காலம் கடத்துவேனோ!
ஆண்: கூடை
மேல கூடை வச்சி
மொழுந்தெடுக்கப் போற புள்ளே - உன்னைக்
கொள்வோன் மனம் குளிர
கொஞ்சம் நின்னு பேசேன்டி.
பெண்: அக்கம் பக்கம் பாராமல்
அதிகாரம் பேசும் மச்சான்
ஆனாலும் ஆகட்டும்
அடுத்த நாள் பேசிருவேன்.
ஆண்: முத்துப்
போல பல்லழகி
முகங் கோணாச் சொல்லழகி - என்னைக்
கண்டாக் கசக்குதோடி
கருத்து ஒண்ணு ஆன பின்னே.
பெண்: கண்டால் கசக்காது
கருத்துள்ள அத்தானே - நான்
ஊரார் நகைக் கஞ்சி
ஓடுகிறேன் வெகுதூரம்.
ஆண்: கொள்ளை
ஆசை உனக்குண்டு
கொண்டு வாரேன் பரிசப் பணம்
உன் தந்தை தட்டினாலும்
ஒரு சொல்லில் முடித்துவிடு.
பெண்: பரிசப் பணம் கொண்டு வந்தால்
பார்த்துக் கொள்வேன் அத்தானே
பாவி நான் வாடும்படி
காலத்தைக் கடத்தாதே!
ஆண்: காதலாலே
வேகுறேனே
கண்ணான பெண் மயிலே
காலங் கடத்துவேனோ
காத்திருந்தும் பார்ப்பேனோ!
(எஸ்.
எஸ். போத்தையா அவர்களின் தொகுப்பிலிருந்து…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக