நன்றே காதலர் சென்ற ஆறே
🏞️🌳🍀🛣️
முல்லை நிலத்திலிருந்த வந்த ஒரு நபரை இன்று காலை சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். பார்ப்பதற்கு தொன்மையான ஒரு Wildlife photographer போல இருந்தார். அவரிடம் நெருங்கி பேச்சுக் கொடுத்தேன்.
நான் சங்ககாலத்தில் பிறந்து வளர்ந்தவன். மலர்கள் சொரியும் புறவின்(காடு) நாட்டு கிழான் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.
"மனம் நயந்த காதலியை தழுவிக் கொண்டு
பாணனின் நயம்படு இசையின் யாத்த பயன் தெரிந்து
இன்புற்று புணர்ச்சி நுகரும் மென்புல வைப்பின் நாட்டு கிழான் நான்"
(நடுக்காட்டில் தனிமை வந்ததே என மனசுக்கு பிடித்த காதலியோடு, பிடித்த புத்தகம், திரைப்படம், பாடல் என ஒன்றாக கேட்டு இன்புற்று நிறைய பேசி, புணர்ந்து இன்பம் கொள்ளும் மலைக் காட்டைச் சேர்ந்த தலைவன் நான்)
"புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள
கோட்டவும் கொடியவும் பூ பல பழுனி
மெல் இயல் அரிவை கண்டிடும் மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே"
(பறவைகளும் மான் கூட்டங்களும், மலர் சோலைகளும் என இயற்கை மணம் கமழும் காட்டில் பிறந்தவன் நான்)
என தன் ஊரைப் பற்றியும் காதல் வாழ்வைப் பற்றியும் படம்பிடித்தது போல பேசினார்.
அவர் எழுத்தில் இயற்கையை படம்பிடிக்கும் கானுயிர் புகைப்படக் கலைஞர் அல்லது பாணர் அல்லது கவிஞர் என புரிந்தது. அவர் பெயரைக் கேட்டேன். பேயனார் என்றார்.
அவர் ஊரைப் பற்றி அவர் சொன்னது மிக அழகாக இருந்தது. அவரது புகைப்படங்களை, படைப்புகளை பார்க்கனும்னு ஆர்வம் தொற்றிக்கொண்டது. பேச்சு கொடுத்தேன்.
அவர் ஏதோ பரபரப்பில் இருந்ததை உணர முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தலைவியை காண சென்று கொண்டிருப்பதாக சொன்னார்.
என் எழுத்துகளை peyanaar_mullaithinai என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாருங்கள். எங்கள் கிராமத்தின் அழகும் செழுமையும் புரியும் என இயர்பாடை மாட்டிக் கொண்டார்.
"காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்"
"பொன்னி நதி பார்க்கனுமே"
மண்ணே உன் மார்பில் கிடக்க
என இசையில் லயித்துக் கொண்டிருந்தார்.
என் ஊரில் என் தலைவியோடு இன்புற்று வாழ்ந்தவன். பொருள் ஈட்டுவதற்காக வேலை தேடி என் தலைவியை பிரிந்து இங்கு வந்தேன். நெடுங்காலமாகி விட்டது. கொஞ்சம் காசு சேர்த்து விட்டு என் தலைவியை பார்க்க போகிறேன். தேரை விரைந்து செலுத்த வலம்பெறுநன் தேரோட்டி யாரையும் காணவில்லை, அரசு விரைவுப் பேருந்துகள் வேறு கூட்டமாக இருக்கிறது. இப்போது எப்படி நான் சேலம் சேர்வது என கேட்டார்.
இங்கிருந்து மூன்று மணிநேரத்தில் செல்ல எண்வழிச்சாலைகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றேன்.
இப்போது காலம் பொ.ஆ.பி. 3018. லகுட பாண்டிகளின் அடிமை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
காதலியைப் பார்க்க செல்லும் பேயனாரைக் கூட்டிக் கொண்டு சேலம் சென்று கொண்டிருக்கிறேன். அவர் தலைவியைப் பிரிந்து வந்த போது தான் கடந்து வந்த காட்டுவழிப் பாதையின் அழகை புறவணிப் பத்து என தான் எடுத்த போட்டோ கவிதை ஆல்பத்தை பற்றி சொன்னார்.
நன்றே! காதலர் சென்ற ஆறே என தலைவிக்கு ஆறுதல் சொன்ன வரிகள் அவை. தலைவன் சென்ற பாதை மிக அழகானது, பாதுகாப்பானது, இயற்கை எழில் கொஞ்சம் அழகு மிக்கது, ஆதலால் தலைவியே வருந்தாதே என சொன்ன பாடல்கள்.
புறவணிப் பத்தில் அவர் காட்சி படுத்திய பத்து புகைப்படங்கள்...
(1) அழகிய மலை உச்சியில், நீலமணி போன்ற தோற்றமுடைய மயில் தோகை விரித்து நடனமாடுகின்றது.
(2) தங்க நிறத்தில் கொன்றை மலர்கள் சூழ, திருமண வீட்டில் நுழைவது போல இருமருங்கிலும் மரங்கள் சூழ வரவேற்கிறது இந்த சாலை.
(3) இந்த பச்சைப்பசேலென இருக்க, பெய்த மழை நீரை சேமிக்க கானங்கள்(நீர்நிலை) உள்ளது
(4) மழை நின்ற பிறகு சாலையில் ஒரு பெண்மான் தன் குட்டிகளோடு இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கிறது.
(5) அடுத்த புகைப்படங்கள் ஒரு Flora photography போல, சங்கர் படத்தில் வருவதைப்போல நெய்தல் மலர்களும், கொன்றைப் பூக்களும் பூத்துக் குலுங்கும் காட்சி, கொன்றையோடு மலர்ந்த குருந்த மரங்கள், ஆலங்கட்டி மழைபெய்து வெண்ணிறத்தில் மலர்ந்த முல்லை மலர்கள், பச்சைப்பசேலென புதரகளில் மலர்ந்த பூக்கள், மழை காலத்தில் ஏற்றப்பட்ட சுடர் போன்ற தோன்றி மலர்களும் தளவ மலர்களும் பூத்துக்குலுங்கும் காட்சி என புகைப்படங்கள் கண்களை கவருகின்றன.
(6) குருந்தம் மலர்கள் சூடிய கோவலர்களின், குளிர்ச்சி மிகுந்த குடியிருப்புகள் என அவர் வந்த வழியினை "நன்றே காதலர் சென்ற ஆறே" என பாடினார்.
ஆனால் இன்று (3018) அவர் செல்லும் சாலையோ மலைகளைக் குடைந்து, மரங்களை வேரோடு வெட்டி சாய்த்து, அந்த மலைத்தொடரில் இருந்த மயில்கள், மான்கள், பறவையினங்கள் எல்லாம் என்ன ஆயின என தெரியவில்லை. விவசாய நிலங்கள் அழிந்தன. துயரம் தாளாத விவசாயிகள் பூச்சி மருந்தினைக் குடித்தனர். ஒரு இளம் பெண் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். எங்களைக் கொன்றுவிடுங்கள் என குடும்பத்தோடு மண்ணெண்ணை கேனோடு முறையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து கேட்ட மூதாட்டி அரசதுரோகி என கைது செய்யப்படுகின்றார். நீதி கேட்டு நடைபயணம் மேற்கொள்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஏழுக்கு அடுத்து என்ன என்று கேட்டு யாராவது எட்டு என பதில் சொன்னால் அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இவை தான் 3018 ல் காணும் காட்சி.
இந்த எட்டு வழிச்சாலையில் கொஞ்சம் மனம் வாடியே வருகிறார்.
அவர் பேஸ்புக் ல் On this Day memoriesல அவர் எழுதிய பதிவு நோட்டிபிகேஷனில் காட்ட அப்பாடலை reshare செய்கிறார்.
07 ஆகஸ்ட் 2018 அன்று பேயனார் தன் தலைவிக்கு எழுதுகிறார்.
உன்னைக் காண வந்து கொண்டிருக்கிறேன்.
இப்போது வருகின்ற இவ்வழி நான் கடந்து வந்த முல்லைநிலப்பாதை போல இல்லை. பாலை நிலத்தின் கொடிய வழியாக உள்ளது. வளரச்சி என இவர்கள் போட்ட சாலை அழிவின் இன்பினிட்டி பாதையாக உள்ளது.
நன்றா? இக்காதலன் திரும்பும் வழி...
- பாரதி ஆ.ரா
(2018 ல் எழுதப்பட்ட பதிவு)