பக்கங்கள்

புதன், 3 ஜூலை, 2013

'பண்'பாடும் பண்பாடு


The Express Tribune
  • சில இசைக் குறிப்புகள்:
    - கலைத்தன்மைக் கொண்ட ஒரு இசைக்குறிப்பன்று. இசை குறித்த சில சமூக அவதானிப்புகள்.

    • மனிதமனம் அடிப்படையில் குரூரமான வன்மத்தையும் காமத்தையும் தன் ஆழ்மனதில் புதைத்து வைத்துள்ளது. பண்பாடு என்பது குரூரமான மனித மனதினை கட்டுப் படுத்தும் ஒரு நெறிமுறையாக உள்ளது. அந்த பண்பாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு வெளிப்படுத்தப்படும் குரூர எண்ணங்களே கலைப் படைப்புகள் ஆகின்றன. கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வளர்ச்சியும் பண்பாட்டு மாற்றங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஓவியம், சிற்பம், இயல், இசை, நாடகம் ஆகிய கலைகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக கருதப்படுகின்றது. 
    • இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமன்று. அது சமூக பண்பாட்டு பொருளாதரத் தளத்தில் பல அர்த்தங்களை கொடுக்கின்ற ஒரு பிரதியாக உள்ளது. இசை என்பது சமூக வரலாற்று நினைவுகளாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகின்றது. அவற்றை இசை வெளிப்பாட்டு முறைமைகளில் நேரிடையாக காணலாம். நாட்டார் வழிபாட்டில் ஒரு நிகழ்வான சாமியாட்டம் எனும் நிகழ்வு தொல் சமூகத்தினரிடையே இருந்த போர் நடனத்தின் நீட்சியாகவே காணப்படுகின்றது.
    • தமிழர்களின் வாழ்வில், ஆடலும் பாடலும் என்பது இறைவழிபாட்டோடும், சடங்கியல் முறையிலும் அன்றாட வாழ்வோடு இணைந்த ஒன்றாக உள்ளது. தாலாட்டு பாடல் முதல் ஒப்பாரி வரை ஒவ்வொரு செயல்களும் இசையுடன் இணைந்தே உள்ளது. நாட்டார் கதைப் பாடல்களை, "கடந்த கால நினைவுகளுக்கும், நிகழ்கால நிகழ்வுகளுக்கும் உள்ள முரண்பட்ட தொடர்பு" என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளலாம். மதுரை வீரன், காத்தவராயன் கதை, கான்சாகிபு சண்டை போன்ற நாட்டார் கதைப் பாடல்களில் காணப்படும் சோக முடிவுகளை, கடந்த கால வரலாறு - மக்களின் நினைவுகள் - சமகால சாதிய ஆதிக்கம் ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி காணலாம்.
    • பிரெஞ்சு அறிஞர்  Jacques Attali தனது Noise: The Political Economy of Music என்ற நூலில் இசை என்பது கொலைச்செயலின் கலைவடிவமாக உள்ளது எனக் கூறுகின்றார். தொன்மை சமூகத்தில் இசை என்பது போர் பற்றிய நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு கலை வடிவமாக இசை உள்ளது. இசை என்பது ஒரு பண்பாட்டு அடையாளம். அது இனவரைவியல் கூறுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. ஒரு சமுகத்தின் தனிப்பட்ட மற்றும் கூட்டாண்மை நினைவுகள் இசை மூலம் உருவாக்கப்படுகின்றது.
    • இசைக்கு மொழி இல்லை, அது ஒரு உலகப்பொது மொழி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் என்றாலும் இசை இயல்பில் அப்படி இல்லை. இசை தனக்கென ஒரு மொழியையும், தளத்தையும் கொண்டுள்ளது. 
    • மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் படி, முதலாளியம் என்பது ஒரு பெரு அமைப்பு. பண்டம் என்பது அதன் அடிப்படை அலகு. இன்றைய சூழலில் முதலாளிய சந்தைப் பண்டங்களுள் ஒன்றாக இசை திகழ்கின்றது. இசைக்கலைஞன், இசைக்கருவி, இசை ஆகியவற்றிற்கு இடையே உள்ள உறவு என்பது வெறும் கலைத்தன்மை வாய்ந்தது மட்டுமன்று. அது சமூக எதார்த்தங்களை பிரதிபலிக்கின்றது. "மூலதனம் சார்ந்து இயங்குகின்ற தொழில் நிறுவனங்களை காட்டிலும் கலைத் துறையில் பல தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்." (Zeidler, 2000, Entertainment and Internet collision course ahead).
    • சாலை முனைகளிலும், தொடர் வண்டிகளிலும் பாடல் பாடி யாசகம் கேட்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இசையின் அடிப்படைத் தன்மைகளை உணர்ந்த ஒரு நல்ல அறிஞர்களாக திகழ்கின்றனர். அதன் நேரெதிராக இசையை அதிகாரத் தன்மையோடு பயன்படுத்தும் ஒரு ஏகாதிபத்யவாதியாக திரை இசை, மேடைக் கச்சேரிகள், தொலைகாட்சிகள் மற்றும் பண்பலை ஆகியன திகழ்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக