பக்கங்கள்

வெள்ளி, 28 ஜூன், 2024

திராவிட மறை

திராவிட மறை



வரலாறு என்பது நமக்கு கற்பிக்கப்பட்ட ஒன்று. உண்மையை அறிய நமக்கு காலயந்திரம் வேண்டும் அந்த காலத்திற்கு சென்று உண்மையை புரிந்து கொள்ள.

இந்தியாவின் வரலாறு என்பது, பௌத்தத்தையும் சமணத்தையும் இந்து மதம் கபளீகரம் செய்த வரலாறு என்று ரொமிலா தாப்பர் சொல்கிறார். கூடுதலாக தமிழ் சைவத்தையும் வைணவத்தையும் இந்து மதம் என ஓர்மைப்படுத்தி உள்ளனர்.


நாலாயிர திவ்ய பிரபந்தம், வைணவ இலக்கியங்களில் பிரதானது. இந்நூல் கிபி 6ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. அந்த காலகட்டம் என்பது சைவமும் வைணவமும் தங்களை அரச மதமாக நிறுவ போர்களையும் கோபுர படுகொலைகளையும், கழுப் படுகொலைகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்த காலகட்டம். இந்த தொகுப்பில் சில பாடல்களில் சமண பௌத்தர்கள் மீதான வன்மங்களை வெளிப்படுத்தும் பாடல்களும் உள்ளது.

திவ்ய பிரபந்தம் என்பது மேலானவற்றை பற்றி பண்ணிசைத்து பாடப்படும் பாடல்களின் தொகுப்பு என்றுபொருள். தொகுக்கும் போது அதன் பாடல்களின் எண்ணிக்கையை வைத்து, நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்பட்டது. இதனை திராவிட மறை என்றும் சொல்கின்றனர்.


கண்ணன் பிறந்ததை கொண்டாடும் நிகழ்வை ஆழ்வார் இவ்வாறு பாடுகிறார். 

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட

கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே


கண்ணன் பிறந்ததை வாசனை எண்ணெய் தெளித்து வண்ணப் (சுண்ணம்)பொடிகள் தூவி பாட்டு பாடி ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர் என்கிறார்.

(திருக்கோட்டியூர், தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.) இதனா‌ல் அங்கு ஏதேனும் மூன்று குவிமாட கட்டிடமோ, தேவலாயமோ இருந்தால் இடித்து விட்டு கோவில் கட்ட சங்கி கூட்டம் ரத யாத்திரை புறப்பட்டு விடுமோ என்று வேறு அச்சம் ஏற்படுகிறது.


கண்ணன் பிறந்ததை பற்றி பாட்டெழுத பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து ஓவியக் கலையில் ஆழ்ந்த பதிமூன்றாவது ஆழ்வார் வான்கோ காலயந்திரம் மூலம் திருக்கோட்டியூர் சென்றார்.


இசை புத்தர் இளையராஜா நம்மை 21ம் நூற்றாண்டுக்கு அழைத்து வருகிறார் 6ம் நூற்றாண்டுக்கு செல்ல.


வண்ண மாடங்கள் சூழ்ந்த திருக்கோட்டியூருக்கு.


பக்தி என்பது மனிதனை செம்மை படுத்த வேண்டும். மிருகமாக்கிடக் கூடாது.

ஆழ்ந்து அணுக வேண்டியது பக்தி.

ஆள்வோர் மக்களை அடிபணிய வைப்பதற்காக அல்ல.

புதன், 19 ஜூன், 2024

நவீனத்துவமும் அதன் அதிருப்திகளும்

நவீனத்துவமும் அதன் அதிருப்திகளும்



இத்தாலிய சினிமாவின் முன்னோடி இயக்குனர் மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனி. இவரது படங்கள் பொதுவாக, நவீனத்துவ அழகியலின் துயரங்கள் மற்றும் இருத்தலியல் (existentialism) தொடர்புடைய கதைகளை பேசுகின்றன. 

"நவீனத்துவத்தின் முத்தொகுப்பு மற்றும் அதன் அதிருப்திகளை" உள்ளடக்கிய மூன்று படங்கள் L'Avventura (1960), La Notte (1961) மற்றும் L'Eclisse (1962) ஆகும். இதில் ஒவ்வொரு படத்திலும் கதாப்பாத்திரங்கள் தங்களுடைய சர்ரியலிச சூழ்நிலையுடன் (பசுமையான விடுமுறை பயணம், இரவு விருந்து மற்றும் கவர்ச்சிகரமான நகரசூழல்) தங்கள் பேராசைகளால் உச்ச அதிருப்தியில் தடுமாறுகின்றன. இது தான் கதைக்களம். 


இரண்டு உலகப்போர்களால், இத்தாலி நாட்டு மக்கள், நிச்சயமற்ற தன்மை (uncertainty) மற்றும் அவநம்பிக்கையான சூழலில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். எந்த நோக்கமும் இல்லாமல், கதாபாத்திரங்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிருப்தியுடன் நகர்கின்றன. 

நவீனத்துவவாதியான அன்டோனியோனி, நவீன அமைப்பில் கெட்டிதட்டிப் போன பழைய அறநெறியைப் பிரித்து, எல்லா வடிவங்களிலும் அதை நிராகரித்துள்ளார். இயந்திரமயமாக்கலும் தொழில்நுட்பமும் பாலுணர்வின் அடிப்படையில் கூட நமது பண்பாட்டு எல்லைகளை உடைத்துவிட்டது என்ற மார்க்சிய சித்தாந்தத்துடன் இந்த முத்தொகுப்பு உடன்படுகிறது. பழங்கால அடக்குமுறையின் மீது ஒருவித நவீன ஒளியை பாய்ச்சுகிறார். 

சமகால வாழ் முறைகள் குறிப்பாக பாலியல் அரசியலில் ஈடுபாடு கொண்டவையாக உள்ளது. காலம்காலமாக, மன-பாலியல் தூண்டுதல்கள் குற்ற உணர்வு மற்றும் அவநம்பிக்கையால் தடுக்கப்பட்டு வருகின்றன. 

நவீனத்துவம் நுகர்வோர் சிற்றின்பத்தை (consumer erotism) ஆதரிக்கிறது என்று அன்டோனியோனி குறிப்பிடுகிறார். இன்று Am in boredom, so jump into dating என சொல்வது போல அக்கால கட்டத்தில் மனிதர்களிடையே உருவான விரக்தி / தனிமை, ஒரு காதலுறவிற்கு செல்ல தூண்டியது. 

இவரது முத்தொகுப்பில் அங்கு மக்களிடையே இருந்த ஏக்க உணர்வை சிறப்பாக கையாண்டுள்ளார். மேலும், தொழில்துறைக்கு பிந்தைய அதி-முதலாளித்துவ சூழலில், மக்களும் ஒருவருடைய உறவுகளும் செலவழிக்கக்கூடியவை மற்றும் மாற்றத்தக்கவை. 

மனித வாழ்வின் சரடுகளில் அவநம்பிக்கையுற்ற, பெண்கள் காதலற்ற விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் அவர்கள் முன்பு இருந்ததைப் போலவே அதிருப்தி நிலைக்கே மீண்டும் தள்ளப்படுகின்றனர். 


அன்டோனியோனியின் இந்த முத்தொகுப்பு நவீனத்துவத்தின் சோகத்தை, சமூக அந்நியப்படுத்தல் (communal alienation) மற்றும் மக்களின் உணர்வுகளின் பயனற்ற தன்மையை தொடர்புபடுத்துகிறது.

புதன், 12 ஜூன், 2024

நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே


The most beautiful sea

hasn't been crossed yet.

The most beautiful child

hasn't grown up yet.

Our most beautiful days

we haven't seen yet.

And the most beautiful words I wanted to tell you

I haven't said yet...

- Nazim Hikmet


மிக அழகான கடலை

இன்னும் யாரும் கடந்ததில்லை

மிக அழகான குழந்தை

இன்னும் வளர்ந்திடவில்லை.

நம்முடைய மிக அழகான நாட்களை

நாம் இன்னும் கண்டிரவில்லை.

நான் உன்னிடம் சொல்ல விரும்பிய

மிக அழகான சொல்லை

இன்னும் நான் சொல்லவில்லை.


- நஸிம் ஹிக்மெத் (தமிழில்: பாரதி ஆ.ரா)

துருக்கிய கவிஞர்

ஞாயிறு, 9 ஜூன், 2024

கானல் நதி

Hopeless Delulu 🌻🌜 


ஒன்றாகவே பயணிக்கிறோம்

அதனால் நாம் ஒன்றல்ல

நீ பயணி

நான் பரிசல்காரன்

நீ கடந்து செல்ல வேண்டியது

இந்த நதி

நான் கிடந்து உழல வேண்டியது

என் கானல் நதி

கரை சேர்ந்த பிறகு

யாருமற்ற பரிசலின் வெறுமையை

இந்த பிறை இரவில் பார்ப்பது

அவ்வளவு வெம்மையாக உள்ளது

கன மழை பெய்து

கானல் நதியின் மட்டம் உயருகிறது

பயணி இல்லாமலும்.

இந்த நதியில்

இந்த பிறையும் 🌙

பரிசலும்

தனியே மிதந்து கொண்டிருக்கிறது

கானல் நதியில் நான் தத்தளிப்பதைப் போல.


- பாரதி ஆ.ரா

வியாழன், 6 ஜூன், 2024

மௌனராகம்

(Love in Silence) 



உன் மௌனங்களை கோர்த்து

பண்ணிசைத்தேன்

முகாரி* இராகத்தில் இசைத்தது

என் ஏக்கங்களும் தாபங்களும்


உன் இன்மையை நிறைத்து

யாழ் மீட்டினேன்

ஹரஹரப்பிரியா** இராகத்தில்

பூங்காற்று திரும்பி

சுக ராகம் சோகம் என்றது. 


உன் புறக்கணிப்பை மையிட்டு

மெட்டெழுதினேன்

சாதாரிப் பண்ணில்***

நின்னைச் சரணடைந்தது

என் கனவில்


உன் இன்ஸ்டா ஸ்டோரீஸ் எல்லாம் சேர்த்து

ரீல்ஸ் ஒன்றை ரீமிக்ஸ் செய்தேன்

இதுவரை வெளியான

எல்லா சோகப்பாடல்களையும்

மெடா பரிந்துரைக்கின்றது.


ஆரோகணமும்**** அல்காரிதமும்

மெடா உலகில் சோக இசையை

தேடிக் கண்டுபிடித்து கொட்டியது.


கடலில் முத்தெடுப்பதை போல

நான் இளையராஜாவின் பாடலை

எடுத்துக் கொண்டேன்.

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

ஆனால் ஒரு கவிதை எழுதக்கூட

வார்த்தையில்லாமல் அமைதியானேன்.


இன்றும் நான் உன்னைப்பற்றி

எதுவும் எழுதப் போவதில்லை 


- பாரதி ஆ.ரா


*முகாரி ராகம் - சோகத்தை வெளிப்படுத்தும் இராகம். 
** ஹரஹரப்பிரியா - பூங்காற்று திரும்புமா பாடல் இந்த ராகத்தில் பாடப்பட்டது.
***சாதாரிப்பண் - காமவர்த்தினி ராகம். பண்டைய தமிழிசை மரபில் சாதாரிப் பண். அமைதியையும் பக்தி உணர்வையும் வெளிப்படுத்தக்கூடியது.. நின்னைச் சரணனைந்தேன் என்ற பாடல் இந்த இராகம்.
****ஆரோகணம் - சப்தஸ்வரங்களின் ஏறுவரிசை


வியாழன், 1 பிப்ரவரி, 2024

மெய் நிகர் காதலர்கள்

Lovers in AI Art world

Rene Magritte

The one who wants or looks for what he desires in painting, will never find what exceeds his preferences.

தான் விரும்புவதை ஓவியத்தில் தேடுபவன், அவனது வரைமீறும் எண்ணங்களை அவன் உணருவதில்லை.


Salvador dali

Have no fear of perfection, you'll never reach it.

நித்திய பரிபூரணம் என்றெண்ணி அஞ்சாதீர்கள். அதை ஒரு போதும் அடைய போவதில்லை. 


Gustav Klimt

I would rather be a superb meteor, every atom of me in magnificent glow, than a sleepy and permanant planet.

நான் ஒரு அற்புதமான நிலைத்த கிரகத்தை போல் அல்லாமல் உன்னதமான ஒரு விண் கல்லாக இருக்கவே விரும்புகிறேன்.


Vincent Van Gogh

Be clearly aware of the stars and infinity on high. Then life seems almost enchanted after all.

நட்சத்திரங்களைப் பற்றியும் முடிவில்லா பேரண்டம் பற்றியும் நன்கு அறிந்திருங்கள். அதன் பிறகு வாழ்க்கை மயக்கமடைந்ததாக தெரியும். 

வெள்ளி, 19 ஜனவரி, 2024

சதுக்கபூதம் vs Monster

Monster (2023)

Directed by Hirokazu Kore-eda

சிலப்பதிகாரத்தில் ஒரு பூதம் பற்றி சொல்லப்பட்டிருக்கும். அதன் பெயர் சதுக்கபூதம். நகரின் நான்கு சாலைகள் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் இந்த பூதம் இருக்கும். பொய் சொல்பவர்களையும் அறம் பிறழ்வோரையும் இப்பூதம் கொன்றுவிடும். பெண்களைப் பற்றி புறங்கூறுவோரை இப்பூதம் கழுத்தைத் திருகி கொன்றுவிடும்.

இப்படத்தின் கதை நிகழும் ஜப்பானின் ஒரு நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்படுகின்றது. அங்கிருந்து சவோரி என்ற தாயின் பார்வையிலிருந்து கதை தொடங்குகின்றது. கணவரைப் பிரிந்து தனியாக தன் மகன் மினாடோ வை வளர்த்து வருகிறார். தன்மகனின் நடவடிகையில் ஏற்படுகின்ற அசாதாரண மாற்றங்கள் பற்றி விசாரிக்கும் போது அவனது ஆசிரியர் தான் அதற்கு காரணமென பள்ளியில் முறையிட்டு அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வைக்கிறார்.

கதை மீண்டும் அந்த நகரின் சதுக்கத்தில் ஏற்படுகின்ற தீ விபத்தில் இருந்து தொடங்குகின்றது. பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஆசிரியரின் பார்வையில் இருந்து தொடங்குகின்றது. அந்த மாணவன் மினாடோ தன் சக மாணவன் யோரி யை தொந்தரவு (bullying) செய்வதாக ஆசிரியர் பார்க்கிறார். அதை பற்றி விசாரிக்கும் போது மற்றவர்களுக்கு அந்த ஆசிரியர் ஏதோ தவறு செய்தது போல தெரிந்தது. அப்பாவியான ஒரு ஆசிரியர் மீது தவறான புகாரால் அவர் வேலையை விட்டு நீக்கப்படுகிறார்.

கதை மீண்டும் அந்த நகரின் சதுக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தொடங்குகின்றது. மாணவன் மினாடோ வின் பார்வையில் இருந்து கதை விரிவடைகிறது. சக மாணவனான யோரி பெண் தன்மை கொண்ட மென்மையானவனாக இருக்கிறான். இதனா‌ல் மற்ற மாணவர்கள் அவனை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். மினாடோவிடம் அவன் நட்பாக பழகுகிறான். மற்ற மாணவர்கள் யோரியை கிண்டல் பண்ணும் போது மினாடோ காப்பாற்றும் பொருட்டு அவனிடம் இருந்து புத்தகத்தை வாங்கும் போது தான் ஆசிரியர் பார்த்து தவறாக நினைக்கிறார்.

மினாடோவும் யோரியும் தங்கள் இருவரின் நட்பை பற்றிய அறிந்து கொள்ளுதலில் பெரிய போராட்டத்தை உணருகின்றனர். அந்த போராட்டத்தில் தங்களுக்கு ஒரு மறு பிறப்பை தேட முயற்சிக்கின்றனர்.

பாழடைந்த இரயில்வே சுரங்கப்பாதையில் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட சுதந்திர வெளியை கண்டடைகின்றனர். 

நம்மால் புரிந்து கொள்ளப்படாத ஒன்றை, இன்னொன்றின் புரிதலின் அடிப்படையில் புரிந்து கொள்ள எண்ணுவதே மோசமான சிந்தனை.

மனிதர்கள் தன்னால் புரிந்து கொள்ள முடியாதவற்றை, தாங்கள் ஏற்கனவே வரையறுத்துள்ள பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவற்றின் மூலம் அதை அறிய முற்படுகின்றனர். இது தான் நம்மில் இருக்கின்ற அரக்க குணம்.

வியாழன், 18 ஜனவரி, 2024

மறத் தமிழச்சிகளும் மானமுள்ள ஆண்களும்: ஏறு தழுவுதல் விளையாட்டு

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்



தமிழர் பண்பாடு என பல ஓர்மைக் கூறுகளை பொதுமைப் படுத்தி பேசி வருகின்றோம். பண்பாடு என்பது அடிப்படையில் ஒரு உயிரின் மீது இன்னொரு உயிர் வைக்கும் அன்புணர்வில் இருந்து தொடங்குகின்றது. மனித நாகரீகம் என்பது இத்தகைய மானுட நேய உணர்வின் வெளிப்பாடு.


வல்லாதிக்கம் ஒரு ஓர்மை கலாச்சாரத்தை நிறுவ முயல்கையில் மக்கள் பண்பாடு என்பது அதனதன் உட்கூறுகளுக்குள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்கின்றது. வல்லாதிக்க சக்திகள் மக்கள் பண்பாட்டை தன் வயப்படுதத்திக் கொள்ள முயல்கின்றன.


இன்னொரு புறம் சாதி உணர்வுடன் சல்லிக்கட்டு விளையாட்டு தொடர்புபடுத்தி பார்க்கப்படுகின்றது.


சில ஊடகங்கள் சல்லிக்கட்டில் காளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றெல்லாம் செய்திகள் வெளியிடுகின்றன.


சல்லிக்கட்டு என்பது சல்லிக் காசுகளுக்காக விளையாடப்படுவது. தங்களின் வீரத்தை வெளிக்காட்டிக் கொள்ள விளையாடுகின்றனர். ஆனால் அந்த வீரம் என்கிற உணர்வு சல்லிக்காசு மதிப்பே உடையது என்றே புரிந்து கொள்ளலாம். வீரம் என்ற உணர்வு அர்த்தமற்றது. முறுக்கு மீசை, அருவா, மடிச்சி கட்டிய வேட்டி. இவையெல்லாம் வீரம் என்று கருதினால் அது சல்லிக்காசுக்கு ஈடாகாது.


ஏறு தழுவுதல் எங்கள் பண்பாடு எனும் பொழுது அதில் எல்லா சாதியினரும் இருக்க வேண்டும். அரசு வேலைக்கு இதெல்லாம் ஒரு தகுதியாக கருதினால் பெண்களுக்காகவும் சல்லிக்கட்டு நடத்தலாம்.


புலியை மறத்தால் விரட்டிய தமிழ் பெண்டிர் இங்குண்டு.


தமிழர் பண்பாட்டில் காவியை பூச நினைத்தாலும் விரட்டி அடிக்க வேண்டும்.

தமிழர் பண்பாடு என பிற்போக்கு தனங்களை போற்றாமல் அவற்றை களைந்து தமிழர் பண்பாட்டை சமத்துவமாக செழுமைப் படுத்தி வளர்வதே தமிழர் பண்பாடு.


யாதும் ஊரே யாவரும் கேளிர்


- பாரதி ஆ.ரா

சனி, 2 டிசம்பர், 2023

சிலுக்கு

Silk screen paintings




Marilyn Monroe & Vijayalakshmi aka Silk Smitha at 36 years old


ஹாலிவுட்டில் ரசிகர்களை தன் ஆளுமையான அழகால் கவர்ந்த மர்லின் மன்றோ அவர்களின் மரணத்தின் போது Pop Art கலைஞரான Andy Warhol அவரை சிறப்பிக்கும் விதமாக விதமாக silk screen painting ல் வரைந்த இந்த ஓவியம் கலை உலகில் பரவலாக வரவேற்கப்பட்டது. பளிச்சிடும் வண்ணங்கள், வெகு மக்களுக்கு பரிட்சையமான உருவங்கள், எளிதில் கவரக்கூடியது, எள்ளல் நகையுடன் என வெகு சன மக்களின் நுகர்வு ரசனையை பிரதிபலிக்கும் கலை இயக்கம். 1950களில் தொடங்கி 1970களின் காலகட்டம் வரை இந்த கலை இயக்கம் பிரசித்து பெற்று இருந்தது.


மர்லின் மன்றோ : தன் அழகால் ஹாலிவுட் திரை உலகை ஆளுமை செய்த நட்சத்திரம். வயது, எடை, உடல் அளவு போன்ற எண் அளவுகள் உங்களை அடிமைப் படுத்துபவை என்றவர். தன் 36 வயதில் மரணமடைந்தார்.


கோலிவுட்டில் தன் அழகால் தமிழ் திரையுலகில் இன்று வரை ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் நடிகை சில்க் ஸ்மிதா. நடிக்க வரவில்லை என்றால் நக்சலைட் ஆக ஆகியிருப்பேன் என சொன்னவர்.

திரை உலகின் சுரண்டலில் பலியான ஒரு நட்சத்திரம்.


மற்ற வீட்டு பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்க ஆசைப்படுகின்றது என்ற எண்ணத்தின் தொகுப்பான வெளிப்பாடுதான் சில்க்.


சில்க் என்றால் இன்றுவரை எல்லாரும் vibe செய்து கொண்டு 🔥 விட்டுக் கொண்டிருக்கும் Millineal, Gen Z தலைமுறையினருக்கு இன்று சில்க் ஒரு vibe material. அவ்வளவே.


எதிர்காலத்தில் எல்லாருமே 15 நிமிடங்கள் பிரபலமாக ஆகுவர் என்று 1960களில் Andy Warhol சொன்னார்.


இன்று எல்லாருமே 15ல் இருந்து 90 விநாடிகள் பிரபலமாக Instagram, YouTube ல் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


மன்றோவும் சில்க் ம் உறைந்து போய் இருக்கிறார்கள்.


- பாரதி ஆ.ரா

செவ்வாய், 25 ஜூலை, 2023

அகந்தை கொண்ட கதை சொல்லி

இயக்குனர் மகேந்திரன் பிறந்த தினம் 

ஜூலை 25

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தனி முத்திரை பதித்த ஒரு இயக்குனர் மகேந்திரன். இன்றைய தலைமுறையினருக்கு தெறி பட வில்லன் என அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவரது இருப்பை சாசனம் போட்டு காட்ட உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் உள்ளன. 

இவர் ஏன் தமிழின் மிக முக்கியமான இயக்குனர்:

சினிமா என்பதை காட்சி ஊடகம் என்ற அளவில் சரியாக புரிந்து கொண்டு சிறந்த கலைப்படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர். 1960களில் கதை, வசனம் எழுதுபவராக தான் தன் திரையுலக வாழ்க்கையை தொடங்குகிறார். தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 1970 களின் பிற்பகுதியில் இயக்குனராக அறிமுகமாகிறார். பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் தனது முதல் படத்திற்கு எழுத்தாளர் உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலை தழுவி படமாக எடுக்கிறார். ரஜினி நடிகனின் மற்றொரு பரிமாணத்தை திரையில் காட்டினார்.

அடுத்த படமான உதிரிப்பூக்கள் மூலம் காட்சி மொழியில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கினார். அந்த பனத்தின் மொத்த வசனத்தையும் இரு பக்கத்தில் எழுதிவிட முடியும். அந்த அளவுக்கு காட்சி மொழியில் சிறந்த கலைப்படத்தை உருவாக்கி அதை வெள்ளி விழா படமாக வெற்றி பெறவும் செய்தார்.

இவர் கதைகளில் மனிதனின் அக உணர்வுகளையும் அதன் குணாதிசயத்தையும் நுட்பமாக காட்சி படுத்தி இருப்பார்.

முள்ளும் மலரும் படத்தில் தான் என்ற அகங்காரம் பிடித்த ஒரு அண்ணனின் கதையை சொல்லி இருப்பார். அந்த கதையின் நாயகன் இறுதிக் காட்சியில் தான் தோற்பதைக் கூட கர்வமாக நான் உனக்கு வெற்றியைத் தருகிறேன் என்பார்.

உதிரிப்பூக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரம் இறுதியில் தான் ஊராரால் சாவுக்கு தயாராகும் போது, "நான் பண்ண தப்புலயே மோசமான தப்பு உங்களையும் என்ன மாதிரி மாத்தினது தான்" என்று சொல்வான்.

அகந்தை கொண்ட இரு கதாபாத்திரங்களை வைத்து தமிழின் சிறந்த படங்களை அளித்திருப்பார்.

வெள்ளி, 21 அக்டோபர், 2022

செந்தூர மலரொளியில்...

இம்மாலைப் பொழுதில்

ஒரு செந்தூர மலர் மீது
இரவின் நீலம்
ஆழமாக படரத் தொடங்கியது.
மகரந்த சாலையில் உள்ள
விளக்கொளி,
வீதியில் பச்சையம் சூட்டியது.

மூப்பில்லா யாழிசை, காற்றில்
மென்மையாக வருடிச்செல்கிறது.
மஞ்சள் ஒளி பூசிய ஓர் அறையில்
என் பக்கம் தலை சாய்த்து
அவள் அருகே வந்தாள்.

அகல விரிந்த விழிகளும்
வெம்மை கொண்ட கரங்களும்
வெட்கம் நாணத்தை விரட்டியது.
இந்த அந்தி இன்னும் நீலமாக ஆனது.
தலை சாய்ந்து என் அருகே வந்தாள்.
கண்ணாடி முன் ஒன்றாய்
செல்ஃபி எடுத்துக் கொண்டோம்.
செந்தூர மலரின் ஒளியில்
இரவு நீண்டது... 

ஜேம்ஸ் ஜாய்ஸ் (1882-1941) ஐரீஷ் கவிஞர்
தமிழில்: பாரதி ஆ.ரா

The Twilight turns from Amethyst 💚
by: James Joyce (1882-1941)

The twilight turns from amethyst
To deep and deeper blue,
The lamp fills with a pale green glow
The trees of the avenue.

The old piano plays an air,
Sedate and slow and gay;
She bends upon the yellow keys,
Her head inclines this way.

Shy thoughts and grave wide eyes and hands
That wander as they list--
The twilight turns to darker blue
With lights of amethyst. 

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

பிரிவாற்றிப் பின் இருந்து வாழ்வார்

நட்சத்திரம் 10 ⭐



அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

- திருவள்ளுவர் 

திருக்குறள் 1160


பிரிவு என்னும் கொடிய நோய் பீடித்து இருந்த போதும், அதை தாங்கிக் கொண்டு காத்திருந்து பின்னர் மீண்டும் சேர்ந்து வாழும் பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால் நான் இந்த பிரிவில் என்னாகுவேன் என்று தெரியவில்லையே???

கோவிட் தொற்று காலத்தில் ஏற்பட்ட பல காதல் பிரிவுகளுக்கு பின்னர் மீண்டு சில பலர் பிரிவினை தாங்கிக் கொண்டு இன்று சேர்ந்து வாழ்கின்றனர்.

கோவிட் தொற்றைவிட மோசமானது சனாதன வைரஸ். கோவிட் தொட்டால் பரவி விடக்கூடியது. சனாதனம் தொடக்கூடாது என பரப்பப்பட்ட நச்சுக் கிருமி. சமூக இடைவெளியை ஏற்படுத்தி காதலை பிரிப்பதில் கோவிட்டுக்கும் கோவிலுக்கும் சனாதனத்திற்கும் பாகுபாடு இல்லை.

குணப்படுத்துவதற்கு அரிய நோயை குணப்படுத்தி உயிர் வாழ்பவரும், தாங்க முடியாத பிரிவினைத் தாங்கிக் கொண்டு பின் பிறகு சேர்ந்து வாழும் பலர் உள்ளனர். ஆனால் நானோ???


- பாரதி ஆ.ரா

ஆசை வந்து ஆட்டுவித்த பாவம்

நட்சத்திரம் 9 🌟


நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,

பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை நெஞ்சே! நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

- ஔவையார் (குறுந்தொகை 29)

தலைவன் தன் காதலிக்கு மெசேஜை தட்டிவிடுகிறான். இன்று இரவு வழக்கமாய் சந்திக்கும் cafeல் சந்திக்கலாமா என்று. கொஞ்சம் நேரம் கழித்து தாமதமாக பதில் வருகிறது. இந்த மாதம் முழுக்க officeல் வேலை அதிகம். அதனால late night meet பண்ணுறதுலாம் கொஞ்சம் கஷ்டம் தான். I will ping you later என சொல்லிவிட்டு offline போனாள் தலைவி. 

ஏதாவது நல்ல செய்தி கிடைக்கும்னு எதிர்பார்த்திருந்த தலைவனுக்கு இந்த செய்தி சோகமாய் ஆனது. சுடப்படாத பச்சை மண்பாத்திரத்தில் மழை பொழிந்து கரைவது போல மனம் வாடி வருந்தினான் தலைவன். Hopeless romantic ல இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. கிடைக்காதுனு தெரிஞ்சி அது மேல ஆசைப்படுற துயரம் ரொம்ப கொடுமை.

பெரிய மர உச்சியில் உள்ள தாய் மந்திக் குரங்கு தன் குட்டி மகவைத் தழுவுவது போல, என் சோகத்தை கேட்க ஒரு நபர் இருந்தால் நல்லா இருக்கும் என்று தலைவன் புலம்புகிறான்.


நான் பொலம்ப வந்து நிக்குறேன்

என் Rant அ கொஞ்சம் கேளு. 

மனம் குழம்பி வந்து நிக்குறேன்

என் Rant அ கொஞ்சம் கேளு.


ஔவையார் also deals the same chapter நண்பா.

//என் Rant அ கொஞ்சம் கேளு//

அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே


பெரும் சோகங்கள் எல்லாவற்றையும் கேட்க ஒரு காதுகள் இருந்தால் போதும். எல்லா கவலைகளும் கரைந்துவிடும்.

Onlineல் over sharing செய்து emotionally unavailable ஆகும் பெரும்பாலன தலைவன்/தலைவி களுக்கு ஆதுரமாய் எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்கும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.


- பாரதி ஆ.ரா