நட்சத்திரம் 7 🌻💛
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.
- நற்றிணை 10
காதல் என்பது நெடும்பயணத்தின் வழித்துணை போன்றது. அது தோன்றுவதற்கு அற்பமான காரணங்கள் இருந்தாலும் தொடர்வதற்கு புரிதலும் மரியாதையும் தான் தேவைப்படுகின்றது. தன் இணையிடம் சொல்லுகின்ற உறுதியளிக்கும் வார்த்தைகளும் அந்த சொல்லை காப்பாற்றும் செயலும் முக்கியமானது.
காதல் தோன்றுவதற்கான அற்ப காரணங்களில் ஒன்று, உடல் அழகின் மீதான ஈர்ப்பு.
காதல் இந்த உடலின் அழகை வைத்து தான் வருகிறதென்றால் இந்த அழகு ஒரு நாள் அழிந்து போய்விடும். அப்போது இந்த காதல் என்னவாகும் என்ற பயம் எல்லா காலத்திலும் இருக்கின்றது.
தன் காதலியுடன் Dating சென்ற தலைவனைப் பார்த்து, தலைவியின் தோழி தலைவனிடம் சில அறிவுரைகள் கொடுக்கிறார்.
இவளது மேனி அழகு ஒரு நாள், வடிவிழந்து போகலாம். கூந்தல் நரைத்து, சருமம் சுருங்கி வயதான காலத்திலும் இவளை விட்டு நீங்கும் எண்ணம் கொல்லாதே. அவளுடன் காலம் முழுதும் இருப்பேன் என்று சொன்ன வார்த்தையை காலம் முழுக்க காப்பாற்று என்கிறாள். அந்த தோழி என்பது காதல் நெறியின் ஒரு உருவகமாக கூட கருதலாம்.
//கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி//
//கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளைக் காண்போம்//
இவ்வுலகின் ஆதாரமே காதல்.
- பாரதி ஆ.ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக