பக்கங்கள்

ஞாயிறு, 20 மே, 2012

"உடை"யும் பண்பாடு

பண்பாடு என்பது கண்ணாடித் துண்டுகளில் தெரியும் சூரியனின் பிம்பம் போன்றது. நித்தமும் பிம்பங்கள் மாறிக்கொண்டிருந்தாலும் அதன் மூலப்பிரதி என்றும் மாறுவதில்லை.
உடை என்பது வெறும் உடுத்திக் கொள்கின்ற ஆடை, உடலை மறைக்கின்ற துணி என்பதோடு மட்டுமில்லாமல் அது ஒரு சமுகத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றது.

பண்பாடு என்பது சமூகவியல் பார்வையில் இரண்டு வகையாக பார்க்கப்படுகின்றது.
  1. பொருண்மைத் தன்மையுடையது.
  2. பொருண்மைத் தன்மையற்றது.

பொருண்மைத் தன்மை : Material culture
ஒரு இன மக்கள் பயன் படுத்துகின்ற பொருட்கள், வீடுகள், தெரு அமைப்புகள், வழிபாட்டு தளங்கள், தொழில் செய்யும் இடங்கள் ஆகியவை தீர்மானிக்கும் பண்பாடானது பொருண்மைத் தன்மையுடையது.


பொருண்மைத் தன்மையற்றது : Non-material culture
இது ஒரு சமுகத்தில் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், சமுக ஒழுக்கங்கள் ஆகியவற்றை சார்ந்தது. இதன் மூலம் பண்பாடு ஒருவனது எண்ணங்கள், உணர்வுகள், நடவடிக்கைகளை வடிவமைக்கின்றது. பொருண்மைத் தன்மையற்ற பண்பாட்டினை தீர்மானிக்கும் நான்கு முக்கிய காரணிகள் , குறியீடுகள், மொழி, சமுக மதிப்பீடுகள், சமுக நெறிமுறைகள் ஆகியன.

          இந்த கருத்தை நாம் உடுத்துகின்ற உடையுடன் ஒப்பிடுகையில் உடையானது ஒரு பண்பாட்டின் அடையாளமாக விளங்குவதை உணர்ந்து கொள்ளலாம். நாம் உடுத்துகின்ற ஆடை ஓவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை. தமிழ் நாட்டில் பெரும்பாலோனோர் அணியும் ஒரு ஆடையாக லுங்கி உள்ளது. இதனை ஈழத்தில் சரம் என்கின்றனர். தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஈழத்தினை சேர்ந்த தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஒரு சிறு வேற்றுமை காணப்படுகின்றது. இங்கு புவியியல் இடம் சார்ந்து வேறு படுகின்றது. கிராமங்களில் வசிப்பவர்கள் கட்டுவதற்கும், கடற்கரையோரம் மீன் பிடிப்பவர்கள் கட்டுவத்ர்க்குமே வேறு பாடு உள்ளது. இங்கு தொழில் முறை சார்ந்து வேறு படுகின்றது. இதில் வயது சார்ந்த வேறு பாட்டையும் காணலாம். ஊரில் இளவட்டப் பையன்கள் கட்டுவதற்கும், பெரியவர்கள் லுங்கி கட்டுவதற்கும் கூட வேறுபாடு உள்ளது.

           உடையானது பண்பாட்டு அளவில் அது பொருண்மைத் தன்மையுடையதாக உள்ளது. கட்டம் போட்ட சட்டை, ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, ஜிப்பா என பல வகைகள் உள்ளன. ஆனால் அவை காலம் சார்ந்தும் சூழ்நிலை சார்ந்தும் அவற்றை அணிகின்றனர். இங்கு அதன் பொருண்மைத்  இழந்து போய் விடுகின்றது.

திருமண நிகழ்சிகளிலும், கோயில் திருவிழாக்களின் போதும் லுங்கி அணிவதில்லை. அன்றைய தினங்களில் வேட்டி அணிவதையே விரும்புகின்றனர். ஒரு சமுக கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும், கோயிலுக்கு செல்லும் போது வேட்டி தான் கட்ட வேண்டும், கோயிலுக்குள் வேட்டி மடித்து கட்டக் கூடாது என்ற நம்பிக்கைகள் உள்ளது. பெரும்பாலும் திருவிழா நாட்களில் புது துணி வாங்குவது வழக்கம்.

ஆடி மாதங்களில் தள்ளுபடிக்கு துணி வாங்குதல் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. ஆடி மாதம் என்பது சடங்கு என்பதையும் தாண்டி ஒரு வியாபாரத்தந்திரமாக துணிக்கடைகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த துணிக்கடைகள் விற்கும் துணிகள் நமது பண்பாட்டை சாராதவை என்ற போதிலும் அதனை விற்க நமது மக்களிடையே உள்ள பண்பாட்டு, மதம் சார்ந்த நம்பிக்கை தேவை படுகின்றது. இங்குதான் நமது சமுகம் எனும் கண்ணாடியில் பண்பாட்டு சூரியனின் நிழல் உடைகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக