உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவையாக உள்ளது. அந்த உணவை மனிதன் தேட முற்பட்டதில் பண்பாட்டு வளர்ச்சி தொடங்குகின்றது. வேட்டைச் சமூகம், வேளாண் சமூகம், இன்றைய நுகர்வுச் சமூகம் வரை மனிதனின் தேடு பொருளாக உணவு இருந்து வருகின்றது. உணவு இல்லாத நிலைமையையே கொடிய வறுமை என கருதப்படுகின்றது. உணவு என்பது சமூக பண்பாட்டு வளர்ச்சியில் மிக இன்றியமையாததாக விளங்குகின்றது. ஒரு சமூகத்தின் உணவு என்பது மக்களின் உற்பத்தி முறை, சுவை உணர்வு, பரிமாறும் முறை, வாழ்வியற் சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றது. சமூக அசைவியத்தில் உணவு என்பது எல்லா சமூகத்தினருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் அது வெளிப்பாட்டு முறைமைகளில் வேறுபடுகின்றது. உணவு தன்னை அனைத்து சமூகத்திலும் தன்னை பல மாறுதல்களுடன் வெளிப்படுத்துகின்றது.
விருந்தோம்புதலின் பண்பு:
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "- திருக்குறள் (322)
உணவை பகுத்துண்டு வாழ்வது பண்டைய தமிழர்களின் அறமாக இருந்தது. தமிழர்களின் தனிப் பண்பாக விருந்தோம்பல் கருதப்பட்டு வந்தது. உணவையும் நீரையும் விற்பது என்பது தமிழர்களின் வழக்கத்தில் இருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. வழிப்போக்கர்களுக்கு உணவழிக்க சத்திரமும் சாவடியும் இருந்ததை நாட்டார் கதைகளின் வாயிலாக அறிய முடிகின்றது. ஆகையால் பண்டைய தமிழ்ரகளிடையே உணவகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இன்றைய சூழலில் உணவகங்கள் என்பது ஒரு ஊருக்கு மிக அவசியமானதாகக் கருதப்படுகின்றது.உணவு விற்பது என்பது அநாகரீகமான செயலாக தொல்சமூகத்தினர் கருதி வந்தனர். ஆனால் இன்றைய நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில் உணவு என்பது பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. உணவகங்கள் மக்கள் கூடும் இடமாக உள்ளது. ஆனால் அவை அத்துடன் நின்று விடவில்லை. அவை அதிகாரத்தின் மையமாக திகழ்கின்றது.
சமூக பண்பாட்டு அசைவியக்கத்தில் அதி கார மையங்கள் மூன்று வடிவங்களில் உள்ளது.
- சமயம்/மதம்
- சமூக அரசியல் பொருளாதாரம்
- கருத்தியல்
உணவின் மூலம் இந்த மூன்று அதிகார மையங்கள் மக்களின் மீது தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.
சமயங்களில் உணவு:
தமிழத்தில் நிறுவன சமயங்களான சைவமும் சமணமும் உணவின் மீதான அரசியலை தொடங்கி வைத்தது. இந்த இரு நிறுவன சமயங்களும் சைவ உணவையே நல்லறமாக போதித்தன. ஆனால் மக்களின் உணவுப் பழக்கம் என்பது நாட்டார் தெய்வங்களை சார்ந்தே இருந்து வருகின்றது.
நிறுவன மதங்கள் தமிழகத்தில் வேரூன்றிய பிறகு படையல் என்ற உணவு பிரசாதம் பார்ப்பன போஜனம், நைவேத்தியம் என மாறியதை சமூக வரலாற்று அசைவியக்கங்களின் மூலம் அறியலாம்.
வேதத்தில் உணவு அன்னம் என்று குறிப்பிடப்படுகின்றது. உணவு புனிதமானது என்றும், அதை இகழக் கூடாது, உற்பத்தியை பெருக்க வேண்டும் என வேதங்கள் குறிப்பிடும் தகவல். ‘அன்னம் ந நிந்த்யாத்’ (‘உணவை இகழாதே!’), ‘அன்னம் பஹு குர்வேத்’ (‘உணவை அதிகம் உற்பத்தி செய்’) என்ற உபநிஷத வார்த்தைகள் மூலம் இந்த தகவலை அறிய முடிகின்றது. இன்றைய போராட்ட களத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தின் அடையாளமாக உண்ணாவிரதம் இருப்பது கூட வேதத்தின் ஒரு நீட்சியாக உள்ளதை அறிய முடிகின்றது.
உணவு பற்றி பகவத் கீதையில்,
அன்னாத் பவந்தி பூதானிபர்ஜன்யாத் அன்னஸம்பவ:யக்ஞாத் பவதி பர்ஜன்யோயஞ: கர்ம ஸமுத்பவ:
என குறிப்பிடப்படுகின்றது. அதாவது "அன்னத்தினால் ஜீவராசிகள் வாழ்கின்றன; அந்த உணவு மழையினால் விளைகிறது; மழை, யாகங்களினால் பொழிகிறது; யாகங்கள் நற்காரியங்களினால் நடைபெறுகின்றன".
உண்கின்ற உணவு ஒருவனது குணத்தை நிர்ணயிக்கின்றது என வேதங்கள் குறிப்பிடுகின்றது. சத்வ, ரஜோ, தமஸ் ஆகிய குணங்களை வேதம் குறிப்பிடுகின்றது. இவ்வாறன கருத்துகள் சமூகத்தில் சாதிய வேறுபாடுகள் உருவாக காரணமாக அமைந்தது. இதன் காரணமாகவே இன்று வரை மாமிச உணவு உண்பவர்கள், குறிப்பாக பன்றி மட்டும் மாட்டு இறைச்சி உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்டு வருகின்றனர்.
வேதங்கள் மட்டுமன்றி இனக்குழு பண்பாட்டிலும் உணவு மற்றும் சமையலறை என்பது புனிதமான ஒன்றாகவே கருதப்பட்டு வருகின்றது. ஒரிசா மாநிலம் சோனேபேடா பகுதியிலுள்ள பூஞ்சியா பழங்குடி மக்கள் சமையலறையை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர். தம் வீட்டு பெண்களாய் இருந்தாலும் திருமணமான பிறகு சமையலறைக்குள் செல்ல அவர்கள் அனுமதிப்பதில்லை. (ரெங்கையா முருகன் - வி.ஹரிசரவணன், அனுபவங்களின் நிழல் பாதை)
தெய்வங்களுக்கு விலங்குகளை பலியிடும் போது அது பொதுவாக ஆணாக இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் கோழி பலியிடப் படுவதில்லை. சேவல் மட்டுமே பலியிடப்படுகின்றது. அதே போல ஆடு, பன்றி என பலியிடும் போதும் ஆண் விலங்குகளே பலியிடப் படுகின்றன.
உணவின் சமூக அரசியல்:
சமூக மாற்றங்கள், அதிகரத்துவத்தினை பிரதிபலிப்பதாக உள்ளது. இன்றைய துரித உணவகங்கள் சமகால சமூக கருத்தியலினை பிரதிபலிப்பதாக உள்ளது. (Ritzer, The McDonaldization of Society 1993) துரித உணவகங்கள் மக்களிடையே நுகர்வின் மீதான மோகத்தை அதிகப்படுத்தி, நுகர்வின் மூலமே தணிக்கின்றது. உணவுப் பண்பாடு என்பது உற்பத்தி மூலம் உருவாகின்றது. அந்த உணவு நுகர்வுப் பண்டமாக மாறிய பிறகு ஆதிப் பண்பாட்டில் ஒரு சிதைவு ஏற்படுகின்றது. உணவுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவு உற்பத்தி என்ற தளத்தில் இருந்து நுகர்வுத் தளத்தில் மாறிய பிறகு அதிகாரப் படிநிலைகளும் உருவாகத் தொடங்குகின்றது. நுகர்வின் மோகம் என்பது மக்களிடையே Branded அடையாளத்தை உருவாக்குவதன் மூலம் ஓர்மைப் பண்பாடு மக்களிடையே திணிக்கப்படுகின்றது. இங்கு KFC, Coffee Day, Arabian Grilled Chicken and Coca Cola போன்றவை மக்களிடையே உருவாக்கியுள்ள நுகர்வு மோகத்தினை அறிந்து கொள்வதன் மூலம் உணவின் மீதான உலகளாவிய அரசியலைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை, உணவின் ஏகாதிபத்தியமாக கருதலாம். தமிழகத்தில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். அப்படி இருக்கும் பொழுது சைவ உணவினை அரசே அதிகாரப் பூர்வமாக மலிவு விலையில் விற்பது என்பது பண்பாட்டு ஏகாதிபத்யமாக விளங்குகின்றது. "சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது" என்ற செய்தியை செய்தித் தாள்களில் வாசிக்கும் போது, குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களின் உணவுப் பண்பாட்டின் மீது நடைபெற்றுள்ள ஒரு பண்பாட்டு படையெடுப்பாகவே காண முடிகின்றது.
உணவும் பொது கருத்தியலும்:
சமூகத்தில் நிகழ்கின்ற பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்களை அடையாளப்படுத்துவதாய் அந்த சமூகத்தின் உணவுப் பண்பாடு இருந்து வருகின்றது. தொ.பரமசிவன் கூறுவது போல, ஒரு சமூகம் தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் கருத்தியல்களின் மக்களின் வாழ்க்கை முறையின் மூலம் வெளிப்படுத்துகின்றது. கவர்ச்சியான உடற்கட்டுடன் (Six Pack) இருப்பது தான் உடல் நலத்திற்கு நலம்பயப்பது என்ற கருத்து மக்களிடையே இருந்து வருகின்றது. தொப்பை போட்டு குண்டாக இருப்பது அசிங்கமானது என்றும் கருத்துகள் உள்ளன. பெண்களும் இதே கருத்தில் தான் உள்ளனர். குண்டாக இருப்பது அழகன்று என்ற கருத்தின் தாக்கத்தினால் உண்ணும் உணவின் அளவைக் குறைத்து, உணவுப்பழக்கத்தை மாற்றி சுழிய இடையளவு (Zero Size) என ஒல்லியாக இருக்க விருப்பப் படுகின்றனர். ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இருப்பது என்பது அவர்களின் மரபுகளுடன் தொடர்புடையது. இந்த அடிப்படையில் உணவு என்பது மக்களை பண்பாட்டளவில் ஒடுக்குகின்ற ஒரு கருத்தியல் ஆயுதமாக உள்ளதை அறிய முடிகின்றது. அதன் விளைவாக தான் இன்று ஒவ்வொரு தெருவிலும் அருகி வரும் உடற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப் படுகின்ற Tele Shopping விளம்பரங்கள்.
good
பதிலளிநீக்கு