பக்கங்கள்

புதன், 18 ஏப்ரல், 2012

இன்னும் மறுபிறவிதான்...

கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி, தூத்துக்குடியில் கர்ப்பிணிப் பெண் இறந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சேது லட்சுமியை அப்பெண்ணின் கணவர் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயக்கயியல் மருத்துவரான சேதுலட்சுமி சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சயளித்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என கூறுவர். கிராமங்களில் புள்ளத்தாச்சி பெண்கள் மரணமடைந்தால் அவர்களின் நினைவாக சுமைதாங்கி கல்கள் வைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது. அன்று போதிய மருத்துவ வசதி இன்மையால் பல பெண்கள் இறந்து வந்தனர். ஆனால் இன்று மருத்துவ வசதிகள் வளர்ச்சி அடைந்து உள்ள போதும் பெண்களுக்கு பிரசவம் என்பது ஒரு மறுபிறவியாகவே இருந்து வருகின்றது. சுகப்பிரசவம் என்பது தற்பொழுது அரிதாகவே உள்ளது. இதற்கு சில தனியார் மருத்துவமனைகளே காரணமாகின்றன.

பிரெஞ்சு தத்துவவாதி மைக்கல் பூக்கோ, "மருத்துவமனைகள், வகுப்பறை, சிறைச்சாலை" ஆகியவை மூன்றும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை என குறிப்பிடுகின்றார். இவரது கருத்துப்படி, முற்றிலும் அறநெறிகளை துறந்து விட்ட ஒரு சமூகம், வணிக மயமாகிவிட்ட மருத்துவத்துறையில் உயிர்களின் மீது அக்கறை குறைந்து பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்படுகின்றது.

சமீபத்தில் கொல்கத்தா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேலானோர் இறந்தனர். இச்சம்பவத்தின் முதல் கட்ட விசாரணையில் மருத்துவமனையில் பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என காவல்துறையினரால் கூறப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் மருத்துவர் ஒருவர் பள்ளியில் படிக்கும் தன் மகனைக் கொண்டு தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். இது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது போக பணத்திற்காக சில தனியார் மருத்துவமனைகள் சுகப்பிரசத்தினைக்கூட அறுவை சிகிச்சை அளித்து லாபம் பார்க்கின்றனர். இதுபோக மாறிவருகின்ற உணவு பழக்க வழக்கங்கள், பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து இன்மை, பிரசவத்தின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு என்பன போன்ற காரணங்களால் பிரவத்தின் போது மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டிற்கான சி.என்.என். நாயகன் விருதினை ராபின் லிம் என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியாவில் தாய்மையடையும் பெண்களுக்கு மருத்துவ சேவையினை ஆற்றி வருகின்றார். ஆரோக்கிய அன்னை பூமி இயக்கம் மூலம் கர்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவ சேவை செய்து வருகின்றார். 

ஒவ்வொரு குழந்தையின் முதல் மூச்சுக் காற்றும் பூமியில் படும்போது அமைதியையும் அன்பையும் சுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு அன்னையும் திடமான ஆரோக்கியமான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தை"யும் பாதுகாப்பாக பிறக்க வேண்டும். ஆனால் இந்த பூமியில் எங்கும் இது போல நடக்க சாத்தியமில்லை" என ராபின் லிம் கூறுகின்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பெண்கள் பிரசவத்தின் போது இறக்கின்றனர் என்ற தகவலை உலக சுகாதார மையம் அளிக்கின்றது. இதில் இந்தியாவில் 47.57/1000 என்ற விகிதத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் உள்ளதாக தகவலை அளிக்கின்றது.

பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.

லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது.

மருத்துவ வசதிகள் பெருகியுள்ள இந்த காலத்திலும் குழந்தை பிறப்பது என்பது பெண்ணுக்கு மறு பிறவியாகவே இருந்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக