நட்சத்திரம் 6 🌟
நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
- கபிலர்
பிரிட்டன் நாட்டில் இன்று சூரியன் உதித்தது. அங்கு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் ஒருவர், தன் இணையை பிரிந்து கடலுக்கு செல்கிறார். அவர் சென்ற கப்பல் விபத்து காரணமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொலை தொடர்பு துண்டிக்கப்படுகிறது. கரையில் அவருக்காக காத்திருக்கும் அவரது இணை, அவரது பிரிவில் அல்லலுறுகிறார். எழுத்தாளரான அவர், வழக்கமாக அவர்கள் சந்தித்துக் கொள்ளும் cafe ல் நாள் முழுக்க அமர்ந்து இருக்கிறார். அவரை தொடர்பு கொள்ள அவர் பணியாற்றிய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தொடர்ந்து call பண்ணி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவரோட சென்ற ஒரு நபர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளதாக சொல்கிறார்கள். அவர் மீண்டு வருவது சிரமம் தான் என்று சொல்கிறார்.
சங்ககாலத்தின் இரவில் நிலவு சுடர் விட்டு எரிகிறது. கபிலர் ஒரு பெண்ணைப் பற்றி பாடுகிறார்.
பிரிட்டன் தலைவிக்கு சங்ககாலத்து காதலி/தலைவி பதில் அளிக்கிறாள். மணம் செய்து கொள்ளாமல் உடன்போகி (dating) கொண்டிருக்கும் காதலர்கள் அவர்கள். அவளிடம் அவள் காதலன் உனை விட்டு பிரியப் போவதாக அவரது தோழி கூறுகிறாள்.
என் காதலன் எப்போதும் அவன் சொன்ன வாக்கை காப்பாற்றுபவன். எந்த சூழ்நிலையிலும் இனிமையானவன். என் தோளை விட்டு பிரிய மனமில்லாதவன். அது மட்டுமல்ல அவன் என்னை அளவு கடந்து காதலிக்கிறான். அவனைவிட அளவுகடந்து நான் அவனை காதலிப்பதை அவனும் நன்கு அறிவான். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது என்பதை அவனும் நன்கு அறிவான். இந்த உலகிற்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு அவன் எனக்கு முக்கியம் என்பதை அறிவான். ஆதலால் அவன் என்னை விட்டு பிரியமாட்டான் என கண்ணீரை துடைத்துக் கொள்கிறாள்.
நீர் வாழ் தாவரங்களில் சிறந்த தாவரமான தாமரை போன்ற ஆண். நிலத்தில் வளரும் தாவரங்களில் சிறந்த சந்தன மரம் போன்ற பெண்.
அந்த தாமரை மலரிலிந்து, சந்தன மரத்தில் கட்டப்பட்ட தேன் கூட்டைப் போன்று அவ்வளவு இனிதானது அவர்களது காதல்.
பிரிட்டன் நாட்டு சூரியன் மீண்டும் உதித்தது.
நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் மீட்கப்பட்டார்.
பிரிந்திருந்த காதல் இணை மீண்டும் சேர்ந்தார்கள். ஆனால் அந்த ஆராய்ச்சியாளர் ஒரு நீர்வாழ் உயிரி போல தான் மீண்டு வந்தார். அவரின் மரணம் அவரது சுவாசத்தில் கலந்துவிட்டது. நிலத்தில் இருந்த அவரது எழுத்தாளரான காதலி தான் சுவாசிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
காதலில் சத்தியங்கள் தவறுவதில்லை.
காதலர்கள் சொன்ன சொல்லில் இருந்து மாறுவதில்லை.
நின்ற சொல்லர். நீடு தோறு இனியர்
என்றும் என் தோளைப் பிரியா தவர்.
- பாரதி ஆ.ரா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக