பக்கங்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

பிரிவாற்றிப் பின் இருந்து வாழ்வார்

நட்சத்திரம் 10 ⭐



அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

- திருவள்ளுவர் 

திருக்குறள் 1160


பிரிவு என்னும் கொடிய நோய் பீடித்து இருந்த போதும், அதை தாங்கிக் கொண்டு காத்திருந்து பின்னர் மீண்டும் சேர்ந்து வாழும் பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால் நான் இந்த பிரிவில் என்னாகுவேன் என்று தெரியவில்லையே???

கோவிட் தொற்று காலத்தில் ஏற்பட்ட பல காதல் பிரிவுகளுக்கு பின்னர் மீண்டு சில பலர் பிரிவினை தாங்கிக் கொண்டு இன்று சேர்ந்து வாழ்கின்றனர்.

கோவிட் தொற்றைவிட மோசமானது சனாதன வைரஸ். கோவிட் தொட்டால் பரவி விடக்கூடியது. சனாதனம் தொடக்கூடாது என பரப்பப்பட்ட நச்சுக் கிருமி. சமூக இடைவெளியை ஏற்படுத்தி காதலை பிரிப்பதில் கோவிட்டுக்கும் கோவிலுக்கும் சனாதனத்திற்கும் பாகுபாடு இல்லை.

குணப்படுத்துவதற்கு அரிய நோயை குணப்படுத்தி உயிர் வாழ்பவரும், தாங்க முடியாத பிரிவினைத் தாங்கிக் கொண்டு பின் பிறகு சேர்ந்து வாழும் பலர் உள்ளனர். ஆனால் நானோ???


- பாரதி ஆ.ரா

ஆசை வந்து ஆட்டுவித்த பாவம்

நட்சத்திரம் 9 🌟


நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,

பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை நெஞ்சே! நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

- ஔவையார் (குறுந்தொகை 29)

தலைவன் தன் காதலிக்கு மெசேஜை தட்டிவிடுகிறான். இன்று இரவு வழக்கமாய் சந்திக்கும் cafeல் சந்திக்கலாமா என்று. கொஞ்சம் நேரம் கழித்து தாமதமாக பதில் வருகிறது. இந்த மாதம் முழுக்க officeல் வேலை அதிகம். அதனால late night meet பண்ணுறதுலாம் கொஞ்சம் கஷ்டம் தான். I will ping you later என சொல்லிவிட்டு offline போனாள் தலைவி. 

ஏதாவது நல்ல செய்தி கிடைக்கும்னு எதிர்பார்த்திருந்த தலைவனுக்கு இந்த செய்தி சோகமாய் ஆனது. சுடப்படாத பச்சை மண்பாத்திரத்தில் மழை பொழிந்து கரைவது போல மனம் வாடி வருந்தினான் தலைவன். Hopeless romantic ல இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. கிடைக்காதுனு தெரிஞ்சி அது மேல ஆசைப்படுற துயரம் ரொம்ப கொடுமை.

பெரிய மர உச்சியில் உள்ள தாய் மந்திக் குரங்கு தன் குட்டி மகவைத் தழுவுவது போல, என் சோகத்தை கேட்க ஒரு நபர் இருந்தால் நல்லா இருக்கும் என்று தலைவன் புலம்புகிறான்.


நான் பொலம்ப வந்து நிக்குறேன்

என் Rant அ கொஞ்சம் கேளு. 

மனம் குழம்பி வந்து நிக்குறேன்

என் Rant அ கொஞ்சம் கேளு.


ஔவையார் also deals the same chapter நண்பா.

//என் Rant அ கொஞ்சம் கேளு//

அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே


பெரும் சோகங்கள் எல்லாவற்றையும் கேட்க ஒரு காதுகள் இருந்தால் போதும். எல்லா கவலைகளும் கரைந்துவிடும்.

Onlineல் over sharing செய்து emotionally unavailable ஆகும் பெரும்பாலன தலைவன்/தலைவி களுக்கு ஆதுரமாய் எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்கும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.


- பாரதி ஆ.ரா

முத்த நிவாரணம் எனக்கில்லையா

நட்சத்திரம் 8 🌻💛



பிரியாத வரம் வேண்டும்

அன்பில் மடந்தை 💖🌞


அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.

குறுந்தொகை 20

✍🏼 கோப்பெருஞ்சோழன்


பிரிஞ்சி போனா வருத்தப்படுவாங்கலேனு கொஞ்சம்கூட யோசிக்காம தன்னுடைய துணையைப் பிரிந்து பணி நிமித்தமாக பிரிந்து செல்பவர் திடமான அறிவுடையவர் அப்படீனு சொல்லிக்கிறாங்க. இருந்துட்டு போகட்டும். அந்த பிரிவைத் தாங்க முடியாமல் வருத்தப்படும் நான் பைத்தியமாகவே இருந்து கொள்கிறேன் என சங்க காலத்தில் ஒருவர் புலம்புகிறார்.

இந்த பாடலை எழுதியவர் கோப்பெருஞ்சோழன். சோழ மன்னன் எழுதிய பாடல் இது.

//காதல் பஞ்சம் வந்து நொந்தேனே

முத்த நிவாரணம் எனக்கில்லையா//

என வைரமுத்து ஒரு பிரிவின் தாபத்தை எழுதுகிறார். 

பிரியமும் பிரிவும் தவிர்க்க இயலாதது. ஆனால் அதை தாங்கிக்கொள்ளத்தான் பலரால் முடிவதில்லை.

உரவோர் - வலிமையான அறிவுடையவர்

மடந்தை - அறியாமையில் இருப்பவர்.

அன்பில் மடந்தையாக இருப்பதும் தவறில்லை. 


- பாரதி ஆ.ரா

நீத்தல் ஓம்புமதி

நட்சத்திரம் 7 🌻💛



அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

- நற்றிணை 10


காதல் என்பது நெடும்பயணத்தின் வழித்துணை போன்றது. அது தோன்றுவதற்கு அற்பமான காரணங்கள் இருந்தாலும் தொடர்வதற்கு புரிதலும் மரியாதையும் தான் தேவைப்படுகின்றது. தன் இணையிடம் சொல்லுகின்ற உறுதியளிக்கும் வார்த்தைகளும் அந்த சொல்லை காப்பாற்றும் செயலும் முக்கியமானது.

காதல் தோன்றுவதற்கான அற்ப காரணங்களில் ஒன்று, உடல் அழகின் மீதான ஈர்ப்பு.

காதல் இந்த உடலின் அழகை வைத்து தான் வருகிறதென்றால் இந்த அழகு ஒரு நாள் அழிந்து போய்விடும். அப்போது இந்த காதல் என்னவாகும் என்ற பயம் எல்லா காலத்திலும் இருக்கின்றது.

தன் காதலியுடன் Dating சென்ற தலைவனைப் பார்த்து, தலைவியின் தோழி தலைவனிடம் சில அறிவுரைகள் கொடுக்கிறார்.

இவளது மேனி அழகு ஒரு நாள், வடிவிழந்து போகலாம். கூந்தல் நரைத்து, சருமம் சுருங்கி வயதான காலத்திலும் இவளை விட்டு நீங்கும் எண்ணம் கொல்லாதே. அவளுடன் காலம் முழுதும் இருப்பேன் என்று சொன்ன வார்த்தையை காலம் முழுக்க காப்பாற்று என்கிறாள். அந்த தோழி என்பது காதல் நெறியின் ஒரு உருவகமாக கூட கருதலாம்.


//கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி

கடல் உள்ள போறவன் நான் இல்லடி

கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி

கரை கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

என் உயிரோட ஆதாரம் நீதானடி//


//கன்னம் சுருங்கிட நீயும்

மீசை நரைத்திட நானும்

வாழ்வின் கரைகளைக் காண்போம்//


இவ்வுலகின் ஆதாரமே காதல்.


- பாரதி ஆ.ரா

என்றும் என் தோள் பிரியா தவர்

நட்சத்திரம் 6 🌟



நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;

- கபிலர்


பிரிட்டன் நாட்டில் இன்று சூரியன் உதித்தது. அங்கு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் ஒருவர், தன் இணையை பிரிந்து கடலுக்கு செல்கிறார். அவர் சென்ற கப்பல் விபத்து காரணமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொலை தொடர்பு துண்டிக்கப்படுகிறது. கரையில் அவருக்காக காத்திருக்கும் அவரது இணை, அவரது பிரிவில் அல்லலுறுகிறார். எழுத்தாளரான அவர், வழக்கமாக அவர்கள் சந்தித்துக் கொள்ளும் cafe ல் நாள் முழுக்க அமர்ந்து இருக்கிறார். அவரை தொடர்பு கொள்ள அவர் பணியாற்றிய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தொடர்ந்து call பண்ணி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவரோட சென்ற ஒரு நபர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளதாக சொல்கிறார்கள். அவர் மீண்டு வருவது சிரமம் தான் என்று சொல்கிறார். 

சங்ககாலத்தின் இரவில் நிலவு சுடர் விட்டு எரிகிறது. கபிலர் ஒரு பெண்ணைப் பற்றி பாடுகிறார். 

பிரிட்டன் தலைவிக்கு சங்ககாலத்து காதலி/தலைவி பதில் அளிக்கிறாள். மணம் செய்து கொள்ளாமல் உடன்போகி (dating) கொண்டிருக்கும் காதலர்கள் அவர்கள். அவளிடம் அவள் காதலன் உனை விட்டு பிரியப் போவதாக அவரது தோழி கூறுகிறாள். 

என் காதலன் எப்போதும் அவன் சொன்ன வாக்கை காப்பாற்றுபவன். எந்த சூழ்நிலையிலும் இனிமையானவன். என் தோளை விட்டு பிரிய மனமில்லாதவன். அது மட்டுமல்ல அவன் என்னை அளவு கடந்து காதலிக்கிறான். அவனைவிட அளவுகடந்து நான் அவனை காதலிப்பதை அவனும் நன்கு அறிவான். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது என்பதை அவனும் நன்கு அறிவான். இந்த உலகிற்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு அவன் எனக்கு முக்கியம் என்பதை அறிவான். ஆதலால் அவன் என்னை விட்டு பிரியமாட்டான் என கண்ணீரை துடைத்துக் கொள்கிறாள். 

நீர் வாழ் தாவரங்களில் சிறந்த தாவரமான தாமரை போன்ற ஆண். நிலத்தில் வளரும் தாவரங்களில் சிறந்த சந்தன மரம் போன்ற பெண். 

அந்த தாமரை மலரிலிந்து, சந்தன மரத்தில் கட்டப்பட்ட தேன் கூட்டைப் போன்று அவ்வளவு இனிதானது அவர்களது காதல். 

பிரிட்டன் நாட்டு சூரியன் மீண்டும் உதித்தது. 

நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் மீட்கப்பட்டார். 

பிரிந்திருந்த காதல் இணை மீண்டும் சேர்ந்தார்கள். ஆனால் அந்த ஆராய்ச்சியாளர் ஒரு நீர்வாழ் உயிரி போல தான் மீண்டு வந்தார். அவரின் மரணம் அவரது சுவாசத்தில் கலந்துவிட்டது. நிலத்தில் இருந்த அவரது எழுத்தாளரான காதலி தான் சுவாசிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். 

காதலில் சத்தியங்கள் தவறுவதில்லை. 

காதலர்கள் சொன்ன சொல்லில் இருந்து மாறுவதில்லை. 


நின்ற சொல்லர். நீடு தோறு இனியர்

என்றும் என் தோளைப் பிரியா தவர்.


- பாரதி ஆ.ரா.

பிரியும் நேர பிரியம்

நட்சத்திரம் 🌟5



குக்கூ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

–அள்ளூர் நன்முல்லை

குறுந்தொகை 157


Judgement day போல எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு ஒன்று உண்டு. எல்லாம் ஒருநாளில் முடிவுக்கு வரக்கூடும். மீண்டும் கூட துளிர்க்கலாம். 

இப்படியாக தான் தோளோடு தோள் சேர்த்து கட்டி அணைத்தவாறு இருந்த காதலர்களை பிரிப்பதற்கான ஒரு நாளின் விடியல், வாள் போல் வந்தது. 

விடிவதன் பொருட்டு கோழி கூவியது. அதை கேட்டு திடுக்கெட்டு ஆனது நெஞ்சம். இன்று இவரை பிரியப்போகின்றோம் என்ற பதட்டம் இந்த காலைப் பொழுதை துயரமாக்கியது.


- பாரதி ஆ.ரா

நிலத்தினும் பெரிதே

நட்சத்திரம் 4 🌟



நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே 

- தேவகுலத்தார்

குறுந்தொகை 3


"நீ ஏன்டி அவன் மேல இவ்ளோ கிறுக்கா இருக்க? அவனும் அவன் மூஞ்சியும். பைத்தியம் மாதிரி ஏதாவது பேசிட்டு கிறுக்கிட்டு இருக்கான். அவனபோய் எப்படிடீ நீ லவ் பண்ணி தொலைச்ச?" என தோழி தலைவியைப் பார்த்து திட்டிக்கொண்டிருக்கிறாள். 

காதல் மயக்கத்தில் இருக்கும் தலைவி ஈராயிரம் ஆண்டு பழைய ஒயினை பருகியவாறே பதில் சொன்னாள். 

"நான் அவனை லவ் பண்றேன். குறிஞ்சி பூவில் இருந்து தேனெடுக்கும் மலைக் கிராமத்தை சேர்ந்த என் தலைவன் மீது கொண்ட இந்த லவ், இந்த வானம், பூமி, கடல் எல்லாவற்றையும் விட பெரியது."

எல்லாவற்றையும் விட பெரியது. உயர்வானது என ஒரு உறவு தோன்ற காரணம் என்ன? காதலன்றி வேறில்லை எனலாம். 

ஆனால் உண்மையில் ஒருவரிடம் நாம் உணருகின்ற பாதுகாப்புணர்வு தான் மற்ற எல்லாவற்றையும் விட பெரிதாக தோன்றக்கூடும். 

தலைவியை தலைவன் கரங்களால் இறுக அணைத்துக் கொண்டான். இது நாள் வரை தலைவி வாழ்ந்த இந்த உலகைவிட, தலைவனின் கரங்களுக்குள் இருக்கும் போது பாதுகாப்பாக, சுதந்திரமாக, மரியாதையாக உணருகிறாள். அப்போது அவளுக்கு இந்த பிரபஞ்சமே சிறு துண்டு தான். 


பெரும் தேன் இழைக்கும் நாடனின் நட்பு

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று. 


- பாரதி ஆ.ரா

மறக்க மனம் கூடுதில்லையே

 நட்சத்திரம் 🌟 3



தோளும் அழியும் நாளும் சென்றென 
நீளிடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் 
கண்ணுங் காட்சி தௌவின என்நீத்து 
அறிவு மயங்கிப் பிறிதா கின்றே 
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று 
யாங்கு ஆகுவென்கொல் யானே ஈங்கோ 
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் 
பிறப்புப்பிறி தாகுவது ஆயின் 
மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே. 

- அம்மூவனார்

நற்றிணை 397


"இந்த relationship இதுக்கு மேல எந்த அளவுக்கு ஒத்து வரும்னு எனக்கு தெரியல. என்னால இத இதுக்கு மேல எப்படி கொண்டு போறதுனு தெரியல. இப்படியே போனா நமக்குள்ள இன்னும் சண்டை அதிகமாகிட்டே தான் போகும்னு நினைக்கிறேன். நம்ம லவ் continue ஆகனும்னா நம்ம ரெண்டு பேருமே கொஞ்சம் நாள் break எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என சொல்லி தலைவன் தலைவியை விட்டு பிரிந்து செல்கிறான். 

தலைவனை பிரிந்த பிறகு தலைவி depression mode கு சென்றார். இதனால் தலைவியின் தோற்றம் பொலிவிழந்து காணப்பட்டது. Dark circle சூழ்ந்தது. உடல் மெலிய தொடங்கினாள். 

இந்த தோள் அழகு ஒரு நாள் அழியக்கூடும். இடைவெளி எடுத்துக்கலாம் என்று சொன்னவன் வரும் வழி பார்த்து பாரத்து சரியாக சாப்பிடாமல் அவன் மெசேஜை எதிர்பார்த்து மொபைல் ஸ்கிரீனையே பார்த்தனால் பார்வை திறன் குறைந்து கண்ணாடி போட ஆரம்பித்தாள். அறிவினை இழந்து என்னென்னமோ பிதற்ற ஆரம்பிக்கிறாள். வாடைக் காற்றில் பெருகும் காம உணர்வினால் நான் என்னாகுவேனோ என தெரியவில்லை. ஒருநா‌ள் செத்தொழிந்து போனாலும் போவேன் என புலம்ப ஆரம்பிக்கிறாள். 

நான் சாக பயப்படவில்லை. நான் இறந்து மற்றொரு பிறப்பு எடுத்தால், என் காதலனை நான் மறந்திருப்பேனோ என்று தான் அஞ்சுகிறேன். 

சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் 

பிறப்புப்பிறி தாகுவது ஆயின் 

மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே. 

மறக்காத மனம் வேண்டும். 

அவனை இனி நினைக்காத உள்ளம் வேண்டும் என தலைவி உள்ளம் சிதைவுறுகிறாள். 


காதலின் சிதைவுகள் ஒரு இடைவெளியில் தான் தொடங்குகின்றது. பள்ளத்தாக்குகளில் தான் நதிகளும் ஓடுகின்றது. 

காதல் மீண்டும் பூக்கும். 


- பாரதி ஆ.ரா

யாரினும் இனியன் பேரன்பினனே

நட்சத்திரம் 🌟 2



யாரினும் இனியன்; பேர் அன்பினனே-
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.

- வடம வண்ணக்கன் தாமோதரன்
குறுந்தொகை 85


கருவுற்றிருக்கும் தன் பெண் குருவிக்கு, வெதுவெதுப்பான கூட்டினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு ஆண் குருவி, இனிப்பு மிக்க கரும்பின் நறுமணமில்லாத வெள்ளை மலரை கோதும். அத்தகைய ஊரினை சேர்ந்தவன் தலைவன். 

தலைவியைப் பிரிந்து onsite போன போது tinder இல் இன்னொரு இணையோடு date செய்தது தலைவிக்கு தெரிந்த பிறகு வீட்டில் மாட்டிக் கொள்கிறான். சமாதானம் செய்ய கவிஞனை/நண்பனை தூது அனுப்புகிறான். கவிஞன் தலைவியிடம் "யாரினும் இனியன், பேரன்பினன்" என்கிறான். 

இந்த உருட்டெல்லாம் போதும், அவன் சொல்லுறது ஒன்னு செய்யுறது ஒன்னா இருக்கு. எல்லாம் வெறும் வாய்ச்சொல் தான் என தலைவி மறுதலிக்கிறாள். 


கொசுறு: இந்த பாடலை எழுதியவர் வடம வண்ணக்கன் தாமோதரன். இவர் வட திசையிலிருந்து வந்த நகை வியாபாரி. வாணிபத்தில் செழித்தோங்கிய நிலம் தமிழ் நிலம். பல நாடுகளில் இருந்து இங்கு வந்து வாணிபம் செய்துள்ளனர். 


- பாரதி ஆ.ரா

விடுவுழிப் பரத்தலானே

 நட்சத்திரம் 🌟 1



ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. 

- பரணர். 
குறுந்தொகை 399


ஊர்க்கிணற்றில் படிந்திருக்கும் பாசியானது, நீர் அள்ளும் போது விலகியும், மற்ற நேரங்களில் படர்ந்தும் இருக்கின்றது. அதுபோலவே தலைவிக்கு பசலை நோயும். (பசலை என்பது காதலர் பிரிவில், தீண்டல் இல்லாமல் உடல் மெலியும் காதல் நோய்) 

தன் காதலர் தொடுகின்ற போது பசலை நோய் நீங்கியும், பிரிந்து இருக்கும் போது பாசி போல பசலை படர்ந்தும் காணப்படுகின்றது. 


காதலிலே தீண்டல் ஒரு மொழி. 

தொடுதலில் நோய் தீர்க்கும். 

தீண்டாமை ஒரு நோயாகும்.


- பாரதி ஆ.ரா 

சனி, 6 ஆகஸ்ட், 2022

நன்றே காதலர் சென்ற ஆறே

 நன்றே காதலர் சென்ற ஆறே

🏞️🌳🍀🛣️



முல்லை நிலத்திலிருந்த வந்த ஒரு நபரை இன்று காலை சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். பார்ப்பதற்கு தொன்மையான ஒரு Wildlife photographer போல இருந்தார். அவரிடம் நெருங்கி பேச்சுக் கொடுத்தேன். 

நான் சங்ககாலத்தில் பிறந்து வளர்ந்தவன். மலர்கள் சொரியும் புறவின்(காடு) நாட்டு கிழான் என அறிமுகப்படுத்திக்கொண்டார். 


"மனம் நயந்த காதலியை தழுவிக் கொண்டு 

பாணனின் நயம்படு இசையின் யாத்த பயன் தெரிந்து 

இன்புற்று புணர்ச்சி நுகரும் மென்புல வைப்பின் நாட்டு கிழான் நான்"

(நடுக்காட்டில் தனிமை வந்ததே என மனசுக்கு பிடித்த காதலியோடு, பிடித்த புத்தகம், திரைப்படம், பாடல் என ஒன்றாக கேட்டு இன்புற்று நிறைய பேசி, புணர்ந்து இன்பம் கொள்ளும் மலைக் காட்டைச் சேர்ந்த தலைவன் நான்) 

"புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள 

கோட்டவும் கொடியவும் பூ பல பழுனி 

மெல் இயல் அரிவை கண்டிடும் மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே"


(பறவைகளும் மான் கூட்டங்களும், மலர் சோலைகளும் என இயற்கை மணம் கமழும் காட்டில் பிறந்தவன் நான்) 


என தன் ஊரைப் பற்றியும் காதல் வாழ்வைப் பற்றியும் படம்பிடித்தது போல பேசினார். 

அவர் எழுத்தில் இயற்கையை படம்பிடிக்கும் கானுயிர் புகைப்படக் கலைஞர் அல்லது பாணர் அல்லது கவிஞர் என புரிந்தது. அவர் பெயரைக் கேட்டேன். பேயனார் என்றார். 

அவர் ஊரைப் பற்றி அவர் சொன்னது மிக அழகாக இருந்தது. அவரது புகைப்படங்களை, படைப்புகளை பார்க்கனும்னு ஆர்வம் தொற்றிக்கொண்டது. பேச்சு கொடுத்தேன். 

அவர் ஏதோ பரபரப்பில் இருந்ததை உணர முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தலைவியை காண சென்று கொண்டிருப்பதாக சொன்னார். 

என் எழுத்துகளை peyanaar_mullaithinai என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாருங்கள். எங்கள் கிராமத்தின் அழகும் செழுமையும் புரியும் என இயர்பாடை மாட்டிக் கொண்டார். 

"காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்

பூப்பறித்து கோர்க்க சொன்னேன்" 

"பொன்னி நதி பார்க்கனுமே" 

மண்ணே உன் மார்பில் கிடக்க

என இசையில் லயித்துக் கொண்டிருந்தார். 


என் ஊரில் என் தலைவியோடு இன்புற்று வாழ்ந்தவன். பொருள் ஈட்டுவதற்காக வேலை தேடி என் தலைவியை பிரிந்து இங்கு வந்தேன். நெடுங்காலமாகி விட்டது. கொஞ்சம் காசு சேர்த்து விட்டு என் தலைவியை பார்க்க போகிறேன். தேரை விரைந்து செலுத்த வலம்பெறுநன் தேரோட்டி யாரையும் காணவில்லை, அரசு விரைவுப் பேருந்துகள் வேறு கூட்டமாக இருக்கிறது. இப்போது எப்படி நான் சேலம் சேர்வது என கேட்டார். 

இங்கிருந்து மூன்று மணிநேரத்தில் செல்ல எண்வழிச்சாலைகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றேன். 


இப்போது காலம் பொ.ஆ.பி. 3018. லகுட பாண்டிகளின் அடிமை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.


காதலியைப் பார்க்க செல்லும் பேயனாரைக் கூட்டிக் கொண்டு சேலம் சென்று கொண்டிருக்கிறேன். அவர் தலைவியைப் பிரிந்து வந்த போது தான் கடந்து வந்த காட்டுவழிப் பாதையின் அழகை புறவணிப் பத்து என தான் எடுத்த போட்டோ கவிதை ஆல்பத்தை பற்றி சொன்னார். 


நன்றே! காதலர் சென்ற ஆறே என தலைவிக்கு ஆறுதல் சொன்ன வரிகள் அவை. தலைவன் சென்ற பாதை மிக அழகானது, பாதுகாப்பானது, இயற்கை எழில் கொஞ்சம் அழகு மிக்கது, ஆதலால் தலைவியே வருந்தாதே என சொன்ன பாடல்கள்.


புறவணிப் பத்தில் அவர் காட்சி படுத்திய பத்து புகைப்படங்கள்...

(1) அழகிய மலை உச்சியில், நீலமணி போன்ற தோற்றமுடைய மயில் தோகை விரித்து நடனமாடுகின்றது.

(2) தங்க நிறத்தில் கொன்றை மலர்கள் சூழ, திருமண வீட்டில் நுழைவது போல இருமருங்கிலும் மரங்கள் சூழ வரவேற்கிறது இந்த சாலை.

(3) இந்த பச்சைப்பசேலென இருக்க, பெய்த மழை நீரை சேமிக்க கானங்கள்(நீர்நிலை) உள்ளது

(4) மழை நின்ற பிறகு சாலையில் ஒரு பெண்மான் தன் குட்டிகளோடு இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கிறது.

(5) அடுத்த புகைப்படங்கள் ஒரு Flora photography போல, சங்கர் படத்தில் வருவதைப்போல நெய்தல் மலர்களும், கொன்றைப் பூக்களும் பூத்துக் குலுங்கும் காட்சி, கொன்றையோடு மலர்ந்த குருந்த மரங்கள், ஆலங்கட்டி மழைபெய்து வெண்ணிறத்தில் மலர்ந்த முல்லை மலர்கள், பச்சைப்பசேலென புதரகளில் மலர்ந்த பூக்கள், மழை காலத்தில் ஏற்றப்பட்ட சுடர் போன்ற தோன்றி மலர்களும் தளவ மலர்களும் பூத்துக்குலுங்கும் காட்சி என புகைப்படங்கள் கண்களை கவருகின்றன.

(6) குருந்தம் மலர்கள் சூடிய கோவலர்களின், குளிர்ச்சி மிகுந்த குடியிருப்புகள் என அவர் வந்த வழியினை "நன்றே காதலர் சென்ற ஆறே" என பாடினார்.


ஆனால் இன்று (3018) அவர் செல்லும் சாலையோ மலைகளைக் குடைந்து, மரங்களை வேரோடு வெட்டி சாய்த்து, அந்த மலைத்தொடரில் இருந்த மயில்கள், மான்கள், பறவையினங்கள் எல்லாம் என்ன ஆயின என தெரியவில்லை. விவசாய நிலங்கள் அழிந்தன. துயரம் தாளாத விவசாயிகள் பூச்சி மருந்தினைக் குடித்தனர். ஒரு இளம் பெண் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். எங்களைக் கொன்றுவிடுங்கள் என குடும்பத்தோடு மண்ணெண்ணை கேனோடு முறையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து கேட்ட மூதாட்டி அரசதுரோகி என கைது செய்யப்படுகின்றார். நீதி கேட்டு நடைபயணம் மேற்கொள்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஏழுக்கு அடுத்து என்ன என்று கேட்டு யாராவது எட்டு என பதில் சொன்னால் அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இவை தான் 3018 ல் காணும் காட்சி.


இந்த எட்டு வழிச்சாலையில் கொஞ்சம் மனம் வாடியே வருகிறார். 

அவர் பேஸ்புக் ல் On this Day memoriesல அவர் எழுதிய பதிவு நோட்டிபிகேஷனில் காட்ட அப்பாடலை reshare செய்கிறார்.


07 ஆகஸ்ட் 2018 அன்று பேயனார் தன் தலைவிக்கு எழுதுகிறார்.


உன்னைக் காண வந்து கொண்டிருக்கிறேன்.

இப்போது வருகின்ற இவ்வழி நான் கடந்து வந்த முல்லைநிலப்பாதை போல இல்லை. பாலை நிலத்தின் கொடிய வழியாக உள்ளது. வளரச்சி என இவர்கள் போட்ட சாலை அழிவின் இன்பினிட்டி பாதையாக உள்ளது.


நன்றா? இக்காதலன் திரும்பும் வழி...


- பாரதி ஆ.ரா

(2018 ல் எழுதப்பட்ட பதிவு)