சமூக அசைவியக்கத்தினை அறிந்து கொள்ள அதன் பன்மியத் தன்மைகளை புரிந்து கொள்வது இன்றியமையாததாகின்றது. உலகமயமாக்கப்பட்ட சூழலில், சமூக மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வது முக்கியமாகின்றது. தமிழகத்தில் சமூக அசைவியக்கத்தினை புரிந்து கொள்ள வரலாற்று அடிப்படையிலான சமூக பார்வை அவசியமாகின்றது. இங்கு வர்க்க பேதங்களைக் காட்டிலும் சாதிய படிநிலைகளைக் கொண்டே சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது கவனிக்கத்தக்கது.
சமூகத்தில் ஒரு குழு தனது இருப்பினை, மற்றொருவர் மீது அதிகாரம் செலுத்துவதின் மூலம் உறுதி செய்கின்றது. அதிகாரத்தின் வடிவங்கள்,
- பிற சமூகத்தினருடனான உணவுப் பரிமாற்றங்கள்
- மரபு மற்றும் பாரம்பரியங்களை (சடங்குகள்)
- சொத்து மற்றும் நிலவுடைமை
- அகமணமுறை
சமூகத்தில் சாதி என்பது, பிறப்பு, தொழில் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் பகுக்கப் படுகின்றது.
வேத காலத்தில் சாதி என்பது பிறப்பின் அடிப்படியில் இல்லை. தாசி பெண்ணின் மகனாகப் பிறந்து, சூதாடும் மனைகளில் வளர்ந்தவரென்ற போதிலும், கவாக்ஷ மகரிஷி ஞானம் உடையவராகத் திகழ்ந்தார். வேத மந்திரங்களை ஞானக் கண்ணால் கண்ட மந்திர திரஷ்டா எனப்படும் மிகவும் உயர்ந்த ஆன்மிக நிலையில் வாழ்ந்த மகரிஷி அவர். அவரால் அருளப்பட்ட வேதமந்திரங்கள் மிக உயர்ந்த முக்தி நிலையை அளிப்பவை. அவரே சரஸ்வதி நதி தீரத்தில் நடந்த சோமயாகத்தின் எஜமானராக இருந்தருளினார் (ரிக் வேதம் - ஐதரேய பிராம்மணம்). அவரே நீர் நிலைகளைக் கட்டுப்படுத்திய சுயநலவாதிகளை அழித்து நீர் நிலைகளை மக்களுக்கு பொதுவான வளமாக ஆக்கினார் (சாமவேதம் - கௌஷீதகீ பிராம்மணம்).
(http://www.santhan.com/index. php/cast1176)
வேத காலத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை என்பதை அறிய முடிகின்றது. ஆனால் பின்னாட்களில் சாதி தன்னுடைய வடிவங்களை மாற்றிக் கொண்டே வந்துள்ளது.
வேத காலத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை என்பதை அறிய முடிகின்றது. ஆனால் பின்னாட்களில் சாதி தன்னுடைய வடிவங்களை மாற்றிக் கொண்டே வந்துள்ளது.
உணவில் ஒளிந்திருக்கும் சாதி:
- உணவின் தன்மை மற்றும் உண்ணும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாதியக் கட்டுமானங்கள் சமூகத்தில் இருந்து வந்துள்ளன. உணவை விளைவிப்பவன் விவசாயியாக இருந்தாலும், மூலதனம் - உற்பத்தி - உழைப்பு ஆகியவற்றின் காரணமாக அவனுக்கான உணவைப் பெற முடிவதில்லை. அதனால் தான் உணவுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வருகின்றன. மூலதனம், உழைப்பு, உற்பத்தி ஆகியன சமூக வேறுபாடுகள் உருவாக ஒரு புறக்காரணி மட்டுமே. சமூக வேறுபாடுகள் உருவாக சாதி தான் அடிப்படியாக இருக்கின்றது.
- உணவு சுவையானது, ஆரோக்கியமானது மட்டுமன்று. அது சமூக அடையாளங்களை உருவாக்குகின்றது. இன்றும் கிராமங்களில் சில சாதியினர் உணவை உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. குத்துக் காலிட்டு அல்லது நின்று கொண்டு தான் உண்ண வேண்டும்.(2013 ஆம் ஆண்டில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஒரு சிற்றூரில் கல்யாண விருந்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர், அனைவரும் சாப்பிட்ட பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் என கருதுபவர்கள் கீழே அமர்ந்து சாப்பிட்டனர்.) அசைவ உணவு என்பது குறிப்பாக மாடு மற்றும் பன்றி ஆகியன இழிவான ஒரு உணவு என்ற கருத்து நிலவி வருகின்றது. மாடு மற்றும் பன்றி இறைச்சி உணவு உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. உலகமயமாக்கத்தினால் உணவுப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சாதி என்ற கருத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்றைய உணவகங்களை பற்றிய அரசியலை புரிந்து கொள்வது அவசியமாகின்றது.
- விருந்தோம்பலில் முக்கியமானது சாப்பிட்ட இலையை அல்லது தட்டை உணவு பறிமாரியவரே எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த விருந்து இருவருக்கும் திருப்திகரமானதாக இருக்கும். நுகர்வு மயமான சூழலில் உணவகங்களில் சாப்பிட்ட இலையை எடுப்பது என்ற நிகழ்வு பல வித அர்த்தங்களை உருவாக்குகின்றது. சில இடங்களில் சாப்பிட்டவர் தங்கள் இலையை தாங்களே எடுக்க வேண்டும். அத்தகைய உணவகங்களை கூர்ந்து நோக்கும் பொழுது உணவாக உரிமையாளர், உணவு நுகர்வோர் ஆகியோருக்கு இடையேயான சாதிய வேறுபாடுகளை அறியமுடியும். உணவின் சாதிய அதிகார படிநிலைகளை புரிந்து கொள்ள உணவக உரிமையாளர், உணவு பரிமாறுபவர், உணவு உண்பவர் (நுகர்வோர்), இலையை எடுப்பவர் ஆகியோருக்கு இடையேயான உறவுநிலைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். உணவகங்கள் அமைந்துள்ள சூழலும் இந்த வேறுபாடு வெளிப்பட காரணமாக உள்ளது.
- "வாயப் பாரு வண்ணாந் தாளியாட்டும்" என்ற பேசுகின்ற ஒரு வசவுச் சொல்லின் பின்னால் ஒரு சமூக வரலாறு புதைந்துள்ளது. வண்ணார் சமூகத்தினர் அழுக்குத் துணிகளை துவைத்ததற்கு கூலியாக அந்திப் பொழுதில் அவர்களின் வீட்டு பின் வாசல் வழியாக சென்று சோறு வாங்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வீடாக சென்று சோறு வாங்க வேண்டும். இதற்கு "ஊர்ச்சோறு" என்று பெயர். (பழைய தமிழ்ப் படங்களில் இந்த காட்சியை காணலாம். குறிப்பாக பாரதிராஜாவின் "கல்லுக்குள் ஈரம்" திரைப்படத்தில்.)
ராமநாதபுரம் வட்டார எழுத்தாளர் வேல.இராமமூர்த்தி, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களான அம்பட்டர், அருந்ததியர், சக்கிலியர், பகடை, வண்ணார் முதலானவர்களின் மீதான சாதிய வன்முறைகளை இவரது சிறுகதை சுட்டுகின்றது. ’ஆசை... தோசை...’ என்ற கதையில் ஒரு அம்பட்டர் ஓட்டலில் மேசையில் அமர்ந்து சாப்பிட்டதால் செருப்படி விழுந்ததை சுட்டுகின்றார்.
ஊருகஞ்சி வாங்கிகுடிக்கிற வண்ணாப்பயளுக்கு என்ன திமிரு இருந்தா... கழுதைகளை விட்டு என் வெள்ளாமையை அழிப்பீங்க...! (வேலராமமூர்த்தி கதைகள், 2011 - 110) என ஆதிக்க சாதி தோப்புக்காரன், வண்ணானை அடித்துக் கொன்று விடுகின்றான்.
- ஜெர்மன் சமூகவியல் அறிஞர் டோனீஸ் (Ferdinand Tönnies) சமூகம் மற்றும் சமுதாயம் (Gemeinschaft and Gesellschaft) என்பது பற்றி குறிப்பிடுகின்றார். அதில் சமூகம் என்பது, "ஒரு புறம் உறவுகள் மற்றும் சடங்குகள், பாரம்பரிய மரபுகளையும் மற்றொரு புறம் தனது நிபுணத்துவம் மற்றும் சுய ஆர்வங்களையும் ஒருங்கிணைக்கின்றது". நகரமயமாக்கல் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு பிறகு முதன்மையாக இருந்த விவசாயிகள் இரண்டாம் பட்சமாக மாற்றப்பட்டனர். அவர்களது சடங்குகளும் இரண்டாம் தரமானதாக மாறியது. இந்த கண்ணோட்டத்தில் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றும் நிகழ்வினை காண வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் திரைப்படங்களில் கூழ் ஊற்றும் சடங்கு பற்றி உருவாக்கியுள்ள தொன்மம் என்பது, கூழ் ஊற்றுபவர்கள் ரவுடிகள், ஏமாற்று பேர்வழி, பிச்சைக்காரர்கள் என்பதாகும். அதே வேளையில் நிறுவன கோயில்களில் அன்னதானம் வழங்குபவர்கள் உயர்வானவர்களாக சித்தரிக்கப் படுவதின் மூலம் அதிகாரம் எவ்வாறு நிலை நாட்டப் படுகின்றது என்பதனை உணர வேண்டியது அவசியம்.
- ஆடி மாதங்களில் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் நிகழ்வும், ரமலான் நோன்பில் இஸ்லாமியர்கள் அளிக்கும் நோன்புக் கஞ்சிக்கும் இடையே உள்ள பண்பாட்டு ஒற்றுமைகளை காணலாம்.
தொழிலில் ஒளிந்திருக்கும் சாதி:
- சாதி என்பது தொழில் அடிப்படையிலும், வாழ்க்கை முறை அடிப்படையிலும் இருந்து வந்தது. நகரமயமாக்கலுக்கு பிறகு மக்களின் தொழிலும், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. வேதங்களை ஓதுதல், கற்பித்தல் போன்ற செயல்களை செய்தவர்கள் பிராமணர்கள் என்றும், கொட்டடித்து செய்திகளை ஊருக்கு சொல்லியவர்கள் பறையர்கள் என்றும், தோலை பதனிட்டு தோல் சார்ந்த வேலைகளை செய்தவர்கள் சக்கிலியர் என்றும், மருத்துவ வேலைகளை செய்து வந்தவர்களை அம்பட்டர் என்றும், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வியாபாரங்களை செய்தவர்கள் கோனார் என்றும், கோவில்களில் இசையமைத்து வந்தவர்கள் நாவிதர் என்றும், தொழில் ரீதியான சாதி பகுப்புகள். ஆனால் இந்த வரையறைகள் எல்லாம் உலகமயமாக்கத்தினால் உண்டான நுகர்வு பண்பாட்டின் மூலம் தகர்த்தெரியப் பட்டுவிட்டன.
- நுகர்வு பண்பாட்டில் தகர்த்தெறியப் பட்ட சாதிய வரையறைகளில் பல முரண்பாடுகளைக் காணலாம். கற்பித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள் பிராமணர்கள் எனின் இன்று ஆசிரியர் பணியில் பலதரப்பட்ட சாதியினர் உள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் பிராமணர் என்று குறிப்பிட முடியாது. கொட்டடித்து செய்திகளை ஊருக்கு சொல்லியவர்கள் பறையர் எனின், இன்று உள்ள ஊடக முதலாளிகளையும், நிருபர்களையும் பறையர் எனக் குறிப்பிட முடியாது. இதனால் சமூகத்தில் சாதி ஒழிந்துவிடவில்லை. ஒளிந்துக்கொண்டுள்ளது.
யோனியில் ஒளிந்திருக்கும் சாதி:
சாதி என்ற சொல் "ஜாதி" என்ற வட மொழிச் சொல்லில் இருந்து உருவானது. "ஜா" என்ற வட மொழிச் சொல்லுக்கு பிறப்பு என்று பொருள். வனஜா, கிரிஜா போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளது. இதன் அர்த்தம், வனஜா - வனத்தில் பிறந்தவள், கிரிஜா - கிரித்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள் என்று பொருள் படும்.
இவ்வாறு தொ.பரமசிவன் தன்னுடைய நூலில் குறிப்பிடுகின்றார்.
சாதி என்பது தமிழக பண்பாட்டு சூழலில், ஒரு பண்பாட்டு மீறலாக இருக்கின்றது. மனு தர்மங்களும், அரசியல் கட்சிகளும், சாதி நிறுவனங்களும், இந்த பண்பாட்டு மீறலை நியாயப் படுத்தி வளர்த்துவிடுகின்றன.
ஒரு சமூகத்தின் சாதி என்பது, அந்த சமூகத்தினரின் திருமண முறையில் தான் இன்று வரை மாற்றமின்றி வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் இங்கு சாதி வெறிக் கொலைகள் (கௌரவக் கொலைகள்) இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இனக்குழு மரபில் வாழ்ந்த சமூகங்களில் "அகமணமுறை" என்பது இருந்து வந்தது. தாய்வழிச்சமூகத்தின் எச்சமாக இன்றும் ஒரு குடும்பத்தின் மரியாதைச் சின்னமாக பெண்கள் இருக்கின்றனர். சமூக நீதிக் காவலர்கள் என்றுக் கூறி சாதியை காப்பாற்றும் ஆண்கள் தங்கள் சாதியை யோனியில் ஒளித்து வைத்துள்ளனர். தமிழக வரலாற்றில் சாதிய வன்முறைகளை ஒரு முறை புரட்டி பார்க்கும் போது அது பெரும்பாலும் பெண், நிலம் மற்றும் நீர் சார்ந்தே இருந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். (நிலம், நீர் ஆகியன பெண்ணாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.) மதுரைவீரன், காத்தவராயன், முத்துப்பட்டன் ஆகியோர் கதைகளில் சாதிய வன்முறை பெண்களை மையமிட்டே நிகழ்ந்துள்ளது. ஆனால் சாதிய வன்முறைகளுக்கு பெண்கள் காரணமன்று. தமிழக வரலாற்றில் மகண் மறுத்தல் (பெண் மறுத்தல்) என்பதன் பின்னாலும் சாதி உள்ளது. கிராமங்களில் உள்ள பெண் தெய்வங்களின் கதைகள் மகண் மறுத்தலின் காரணமாக தன் பெண்ணை அந்த குடும்பத்தாரே கொன்று தெயவமாக வழிபட ஆரம்பித்தனர் என்ற உண்மை விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக