பக்கங்கள்

சனி, 9 ஜூன், 2012

நரிகள், ஊடகங்கள், ஆடுகள்

             கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று சேர்ந்தாலே விளையாட்டு கலைகட்டிடும். சிறுவர்கள் இவ்வாறு குழுவாக சேர்ந்து விளையாடும் போது குழு உணர்வையும், சமுகத்தில் அவர்களது பங்களிப்பையும் உணர்ந்து கொள்கின்றனர்.
             இவ்வாறு விளையாடப்படுகின்ற குழு விளையாட்டின் மூலமாக முன்னோர்கள் தன் இனத்தின் வரலாற்றினை சிறுவர்களுக்கு கற்று கொடுத்து வந்தனர். இன்றைய சூழலில் நாட்டார் விளையாட்டுகள் குறைந்து வந்ததன் விளைவாகவே இன்று சிறுவர்கள் இளம் வயதிலேயே தங்கள் கடமைகளை தவறியர்வர்களாக(Juvenile delinquent) வளர்கின்றனர்.

"சமூகம் தன் மீது கவியும் கருத்தியலை தான் விளையாட்டாக வெளிப்படுத்துகின்றது." - தொ. பரமசிவன்
              பத்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து விளையாட்டைத் தொடங்குகின்றனர். சாட், பூட், த்ரீ போட்டோ அல்லது அவர்களாகவே விருப்பப்பட்டு குழுவாக பிரிந்து இருவர் மட்டும் இறுதியில் தனிமைப் படுத்தப் படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆடாகவும் மற்றொருவர் நரியாகவும் இருப்பார். மற்ற சிறுவர்கள் எல்லாம் சங்கிலி போல கை கோர்த்து வட்டமாக நிற்பர். ஆடாக இருப்பவரை வட்டத்திற்குள் நிற்க வைத்து அவரை நரியிடம் இருந்து காப்பாற்றுவர். இவ்விளையாட்டு விளையாடப்படும் போது இவ்வாறு பாடல் படுகின்றனர்.
"கண்டீகளா!! கண்டீகளா!!!
ஆட்டுக் குட்டிய கண்டீகளா!!?
கண்டோம்.. கண்டோம்...
ஆட்டுக் குட்டிய கண்டோம்...
எங்க...?
வீட்டுக்குள்ள...
வரலாமா!!?
வரக்கூடாது..."
இவ்வாறாகவும்,
"சங்கிலி புங்கிலி கதவத் தொற
நான் மாட்டேன் வேங்கைப்புலி
ஆட்டு குட்டிய கண்டீகளா!!?
கண்டோம்...
எங்க!!?
கொல்லையில...
வரலாமா!!?
ம்ஹும்..."

             சில கிராமங்களில் "ஆடு நரி ஆட்டம்" என்றும் சில கிராமங்களில் "எலி பூனை ஆட்டம்" என்றும் சில கிராமங்களில் "ஆடு புலி ஆட்டம்" என்றும் இவ்விளையாட்டு அழைக்கப் படுகின்றது.
             கால்நடை வளர்ப்பு சமூகத்தில் இருந்து வந்த மக்கள், காட்டில் ஆட்டுக் கிடை போட்டிருக்கும் போது நரியோ புலியோ வந்து வேட்டையாடி விடாமல் இருந்து காவல் காத்து வந்ததன் தொடர்ச்சியாக இவ்விளையாட்டு கிராமங்களில் இருந்த சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்தது. தற்போது சில கிராமங்களில் மட்டும் இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருகின்றது.
            "வல்லோன் வகுத்ததே வாய்க்கால்" என்று இருக்கின்ற சமூகத்தில் அனைவரும் சமூக விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். வலியவரிடம் இருந்து எளியவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும், வலியவராக இருந்தாலும் சமுக விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பவற்றையும் வலியவரின் நயவஞ்சக சூழ்ச்சிகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் இவ்விளையாட்டு சிறுவர்களிடத்தில் மறைமுகமாக கற்பிக்கின்றது.
              இந்த விளையாட்டினை சமுகத்தில் ஒப்பிடுகையில், ஆடு - மக்கள் சமுதாயத்தையும், நரி - முதலாளித்துவ சமுதாயத்தையும் குறியீடாக கருதலாம். இதில் சங்கிலியாக நிற்கும் சிறுவர்கள் ஊடகத்தினோடு ஒப்பிடலாம். ஆனால் இன்றைய உலகமயமான உலகில் நரிகளிடம் காவலர்கள் வேலை செய்தால் ஆட்டின் நிலைமை என்னவோ அதுதான் நிலவுகின்றது.
              சமுகத்தில் தொடக்க காலத்தில் மக்களின் வெகுசன கருத்தியலை பேசும் ஊடகமாக நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்கள் இருந்தன. பிறகு அந்த இடத்தினை திரைப்படங்கள் பிடித்துக் கொண்டன. இன்று அந்த இடத்தினை தொலைக்காட்சி தொடர்கள் நிரப்புகின்றன. இது போக சிறுவர்களின் விளையாட்டினை எல்லாம் மாற்றியமைத்தது, கேலிச்சித்திர தொடர்களும்(cartoon programmes ), WWE, போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், video games ம் காரணமாக அமைகின்றன.
             வர்க்க போராட்டத்தை கற்றுத் தந்த விளையாட்டுகளை எல்லாம் அழித்து விட்டு, இந்த குடிமை சமூகத்தினை அடிமைப்படுத்தும் வகையில் விளையாட்டுகளை எல்லாம் மாற்றி அமைத்தது ஆதிக்க சமுதாயம். இதற்கு முழு பிரதிமை பெற்றவர்கள் மக்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக