பக்கங்கள்

வெள்ளி, 28 ஜூன், 2024

திராவிட மறை

திராவிட மறை



வரலாறு என்பது நமக்கு கற்பிக்கப்பட்ட ஒன்று. உண்மையை அறிய நமக்கு காலயந்திரம் வேண்டும் அந்த காலத்திற்கு சென்று உண்மையை புரிந்து கொள்ள.

இந்தியாவின் வரலாறு என்பது, பௌத்தத்தையும் சமணத்தையும் இந்து மதம் கபளீகரம் செய்த வரலாறு என்று ரொமிலா தாப்பர் சொல்கிறார். கூடுதலாக தமிழ் சைவத்தையும் வைணவத்தையும் இந்து மதம் என ஓர்மைப்படுத்தி உள்ளனர்.


நாலாயிர திவ்ய பிரபந்தம், வைணவ இலக்கியங்களில் பிரதானது. இந்நூல் கிபி 6ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. அந்த காலகட்டம் என்பது சைவமும் வைணவமும் தங்களை அரச மதமாக நிறுவ போர்களையும் கோபுர படுகொலைகளையும், கழுப் படுகொலைகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்த காலகட்டம். இந்த தொகுப்பில் சில பாடல்களில் சமண பௌத்தர்கள் மீதான வன்மங்களை வெளிப்படுத்தும் பாடல்களும் உள்ளது.

திவ்ய பிரபந்தம் என்பது மேலானவற்றை பற்றி பண்ணிசைத்து பாடப்படும் பாடல்களின் தொகுப்பு என்றுபொருள். தொகுக்கும் போது அதன் பாடல்களின் எண்ணிக்கையை வைத்து, நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்பட்டது. இதனை திராவிட மறை என்றும் சொல்கின்றனர்.


கண்ணன் பிறந்ததை கொண்டாடும் நிகழ்வை ஆழ்வார் இவ்வாறு பாடுகிறார். 

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட

கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே


கண்ணன் பிறந்ததை வாசனை எண்ணெய் தெளித்து வண்ணப் (சுண்ணம்)பொடிகள் தூவி பாட்டு பாடி ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர் என்கிறார்.

(திருக்கோட்டியூர், தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.) இதனா‌ல் அங்கு ஏதேனும் மூன்று குவிமாட கட்டிடமோ, தேவலாயமோ இருந்தால் இடித்து விட்டு கோவில் கட்ட சங்கி கூட்டம் ரத யாத்திரை புறப்பட்டு விடுமோ என்று வேறு அச்சம் ஏற்படுகிறது.


கண்ணன் பிறந்ததை பற்றி பாட்டெழுத பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து ஓவியக் கலையில் ஆழ்ந்த பதிமூன்றாவது ஆழ்வார் வான்கோ காலயந்திரம் மூலம் திருக்கோட்டியூர் சென்றார்.


இசை புத்தர் இளையராஜா நம்மை 21ம் நூற்றாண்டுக்கு அழைத்து வருகிறார் 6ம் நூற்றாண்டுக்கு செல்ல.


வண்ண மாடங்கள் சூழ்ந்த திருக்கோட்டியூருக்கு.


பக்தி என்பது மனிதனை செம்மை படுத்த வேண்டும். மிருகமாக்கிடக் கூடாது.

ஆழ்ந்து அணுக வேண்டியது பக்தி.

ஆள்வோர் மக்களை அடிபணிய வைப்பதற்காக அல்ல.

புதன், 19 ஜூன், 2024

நவீனத்துவமும் அதன் அதிருப்திகளும்

நவீனத்துவமும் அதன் அதிருப்திகளும்



இத்தாலிய சினிமாவின் முன்னோடி இயக்குனர் மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனி. இவரது படங்கள் பொதுவாக, நவீனத்துவ அழகியலின் துயரங்கள் மற்றும் இருத்தலியல் (existentialism) தொடர்புடைய கதைகளை பேசுகின்றன. 

"நவீனத்துவத்தின் முத்தொகுப்பு மற்றும் அதன் அதிருப்திகளை" உள்ளடக்கிய மூன்று படங்கள் L'Avventura (1960), La Notte (1961) மற்றும் L'Eclisse (1962) ஆகும். இதில் ஒவ்வொரு படத்திலும் கதாப்பாத்திரங்கள் தங்களுடைய சர்ரியலிச சூழ்நிலையுடன் (பசுமையான விடுமுறை பயணம், இரவு விருந்து மற்றும் கவர்ச்சிகரமான நகரசூழல்) தங்கள் பேராசைகளால் உச்ச அதிருப்தியில் தடுமாறுகின்றன. இது தான் கதைக்களம். 


இரண்டு உலகப்போர்களால், இத்தாலி நாட்டு மக்கள், நிச்சயமற்ற தன்மை (uncertainty) மற்றும் அவநம்பிக்கையான சூழலில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். எந்த நோக்கமும் இல்லாமல், கதாபாத்திரங்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிருப்தியுடன் நகர்கின்றன. 

நவீனத்துவவாதியான அன்டோனியோனி, நவீன அமைப்பில் கெட்டிதட்டிப் போன பழைய அறநெறியைப் பிரித்து, எல்லா வடிவங்களிலும் அதை நிராகரித்துள்ளார். இயந்திரமயமாக்கலும் தொழில்நுட்பமும் பாலுணர்வின் அடிப்படையில் கூட நமது பண்பாட்டு எல்லைகளை உடைத்துவிட்டது என்ற மார்க்சிய சித்தாந்தத்துடன் இந்த முத்தொகுப்பு உடன்படுகிறது. பழங்கால அடக்குமுறையின் மீது ஒருவித நவீன ஒளியை பாய்ச்சுகிறார். 

சமகால வாழ் முறைகள் குறிப்பாக பாலியல் அரசியலில் ஈடுபாடு கொண்டவையாக உள்ளது. காலம்காலமாக, மன-பாலியல் தூண்டுதல்கள் குற்ற உணர்வு மற்றும் அவநம்பிக்கையால் தடுக்கப்பட்டு வருகின்றன. 

நவீனத்துவம் நுகர்வோர் சிற்றின்பத்தை (consumer erotism) ஆதரிக்கிறது என்று அன்டோனியோனி குறிப்பிடுகிறார். இன்று Am in boredom, so jump into dating என சொல்வது போல அக்கால கட்டத்தில் மனிதர்களிடையே உருவான விரக்தி / தனிமை, ஒரு காதலுறவிற்கு செல்ல தூண்டியது. 

இவரது முத்தொகுப்பில் அங்கு மக்களிடையே இருந்த ஏக்க உணர்வை சிறப்பாக கையாண்டுள்ளார். மேலும், தொழில்துறைக்கு பிந்தைய அதி-முதலாளித்துவ சூழலில், மக்களும் ஒருவருடைய உறவுகளும் செலவழிக்கக்கூடியவை மற்றும் மாற்றத்தக்கவை. 

மனித வாழ்வின் சரடுகளில் அவநம்பிக்கையுற்ற, பெண்கள் காதலற்ற விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் அவர்கள் முன்பு இருந்ததைப் போலவே அதிருப்தி நிலைக்கே மீண்டும் தள்ளப்படுகின்றனர். 


அன்டோனியோனியின் இந்த முத்தொகுப்பு நவீனத்துவத்தின் சோகத்தை, சமூக அந்நியப்படுத்தல் (communal alienation) மற்றும் மக்களின் உணர்வுகளின் பயனற்ற தன்மையை தொடர்புபடுத்துகிறது.

புதன், 12 ஜூன், 2024

நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே


The most beautiful sea

hasn't been crossed yet.

The most beautiful child

hasn't grown up yet.

Our most beautiful days

we haven't seen yet.

And the most beautiful words I wanted to tell you

I haven't said yet...

- Nazim Hikmet


மிக அழகான கடலை

இன்னும் யாரும் கடந்ததில்லை

மிக அழகான குழந்தை

இன்னும் வளர்ந்திடவில்லை.

நம்முடைய மிக அழகான நாட்களை

நாம் இன்னும் கண்டிரவில்லை.

நான் உன்னிடம் சொல்ல விரும்பிய

மிக அழகான சொல்லை

இன்னும் நான் சொல்லவில்லை.


- நஸிம் ஹிக்மெத் (தமிழில்: பாரதி ஆ.ரா)

துருக்கிய கவிஞர்

ஞாயிறு, 9 ஜூன், 2024

கானல் நதி

Hopeless Delulu 🌻🌜 


ஒன்றாகவே பயணிக்கிறோம்

அதனால் நாம் ஒன்றல்ல

நீ பயணி

நான் பரிசல்காரன்

நீ கடந்து செல்ல வேண்டியது

இந்த நதி

நான் கிடந்து உழல வேண்டியது

என் கானல் நதி

கரை சேர்ந்த பிறகு

யாருமற்ற பரிசலின் வெறுமையை

இந்த பிறை இரவில் பார்ப்பது

அவ்வளவு வெம்மையாக உள்ளது

கன மழை பெய்து

கானல் நதியின் மட்டம் உயருகிறது

பயணி இல்லாமலும்.

இந்த நதியில்

இந்த பிறையும் 🌙

பரிசலும்

தனியே மிதந்து கொண்டிருக்கிறது

கானல் நதியில் நான் தத்தளிப்பதைப் போல.


- பாரதி ஆ.ரா

வியாழன், 6 ஜூன், 2024

மௌனராகம்

(Love in Silence) 



உன் மௌனங்களை கோர்த்து

பண்ணிசைத்தேன்

முகாரி* இராகத்தில் இசைத்தது

என் ஏக்கங்களும் தாபங்களும்


உன் இன்மையை நிறைத்து

யாழ் மீட்டினேன்

ஹரஹரப்பிரியா** இராகத்தில்

பூங்காற்று திரும்பி

சுக ராகம் சோகம் என்றது. 


உன் புறக்கணிப்பை மையிட்டு

மெட்டெழுதினேன்

சாதாரிப் பண்ணில்***

நின்னைச் சரணடைந்தது

என் கனவில்


உன் இன்ஸ்டா ஸ்டோரீஸ் எல்லாம் சேர்த்து

ரீல்ஸ் ஒன்றை ரீமிக்ஸ் செய்தேன்

இதுவரை வெளியான

எல்லா சோகப்பாடல்களையும்

மெடா பரிந்துரைக்கின்றது.


ஆரோகணமும்**** அல்காரிதமும்

மெடா உலகில் சோக இசையை

தேடிக் கண்டுபிடித்து கொட்டியது.


கடலில் முத்தெடுப்பதை போல

நான் இளையராஜாவின் பாடலை

எடுத்துக் கொண்டேன்.

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

ஆனால் ஒரு கவிதை எழுதக்கூட

வார்த்தையில்லாமல் அமைதியானேன்.


இன்றும் நான் உன்னைப்பற்றி

எதுவும் எழுதப் போவதில்லை 


- பாரதி ஆ.ரா


*முகாரி ராகம் - சோகத்தை வெளிப்படுத்தும் இராகம். 
** ஹரஹரப்பிரியா - பூங்காற்று திரும்புமா பாடல் இந்த ராகத்தில் பாடப்பட்டது.
***சாதாரிப்பண் - காமவர்த்தினி ராகம். பண்டைய தமிழிசை மரபில் சாதாரிப் பண். அமைதியையும் பக்தி உணர்வையும் வெளிப்படுத்தக்கூடியது.. நின்னைச் சரணனைந்தேன் என்ற பாடல் இந்த இராகம்.
****ஆரோகணம் - சப்தஸ்வரங்களின் ஏறுவரிசை