விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்ற தளத்தில் இருந்து விலகி பல தளங்களில் செயல்பட்டு வருகின்றது. ஒரு சமூகத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பவை அந்த சமூகத்தின் பண்பாட்டு அசைவியக்கங்களை பிரதிபலிப்பவையாக உள்ளன. சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுகளின் வழியே வெளிப்படுத்துகின்றது. (தொ. பரமசிவன், 2009, 90). விளையாட்டு என்பது மனித பண்பாட்டு உருவாக்கத்தின் அடிப்படைக் கூறு.(Johan Huizinga, Homo Ludens, 1938). விளையாட்டு என்பது சமூக பண்பாட்டு கட்டமைப்பு, சமூக நெறிமுறைகள் ஆகியவற்றோடு தொடர்புடைய ஒன்றாகவே இருந்து வருகின்றது.
Roland Barthes இசை குறித்த தன் Musica Practica என்ற கட்டுரையில் இசை இரு வடிவங்களில் உள்ளதாக குறிப்பிடுகின்றார். 1) இசைப்பது 2) கேட்பது என அவர் குறிப்பிடுகின்றார். இரு வகையான கலை வடிவமும் தனக்கான வரலாறு, சமூக மதிப்பீடுகள், கலைத் தன்மை மற்றும் சிற்றின்ப தன்மையில் மாறுபடுகின்றது என குறிப்பிடுகின்றார். Barthes இன் இந்த கருத்தினை விளையாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க இயல்கின்றது. இவரது கருத்துப் படி விளையாட்டினை இரு வகையாக பகுத்துக் காணலாம்.
- விளையாடுவது (Played)
- வேடிக்கைப் பார்ப்பது (Audience)
இவை இரண்டு வகையான விளையாட்டு வடிவங்களும் பல தன்மைகளில் மாறுபடுகின்றது. வரலாறு, சமூகவியல், தனித்திறமை, சிற்றின்பத் தன்மை, அரசியல் பொருளாதாரம் ஆகிய தளங்களில் பல வேறுபாடுகளைக் கொண்டு பண்பாட்டு மாற்றங்களை வடிவமைகின்றது.
வரலாற்றின் அடிப்படையில் விளையாட்டு:
ஒரு சமூகத்தில் விளையாட்டு என்பது அந்த சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு பொருளாதார மாற்றங்களின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் நாடக வெளிப்பாடு என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள முடிகின்றது. விளையாட்டு என்பது தொன்மைச் சமூகத்தில் பொழுதுபோக்கு என்ற அர்த்தத்தில் இருக்கவில்லை. அவை அடுத்த தலைமுறையினருக்கு அந்த பகுதியில் உள்ள பெரியவர்கள் / முன்னோர்கள் கற்றுக் கொடுக்க விரும்பிய கருத்தியல் எண்ணங்களின் செயல் வடிவம். விளையாட்டின் மூலம் குழு உணர்வு, இன உணர்வு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் போரிடல் போன்ற நெறிமுறைகளைக் கற்றுக் கொடுத்து வந்தனர். மேலும் அந்த சமூகத்தில் ஏற்பட்ட சமூக மாறுதல்களும் கருத்தாக்கங்களும் விளையாட்டுகளில் பிரதிபலித்தன. தமிழ் சமூகத்தில் கபாடி, நாடு பிடித்தல், கல்லா? மண்ணா?, போன்ற விளையாட்டுகள் சமூக வெளி சார்ந்த உரிமைகளின் வெளிப்பாடாக உள்ளன. ''ஆடு நரி ஆட்டம்'' என்ற விளையாட்டு வேட்டைச் சமூகத்தில் உருவான ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு எல்லை மற்றும் உடைமை பாதுகாப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுப்பவையாக உள்ளன. இந்த விளையாட்டு சமூகத்தில் நிலவும் வர்க்கப் படிநிலைகளை பிரதிபலிப்பவையாக உள்ளது. ''ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்திச்சி'' என்ற விளையாட்டு தமிழகத்தில் முகமதியர்கள் படையெடுப்பின் பொழுது தமிழகத்தில் உள்ள பெண்களை மணந்து கொள்ள விரும்பி இழுத்துக் கொண்டு சென்று விடுவர். அந்த பெண் தான் மணமானவள் என்று கூறியதும் அவர்களை விட்டுவிட்டனர். இந்த நிகழ்வின் வரலாற்று எச்சம் தான் இன்று பெண் குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டு.
குழந்தைகள் விளையாடும் பெரும்பாலான விளையாட்டுகள் பெரியவர்களின் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் ஒரு கற்பனைத் தன்மைக் கொண்டதாக உள்ளது. குழந்தை வளர் இளம் பருவத்தில் நிகழும் மாற்றங்களை இது பிரதிபலிக்கின்றது. இதனை பிராய்டு Latency stage என குறிபிடுகின்றார்.
சமூகவியலின் அடிப்படையில்:
விளையாட்டு என்பது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
- வெளி மற்றும் கால அளவு
- தொழில்
- பாலின உறவு
- வயது
ஆகியவற்றை அடிப்படையாக உள்ளது.
விளையாட்டில் தனித்திறமை வெளிப்பாடு:
விளையாட்டின் பொழுது விளையாடப்படும் நபர், பார்வையாளர் ஆகியயோர் ஒவ்வொருவரும் தனித்தனி வகையில் தன்னை வெளிக்காட்ட முனைகின்றனர். பார்வையாளர்கள் எழுதிக் காட்டும் வாசகங்கள், உற்சாகமூட்டும் நடனம், குரலொலிகள் மற்றும் ஆரவாரங்கள்.
விளையாட்டின் சிற்றின்பம்:
விளையாட்டு எனபது பாலுணர்வு விருப்பங்களை குறியீட்டு அடிப்படையில் பொதுத் தளத்தில் வெளிப்படுத்தும் ஒரு செயலாகவும் இருந்து வருகின்றது. வெகு தளத்தில் விளையாட்டு என்பது பாலுணர்வு விருப்பங்களை நிவர்த்தி செய்பவையாகவும் இருந்து ஆக வேண்டிய கட்டாயத்தினை நவீன சமூகம் கட்டமைத்துள்ளது. பொதுவாக விளையாட்டு என்பது ஆண்களின் பால் விருப்பத்தினை வெளிப் படுத்துபவையாக உள்ளது. விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் வடிவம் கூட ஒரு வகையில் ஆண் விருப்பத்தின் வெளிபாடுதான். கால்பந்து விளையாட்டு என்பது "ஆண்குறி உந்துதல்'' என்ற பிராய்டின் கருத்தின் ஒரு வடிவம் தான். தன் இன பெண்களின் மீது வேறு ஆண்கள் உரிமை கொள்ளக் கூடாது. அது அவர்களின் இனத்திற்கு ஏற்பட்ட ஒரு தோல்வியாக கருதப்படுகின்றது. இந்த கருத்து வெளிப்பாடு தான் கால்பந்து விளையாட்டு. பாண்டவர்கள் விளையாடிய சூது விளையாட்டும் இத்தன்மைக் கொண்டது.
விளையாடும் பொழுது விளையாடுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் வெளிக்காட்டும் உடல் அசைவுகள், அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் ஆகியனவும் இதன் அடிப்படையில் பொருட்கொள்ளத்தக்கது. IPL விளையாட்டில் ஆடும் நடன மங்கைகள் ஆண் மைய சமூகத்தின் சிற்றின்பவிருப்பத்தின் ஒரு வெளிப்பாடு.
விளையாட்டின் அரசியல் பொருளாதாரம்:
விளையாட்டு விளையாடுவது, வேடிக்கைப் பார்ப்பது என்பது அரங்க செயல்பாடுகளைத் தாண்டி அது உலகளாவிய பொருளாதாரத்தினை வடிவமைக்கும் ஒரு காரணியாக விளங்குகின்றது. விளையாட்டு என்பது ஒரு சந்தைப் பொருளாக இங்கு பரிணமிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக