பக்கங்கள்

புதன், 18 ஏப்ரல், 2012

ஊடகங்களும் தொன்மங்களும்

"ஊடகங்கள் மூலம் தினந்தோறும் தொன்மங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது" என நாட்டரியல் அறிஞர் முனைவர் இ.முத்தையா கூறுகின்றார்.

 "சங்க கால மக்கள் நாட்டார் மரபு" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் இ.முத்தையா அவர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றார். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் துறையின் முன்னாள் துறைத்தலைவர் ஆவார்.

சங்க கால கவிதைகளில் சடங்கு மற்றும் தொன்மம் சார்ந்த கருத்துகள் அதிகம் இடம் பெறுகின்றன. இயற்கையையும் பெண்ணையும் பற்றிய புரிதல் தான்  சங்க இலக்கிய அகப்பாடல்களாக உள்ளன. இயற்கையும் பெண்ணும் வளமைத் தன்மையுடையவர்கள். வெப்பம் என்ற இயக்க ஆற்றல் இருவரிடமும் உள்ளது. இந்த குறியீடுகளின் வெளிப்பாடு தான் முளைப்பாரி சடங்குகளில் வெளிப்படுகின்றது. முளைப்பாரி குடம் பெண்ணின் கருப்பையை குறிக்கின்றது. சமுக இயக்கத்திற்கு இயற்கையும் பெண்ணும் முக்கியம் என்பதின் வெளிப்பாடே இது என முனைவர் இ.முத்தையா கூறுகின்றார்.

சங்க காலப் பாடல்கள் முழுவதும் தொன்மங்களை உருவாக்குகின்றன என இவர் கூறினார். அதே நேரத்தில் தொன்மம், பழமை என்ற இரு சொல்லும் வேறுபட்டு முரண்பட்டு உள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.

இன்று வெளிவருகின்ற செய்திகள், விளம்பரங்கள் மூலமாக பல விதமான தொன்மங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட ஐந்து வட இந்தியர்கள் மீது ஊடகங்கள் தொடர்ந்து தொன்மங்களை உருவாக்கிக்  கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் வெளியிடும் ஒவ்வொரு செய்தியும் மக்களிடையே தினந்தூரும் தொன்மங்களை உருவாக்கி வருகின்றன என இவர் கூறினார்.

ஊடக விளம்பரங்களும் பல வித தொன்ம கட்டுடைப்பினை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. "ப்ரீத்திக்கு நான் கியாரண்டீ " என்பன போன்ற விளம்பரங்கள் மொழி மூலம் ஆக தொன்மங்களை உருவாக்குகின்றது. "பலம் வாய்ந்த பீமனால் ஒரு கல்கூரையை உடைக்க முடியவில்லை" என சித்தரிக்கும் விளம்பரம் மூலம் புராணங்கள் மீது ஒரு புதிய தொன்மம் உருவாக்கப்படுகின்றது.

ஊடகங்கள் தெரிநிலை தொன்மம், குறிப்புநிலை தொன்மம் என இரு வேறு நிலைகளில் தொன்மங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக