெண் தன்மை கொண்ட மென்மையானவனாக இருக்கிறான். இதனா‌ல் மற்ற மாணவர்கள் அவனை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். மினாடோவிடம் அவன் நட்பாக பழகுகிறான். மற்ற மாணவர்கள் யோரியை கிண்டல் பண்ணும் போது மினாடோ காப்பாற்றும் பொருட்டு அவனிடம் இருந்து புத்தகத்தை வாங்கும் போது தான் ஆசிரியர் பார்த்து தவறாக நினைக்கிறார்.

மினாடோவும் யோரியும் தங்கள் இருவரின் நட்பை பற்றிய அறிந்து கொள்ளுதலில் பெரிய போராட்டத்தை உணருகின்றனர். அந்த போராட்டத்தில் தங்களுக்கு ஒரு மறு பிறப்பை தேட முயற்சிக்கின்றனர்.

பாழடைந்த இரயில்வே சுரங்கப்பாதையில் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட சுதந்திர வெளியை கண்டடைகின்றனர். 

நம்மால் புரிந்து கொள்ளப்படாத ஒன்றை, இன்னொன்றின் புரிதலின் அடிப்படையில் புரிந்து கொள்ள எண்ணுவதே மோசமான சிந்தனை.

மனிதர்கள் தன்னால் புரிந்து கொள்ள முடியாதவற்றை, தாங்கள் ஏற்கனவே வரையறுத்துள்ள பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவற்றின் மூலம் அதை அறிய முற்படுகின்றனர். இது தான் நம்மில் இருக்கின்ற அரக்க குணம்.

வியாழன், 18 ஜனவரி, 2024

மறத் தமிழச்சிகளும் மானமுள்ள ஆண்களும்: ஏறு தழுவுதல் விளையாட்டு

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்



தமிழர் பண்பாடு என பல ஓர்மைக் கூறுகளை பொதுமைப் படுத்தி பேசி வருகின்றோம். பண்பாடு என்பது அடிப்படையில் ஒரு உயிரின் மீது இன்னொரு உயிர் வைக்கும் அன்புணர்வில் இருந்து தொடங்குகின்றது. மனித நாகரீகம் என்பது இத்தகைய மானுட நேய உணர்வின் வெளிப்பாடு.


வல்லாதிக்கம் ஒரு ஓர்மை கலாச்சாரத்தை நிறுவ முயல்கையில் மக்கள் பண்பாடு என்பது அதனதன் உட்கூறுகளுக்குள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்கின்றது. வல்லாதிக்க சக்திகள் மக்கள் பண்பாட்டை தன் வயப்படுதத்திக் கொள்ள முயல்கின்றன.


இன்னொரு புறம் சாதி உணர்வுடன் சல்லிக்கட்டு விளையாட்டு தொடர்புபடுத்தி பார்க்கப்படுகின்றது.


சில ஊடகங்கள் சல்லிக்கட்டில் காளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றெல்லாம் செய்திகள் வெளியிடுகின்றன.


சல்லிக்கட்டு என்பது சல்லிக் காசுகளுக்காக விளையாடப்படுவது. தங்களின் வீரத்தை வெளிக்காட்டிக் கொள்ள விளையாடுகின்றனர். ஆனால் அந்த வீரம் என்கிற உணர்வு சல்லிக்காசு மதிப்பே உடையது என்றே புரிந்து கொள்ளலாம். வீரம் என்ற உணர்வு அர்த்தமற்றது. முறுக்கு மீசை, அருவா, மடிச்சி கட்டிய வேட்டி. இவையெல்லாம் வீரம் என்று கருதினால் அது சல்லிக்காசுக்கு ஈடாகாது.


ஏறு தழுவுதல் எங்கள் பண்பாடு எனும் பொழுது அதில் எல்லா சாதியினரும் இருக்க வேண்டும். அரசு வேலைக்கு இதெல்லாம் ஒரு தகுதியாக கருதினால் பெண்களுக்காகவும் சல்லிக்கட்டு நடத்தலாம்.


புலியை மறத்தால் விரட்டிய தமிழ் பெண்டிர் இங்குண்டு.


தமிழர் பண்பாட்டில் காவியை பூச நினைத்தாலும் விரட்டி அடிக்க வேண்டும்.

தமிழர் பண்பாடு என பிற்போக்கு தனங்களை போற்றாமல் அவற்றை களைந்து தமிழர் பண்பாட்டை சமத்துவமாக செழுமைப் படுத்தி வளர்வதே தமிழர் பண்பாடு.


யாதும் ஊரே யாவரும் கேளிர்


- பாரதி ஆ.ரா