சில : Some ideas on IPLT20 Cricket
சமூகத்தில் விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்குத் தன்மையைத் தாண்டியும் அது சில பண்பாட்டுக் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. விளையாட்டு என்பது நாட்டார் விளையாட்டு, நிறுவனமயமாக்கப்பட்ட விளையாட்டு என இரு வடிவங்களில் உள்ளது. அவை வெளிப்படுத்தும் பண்பாட்டு அரசியல் என்பது மிகவும் அபாயகரமானதாக உள்ளது. "சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுகளின் வழியே வெளிப்படுத்துகின்றது. (தொ. பரமசிவன், 2009, 90). விளையாட்டுகளில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களின் மூலம் சமூக அசைவியக்கங்களை புரிந்து கொள்ள இயலும்.
சமூக அசைவியக்கங்களில் அடிப்படையாக வன்மமும், காமமும், பொருளாதாரமும் உள்ளது. இவற்றின் அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடே பண்பாடு(Repression of Expression). இவை மூன்றும் சமூக நியதிகளுக்கு உட்பட்டு தன் எல்லைகளில் இருந்து மீற தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. பண்பாடு என்பது அசைவற்ற தன்மையினைக் கொண்டுள்ளது. எத்தகைய சமூக புரட்சிகள் ஏற்படினும் அது தன்னை தனக்கே உரிய பாணியில் தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றது.
கிரிக்கெட் என்ற விளையாட்டு காலனி ஆட்சி காலத்தில் இந்தியாவில் பரவிய ஒரு விளையாட்டு. ஒரு சமூகத்தினை அடிமைப் படுத்துவதற்கு அரசும், இராணுவமும் மட்டும் அவசியமில்லை. கலை மற்றும் பொழுதுபோக்கு பண்பாட்டின் மூலமும் தொடர்ந்து அடிமைப் படுத்தலாம் என்பதற்கு கிரிக்கெட் ஒரு சிறந்த உதாரணம். இந்த கிரிக்கெட் விளையாட்டு இன்றைய பொருளாதார தளத்தில் மிக இன்றியமையாத ஒன்றாக திகழ்கின்றது. பண்பாட்டில் IPLT20 கிரிக்கெட் என்ற விளையாட்டு, அறிவு சார்ந்த கருத்தியல் தளத்தில் பெருந்திரள் மக்களை குருட்டுத்தனமானவர்களாக மாற்றி வருகின்றது.
சமூக உருவாக்கம் மற்றும் மாற்றம் பற்றிச் சிந்திப்பவர்கள் விளையாட்டுகளின் பங்கினைக் கூர்மையாக மதிப்பிட்டு அறிய வேண்டும். (தொ. பரமசிவன், 2009, 95). இன்றைய சமூக சூழலில் விளையாட்டின் பாத்திரம் என்பது நுகர்வுப் பண்டமாக உள்ளது. அவை மக்களின் கூட்டாண்மை நினைவுகளை முன்னெடுத்துச் செல்லுகின்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு இன்றைய சமூக சூழலில் மதத்தின் நவீன வடிவமாக வெளிப்படுகின்றது.
பண்டைய காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெரும் போது அந்நாட்டில் இருந்து செல்வங்களைக் கொள்ளையடித்து வந்தது மட்டுமின்றி அந்நாட்டு மக்களை அடிமையாக கொண்டு வருவதை மரபாகக் கொண்டிருந்தினர். அவ்வாறு பிற நாடுகளில் இருந்து அடிமையாகக் கொண்டு வரப்பட்ட பெண்கள் பலவித சுரண்டல்களுக்கு உள்ளாயினர். ராஜராஜசோழன் காலத்தில் இத்தகைய வரலாற்று குரூரங்கள் நடைபெற்றதை வரலாற்று தரவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் தேவரடியார் மரபு (Devadasi) தமிழகத்தில் மீண்டும் உருவாக ராஜராஜசோழன் முக்கிய காரணமானார்.
பண்பாடு என்பது பெண்களின் மூலம் தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப் படுகின்றது என தொ. பரமசிவன் குறிப்பிடுகின்றார். அதனால் தான் ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்த அந்நாட்டு பெண்களை அடிமைப்படுத்த அனைத்து ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்களும் கருதுகின்றனர்.
பெண்களை அடிமைப்படுத்த மதங்களும் வேதங்களும் ஒரு கருத்தியல் ஆயுதமாக விளங்கியது. அதனை நடைமுறை படுத்த இசை, நடனம் போன்ற கலைகள் உதவி வருகின்றது. தமிழகத்தில் அவ்வாறு உருவாகிய ஒரு மரபு தான் தேவரடியார் மரபு.
தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் 'கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர் கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்' (லெஸ்லி சி.ஒர், 2005, பக்கம் 22) என குறிப்பிடுகின்றார். இருப்பினும் தேவரடியார் என்பவர்கள் ஆடற் பெண்டிராக இருந்தனர் என்பதனை தமிழக கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சிலப்பதிகாரத்தில் ஆடல் வகைகளில் ஒன்றாக அல்லியம் குறிப்பிடப்படுகின்றது. யானை வடிவில் வந்த கம்சனை கொள்வதற்காக கண்ணன் ஆடிய நடனம் அல்லியம் என்பது சிலப்பதிகாரம் தரும் செய்தி. பதுமைகளின் வாயிலாக இவ்வாடல் நடைபெற்று வந்ததை புறப்பாடல் ஒன்றின் மூலம் அறியப்படுகின்றது.
".....வரி வனப் புற்றே
அல்லிப்பாவை ஆடுவனப்பு ஏய்ப்ப" (புறநானூறு : 33:16)
பாவைகளை வைத்து ஆடும் கூத்து சங்க காலத்தில் இருந்ததை இதன் மூலம் அறியலாம். (நர்மதா , 2013, பக்கம்- 36)
தஞ்சைக்கோவில் பணியாளர் 1100 பேரில் 400 பேர் ஆடல் மகளிர் ஆவர். இவர்கள் தளிச்சேரிப் பெண்டுகள் எனவும் அழைக்கப்பட்டனர்.(தொ.பரமசிவன், 2012, 80)
பண்பாட்டின் உலகமயமாக்கல்:
பண்பாடு என்பது உலக மயமாக்கத்தினால் அது பூதமாக மீட்டுருவாக்கப் படுகின்றது. கோயில்களில் ஆடற் பெண்டிர் என அடிமைப் பட்டுக் கிடந்த பெண்களை சமூக விடுதலை இயக்கங்கள் போராடி மீட்டதை இன்றைய உலகளாவிய வணிக பொருளாதாரம் மீண்டும் தனது நிலைக்கு செல்ல துணை நிற்கின்றது.
கிரிக்கெட் என்ற விளையாட்டு ஒரு வணிகப்பண்டமாக திகழ்கின்றது. அது ஒரு மதம் போல தன்னை உருவெடுத்துக் கொண்டது. பண்டைய சமூகத்தில் நிலவி வந்த அடிமை முறைகளும், தேவரடியார் முறைகளும் இன்று விளையாட்டு வீரர்களின் ஏல முறை, Cheer Leaders எனும் நடன மங்கைகள் என்ற வடிவில் தன்னை மீண்டும் உயிர்பித்துக் கொண்டது.
மேற்பார்வை நூல்கள்:
அறியப்படாத தமிழகம், தொ.பரமசிவன், காலச்சுவடு, 2009
விடுபூக்கள், தொ.பரமசிவன், கயல் கவின் பதிப்பகம், 2012
விடுபூக்கள், தொ.பரமசிவன், கயல் கவின் பதிப்பகம், 2012
தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள்,லெஸ்லி சி.ஒர், விடியல், 2005
பதினோராடல்கள், க.நர்மதா, அரிமா நோக்கு, காலண்டிதழ், சனவரி, 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக