பக்கங்கள்

திங்கள், 29 ஜூலை, 2013

ஆதிக்கத்தின் மச்ச அவதாரம் - மரியான்

கோமுகன் என்பவன் வேதங்களைத் திருடிக் கொண்டு மீன் வடிவில் கடலுக்குள் ஒளிந்து கொண்டதாகவும், அதைக் கண்டுபிடிக்க திருமால் என்பவன் மீன் வடிவில் சென்று அவனை அழித்து வேதங்களை மீட்டு வந்ததாகவும் கதைகள் கூறுகின்றன. இதில் இருவருமே மீன் அவதாரம் எடுத்துள்ளனர். ஆகையால் யார் எடுத்தது மச்ச அவதாரம் என்பதனை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன்...

ஒரு கலைப் படைப்பு என்பது அந்த சமூகத்தினைக் குறித்த சமகாலப் பதிவாக இருக்க வேண்டும். ஆனால் திரைப்படங்கள் அவ்வாறு இருப்பதில்லை. திரைப்படங்கள் என்பது மக்களை ஒடுக்கும் ஒரு கருத்தியல் ஆயுதமாக இருந்து வருகின்றது. இந்த ஆயுதம் ஆதிக்கவாதிகளின் கைகளில் தான் இன்னும் இருந்து வருகின்றது. ஆகையால் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது அதனை ஒரு கலைப்படைப்பாக மட்டும் பார்க்காமல், அதனை சமூகத்தின் வெகுசனப் பார்வையின் மீதான ஒரு அதிகார வெளிப்பாடாக காண்பது சரியானதாக இருக்கும்.

கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியினை நெய்தல் திணை என்பர். இந்தப் பகுதியில் வாழ்பவர்கள் பரதவர் ஆவார். பரதவர்களின் பிரதான தொழில் மீன் பிடித்தல், முத்துக்குளித்தல் ஆகியன என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த திணையின் உரிப்பொருள் இரங்கல். தலைவனுக்காக தலைவி காத்திருப்பது தான் நெய்தல் திணையின் உரிப்பொருளாக கூறுகின்றனர். திணையியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுதான் பெரும்பாலான இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன.

மரியான் படத்தின் கதைக் களம் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள நீராடி எனும் கடற்கரைப் பகுதி. கதை நாயகன் மீனவர். இந்த கதை நீராடி கிராமத்தில் இருந்து சூடான் நாட்டுக்கு பயணிக்கின்றது. தமிழ் நாட்டில் உள்ள மீனவர்களுக்கு சூடான் நாட்டில் இருப்பவர்கள் எதிரி போல இந்த கதை வெகுசன பார்வையாளர்களிடம் ஒரு கருத்தை உருவாக்க முயலுகின்றது. அதில் வெற்றியும் பெற்றுள்ளதை படத்தின் வசூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இந்த படம் பார்வையாளர்களின் பொதுப்புத்தியினை வெகுசனத் தளத்தில் மடைமாற்றம் செய்யும் ஒரு முயற்சி. தமிழ் நாட்டு மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இலங்கை இராணுவம். எல்லை தாண்டி வருகின்றனர் எனக் கூறி தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருவதை செய்தித் தாள்களின் மூலம் அறியப்படுகின்றது. செய்தித்தாள்களில் மீனவர்களுக்கு தமிழன் என்ற அடையாளத்தைக் கொடுக்கின்றவர்கள் இந்த திரைப்படத்தில் இந்தியன் என்ற ஒரு தேசிய அடையாளத்தைப் பூசி சூடான் நாட்டினரை எதிரியாக்கியுள்ளனர். ரோஜா படத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ளவர்களையும், பாகிஸ்தானியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து நாயகனின் மூலம் தேசியத்தை மக்களின் பொதுப் புத்தியின் மேல் உருவாக்கியது போல, இந்த படமும் உருவாக்கியுள்ளது. 

பிரெஞ்சு புரட்சியின் போது மக்களிடையே அரசின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம் தான், "தேசியம்". அரசு மற்றும் மக்களிடையே உள்ள உறவின் அதிகார வடிவம் தான் தேசியம் என்ற கருத்தாக்கம். மேற்கத்திய சூழலில் உருவான இந்த கருத்தாக்கம் இந்தியா (வேறு வார்த்தை கிடைக்கவில்லை) போன்ற பன்மியத் தன்மை கொண்ட ஒரு சமூகத்திலும் திணிக்கப்பட்டுள்ளது. மரபார்ந்த இனக்குழு அமைப்பு சிதைவுற தேசியம் அடிப்படையாக அமைந்தது எனலாம். உலகமயமாக்கலின் காரணமாக தேசியம் என்ற கருத்தாக்கம் அரசின் வாயிலாக மக்களிடையே தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு வடிவம் தான் பள்ளி பாடத்திட்டம், விளையாட்டு மற்றும் திரைப்படங்கள்.

இன்று வரை தமிழகத்தில் மக்கள் ஒடுக்கப்படுவதற்கு வேதங்களும், அதனையொட்டி உருவான சாதி மற்றும் ஆச்சாரம் என்று கூறிக் கொள்ளும் சில அபத்தங்களும் தான். இந்த படம், கடலில் இருந்து சில அபத்தங்களை திரையரங்கு வாயிலாக மக்களின் பெருந்திரள் நினைவுகளை ஆட்கொள்ள உருவெடுத்த ஒரு மச்ச அவதாரம் எனலாம். சமீபத்தில் வெளிவந்த நீர்ப்பறவை, கடல் ஆகிய இரு படங்களின் தொடர்ச்சியாக இப்படத்தை கருதலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக