பக்கங்கள்

புதன், 19 ஜூன், 2024

நவீனத்துவமும் அதன் அதிருப்திகளும்

நவீனத்துவமும் அதன் அதிருப்திகளும்



இத்தாலிய சினிமாவின் முன்னோடி இயக்குனர் மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனி. இவரது படங்கள் பொதுவாக, நவீனத்துவ அழகியலின் துயரங்கள் மற்றும் இருத்தலியல் (existentialism) தொடர்புடைய கதைகளை பேசுகின்றன. 

"நவீனத்துவத்தின் முத்தொகுப்பு மற்றும் அதன் அதிருப்திகளை" உள்ளடக்கிய மூன்று படங்கள் L'Avventura (1960), La Notte (1961) மற்றும் L'Eclisse (1962) ஆகும். இதில் ஒவ்வொரு படத்திலும் கதாப்பாத்திரங்கள் தங்களுடைய சர்ரியலிச சூழ்நிலையுடன் (பசுமையான விடுமுறை பயணம், இரவு விருந்து மற்றும் கவர்ச்சிகரமான நகரசூழல்) தங்கள் பேராசைகளால் உச்ச அதிருப்தியில் தடுமாறுகின்றன. இது தான் கதைக்களம். 


இரண்டு உலகப்போர்களால், இத்தாலி நாட்டு மக்கள், நிச்சயமற்ற தன்மை (uncertainty) மற்றும் அவநம்பிக்கையான சூழலில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். எந்த நோக்கமும் இல்லாமல், கதாபாத்திரங்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிருப்தியுடன் நகர்கின்றன. 

நவீனத்துவவாதியான அன்டோனியோனி, நவீன அமைப்பில் கெட்டிதட்டிப் போன பழைய அறநெறியைப் பிரித்து, எல்லா வடிவங்களிலும் அதை நிராகரித்துள்ளார். இயந்திரமயமாக்கலும் தொழில்நுட்பமும் பாலுணர்வின் அடிப்படையில் கூட நமது பண்பாட்டு எல்லைகளை உடைத்துவிட்டது என்ற மார்க்சிய சித்தாந்தத்துடன் இந்த முத்தொகுப்பு உடன்படுகிறது. பழங்கால அடக்குமுறையின் மீது ஒருவித நவீன ஒளியை பாய்ச்சுகிறார். 

சமகால வாழ் முறைகள் குறிப்பாக பாலியல் அரசியலில் ஈடுபாடு கொண்டவையாக உள்ளது. காலம்காலமாக, மன-பாலியல் தூண்டுதல்கள் குற்ற உணர்வு மற்றும் அவநம்பிக்கையால் தடுக்கப்பட்டு வருகின்றன. 

நவீனத்துவம் நுகர்வோர் சிற்றின்பத்தை (consumer erotism) ஆதரிக்கிறது என்று அன்டோனியோனி குறிப்பிடுகிறார். இன்று Am in boredom, so jump into dating என சொல்வது போல அக்கால கட்டத்தில் மனிதர்களிடையே உருவான விரக்தி / தனிமை, ஒரு காதலுறவிற்கு செல்ல தூண்டியது. 

இவரது முத்தொகுப்பில் அங்கு மக்களிடையே இருந்த ஏக்க உணர்வை சிறப்பாக கையாண்டுள்ளார். மேலும், தொழில்துறைக்கு பிந்தைய அதி-முதலாளித்துவ சூழலில், மக்களும் ஒருவருடைய உறவுகளும் செலவழிக்கக்கூடியவை மற்றும் மாற்றத்தக்கவை. 

மனித வாழ்வின் சரடுகளில் அவநம்பிக்கையுற்ற, பெண்கள் காதலற்ற விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் அவர்கள் முன்பு இருந்ததைப் போலவே அதிருப்தி நிலைக்கே மீண்டும் தள்ளப்படுகின்றனர். 


அன்டோனியோனியின் இந்த முத்தொகுப்பு நவீனத்துவத்தின் சோகத்தை, சமூக அந்நியப்படுத்தல் (communal alienation) மற்றும் மக்களின் உணர்வுகளின் பயனற்ற தன்மையை தொடர்புபடுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக