பக்கங்கள்

வெள்ளி, 16 டிசம்பர், 2016

சன்னல்களற்ற அறை…

இந்த புயல் நாளில்
இருண்டு போன அறையில்
நடந்து கொண்டே இருக்கிறேன்
மேலும் கீழுமாக
பரமபத விளையாட்டினைப் போல
ஏணிகளும் பாம்புகளும்
என்னோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன.
அந்த அறையில் இருக்கும் ஒரு சன்னல் வழியாக
எனக்கான ஒளி இருக்கின்றது.
அது என்னை விட்டு விடுதலையாக்கிவிடும்…
அந்த சன்னலை தேடுகிறேன்…
ஆனால் இங்கு சில அறைகளுக்கு
சன்னல்களே இருப்பதில்லை.
இருந்தாலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.
யார் அறிவார்
அந்த சன்னலில் இருந்து வரும் வெளிச்சம் கூட
என்னை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கும் என்று.
அடுத்து என்ன நடக்கும் என்பதில் தானே
வாழ்வின் அர்த்தங்கள் இருக்கின்றது.
சன்னல்களற்ற அறையில்
வாழ்வது கூட சுகம் தான்.
...
பாரதி ஆரோக்கியராஜ், தரமணி, 08.56 pm 16.12.2016

வியாழன், 10 நவம்பர், 2016

பட்டாம்பூச்சி இரயில்


தரமணியிலிருந்து புறப்பட்ட
இந்த பறக்கும் இரயில் இன்று
பட்டாம்பூச்சியாக
பறந்து கொண்டிருக்கின்றது.

தேடிக்கொண்டிருக்கின்றேன்
எனக்குள் இருக்கும் என்னை
என் அன்பை
என் காதலை
என் நட்பை…!

அந்த பட்டாப்பூச்சி
உண்மையிலேயே பைத்தியக்காரத்தனமானது.
அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கின்றது.
இரயில் பல நூற்றாண்டுகள் கடந்து
முன்னும் பின்னும் சென்று கொண்டேயிருக்கின்றது.

இந்த பிரபஞ்சம் கடந்தும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்…
என் தேடலில் ஒளிந்து கொண்டிருக்கின்றது
என் இருத்தலும்
உன் நினைவுகளும்.


பாரதி ஆரோக்கியராஜ், 10.11.2016, தரமணியில் இருந்து புறப்பட்ட இரயிலில்…

கருப்பு பணம் : மக்களின் மீதான கருத்தியல் வன்முறை

நவம்பர் 8, 2016 அன்று இந்தியப் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி இந்த அறிவிப்பை வெளியிடுகின்றார். இன்று நள்ளிரவு முதல் மக்களிடம் புழக்கத்தில் இருக்கின்ற 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கின்றார். மேலும் இரண்டு நாட்கள் வங்கிகள், .டி.எம் மையங்கள் செயல்படாது என அறிவிக்கின்றார். ஊழல், கருப்பு பணம், தீவிரவாதம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிரான இந்திய அரசு எடுத்திருக்கும் வரலாற்று நடவடிக்கை என அரசு விளம்பரம் செய்து கொள்கின்றது.
இதற்கு அரசு அளித்திருக்கும் விளக்கம்:
·         இந்த வரலாற்று நடவடிக்கை மூலம் ஏழை, நடுத்தர, மேல் நடுத்தர வகுப்பினருக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படும்.
·         ரியல் எஸ்டேட் விலைவாசி, உயர் கல்வி, மருத்துவம் இனி சாமானிய மக்களையும் சென்றடையும்.
·         ஆயுத கடத்துபவர்கள், உளவு பார்ப்பவர்கள், தீவிர வாதிகளுக்கு நிதி உதவி அளிப்பது தடுக்கப்படும்.
·         மிகப்பெரிய அளவிலான கள்ள நோட்டுகளுக்கு முடிவு கட்டப்படும்.
என அறிவித்திருக்கின்றது.
உண்மையில் இந்த அறிவிப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் தான் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் சாமானிய மக்கள் மீது நிகழ்த்தப்படிருக்கும் பொருளாதார வன்முறை என்றே சொல்ல வேண்டும்.
திருவள்ளுவர் தீதின்றி வந்தப் பொருள் செல்வம் தான் அனைத்து இன்பத்தையும் அளிக்கும் என கூறுகின்றார். ஆனால் இன்று நாட்டின் பொருளாதரத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பது முறைகேடாக சேர்த்து வைத்துள்ள கருப்பு பணம் என இந்திய அரசால் சொல்லப்பட்டு வருகின்றது. சுவிஸ் வங்கியில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 இலட்ச ரூபாயை வங்கியில் செலுத்துவதாக வாக்குறுதி அறிவித்த இந்த அரசு இன்று செய்துள்ளது என்ன?
கருப்பு இழிவானது என்று கருதுவது அதிகாரத்திற்கும் எளிய மக்களுக்கும் இடையே நிலவிவரும் முரண்பாடு என தொ.பரமசிவன் கூறுகின்றார். அவ்வகையில் கருப்பு பணம் என்ற சொல்லாடல் முற்றிலும் சாதிய மேலாதிக்கம், இனவெறி சார்ந்த ஒன்று. ஆங்கிலத்தில் விளிக்கும் Black Money என்ற சொற்பதம் அங்கு நிலவுகின்ற நிறவெறியின் வெளிப்பாடே அன்றி வேறொன்றும் இல்லை. முறைகேடாக சேர்த்த பணத்தினை முறைகேடு என்று சொல்லாமல் கருப்பு பணம் என கூறுவது, இங்கு பொதுப்புத்தியில் இருக்கின்ற சாதீய மனப்பான்மையையே காட்டுகின்றது. இந்த சொல்லாடல் இங்கு பல்லாண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் சாதீய அதிகார மையங்கள் விளைவித்த ஒன்று. இது மக்களிடையே தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளையும், அடிமை உணர்வையும் உருவாக்குபவையாக இருக்கின்றன.
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிப்பதினால் மட்டும் நாட்டில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைய முடியுமா. இன்று நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது முறைகேடாக சேர்த்து இருக்கும்கருப்புபணம் மட்டும் தானா. அவ்வாறு முறைகேடாக சேர்த்த பணம் வைத்திருக்கும் பெரு முதலாளிகள் இதனால் பாதிக்கப்படுவார்களா? என்றால் இல்லை என்றே சொல்லலாம். இன்று அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், பெரு வணிக நிறுவனங்கள் தான் முறைகேடாக பணம் சேர்ப்பதில் முதன்மையாக உள்ளன. அவர்களுக்கு இந்த அறிவிப்பினால் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படப் போவதில்லை.
ஏனெனில் அவர்கள் அதை முன்பே சொத்தாகவும், வீடாகவும், நகைகளாகவும், பங்கு முதலீடுகளாகவும் மாற்றி விட்டனர். இதைவிட பெரும் அபாயம் அரசுப் பொறுப்புகளில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் பணி நியமனங்கள். முறைகேடாக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் எவ்வித அச்சுறுத்தலும் குற்ற உணர்வுமின்றி அன்றாடம் தங்கள் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மாதாமாதம் சம்பளத்தினை முறைகேடாக வாங்கி வருகின்றனர். இது கருப்பு பணமில்லையா? ஆனால் உழைக்கும் மக்கள் ஐநூறையும், ஆயிரத்தையும் மாற்றிக்கொள்ள வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இத்தகைய பணி நியமனங்கள் செல்லாது என இவ்வாறு ஒரே இரவில் அறிவிக்க முடியுமா? பணம் செல்லாது என அறிவித்த சில மணி நேரங்களிலேயே நகைக் கடைகளை மொய்க்க தொடங்கிய கூட்டத்திடம் இருக்கின்ற முறைகேடாக சேர்க்கப்பட்ட பணங்களை இந்த அரசு எப்படி மீட்கும்.
போலியான கல்விச் சான்றிதழ்களும் முறைகேடானா பணிநியமனங்களும் தான் இன்று பல இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்றன. ஆனால் அது குறித்தோ அது சார்ந்த சாதிய படிநிலைகள் குறித்தோ வாய் திறக்காத அரசு புதிதாக வெளியிட உள்ள ரூபாய் தாளில் சமஸ்கிருதத்தை திணித்து இருக்கின்றது.
பெரு நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு விவசாய கடன்களையும் கல்விக்கடன்களையும் வசூலிக்கும் வேலையை அதே நிறுவனங்களுக்கு அளித்திருப்பது துன்பியல் முரண். ஏழை நடுத்தர மக்களின் உயர்கல்வி, மருத்துவ வசதிகளை உறுதிபடுத்தும் என அறிவித்து இருக்கும் இந்த அரசு புதிய கல்விக் கொள்கை என அடுத்த தலைமுறையின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றது. இன்று எந்த ஒரு எளிய சாமானிய மனிதனாலும் அவ்வளவு எளிதாக அப்போலோ போன்ற மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற முடியாது. இருக்கின்ற அரசு மருத்துவமனைகளின் எதார்த்தம் முற்றிலும் வேறான ஒன்று. இதற்காக ஒரே இரவில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் அரசே ஏற்று நடத்தும். அதற்கு உரிய இழப்பீட்டினை ஐம்பது நாட்களுக்குள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை இந்த அரசு இப்படி ஒரே இரவில் அறிவித்து செயல் படுத்த முடியுமா?

அரசின் ஆதிக்கமும் அடக்கு முறையும் என்பது எளிய மக்களின் மீதே ஒழிய பெரு முதாலாளிகளிடமோ பார்ப்பனர்களிடமோ இல்லை. ஏனெனில் இன்று நிகழ்த்தப்பட்டிருப்பது எளிய மக்களின் மீதான கருத்தியல், பொருளாதார வன்முறை. இதில் எந்த நியாயங்களையும் காண முடியாது.

.ஆரோக்கியராஜ்
முனைவர் பட்ட ஆய்வாளர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.

புதன், 26 அக்டோபர், 2016

கூட மேல கூட வச்சி கூடலூரு போறவளே

காலம் கடத்துவேனோ!

ஆண்: கூடை மேல கூடை வச்சி
மொழுந்தெடுக்கப் போற புள்ளே - உன்னைக்
கொள்வோன் மனம் குளிர
கொஞ்சம் நின்னு பேசேன்டி.
பெண்: அக்கம் பக்கம் பாராமல்
அதிகாரம் பேசும் மச்சான்
ஆனாலும் ஆகட்டும்
அடுத்த நாள் பேசிருவேன்.
ஆண்: முத்துப் போல பல்லழகி
முகங் கோணாச் சொல்லழகி - என்னைக்
கண்டாக் கசக்குதோடி
கருத்து ஒண்ணு ஆன பின்னே.
பெண்: கண்டால் கசக்காது
கருத்துள்ள அத்தானே - நான்
ஊரார் நகைக் கஞ்சி
ஓடுகிறேன் வெகுதூரம்.
ஆண்: கொள்ளை ஆசை உனக்குண்டு
கொண்டு வாரேன் பரிசப் பணம்
உன் தந்தை தட்டினாலும்
ஒரு சொல்லில் முடித்துவிடு.
பெண்: பரிசப் பணம் கொண்டு வந்தால்
பார்த்துக் கொள்வேன் அத்தானே
பாவி நான் வாடும்படி
காலத்தைக் கடத்தாதே!
ஆண்: காதலாலே வேகுறேனே
கண்ணான பெண் மயிலே
காலங் கடத்துவேனோ
காத்திருந்தும் பார்ப்பேனோ!

(எஸ். எஸ். போத்தையா அவர்களின் தொகுப்பிலிருந்து…)

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

நான் பார்த்தலின் பொருட்டு

நான் பார்த்தலின் பொருட்டு

நான் அழகை பார்த்து ரசிப்பதனால்
ஒன்றும் ஏற்படுவதில்லை
என் பார்வை அதன் அழகினால் நிறைந்தது
உடல், செவ்விதழ், வனப்பான அங்கங்கள்
கிரேக்கத்து சிலைகள் போன்ற கருங்கூந்தல்
அது அள்ளி முடியாத போதும்கூட பேரழகு
நெற்றி நுதல் படும் முடி கூட அழகு
எனது கவிதை போல அந்த முகங்கள்
எனது பால்ய இரவுகளில் இவற்றை விரும்புகிறேன்
ரகசியமாக சந்திக்க
Translated by Bharathi Arockiaraj
So much I gazed - Cavafy

So much I gazed on beauty
That my vision is replete with it
Contours of the body, Red lips, voluptuous limbs,
Hair as if taken from greek statues;
Always beautiful, even uncombed,
And it falls, slightly, over white foreheads,Faces of love, as my poetry
Wanted them…
in the nights of my youth,
In my nights, secretly, met…

சனி, 17 செப்டம்பர், 2016

காதலுக்கான அழைப்பு - பால் லாரன்ஸ் டன்பார் (1897)

Invitation to Love

Related Poem Content Details

Come when the nights are bright with stars 
Or come when the moon is mellow; 
Come when the sun his golden bars 
Drops on the hay-field yellow. 
Come in the twilight soft and gray, 
Come in the night or come in the day, 
Come, O love, whene’er you may, 
And you are welcome, welcome. 

You are sweet, O Love, dear Love, 
You are soft as the nesting dove. 
Come to my heart and bring it to rest 
As the bird flies home to its welcome nest. 

Come when my heart is full of grief 
Or when my heart is merry; 
Come with the falling of the leaf 
Or with the redd’ning cherry. 
Come when the year’s first blossom blows, 
Come when the summer gleams and glows, 
Come with the winter’s drifting snows, 
And you are welcome, welcome. 

நட்சத்திரங்கள் ஒளிரும் இரவிலோ
நிலவு காயும் பொழுதிலோ
களத்துமேட்டில் செவ்வானம் சிவக்கும் பொழுதிலோ
நீ வா, ஒரு ஒளிக் கீற்றைப் போல
...
கருக்கல் வேளையிலோ
சாமத்திலோ, பகல் பொழுதிலோ
அன்பே நீ எப்பொழுதினும் வரலாம்
நீ வரவேற்கப்படுகிறாய்
...
இனிமையான அன்பான காதலே
மென்மையான கூடடையும் புறாவே
படபடக்கும் என் நெஞ்சுக்கு அமைதியினைக் கொடு
என் இதயக்கூட்டிற்கு நீ வரவேற்கப்படுகிறாய்.
...
என் அலர் பொழுதிலும்
என் உள்ளக் களிப்பிலும்
உதிர்ந்த இலைகளோடும்
சிவந்த அத்திப் பழத்தோடும் வந்துவிடு
...
வசந்த காலத்தின் முதல் பூவாக
கோடையின் கனன்றெழும் முதல் ஒளிக்கீற்றாக
வாடையின் கதகதப்பான பனிப்பொழிவாக
வந்து விடு, நீ என்றென்றும் வரவேற்கப்படுகிறாய்
...
தமிழில்: பாரதி ஆரோக்கியராஜ்

வியாழன், 14 ஜூலை, 2016

கந்தக வெண்ணிலா

தோதான இடத்தில் நீ இருந்தால்
நான், எரியும் கந்தக மாளிகையை உனக்குத் தருகின்றேன்
அதன் ரேழி எங்கும் அபாயங்களும்
அங்கு எரியும் நெருப்பினில் இருந்தும்
தப்ப முடியாத ஒர் மாளிகை
நம் இருவரையும் கடத்தக் கூடிய மாளிகை...

தென்றல் தழுவும் பூஞ்சோலையில் நீ இருந்தால்
நெகிழியில் ஒரு தோட்டம் தருகின்றேன்
அந்த சுடு மணலில் நடனமாடிடு

ஒரு துளி இதயம்
பேரலைத் தாகம்
பருந்தென வாழ்க்கை எனக்கு

தீயினில் இருந்து விலகிச் செல்கிறேன்
இந்த கனாவினிலே
கனவினில் இருந்து விழித்துக் கொள்கிறேன்
அறியாத குரலினிலே...

நீ உறங்கு நான் மட்டும் கனவு கண்டுக் கொள்கின்றேன்
அமைதியான ஒரு கடவுளைப் போல...
வெண்பனிக் குளிரில்
போர்த்திக் கொள்ள ஏதுமில்லை.
கோரமான இரவில்

இந்த மரணத்தை மறைப்பது மிகவும் துன்பமானது.

https://vimeo.com/13578330

பாடல் : Mia pista apo fosforo (1990)
பாடியவர் : ஹாரிஸ் அலேக்சியோ (Haris Alexiou) 
தமிழில் : பாரதி ஆரோக்கியராஜ்

வெள்ளி, 29 ஜனவரி, 2016

மாமதுரை போற்றுதும்…

புகைப்படக் கலைஞர் ஹென்க் ஓச்சப்பனுடன் ஒரு நேர்காணல்
- அ. ஆரோக்கியராஜ்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு, தமிழக பண்பாட்டின் ஆன்மாவினை உள்ளடக்கியுள்ளது. சல்லிக்கட்டுக்குத் தடை என்பது மக்களை பண்பாட்டு அநாதையாக மாற்றுகின்றதுஎன பெல்ஜியம் நாட்டு புகைப்படக்கலைஞர் ஹென்க் ஓச்சப்பன் மதுரை குறித்த தமது அனுபவங்களைப் பற்றி பேசுகையில் இவ்வாறு தனது உரையாடலைத் தொடங்குகிறார். மதுரை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளின் மரபார்ந்த ஆன்மாவினை தனது கேமரா மூலம் படம்பிடித்து வருகின்றவர். மதுரை நகரில் உள்ள பெருவாரியான மக்களுக்கு பரிச்சயமானவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களின் வாழ்வியலை புகைப்படங்களாக பதிவு செய்து வருபவர். சல்லிக்கட்டு ஆதரவாளர். அவருடனான ஒரு நேர்காணல்
1. அது என்ன பெயர் ஹென்க் ஓச்சப்பன்…?
1994ஆம் ஆண்டு நானும் எனது நண்பனும் கொடைக்கானல் செல்வதற்காக வந்திருந்தோம். மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் பேருந்தில் பயணிக்கும் போது எங்களுடன் ஒரு ரிக்ஷா ஓட்டுநரும் பயணித்தார். அவர் கொடைக்கானலில் படிக்கும் தன் பிள்ளைகளுக்கு திண்பண்டங்களை வாங்கிக் கொண்டு அவர்களை பார்ப்பதற்காக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். எனக்கு தமிழ் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் எல்லோருடனும் இயல்பாக பேசி வந்தேன். அவ்வாறு அவருடனும் பேசிக்கொண்டு வந்தேன். அவருடனான அந்த பயணம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அவரிடம் உங்களை மதுரையில் எங்கு சந்திக்கலாம் என்று கேட்டேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் வந்தால் என்னை பார்க்கலாம் என்று சொன்னார். கொடைக்கானலில் எங்களின் வேலை முடிந்த பிறகு மதுரை வந்து அவரை சந்திக்கச் சென்றேன். அவர் மதுரையின் பல பகுதிகளுக்கு என்னை அழைத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல் எனக்குத் தமிழ்மொழியையும் கற்றுக்கொடுத்தார். அவருடைய நட்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அவருடைய பெயர்தான் ஒச்சப்பன். அதைத்தான் ஓச்சப்பன் என என் பெயரோடு சேர்த்து ஹென்க் ஓச்சப்பன் என மாற்றிக்கொண்டேன்.
# ஒச்சப்பன் என்ற பெயர், உச்சாண்டம்மன் என்ற அம்மனின் பெயரில் இருந்து வழங்கி வரும் பெயர். பெண் பிள்ளைகளாக இருந்தால் ஒச்சாயி, ஒச்சம்மாள் என்றும், ஆண் பிள்ளைகளாக இருந்தால் ஒச்சப்பன் என பெயரிடுவது வழக்கம். உச்சாண்டம்மன் என்பது தேவர் சமூகத்தினரின் ஒரு குல தெய்வப் பெயர்.
2. உங்களைப் பற்றியும் உங்கள் இந்திய பயணங்கள் பற்றியும்
நான் பெல்ஜியம் நாட்டின் அஸ்ட்வெர்ப் நகரைச் சேர்ந்தவன். ஜேக்கப்டேனியல் பெட்ரோனெல்லா எனது பெற்றோர். நான் கட்டடக் கலை பயில ஆசைப்பட்டு கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் அந்த வயதில் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக் கோளாறு காரணமாக எனது படிப்பைத் தொடர முடியவில்லை. அதனால் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டேன். பின்பு சிறைத் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். இப்போ எனக்கு வயது 66 ஆகின்றது.
நான் 1987 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்தியாவிற்கு வந்தேன். பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்குத் தான் நான் முதலில் வந்தேன். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நான் இங்கு வந்து கொண்டிருக்கின்றேன். நான் இந்தியாவில் புது தில்லி, ராஜஸ்தான், பாட்டியாலா, கல்கத்தா, டார்ஜிலிங், வாரணாசி, ஹரித்வார், ரிஷிகேஷ், மைசூரு, பெங்களூர், கேரளா உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். புது தில்லியில் உள்ள அனைத்து சமணப் பள்ளிகளுக்கும் சென்றுள்ளேன். இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்த இடம் தமிழ்நாடு. குறிப்பாக மதுரை. நான் கடந்த பிறவியில் தமிழனாக பிறந்திருப்பேன் என அடிக்கடி எனது மதுரை நண்பர்களிடம் கூறுவேன். அந்த அளவுக்கு எனக்கு மதுரை பிடித்துள்ளது. தமிழ்நாடு என் இரண்டாவது தாய் நாடு.
எனக்கு பைக் ஓட்டுவது மிக பிடிக்கும். மதுரையிலிருந்து ராமேஸ்வரம், பின் அங்கிருந்து கேரளாஆலப்பி, மூணார், வால்பாறை ஆகிய இடங்களுக்கு எனது பைக்கிலேயே சென்று வந்துள்ளேன். இந்திய சாலைகளில் வண்டி ஓட்டுவது கொஞ்சம் சவாலனது தான். ஏனெனில் இங்கு போக்குவரத்து நெருக்கம் மிகுந்து காணப்படுகின்றது. டெல்லி சாலைகளில் இரு புறங்களிலும் மூன்று வழிப் பாதைகள் இருந்தாலும் யாரும் அதை பின்பற்றுவதில்லை. அந்த அளவுக்கு நெரிசல் மிகுந்த சாலைகளாக உள்ளன. அதில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வண்டி ஓட்டுவது இன்னும் கொஞ்சம் சவால்தான். ஏனெனில் இது போன்ற சாலைகளில் வண்டி ஓட்டுவதற்கு அகண்ற பார்வைக் கோணம் தேவைப்படுகின்றது. ஹெல்மெட் போடுகின்ற போது பார்வை அளவு குறைவாகத்தான் உள்ளது. சட்டென்று திரும்பிக் கூட பார்க்க முடியாத சூழல். இருந்தாலும் உயிர் காக்க ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற தேவையை உணர வேண்டியுள்ளது.
3. மதுரை பற்றி
மதுரையில் முதலில் எனக்கு பிடித்தது, மக்கள் மரியாதையோடு பழகுவது தான். தமிழகத்தின் தலைநகரமான சென்னையைக் காட்டிலும் மதுரை மக்கள் மரியாதையோடு பழகின்றனர். இங்கு விருந்தினர்களை உபசரிக்கும் பண்பு மிகவும் மரியதைக்குரிய ஒன்றாக உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் குடும்ப உறவுகளுக்கு தமிழர்கள் அளிக்கின்ற மரியாதைக் குணம் என்னை மிகவும் ஈர்த்தது. அண்ணனின் முன்பு தம்பி சிகரெட் கூட பிடிப்பதில்லை. மதுரையில் மிகவும் என்னை ஈர்த்தது, மரபு, மதிப்பு, மரியாதை.
ஆனால் இங்குள்ள மக்களிடம் தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும் ஒரு மிகப் பெரிய பிழையை உருவாக்கி வைத்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகின்ற பெண்களை ஒரு காமப் படத்தில் வருகின்ற நாயகியைப் போல பார்த்து வருகின்றனர். அந்த பிழைக்கு மிக முக்கிய பொறுப்பு ஊடகங்கள் தான்.
4. மதுரை உங்களுக்கு பிடிக்க காரணம்
என்னைப் போன்ற வெளி நாட்டினர் மதுரைக்கு வந்தால் மீனாட்சி அம்மன் கோயிலைத் தான் சுற்றி பார்க்க விரும்புவர். ஆனால் எனக்கு அது மட்டும் போதுமானதாக இல்லை. ஒரு நகரின் ஆன்மா என்பது அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தான் இருக்கின்றது என நம்புபவன் நான். அங்கு தான் மக்களின் உண்மையான அடையாளத்தையும், எதார்த்தமான இயல்பையும் காண முடியும். ஆக நான் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களை நோக்கி எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.
இங்குள்ள கிராமங்களில் மக்கள் தங்கள் மரபையும் அதன் அடையாளங்களையும் இன்னும் பாதுகாத்து வருகின்றனர். இதற்கு மூன்று காரணங்கள் அடிப்படையாக உள்ளது. 1. குடும்பம்: உறவுகளை பிணைத்து வைக்கும் மிக முக்கியமான அம்சமாக இங்கு குடும்ப கட்டமைப்பு இருக்கின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள பந்தம், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே உள்ள பாசம் என்பது உறவுக்கான காப்பீடாக உள்ளது. 2. மதம்: மேற்கத்திய நாடுகளில் மதம் என்பது தனித்த ஒன்றாக உள்ளது. ஆனால் இங்கு மக்களின் வாழ்வில் ஒன்றுடன் ஒன்றாக கலந்திருக்கின்றது. பொட்டு வைத்தல், திருநீரு பூசுதல், பூ வைத்துக் கொள்ளுதல் என சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் மதத்தின் பிரதிபலிப்பு தெரிகின்றது. இது சமுக பிணைப்பை உறுதி செய்கின்றது. 3. நாட்டாரியல்(Folk lore): இங்கு கடவுள் மனிதரால் உருவாக்கப் படுகின்றது. இங்கு இன்னும் அதிகமாக மக்களின் பூர்வீகமான மரபு பின் தொடரப் பட்டு வருகின்றது. இது கிராமங்களை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கின்றது என நான் கருதுகின்றேன்.
5. மதுரை நகரின் தெருக்களைப் பற்றி
மதுரை நகரின் தெருக்களில் மக்களுக்கு இடையேயான சமூகத்தொடர்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனது நாடானா பெல்ஜியத்தில் வீடு, அலுவலகம், ஹோட்டல் ஆகிய இடங்களில் தான் மக்கள் பேசிக் கொள்வர். அங்கு தெரு என்பது வெறும் பயணிக்கின்ற ஒரு இடம் மட்டுமே. இதே நிலை தான் அங்குள்ள கிராமங்களிலும். வீடு, விவசாய நிலம் என மட்டுமே. சாலையில் நடந்து செல்லும் போது கூட பேசிக் கொள்வது அரிது. நான் எனது நாயுடன் நடைப் பயிற்சி செல்லும் போது முதலில் எனது நாய்க்கு தான் ஹாய் சொல்லுவார்கள். அதன் பிறகு வேண்டுமானால் என்னுடன் பேசுவர். ஆனால் இங்கு அப்படியில்லை. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளும் தெருக்களில் தான் நடக்கின்றது. இங்கு மக்களிடையே சமூகத் தொடர்பு அதிகம் உள்ளது. எதிர்படும் மனிதர்களிடம் இயல்பாக என்னால் பேச முடிகின்றது. மேலும் என்னிடம் இருக்கும் கேமரா மூலம் அவர்களை படம் எடுக்கும் போது அவர்களும் என்னுடன் சகஜமாக பேசத் தொடங்குகின்றனர். என்னுடைய நாய்க் குட்டியைப் போன்று இங்கு கேமரா செயல்படுகின்றது.
மேலும் இங்கு தெருக்கள் மிக அழகான ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக கிராமங்களில். மேற்கத்திய நாடுகளில் அழகியலோடு வரையப்படுகின்ற சுவரோவியங்கள் (Graffiti) போன்று இங்கு பெண்கள் வாசலில் கோலம் போடுவது ஒரு கலைத் தன்மையுடயதாக (Street Art) இருக்கின்றது. கோயில் சுவர்களும் அப்படியே. அதில் உள்ள கோடுகள் மிக அழகாக இருக்கின்றது. இப்படியிருக்க இன்னொரு புறம் தெரு என்பது உண்மையில் மாசு பட்டு இருக்கிறதென்றே கருத முடிகின்றது. மிகப் பிரம்மாண்டமான ஃப்ளெக்ஸ் பேனர்கள், சுவர்களில் வரையப்படும் விளம்பரங்கள் என தெரு தனது அடையாளத்தை இழந்து வருகின்றன எனக் கருத முடிகின்றது. எங்கள் நாட்டில் வீட்டு சுவரில் யாராவது அநாவசியமாக விளம்பரம் செய்யும் பொருட்டு பெயிண்ட் ஸ்பிரே கொண்டோ அல்லது பெயிண்ட் மூலமாகவோ ஏதாவது கிறுக்கி மாட்டிக் கொண்டால் அந்த நபர் அதை அழித்து விட்டு மீண்டும் அதே போல் பெயிண்ட் அடித்து தருவதற்கான மொத்த செலவையும் ஏற்க வேண்டும். ஆனால் இங்கு சில நிறுவனங்கள் தங்களை பிரபலப் படுத்திக் கொள்வதற்காக மக்களின் தனிப்பட்ட இடங்களான வீட்டுச் சுவர்கள், பொது வெளிகளைப் பயன்படுத்துவது மக்களின் மீது தங்களது கருத்துகளை திணிப்பதாக இருக்கின்றது.
இங்கு தான் ஒரு பொருளுக்கு அதிகப் படியான விளம்பரங்களைக் காண முடிகின்றது. எங்கள் நாட்டில் நாங்கள் ஒரு பொருளை வாங்கும் போது அந்த பொருளின் விலையை ஒப்பிட்டு பார்த்து, அதன் நிறை குறைகளை அறிந்து அதன் பிறகு பொருட்களை வாங்குவோம். ஆனால் இங்கு அதிகப் படியான விளம்பரங்கள் மக்களை அந்த பொருளை வாங்கச் சொல்லி திணிக்கின்றது. மக்களை எக்ஸ்ப்ளாய்ட் (exploit) செய்கிறது. மக்களின் ரசிக மனோபாவம் மிக உச்சமாக இருக்கின்றது.
6. அதிகமான சமணப் பள்ளிகளுக்குச் சென்று வந்துள்ளீர்கள். சமண சமயம் பற்றியும் தமிழர் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் உங்கள் கருத்து?
சமணமும் பௌத்தமும் சம காலத்தில் உருவான சித்தாந்தங்கள். அவை மதங்கள் அல்ல. அவை வாழ்வை மேம்படுத்துகின்ற தத்துவங்களைக் கொண்டவை. ஆனால் இந்துத்துவம் என்பது மதம். வாய்வழிக் கதைகள் இலக்கியங்களாக புராணங்களாக மாறி கடவுள் என்ற கட்டமைப்பில் உருவானது. பிரம்மா என்ற கடவுளில் இருந்து இந்து மதம் தனது கடவுள்களை விரிவு படுத்திக் கொண்டுள்ளது. திராவிடர்கள் இயற்கையை வழிபட்டவர்கள்.
இந்து மதம் நான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. சமணம் மற்றும் பௌத்த மதங்களை அழித்து வளர்ந்தது. ஆனால் திராவிடர்கள் தங்கள் பண்பாட்டை இன்னும் முற்றிலுமாக இழந்து விடவில்லை. இன்றும் விவசாயிகள் அவற்றை பின்பற்றி வருகின்றனர். கார்த்திகை தீபம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான ஒரு பண்டிகை. அது போல ஹோலிப் பண்டிகையை என்பது மிக நுட்பமாக நோக்கினால் அதன் அடிப்படை திராவிடம் என்பது புரியும். நான்காம் நூற்றாண்டில் இந்து மதம் எல்லா ஆவணங்களையும் அழித்தது. ஆனால் சமணர்கள் தங்களது ஆவணங்களைப் பாதுகாத்து வந்துள்ளனர். அதை இன்றும் கூட நூலகத்தில் பாதுகாத்து வருகின்றனர் சமணர்கள்.
7. ஜல்லிக்கட்டு குறித்த உங்களின் நிலைப்பாடு?
ஜல்லிக்கட்டு விவசாயிகளின் மிகவும் பழமையான விளையாட்டு. இது தமிழக கிராமங்களின் ஆன்மாவினை உள்ளடக்கியுள்ளது. மக்களின் பாரம்பரியமான பண்பாடுதான் அந்த சமூகத்தின் ஆன்மாவாக உள்ளது. ஒரு தேசம் தனது ஆன்மாவினை தொலைத்துவிட்டு எதை நோக்கி பயணிக்கின்றது? பாரம்பரிய பண்பாட்டினை இழந்த தலைமுறையினர் பண்பாட்டு அநாதைகளாக கருதப்படுவர்.
8. PETA போன்ற அமைப்புகள் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை கோரி வழக்குத் தொடர்ந்து போராடி வருகின்றன. இவ்விளையாட்டு எருதுகளை கொடுமைப் படுத்துவதாக கூறிவருகின்றனர். அது குறித்த உங்கள் கருத்து?
அமெரிக்காவைச் சேர்ந்த PETA என்ற மிருகநல அமைப்பு ஜல்லிகட்டுக்கு எதிரான வேலைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. ஜல்லிகட்டுக்கு தடைவாங்க முக்கிய காரணமாக விளங்கியதும் இந்த PETA அமைப்புதான். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான நாய் குட்டிகளையும் பூனைக் குட்டிகளையும் கொல்லும் இந்த PETAவிற்கு ஜல்லிகட்டு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? மாடுகளை மனிதர்கள் வளர்க்கவே கூடாது, பால் அருந்தவே கூடாது மாடுகளை கொண்டு சென்று காடுகளில் விட்டு விட வேண்டும் என்று கூறும் இந்த PETA அமைப்பு நம் விவசாயிகளின் எதிரி. தமிழர்களின் எதிரி.

சல்லிக்கட்டு என்பது காளைகளை வதைக்கும் ஒரு விளையாட்டு அல்ல. சல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிறகுதான் களத்தில் இறக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எருது பிடி விளையாட்டில் நடைபெற்று வந்து சூது காரணாமாக அங்கு இந்த அமைப்பு போராடி தடை வாங்கியது. அதே மனோநிலையில் சல்லிக்கட்டு விளையாட்டையும் PETA (இந்தியா) அமைப்பு அணுகி வருகின்றது. இங்கு சல்லிக்கட்டு என்பது பண்பாட்டின் ஆன்மா என்பதை உணர வேண்டும்.

நன்றி: தின இதழ், 13-14, சனவரி, 2016