பக்கங்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பண்பாட்டு விளையாட்டு (Cultural Play)

விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்ற தளத்தில் இருந்து விலகி பல தளங்களில் செயல்பட்டு வருகின்றது. ஒரு சமூகத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பவை அந்த சமூகத்தின் பண்பாட்டு அசைவியக்கங்களை பிரதிபலிப்பவையாக உள்ளன. சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுகளின் வழியே வெளிப்படுத்துகின்றது. (தொ. பரமசிவன், 2009, 90). விளையாட்டு என்பது மனித பண்பாட்டு உருவாக்கத்தின் அடிப்படைக் கூறு.(Johan Huizinga, Homo Ludens, 1938). விளையாட்டு என்பது சமூக பண்பாட்டு கட்டமைப்பு, சமூக நெறிமுறைகள் ஆகியவற்றோடு தொடர்புடைய ஒன்றாகவே இருந்து வருகின்றது.
Roland Barthes இசை குறித்த தன் Musica Practica என்ற கட்டுரையில் இசை இரு வடிவங்களில் உள்ளதாக குறிப்பிடுகின்றார். 1) இசைப்பது 2) கேட்பது என அவர் குறிப்பிடுகின்றார். இரு வகையான கலை வடிவமும் தனக்கான வரலாறு, சமூக மதிப்பீடுகள், கலைத் தன்மை மற்றும் சிற்றின்ப தன்மையில் மாறுபடுகின்றது என குறிப்பிடுகின்றார். Barthes இன் இந்த கருத்தினை விளையாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க இயல்கின்றது. இவரது கருத்துப் படி விளையாட்டினை இரு வகையாக பகுத்துக் காணலாம்.
  1. விளையாடுவது (Played)
  2. வேடிக்கைப் பார்ப்பது (Audience)
இவை இரண்டு வகையான விளையாட்டு வடிவங்களும் பல தன்மைகளில் மாறுபடுகின்றது. வரலாறு, சமூகவியல், தனித்திறமை, சிற்றின்பத் தன்மை, அரசியல் பொருளாதாரம் ஆகிய தளங்களில் பல வேறுபாடுகளைக் கொண்டு பண்பாட்டு மாற்றங்களை வடிவமைகின்றது.
வரலாற்றின் அடிப்படையில் விளையாட்டு:
ஒரு சமூகத்தில் விளையாட்டு என்பது அந்த சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு பொருளாதார மாற்றங்களின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் நாடக வெளிப்பாடு என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள முடிகின்றது. விளையாட்டு என்பது தொன்மைச் சமூகத்தில் பொழுதுபோக்கு என்ற அர்த்தத்தில் இருக்கவில்லை. அவை அடுத்த தலைமுறையினருக்கு அந்த பகுதியில் உள்ள பெரியவர்கள் / முன்னோர்கள் கற்றுக் கொடுக்க விரும்பிய கருத்தியல் எண்ணங்களின் செயல் வடிவம். விளையாட்டின் மூலம் குழு உணர்வு, இன உணர்வு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் போரிடல் போன்ற நெறிமுறைகளைக் கற்றுக் கொடுத்து வந்தனர். மேலும் அந்த சமூகத்தில் ஏற்பட்ட சமூக மாறுதல்களும் கருத்தாக்கங்களும் விளையாட்டுகளில் பிரதிபலித்தன. தமிழ் சமூகத்தில் கபாடி, நாடு பிடித்தல், கல்லா? மண்ணா?, போன்ற விளையாட்டுகள் சமூக வெளி சார்ந்த உரிமைகளின் வெளிப்பாடாக உள்ளன. ''ஆடு நரி ஆட்டம்'' என்ற விளையாட்டு வேட்டைச் சமூகத்தில் உருவான ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு எல்லை மற்றும் உடைமை பாதுகாப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுப்பவையாக உள்ளன. இந்த விளையாட்டு சமூகத்தில் நிலவும் வர்க்கப் படிநிலைகளை பிரதிபலிப்பவையாக உள்ளது. ''ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்திச்சி'' என்ற விளையாட்டு தமிழகத்தில் முகமதியர்கள் படையெடுப்பின் பொழுது தமிழகத்தில் உள்ள பெண்களை மணந்து கொள்ள விரும்பி இழுத்துக் கொண்டு சென்று விடுவர். அந்த பெண் தான் மணமானவள் என்று கூறியதும் அவர்களை விட்டுவிட்டனர். இந்த நிகழ்வின் வரலாற்று எச்சம் தான் இன்று பெண் குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டு. 
குழந்தைகள் விளையாடும் பெரும்பாலான விளையாட்டுகள் பெரியவர்களின் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் ஒரு கற்பனைத் தன்மைக் கொண்டதாக உள்ளது. குழந்தை வளர் இளம் பருவத்தில் நிகழும் மாற்றங்களை இது பிரதிபலிக்கின்றது. இதனை பிராய்டு Latency stage என குறிபிடுகின்றார். 
சமூகவியலின் அடிப்படையில்:
விளையாட்டு என்பது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
  • வெளி மற்றும் கால அளவு
  • தொழில்
  • பாலின உறவு 
  • வயது 
ஆகியவற்றை அடிப்படையாக உள்ளது. 
விளையாட்டில் தனித்திறமை வெளிப்பாடு:
விளையாட்டின் பொழுது விளையாடப்படும் நபர், பார்வையாளர் ஆகியயோர் ஒவ்வொருவரும் தனித்தனி வகையில் தன்னை வெளிக்காட்ட முனைகின்றனர். பார்வையாளர்கள் எழுதிக் காட்டும் வாசகங்கள், உற்சாகமூட்டும் நடனம், குரலொலிகள் மற்றும் ஆரவாரங்கள். 
விளையாட்டின் சிற்றின்பம்:
விளையாட்டு எனபது பாலுணர்வு விருப்பங்களை குறியீட்டு அடிப்படையில் பொதுத் தளத்தில் வெளிப்படுத்தும் ஒரு செயலாகவும் இருந்து வருகின்றது. வெகு தளத்தில் விளையாட்டு என்பது பாலுணர்வு விருப்பங்களை நிவர்த்தி செய்பவையாகவும் இருந்து ஆக வேண்டிய கட்டாயத்தினை நவீன சமூகம் கட்டமைத்துள்ளது. பொதுவாக விளையாட்டு என்பது ஆண்களின் பால் விருப்பத்தினை வெளிப் படுத்துபவையாக உள்ளது. விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் வடிவம் கூட ஒரு வகையில் ஆண் விருப்பத்தின் வெளிபாடுதான். கால்பந்து விளையாட்டு என்பது "ஆண்குறி உந்துதல்'' என்ற பிராய்டின் கருத்தின் ஒரு வடிவம் தான். தன் இன பெண்களின் மீது வேறு ஆண்கள் உரிமை கொள்ளக் கூடாது. அது அவர்களின் இனத்திற்கு ஏற்பட்ட ஒரு தோல்வியாக கருதப்படுகின்றது. இந்த கருத்து வெளிப்பாடு தான் கால்பந்து விளையாட்டு. பாண்டவர்கள் விளையாடிய சூது விளையாட்டும் இத்தன்மைக் கொண்டது. 
விளையாடும் பொழுது விளையாடுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் வெளிக்காட்டும் உடல் அசைவுகள், அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் ஆகியனவும் இதன் அடிப்படையில் பொருட்கொள்ளத்தக்கது. IPL விளையாட்டில் ஆடும் நடன மங்கைகள் ஆண் மைய சமூகத்தின் சிற்றின்பவிருப்பத்தின் ஒரு வெளிப்பாடு.
விளையாட்டின் அரசியல் பொருளாதாரம்:
விளையாட்டு விளையாடுவது, வேடிக்கைப் பார்ப்பது என்பது அரங்க செயல்பாடுகளைத் தாண்டி அது உலகளாவிய பொருளாதாரத்தினை வடிவமைக்கும் ஒரு காரணியாக விளங்குகின்றது. விளையாட்டு என்பது ஒரு சந்தைப் பொருளாக இங்கு பரிணமிக்கின்றது.

சனி, 24 ஆகஸ்ட், 2013

''கலை''யும் நினைவுகள் வாயிலாக பண்பாட்டு அரசியல்

ஒரு சமூகத்தின் அசைவியக்கத்தினை அறிய அந்த சமூகத்தினை பல தளங்களில் அணுகுதல் என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வகையில் ஒரு சமூகத்தின் கலைப் படைப்புகள் என்பவை அந்த சமூகத்தினை பற்றி அறிய உதவும் ஒரு தொடர்பியல் ஊடகம். ஓவியங்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் ஆகியன கலைத்தன்மை வாய்ந்த ஒரு ஊடகம் என்ற அளவில் மட்டுமல்லாது அவை மூலதனம் சார்ந்து இயங்கும் ஒரு உற்பத்தி பொருள். கருத்தியல் அளவில் மக்களை ஒடுக்கும் ஒரு ஆயுதம். பண்பாட்டளவில் உழைக்கும் மக்களை வெகுண்டெழ செய்யும் ஒரு போர் வாள். 

ஓவியங்கள், இசை, நடனம், சிற்பங்கள், திரைப்படங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்பவை வெறும் கலைத்தன்மை சார்ந்த ஒரு பொருள் மட்டுமன்று. அவை மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பவை. மக்களின் ஒருங்கிணைந்த எண்ணங்களின் ஒரு பண்பாட்டு நினைவுகளை உற்பத்தி செய்யும் ஒரு பொருள்.

ஜெர்மன் அறிஞர் Jan Assmann பண்பாட்டு நினைவு என்பது, "கடந்த கால நினைவுகள், பண்பாடு மற்றும் சமூகம் ஆகிவற்றோடு தொடர்புடைய ஒன்று என குறிப்பிடுகின்றார்.
பண்பாட்டு நினைவுகளின் தன்மைகளாக ஆறு தன்மைகளை குறிப்பிடுகின்றார். 
  1. பருப்பொருள் சார்ந்த அடையாளம் (The concretion of identity)
  2. மறுகட்டமைகும் தன்மை (capacity to reconstruct)
  3. ஒருங்கமைவு (Formation)
  4. நிறுவனமயம் (Organization)
  5. கடமை (Obligation)
  6. எதிர் கருத்தாக்கம் (Reflexivity)
  • செயல்முறை சார்ந்த எதிர்ப்பு (practice-Reflexive)
  • சுய எதிர்ப்பு (Self-Reflexive)
  • சமூக அமைப்பு சார்ந்த எதிர்ப்பு 
கடந்த காலம் பற்றிய நினைவுகள் என்பது நிகழ்காலத்தை சார்ந்தே உள்ளது. அதாவது, கடந்த கால நினைவு என்பது தொடர்ந்து மாறி வரும் தன்மை கொண்டது. (Pierre Nora, Rethinking France: Histories and Memories, Vol. 4, 2010) 
சமூகவியல் அறிஞர் Paul Connerton, உள்ளடக்கிய நினைவு(Embodied Memory) என்ற சொற்பதத்தை பயன்படுத்துகின்றார். இவரின் கருத்துப்படி, மனித உடல் என்பது நினைவுகளின் கொள்கலன். இவர்கள் இருவரின் கருத்துகளில் இருந்து, நினைவுகள் என்பவை இரு வகைமை கொண்டவை என புரிந்து கொள்ள முடிகின்றது.
  1. அகநினைவுகள் (தன்னை அறியாமலே மரபு வழியாக கடத்தப்படுவது)
  2. புறநினைவுகள் (நிகழ் கால சம்பவங்கள் கட்டமைக்கும் நினைவுகள்)
Siegfried Kracauer, நினைவுகள் பற்றி கூறும் போது நவீன தொழில்நுட்ப வடிவம், நினைவு எனும் கருத்துக்கு அச்சுறுத்தலாக உளது என குறிப்பிடுகின்றார். இவரது கருத்தும் Pierre Noraவின் கருத்தும் அடிப்படையில் ஒன்றாக திகழ்கின்றது.
இந்த கட்டுரையில் பண்பாட்டு நினைவுகளாக Jan Assmann குறிப்பிடும் தன்மைகளை தமிழகத்தின் சம கால அரசியலோடு ஒப்பிட்டு விவரிக்க முற்படுகின்றது. பண்பாட்டு நினைவுகள் என்பது மக்களின் கலைத் தன்மை சார்ந்த பொருள் சார்ந்த நினைவுகளுடன் தொடர்புடையது. நடுகல், முதுமக்கள் ஈமத்தாழி, செப்பேடுகள், கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகியன மக்களின் கடந்த கால நினைவுகளை உயிர்புறச் செய்கின்றன. அந்த வகையில் அடுத்த தலைமுறையினருக்கு நினைவுகளாக எஞ்சி நிற்பவைகளை நிர்மாணிப்பவை அரசே. சோழர் கால நினைவுகளாக இன்று நமக்கு இருப்பது தஞ்சை பெருங்கோயில் மட்டுமே. ஆனால் இராஜராஜசோழனின் ஏகாதிபத்தியம், வன்முறை பற்றிய நிகழ்வுகளின் வரலாற்றை இன்று பேசப்படுவதில்லை. இங்கு நினைவுகளை கட்டமைப்பதாக கோயில் எனும் கட்டிடக்கலை வடிவம் பயன்படுகின்றது. 
இன்றைய சமகால சூழலில் ஆளும் திராவிட கட்சிகள் தத்தம் பங்குக்கு ஏற்ப போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பற்றிய வரலாற்றினை கலை வடிவம் மூலம் நிறுவி வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழகம், தங்களது ஆட்சி சிறப்பினை தலைமைச் செயலக கட்டிடம், திருவள்ளுவர் சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழி மாநாடு இலச்சினை, இலவச திட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் கட்டப்பட்ட பாலங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகியனவற்றின் மூலமாக வெளிப்படுத்த முல்கின்றனர்.


அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தங்களது ஆட்சி சிறப்பினை ம.கோ.இரா. நினைவக நுழைவு வாயில், சென்னைப் பல்கலைக்கழக நுழைவு வாயில், முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிட மாற்றங்கள், விலையில்லா திட்டங்கள் ஆகியனவற்றின் மூலமாக நிறுவ முற்படுகின்றனர்.
(இங்கு கட்சிகள் என்று குறிப்பிடுவது தலைமையை மட்டுமே.)
Madras Cafe என்ற திரைபடம் குறித்த சர்ச்சைகள் என்பவை பண்பாட்டு நினைவுகளோடு தொடர்பு படுத்தி பார்க்க முடிகின்றது. அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் நினைவுகள் குறித்த செயல்பாட்டோடு தொடர்புடையதாக உள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்பாடுகள் என்பது பண்பாட்டு நினைவுகள் மீதான உரிமைகளை வெளிக்காட்டுவதாக அமைகின்றன.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

போரும் கலையும்

கலை என்பது பொய்த் தன்மைக் கொண்டது. ஆனால் அவை உண்மையை உணரத் தூண்டுபவையாக இருக்கும். - பாப்லோ பிக்காசோ 
War Pieta
போரில் இறந்த தன் மகனின் இறந்த உடலை வாரி அணைத்து அழும் ஒரு தாயின் கதறல்.
(Max Ginsburg - பிரான்ஸ் நாட்டு ஓவியர்.)
Foreclosure
வீதிகளுக்கு வெளியேற்றப்பட்ட நடுத்தர வர்க்கத்து மக்களின், மன வேதனையையும் ஏமாற்றங்களையும் காட்சி படுத்திய ஒரு ஓவியம்.
Torture Abu Ghraib 
ஈராக்கில் உள்ள Abu-Ghraib சிறையில், அமெரிக்க இராணுவத்தினரால் கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் மக்களை பதிவு செய்த ஒரு ஓவியம். அரசு அதிகாரத்தில் உள்ளவர்களின் குரோத எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இந்த ஓவியம் உள்ளது.
ஒருநாட்டு மக்களின் மீது போர் தொடுக்கும் போது ஒரு அரசு முதலில் அந்த நாட்டின் செல்வங்களை கைப்பற்ற முயல்கின்றது. பிறகு அந்த நாட்டு வளமையை அழிக்க முற்படுகின்றது. இயற்கை வளம் மற்றும் மனித வளத்தை அழிப்பதை செய்கின்றனர். ஒரு நாட்டு மக்களின் மீது அதிகாரத்தை செலுத்த அவர்களின் பண்பாட்டின் மீதும் அங்குள்ள பெண்களின் மீதும் வன்முறை செலுத்துகின்றது. ஆதிக்கத்தை அடுத்த தலைமுறை வரை நீடிக்க இனப்பெருக்கத்தை சிதைக்க முற்படுகின்றனர். எல்லா நாட்டு இராணுவமும் போரில் ஈடுபடும் போது பெண்களின் மீது வல்லுறவு கொள்வது இயல்பான ஒன்றாகவே இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக ஆண் வாரிசுகள் கொல்லப்படுவதும், பெண் பிள்ளைகளை எதிரி நாட்டினர் மணந்து கொள்வதும் நிகழ்ந்து வருகின்றது. அரசின் குரோத உணர்வுகள் மற்றொரு நாட்டின் செல்வம், பண்பாடு, மற்றும் இனவிருத்தி ஆகியவற்றை அழிக்க முற்படுகின்றது.
The Third of May 1808
ஸ்பானிஷ் ஓவியர் Francisco Goya வின் ஓவியம். மாவீரன் என்று கூறிக்கொள்ளும் நெப்போலியனின் படைகள் பெனின்சுலா நாட்டு மக்களின் மீது நடத்திய தாக்குதலை சுட்டும் ஒரு ஓவியம். இந்த போர் பின்னாளில் பிரெஞ்சு புரட்சிக்கு வித்தாய் அமைந்தது.
23, July, 1983
சிங்கள ஓளிப்பட வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க, இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம். நிர்வாணமாக்கப்பட்ட இளைஞனைச் சுற்றி சிரிந்து நடனமாடும் சிங்களவர்கள். இடம் பொரளை பேரூந்து தரிப்பிடம்.

போரின் நவீனத்துவம்:
ஒரு அரசுக்கு ஆயுதமாக இருப்பது வெறும் துப்பாக்கிகள் மட்டுமன்று. ஒரு நாட்டு மக்களை ஒடுக்க அந்த மக்களை கருத்தியல் ரீதியாக அடிமைப்படுத்தி வருகின்றது. அவ்வகையில் கலை என்பவை ஒரு ஆயுதமாக விளங்குகின்றது. சமூக புரட்சியாளர்கள் சமூக விடுதலையை கலையின் மூலம் வெளிப்படுத்தி வந்தனர். இன்றைய சூழலில் கலை என்பது ஒரு முனை மழுங்கிய ஒரு ஆயுதமாக புரட்சியாளர்களின் கைகளில் உள்ளதாக காண முடிகின்றது.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பேரன்புமிக்க கலைக்கு...

சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் கூட்டு வெளிப்பாடே கலை. ஒரு தனிப்பட்ட மனிதன் / குழுவின் விருப்பங்கள், ஆசைகள், சமூகம் குறித்த மதிப்பீடுகள் ஆகியவற்றினை பற்றி அறிய அந்த சமூகத்தில் உருவாகின்ற கலை படைப்புகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானது. 

René Magritte, The Lovers 1 (1928)

René Magritte, The Lovers 2 (1928)

Fidel Garcia, Dreams of love
S.Ilaiyaraja, 2011

S.Ilaiyaraja, 2011

S.Ilaiyaraja, 2011

S.Ilaiyaraja, 2011


வியாழன், 8 ஆகஸ்ட், 2013

உணவின் அதிகாரம்

உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவையாக உள்ளது. அந்த உணவை மனிதன் தேட முற்பட்டதில் பண்பாட்டு வளர்ச்சி தொடங்குகின்றது. வேட்டைச் சமூகம், வேளாண் சமூகம், இன்றைய நுகர்வுச் சமூகம் வரை மனிதனின் தேடு பொருளாக உணவு இருந்து வருகின்றது. உணவு இல்லாத நிலைமையையே கொடிய வறுமை என கருதப்படுகின்றது. உணவு என்பது சமூக பண்பாட்டு வளர்ச்சியில் மிக இன்றியமையாததாக விளங்குகின்றது. ஒரு சமூகத்தின் உணவு என்பது மக்களின் உற்பத்தி முறை, சுவை உணர்வு, பரிமாறும் முறை, வாழ்வியற் சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றது. சமூக அசைவியத்தில் உணவு என்பது எல்லா சமூகத்தினருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் அது வெளிப்பாட்டு முறைமைகளில் வேறுபடுகின்றது. உணவு தன்னை அனைத்து சமூகத்திலும் தன்னை பல மாறுதல்களுடன் வெளிப்படுத்துகின்றது.

விருந்தோம்புதலின் பண்பு:
                     “பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர் 
                      தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "- திருக்குறள் (322)
உணவை பகுத்துண்டு வாழ்வது பண்டைய தமிழர்களின் அறமாக இருந்தது. தமிழர்களின் தனிப் பண்பாக விருந்தோம்பல் கருதப்பட்டு வந்தது. உணவையும் நீரையும் விற்பது என்பது தமிழர்களின் வழக்கத்தில் இருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. வழிப்போக்கர்களுக்கு உணவழிக்க சத்திரமும் சாவடியும் இருந்ததை நாட்டார் கதைகளின் வாயிலாக அறிய முடிகின்றது. ஆகையால் பண்டைய தமிழ்ரகளிடையே உணவகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இன்றைய சூழலில் உணவகங்கள் என்பது ஒரு ஊருக்கு மிக அவசியமானதாகக் கருதப்படுகின்றது.உணவு விற்பது என்பது அநாகரீகமான செயலாக தொல்சமூகத்தினர் கருதி வந்தனர். ஆனால் இன்றைய நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில் உணவு என்பது பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. உணவகங்கள் மக்கள் கூடும் இடமாக உள்ளது. ஆனால் அவை அத்துடன் நின்று விடவில்லை. அவை அதிகாரத்தின் மையமாக திகழ்கின்றது. 

சமூக பண்பாட்டு அசைவியக்கத்தில் அதிகார மையங்கள் மூன்று வடிவங்களில் உள்ளது.
  • சமயம்/மதம் 
  • சமூக அரசியல் பொருளாதாரம் 
  • கருத்தியல்
உணவின் மூலம் இந்த மூன்று அதிகார மையங்கள் மக்களின் மீது தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.

சமயங்களில் உணவு:

தமிழத்தில் நிறுவன சமயங்களான சைவமும் சமணமும் உணவின் மீதான அரசியலை தொடங்கி வைத்தது. இந்த இரு நிறுவன சமயங்களும் சைவ உணவையே நல்லறமாக போதித்தன. ஆனால் மக்களின் உணவுப் பழக்கம் என்பது நாட்டார் தெய்வங்களை சார்ந்தே இருந்து வருகின்றது. 
நிறுவன மதங்கள் தமிழகத்தில் வேரூன்றிய பிறகு படையல் என்ற உணவு பிரசாதம் பார்ப்பன போஜனம், நைவேத்தியம் என மாறியதை சமூக வரலாற்று அசைவியக்கங்களின் மூலம் அறியலாம். 
வேதத்தில் உணவு அன்னம் என்று குறிப்பிடப்படுகின்றது. உணவு புனிதமானது என்றும், அதை இகழக் கூடாது, உற்பத்தியை பெருக்க வேண்டும் என வேதங்கள் குறிப்பிடும் தகவல். ‘அன்னம் ந நிந்த்யாத்’ (‘உணவை இகழாதே!’), ‘அன்னம் பஹு குர்வேத்’ (‘உணவை அதிகம் உற்பத்தி செய்’) என்ற உபநிஷத வார்த்தைகள் மூலம் இந்த தகவலை அறிய முடிகின்றது. இன்றைய போராட்ட களத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தின் அடையாளமாக உண்ணாவிரதம் இருப்பது கூட வேதத்தின் ஒரு நீட்சியாக உள்ளதை அறிய முடிகின்றது.
உணவு பற்றி பகவத் கீதையில்,
அன்னாத் பவந்தி பூதானி
பர்ஜன்யாத் அன்னஸம்பவ:
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ
யஞ: கர்ம ஸமுத்பவ:
என குறிப்பிடப்படுகின்றது. அதாவது "அன்னத்தினால் ஜீவராசிகள் வாழ்கின்றன; அந்த உணவு மழையினால் விளைகிறது; மழை, யாகங்களினால் பொழிகிறது; யாகங்கள் நற்காரியங்களினால் நடைபெறுகின்றன".
உண்கின்ற உணவு ஒருவனது குணத்தை நிர்ணயிக்கின்றது என வேதங்கள் குறிப்பிடுகின்றது. சத்வ, ரஜோ, தமஸ் ஆகிய குணங்களை வேதம் குறிப்பிடுகின்றது. இவ்வாறன கருத்துகள் சமூகத்தில் சாதிய வேறுபாடுகள் உருவாக காரணமாக அமைந்தது. இதன் காரணமாகவே இன்று வரை மாமிச உணவு உண்பவர்கள், குறிப்பாக பன்றி மட்டும் மாட்டு இறைச்சி உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்டு வருகின்றனர்.

வேதங்கள் மட்டுமன்றி இனக்குழு பண்பாட்டிலும் உணவு மற்றும் சமையலறை என்பது புனிதமான ஒன்றாகவே கருதப்பட்டு வருகின்றது. ஒரிசா மாநிலம்  சோனேபேடா பகுதியிலுள்ள பூஞ்சியா பழங்குடி மக்கள் சமையலறையை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர். தம் வீட்டு பெண்களாய் இருந்தாலும் திருமணமான பிறகு சமையலறைக்குள் செல்ல அவர்கள் அனுமதிப்பதில்லை. (ரெங்கையா முருகன் - வி.ஹரிசரவணன், அனுபவங்களின் நிழல் பாதை)

தெய்வங்களுக்கு விலங்குகளை பலியிடும் போது அது பொதுவாக ஆணாக இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் கோழி பலியிடப் படுவதில்லை. சேவல் மட்டுமே பலியிடப்படுகின்றது. அதே போல ஆடு, பன்றி என பலியிடும் போதும் ஆண் விலங்குகளே பலியிடப் படுகின்றன. 

உணவின் சமூக அரசியல்:

சமூக மாற்றங்கள், அதிகரத்துவத்தினை பிரதிபலிப்பதாக உள்ளது. இன்றைய துரித உணவகங்கள் சமகால சமூக கருத்தியலினை பிரதிபலிப்பதாக உள்ளது. (Ritzer, The McDonaldization of Society 1993) துரித உணவகங்கள் மக்களிடையே நுகர்வின் மீதான மோகத்தை அதிகப்படுத்தி, நுகர்வின் மூலமே தணிக்கின்றது. உணவுப் பண்பாடு என்பது உற்பத்தி மூலம் உருவாகின்றது. அந்த உணவு நுகர்வுப் பண்டமாக மாறிய பிறகு ஆதிப் பண்பாட்டில் ஒரு சிதைவு ஏற்படுகின்றது. உணவுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவு உற்பத்தி என்ற தளத்தில் இருந்து நுகர்வுத் தளத்தில் மாறிய பிறகு அதிகாரப் படிநிலைகளும் உருவாகத் தொடங்குகின்றது. நுகர்வின் மோகம் என்பது மக்களிடையே Branded அடையாளத்தை உருவாக்குவதன் மூலம்  ஓர்மைப் பண்பாடு மக்களிடையே திணிக்கப்படுகின்றது. இங்கு KFC, Coffee Day, Arabian Grilled Chicken and Coca Cola போன்றவை மக்களிடையே உருவாக்கியுள்ள நுகர்வு மோகத்தினை அறிந்து கொள்வதன் மூலம் உணவின் மீதான உலகளாவிய அரசியலைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை, உணவின் ஏகாதிபத்தியமாக கருதலாம். தமிழகத்தில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். அப்படி இருக்கும் பொழுது சைவ உணவினை அரசே அதிகாரப் பூர்வமாக மலிவு விலையில் விற்பது என்பது பண்பாட்டு ஏகாதிபத்யமாக விளங்குகின்றது. "சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது" என்ற செய்தியை செய்தித் தாள்களில் வாசிக்கும் போது, குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களின் உணவுப் பண்பாட்டின் மீது நடைபெற்றுள்ள ஒரு பண்பாட்டு படையெடுப்பாகவே காண முடிகின்றது. 

உணவும் பொது கருத்தியலும்:

சமூகத்தில் நிகழ்கின்ற பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்களை அடையாளப்படுத்துவதாய் அந்த சமூகத்தின் உணவுப் பண்பாடு இருந்து வருகின்றது. தொ.பரமசிவன் கூறுவது போல, ஒரு சமூகம் தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் கருத்தியல்களின் மக்களின் வாழ்க்கை முறையின் மூலம் வெளிப்படுத்துகின்றது. கவர்ச்சியான உடற்கட்டுடன் (Six Pack) இருப்பது தான் உடல் நலத்திற்கு நலம்பயப்பது என்ற கருத்து மக்களிடையே இருந்து வருகின்றது. தொப்பை போட்டு குண்டாக இருப்பது அசிங்கமானது என்றும் கருத்துகள் உள்ளன. பெண்களும் இதே கருத்தில் தான் உள்ளனர். குண்டாக இருப்பது அழகன்று என்ற கருத்தின் தாக்கத்தினால் உண்ணும் உணவின் அளவைக் குறைத்து, உணவுப்பழக்கத்தை மாற்றி சுழிய இடையளவு (Zero Size) என ஒல்லியாக இருக்க விருப்பப் படுகின்றனர். ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இருப்பது என்பது அவர்களின் மரபுகளுடன் தொடர்புடையது. இந்த அடிப்படையில் உணவு என்பது மக்களை பண்பாட்டளவில் ஒடுக்குகின்ற ஒரு கருத்தியல் ஆயுதமாக உள்ளதை அறிய முடிகின்றது. அதன் விளைவாக தான் இன்று ஒவ்வொரு தெருவிலும் அருகி வரும் உடற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப் படுகின்ற Tele Shopping விளம்பரங்கள். 

புதன், 7 ஆகஸ்ட், 2013

மொழியின் அதிகார அரசியல்

சமூகப் பன்மியம் பற்றிய சிந்தனை இன்றைய சூழலுக்கு அவசியமான  ஒன்று.எந்த வகையினில் எனில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த சமூகம் வேதம், மதம் மற்றும் சாதி அமைப்பு ஆகிய கட்டமைப்பில் உள்ளது. அந்த ஆதிக்க வேர்கள் மக்களின் அன்றாட வாழ்வு, பண்பாடு மற்றும் மக்களின் நம்பிக்கைகள் என பல தளங்களில் மக்களை நசுக்கி வருகின்றது. அந்த வேரினை அழிக்க முற்படாமல் சாதிய சமூக கட்டமைப்பு என்ற நச்சு மரத்தினை அழிக்க இயலாது.

மக்களின் இன்பம், துன்பம், ஏக்கம், விருப்பம், கடந்த காலம் குறித்த நினைவுகள் ஆகியனவற்றின் வெளிப்பாட்டு வடிவமாக மொழி/ வட்டார மொழி இருக்கின்றது. இந்த மொழி தான் மக்களின் தொடர்பியல் காரணியாக உள்ளது. மக்களிடையேயான உரையாடல்கள் என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மட்டுமன்று. அது  பண்பாட்டு வார்ப்புரு. அவர்கள் பேசும் அந்த மொழி தான் பண்பாட்டினை உருவாக்குகின்றது. பண்பாட்டு மாற்றங்களும் மொழி வழியே தான் வெளிப்படுகின்றது. 

தமிழ்நாட்டினைப் போன்ற பன்மியத் தன்மைக் கொண்ட ஒரு  சமூகத்தினை மொழி  சார்ந்த அளவில் புரிந்து கொள்ள, மக்கள் பயன்படுத்தும் மற்றும் அரசு/ஊடகம் அல்லது வெகு தளத்தில் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளின் பின்புலத்தை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இரு சுட்டு பெயர்களை எடுத்துக் கொள்ளலாம். "மகாத்மா" மற்றும் "பெரியார்". தமிழ் மரபில்  பெரியவர்களை மதிப்பது ஒரு சமூக அறமாக வலியுறுத்தப் பட்டு வந்துள்ளதை திருக்குறள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் அதனூடே சாதிய  சேர்ந்தே திணிக்கப் பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டியது அவசியம். ஆதிக்க சாதியினை சேர்ந்தவர்கள் தங்களை பெரியவர்களாக அடையாளப் படுத்திக் கொள்ள முற்பட்டதின் விளைவாக வயதில் பெரியவராயினும், சிறியவராயினும் ஆதிக்க சாதியினரை ஒடுக்கப் பட்டு வருகின்ற சாதியினர் மதிக்க வேண்டும். 

மேற்கத்திய பண்பாட்டு சூழலில் இருந்து பல கருத்துகளை இன்று நாம் உள் வாங்கிக் கொண்டிருந்தாலும், சாதி அமைப்பு எனும் நஞ்சு மரத்தின் விதை நம் அனைவரின் மனதிலும் அறிந்தோ அறியாமலோ விதைக்கப் பட்டுள்ளது. அதனால் தான் சக மனிதனையே துதி பாடும் ஒரு நிலைமை இன்று வரை நிலவி வருகின்றது. மதிப்பது வேறு வழிபடுவது வேறு. இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டால் மகாத்மா என்று எவரையும் குறிப்பிட மாட்டோம். வயல் காட்டில் வேலை செய்யும் விவசாயி, மலைகளில் வசிக்கும் மக்கள், சென்னை நகர நெரிசல்களுக்கு இடையே சாலையோரங்களில் வாழும் மக்கள், திருநங்கைகள் இவர்களெல்லாம் ஏன் மகாத்மா என குறிப்பிடப் படுவதில்லை. அவர்களைக் குறிப்பிட விளிம்பு நிலையினர், தாழ்த்தப்பட்டவர்கள், கீழ்சாதியினர் போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்துவதன் காரணம் சாதிய பின்னணி தான். அந்த அடிப்படையில் தான் "பெரியார்" என்ற பெயரும். மேலை நாடுகளில் இவ்வளவு வெளிப்படையாக யாரும் துதி படுவதில்லை. அதனால் தான் அங்கு காரல் மார்க்ஸ், ஹிட்லர், ஒபாமா, ஜான் கென்னடி, ரூசோ, சர்ச்சில் என அவர்களின் சொந்த பெயரிலியே சுட்டப்பட்டு வருகின்றனர். சாதிய நஞ்சு விதைக்கப் பட்ட இந்த சமூகத்தில் தான் மோகன் தாசும், ராமசாமியும் வேறு பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தெய்வங்களும் இந்த மொழியின் அதிகார அரசியலுக்கு அப்பாற்பட்டதன்று. அதனால் தான் இன்றும் சிறு தெய்வங்கள் என்ற வார்த்தைப் பயன்பாடு நம்மிடையே இருந்து வருகின்றது. தெய்வம் எவ்வாறு சிறு தெய்வமானது என்ற காரணத்தை அறிய முற்பட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் வழிபடுகின்ற தெய்வங்கள் என்ற காரணம் தான். திருவல்லிக்கேணி பள்ளிவாசலும், பார்த்தசாரதி கோயிலும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலும், சாந்தோம் தேவாலயமும் வெறும் வழிபாட்டு தளம் என்ற அளவில் மட்டுமல்லாது அது சமூகத்தில் ஆதிக்கத்தினை உண்டு பண்ணும் ஒரு நிறுவனங்கள் என்றும் புரிந்து கொள்ளுதல் அவசியம். அங்கு உள்ள தெய்வங்கள் என்ற அடையாளத்தில் இருந்து தன்னை பெருந்தெய்வம் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றது. ஆனால் அவை நிறுவன தெய்வங்கள் என்ற அர்த்தத்தில் நாம் உள்வாங்கிக் கொள்வது சரியானதாக இருக்கும். பிறகு அய்யனாரையும், சுடலை மாடனையும், மாரியாத்தாவையும் சிறு தெய்வங்கள் என்று குறிப்பிட மாட்டோம். அவை தெய்வங்களாகவே இருக்கும்.