பக்கங்கள்

செவ்வாய், 10 மே, 2022

அடங்க மறு 🏴

அடங்க மறுத்தலே விடுதலையின் ஆரம்பம். 




ஒழுங்கு என்பது ஆகச்சிறந்த வன்முறை. கீழ்படிதல் என்பது அடிமை சாசனம். 


அதிகாரம் என்ற அமைப்பு, கடுமையான ஒடுக்குமுறைகளின் மூலமாகத் தன்னை நிலைநாட்டிக் கொள்கிறது. அரச பீடம் தனது அதிகாரத்தினை மக்கள் மீது செலுத்த, மக்களில் இருந்தே ஆட்களை எடுத்து அவர்களை ஒடுக்குகின்றது. அவ்வாறான அமைப்பு தான் காவல் துறையும், இராணுவமும். இந்த இரு அமைப்புகளிலும் இருக்கின்ற கடுமையான ஒழுக்க நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இயல்பிலேயே அவர்களை வன்முறையாளர்களாக உருவாக்குகின்றது. 


ஒழுங்கு தனிநபர்களை உருவாக்குகின்றது; இது தனிநபர்களை அதிகாரத்தின் உறுப்பாகவும் அதன் ஏவல் செயல்பாட்டின் கருவிகளாகவும் உருவாக்குவதற்கான அதிகார அமைப்பின் ஒரு உத்தியாகும். குடிமை சமூகத்தின் மீதான நிரந்தரமான சுரண்டல் தான் இந்த ஒழுங்கு எனும் வன்முறை. 


உனக்கு மேல் உள்ளவர்களுக்கு கீழ்படிந்து நடப்பதுதான் ஒழுங்கு என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான சிந்தனை. 


கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து உருவாகும் காவல்துறை, இராணுவம் போன்ற அமைப்புகளில் இருந்து வெளிவரும் ஒரு நபர், மற்ற நபர்களைவிட அதிக வன்முறையாளர்களாக உருவாக்குகின்றது. அதனால் தான் லாக்கப் மரணங்கள், பொதுமக்கள் மீதான வன்முறை போக்கு, ஒருமையில் பேசுவது, பொய் வழக்கு போட்டு சித்திரவதை என காவல்துறை வன்முறைகள் அரங்கேறுகின்றது. 

ஒழுங்கு என்பது அதிகாரம் அல்ல. ஆனால் ஒழுங்கு என்ற கட்டுப்பாட்டின் மூலம் அதிகாரம் மக்கள் மீது அதிகாரம் செயல்படுத்தப்படுகின்றது என மிகைல் பூக்கோ கூறுகிறார். 


புராண காலமானாலும் சரி, மன்னர் காலமானாலும் சரி, காலனிய தொடர்ச்சியான நவீன காலமானாலும் சரி மக்களை ஒடுக்க மக்களில் இருந்தே ஏவல் அடிமைகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர். 


தாத்தா காலத்திலிருந்து பேரன் காலம் வரை அதிகாரத்திற்கு அடிமை சேவகம் செய்வதற்கான அமைப்பு தான் காவல்துறை, இராணுவம், போர்ப்படைகள். 


Pollice Verso (from Latin: with a turned thumb) is an 1872 painting by French artist Jean-Léon Gérôme, featuring the eponymous Roman gesture directed to the winning gladiator.

திங்கள், 10 மே, 2021

காதல்: ஓர் முதல் உரையாடல்

 Love: First Discourse


Artist: Leonardo Dudreville

Created: 1924



காதல், குடும்பம், புனிதம், பண்பாடு என்ற கற்பிதங்களைத் தாண்டி அது காதலாக மட்டுமே இருக்கிறது.


இந்த ஓவியம் ஆறு குறுங்கதைகள் போல இருக்கின்றது. காதல் என்பதை இரு தளங்களில் வைத்து காட்சி படுத்தி கேள்விக்குள்ளாக்குகின்றது.

காதல், திருமண உறவு, திருமணம் தாண்டிய உறவு, குடும்ப பாசம், தெய்வீக காதல், வயோதிக காதல் என  பல பரிமாணங்களில் உள்ள அன்பை இந்த ஒரு ஓவியத்தில் காட்சி படுத்தியிருப்பது அழகு.


Adultery ல் ஈடுபடும் காதலர்களை காட்சிப்படுத்தும் இடத்தில் 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு இத்தாலிய நாடகத்தை பற்றிய குறிப்பு அருமை. அந்த நாடகமும் திருமணம் தாண்டிய ஒரு காதலை மையமிட்ட கதை தான்.


மதில் மேல் இருக்கும் பூனை, கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் புறா ஆகியவை குடும்ப அமைப்பினால் உள்ளுக்குள்ளே ஒடுக்கப்பட்ட பாலியல் விழைவை குறிப்பிடவனாகவும், cupid and psychy சிற்பம் காதலையும், மடோனா மற்றும் குழந்தையின் ஓவியம் தாயன்பையும் (mother love) குறிப்பிடுவனாக உள்ளது.


இந்த ஓவியம் பற்றி இன்னும் அதிகம் உரையாடலாம்.

சமூக பண்பாட்டு உளப்பகுப்பாய்வு மூலம் இந்த ஓவியத்தை அணுகினால் இன்றைய குடும்ப அமைப்பு, காதல் பற்றிய புரிதலும் அதில் உள்ள முரண்களையும் அறிந்து கொள்ள முடியும்.


ஒரு Anthology படத்தின் கதையை போல இந்த ஓவியம் உள்ளது.

திங்கள், 1 மார்ச், 2021

மாஸ்டர்: மேலானவற்றின் கருத்தியல்


மாஸ்டர் படத்தில் ஒரு காட்சி. அந்த படத்தின் நாயகன் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருக்கும் புகைப்படம். The essential: Zizek என உள்ளது. யார் ஜிஷெக். அந்த புத்தகம் எதைப்பற்றியது.

ஒரு உச்ச நடிகர் மூலம் ஒரு புத்தகத்தை வெகு தளத்தில் பொது மக்களிடையே அறிமுகப்படுத்தும் பாணி சமீபத்தில் திரைப்படங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காண முடிகின்றது.

ஒரு முன்னணி நடிகரின் மூலம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவது தமிழ் சமூகத்தில் நடைமுறையில் கொஞ்சம் சிக்கலானது தான். அதை முன்னணி நடிகர்கள் செய்து வருவது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் ஒரு நடிகனுக்கும் ரசிகனுக்குமான உறவில் அது தேவையற்ற ஒன்று. ஒரு நடிகன் தனது ரசிகனை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது.


"எந்த ஒரு முன்னணி நடிகரும் தன் பிறந்த நாளுக்கு இரத்ததானம் செய்யுங்கள், நற்பணி மன்றங்கள் மூலம் சமூகத் தொண்டு செய்யுங்கள் என அறிவுறுத்தலாம். ரசிகர் மன்றங்களை கலைக்கலாம். திரைப்படங்களில் அரசியல் குறித்து பஞ்ச் டயலாக் பேசலாம். பேனர், கட்அவுட், பாலபிஷேகம் செய்யாதீர்கள் என அன்புக் கட்டளைகள் இடலாம்.

ஆனால் எந்த உச்ச நட்சத்திரமும் தன் ரசிகர்களை படி என்று சொல்வதில்லை. சொன்னால் அவன் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு அவன் வேலையை பார்க்கப் போயிடுவான்."

என ஒரு இணைய பகிர்வை படிக்க நேரிட்டது.

நடிகர் கமல் பல ஆண்டுகளாகவே நேர்காணல்களில் அவர் வாசித்த புத்தகங்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட வாரம் ஒரு புத்தகம் என அறிமுகப்படுத்திவந்தார். 

கபாலி படத்தில் ரஜினி சிறையில் My Father Name is Balayya என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார். காலா படத்தில் தன் மேசையில் இராவண காவியம் புத்தகத்தை வைத்திருப்பார்.

எஸ். பி. ஜனநாதன், மிஷ்கின் ஆகியோர் படங்களிலும் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதை காணலாம்.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் புகைப்படத்தில் ஒன்று, அந்த படத்தின் நாயகன் விஜய் தன் கையில் The Sublime object of the Ideology எனும் புத்தகத்தை வைத்திருப்பார்.

தத்துவ உலகின் சூப்பர்ஸ்டார் என கருதப்படுகின்ற ஸ்லோவினிய அறிஞர் ஸ்லவோஜ் ஜிஷெக் அவர்கள் 1989ல் எழுதிய புத்தகம். அவர் எழுதியதில் மாஸ்டர்பீஸ் இந்நூல்.

கார்ல் மார்க்ஸ் ன் கருத்தியலையும், சிக்மண்ட் ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு நூலான கனவுகளின் விளக்கம் நூலின் சாரம்சத்தையும் இணைத்து பார்க்கின்றது இந்நூல்.

உழைப்பு - உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையேயான வர்க்க முரண்கள் தான் முதலாளித்துவம் என்கிறார் மார்க்ஸ். உழைப்பவனுக்கு, அவன் உற்பத்தி செய்கின்ற பொருள் என்பது அவனுக்கு சொந்தமல்ல. அவனுடைய முதலாளிக்கு சொந்தமானது. உழைத்து முடித்த பிறகு அந்த பொருளிலிருந்து உழைப்பாளி அந்நியமாகிவிடுகிறான். அது உழைப்பவனுக்கு சொந்தம் என பொதுவுடைமை தத்துவம் பேசிய கலகக்கார அறிஞர் காரல் மார்க்ஸ்.

ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவன் அந்த துணியை விற்க தான் முடியும். அதிக விலையுள்ள துணியை வாங்கும் அளவுக்கு வசதி இருப்பதில்லை. இந்த வர்க்க முரண்களை கலைக்க சிந்தித்தவர் தான் மார்க்ஸ்.

கனவுகள் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என விளக்கம் கொடுத்தவர் சிக்மண்ட் ப்ராய்டு.

இந்த இரண்டு முக்கிய தத்துவங்களையும் இணைத்து விவாதித்து இருக்கிறார் இந்த நூலில்.

துணிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவனுக்கு விலை உயர்ந்த ஆடை எவ்வாறு அந்நியப்பட்ட ஒன்றாக ஆனது. அவன் விலை உயர்ந்த ஒரு ஆடையை அணிந்திருப்பதாக கனவு காண்பது என்பது உளவியல் சார்ந்த ஒன்று மட்டுமல்ல. அது சமூக கருத்தியலோடு தொடர்புடையது என்கிறார் ஜிஷெக்.

இந்த நூலை ஒரு முன்னணி நடிகர் தன் படத்தின் மூலம் வெகு மக்களிடையே அறிமுகப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்த படத்திற்கும் இந்த புத்தகத்திற்கும் சம்மந்தமில்லை என்பது வேறு.

அனிருத் கத்த வாத்தி கம்மிங் பாட்டு சத்தமாக ஒலித்திக் கொண்டிருக்கிறது. ரசிகன் அடுத்த பட அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். 

சனி, 20 பிப்ரவரி, 2021

மகிழ்ச்சி என்பது...

மகிழ்ச்சி என்பது...

அறிவே இன்பமான வாழ்விற்கு அடிப்படை என அரிஸ்டாட்டில் சொல்கிறார். சக மனிதரை நேசிக்கின்ற, சுதந்திரமான சிந்தனையே இன்பம் தருகின்ற அறிவு. 

கொஞ்சம் விசயங்கள் தெரிந்திருத்தலே மகிழ்ச்சி என எபிக்கிரஸ் சொல்கிறார். மற்றவரைவிட கொஞ்சம் அதிகமான உண்மைகளை தெரிந்து கொண்டவர் நிம்மதியாக இருப்பதில்லை. ஆகவே எல்லாவற்றையும் அறிந்து கொள்ளாமல் கொஞ்சம் உண்மைகளை மட்டும் அறிந்து கொள்ளுங்கள் அதுவே ஆனந்தம் என்கிறார். எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டால் நிம்மதியாக இருக்க முடியாது. எல்லா கேள்விகளுக்கும் பதிலை தேடிச் சென்றால் கவலைகள் தான் மிஞ்சும். மகிழ்ச்சி என்பது குறைந்த அளவு அறிந்திருத்தல். உண்மையின் நிர்வாணம் கவலைகளைத் தரவல்லது. 

சும்மா இருப்பதே மகிழ்ச்சி என நீட்ஷே சொல்கிறார். சும்மா இருப்பது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்லைனு வடிவேலு சொல்கிறார். சும்மா இருக்க முடியலனாலும் சும்மா இருக்க ட்ரை பண்ணா போதும். உம்முன்னும் கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.

பயணித்துக் கொண்டிருப்பதே மகிழ்ச்சி என்கிறார் அரேபிய ஞானி இபின் ருஷ்டி.
சாலைகள் கடவுளின் உறைவிடம். கடவுளை தேடுதல், மனிதர்களோடு பயணித்தல், அவர்களிடம் கடவுளை காண்தலே இன்பம். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. எளிய மனிதர்களின் இன்பத்தில் கடவுளை கண்டடையும் வழியே அரசியலாக, தத்துவமாக முன்னிறுத்தினர். சாலை முனைகளில் கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார். அவரோடு ஒரு டீ அருந்தியாவாறு மகிழ்ச்சியாய் இருப்போம்.

சுதந்திரமாய் இருத்தலே மகிழ்ச்சி என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். யாரையும் அடிமைப் படுத்தாமல், யாருக்கும் அடிமையாய் இல்லாமல் இருக்கும் சுதந்திர உணர்வே மகிழ்ச்சி. மனதின் சிறைகளை உடைத்து சுதந்திரமாய் இருத்தலே பெரு மகிழ்ச்சி. 

நீங்கள் இழந்த உங்கள் சுயத்தை மீண்டும் கண்டடைவதே மகிழ்ச்சி என்கிறார் மார்க்கோஸ். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் செய்யும் பிழைகளில் நம் சுயத்தை இழந்திருப்போம். தவறுகளில் இருந்து மீண்டு தன் இயல்பினை அடைதலே ஆனந்தம். நாம் இழந்த நம்மை மீட்டெடுத்தலே மகிழ்ச்சி.

மகிழ்ச்சி என்பது ஒன்றை முழுதாய் நம்புதல் என அல் பராபி சொல்கிறார். பொய், ஏமாற்றம், துரோகம் என ஐயம் கொள்ளாமல் முழுதாய் ஒன்றை நம்புவது. பலி பீடமாக இருந்தாலும் முழுவதுமாக ஒருவரை நம்பி தலையை, கொடுப்பதே பெரு மகிழ்ச்சி. கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றை/ஒருவரை முழுதாக நம்புதலே மகிழ்ச்சி.

குடும்பத்தோடு ஒன்றாய் இருப்பதே மகிழ்ச்சி என விக்டர் ஹ்யூகோ சொல்கிறார். உறவுகளோடு இணக்கமாய் இருப்பது, புரிதலோடு இருப்பது, உறுதுணையாய் இருப்பது, நெறி தவறும் பட்சத்தில் கண்டிப்பாய் இருப்பது என உறவுகள் சூழ இருப்பது சமூகத்தில் ஒருவனை மகிழ்ச்சியாக இருக்க வைக்கின்றது.

மகிழ்ச்சி என்பது நாம் செய்கின்ற செயலை விரும்பி செய்வது என ஜேம்ஸ் பெர்ரி சொல்கிறார். இன்னது தான் பிடிக்கும், இதைத் தான் செய்வேன் என ஆசைப்பட்டு செய்வதைவிட, தான் செய்கின்ற செயலை ரசித்து விரும்பி செய்வதே மகிழ்ச்சி என்கிறார். பெரிதாக கனவுகளை வளர்த்துக் கொள்ளாமல் தனக்கு வாய்த்ததை விரும்பி ஏற்றுக்கொள்வதே மகிழ்ச்சி என்கிறார்.

மகிழ்ச்சியாய் இருப்பது என்பதே நெறியற்ற ஒன்று என ஜிஷேக் சொல்கிறார். அறத்தோடு வாழ்பவனுக்கு மகிழ்ச்சி என்பது சிறு புள்ளி தான். அதை பொருட்டாகவும் நினைப்பதில்லை. மகிழ்ச்சி என்பது அறமற்ற ஒன்று.
அறம் செய்ய பழக வேண்டும் அல்லது அறமற்றதை கொண்டாட பழக வேண்டும்.

மகிழ்ச்சி என்பது குறைந்த அளவு துயர்.

வெள்ளி, 29 ஜனவரி, 2021

காலம் பதில் சொல்லும்

காலம் பதில் சொல்லும்
என்ற கடைசி வாசகத்தோடு
அநாந்தரத்தில் விடப்பட்டேன்

காலத்தின் பதிலை 
அறிந்துகொள்ள பொறுமையில்லாமல்
காலத்தோடு மல்லுகட்டினேன்
பதில் என்ன என அறியாமல்
ஆயிரம் கேள்விகளை 
கேட்டுக் கொண்டிருந்தேன்

ஒவ்வொரு வினாக்களும்
எதிர்காலத்தின் மீது வில் தொடுத்தது
விடை தேடும் பயணம்
நிகழ் காலத்தை ரணமாக்கியது
விடையறியா வினாக்களோடு
கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டேன்

காலத்தின் புதிர் பாதையிலிருந்து
மீள்வதற்கான கடவுச்சொல் 
ஒரு பதிலாய் இருந்தது. 

அந்த பதில்
"காலம் பதில் சொல்லும்"

- பாரதி ஆரா

வியாழன், 24 டிசம்பர், 2020

காலம்

எனக்கான காலைத் தேநீர்
கடந்தகாலத்தில் இருந்து வந்தது
அதில் எதிர்காலத்தில் இருந்து
சில துளி பொய்கள் விழுந்தன.
சூடாக இருந்த தேநீர் ஆறிப்போனது

நிகழ்காலத்தின் உண்மைகள் கசக்கின்றது
சர்க்கரை கலந்த கொஞ்சம் பொய்களையாவது தா
பருகுவதற்கு

காலத்தின் மாயப்புதிர்கள் விசித்திரமானவை
நிகழ்காலத்தில் என் தேநீர் கோப்பை உடைந்து போய்விட்டது
கடந்த காலத்தின் தேநீரும்
எதிர்காலத்தின் பொய்களும்
காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன.

- பாரதி ஆ.ரா.

புதன், 25 டிசம்பர், 2019

மெசியா பிறந்தார்



உலகின் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீர்

இருந்தும் ஏன் இன்னும் பாரஞ்சுமக்கிறார்கள்? 

பாரம் சுமக்கிறேன்... நானும்... 

பொய் குற்றஞ்சாட்டப்படுகிறேன். 

கூட இருந்தே துரோகத்தின் ஈர உதடுகளால்

முத்தம் கொடுக்கப்பட்டு காட்டிக்கொடுக்கப்படுகிறேன். 

பழகியவர்களாலேயே மறுதலிக்கப்படுகிறேன். 

புறக்கணிப்பின் பாரத்தை சிலுவையாக சுமக்கிறேன். 

வெறுப்பை கிரீடமாக சூடிவிட்டு செல்கின்றனர். 

வழியெங்கும் பிரிவின் கசையடிகள். 

கரங்களில் குருதி வலிந்தோடுகின்றது. 

ஆணிகளின் காயச் சுவடுகள் இல்லை. 

நினைவின் தாகம் எடுக்கும் போதும்

போக்குகாட்டி விளையாடுகின்றனர்.

ஏன் எனக்கு இதை செய்கின்றனர்

என ஒன்றும் தெரியவில்லை. 

"என் தந்தையே! இவர்கள் இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். இவர்களை மன்னியும்.


சிலுவை தண்டனையா? புனிதமா?

நான் சுமந்து வந்த நேசம்

எனக்கு தண்டனையா? 

மீட்பின் வழியா? 

புரியாமலே எனக்கு நானே

இரங்கல் எழுதிக்கொண்டிருக்கிறேன். 

உயிர்த்தெழுதல் சாத்தியமா என்பது நிச்சயமில்லை.

உயிரோடிருப்பது நிச்சயம். 


நேசத்தின் தூய ஆவி வானில் நட்சத்திரமாக தெரிகிறது

மெசியா பிறந்து விட்டார்...


- பாரதி ஆ.ரா

ஞாயிறு, 10 ஜூன், 2018

பண்பாட்டுத் தொடர்பியல் அசைவுகள்

பண்பாட்டுத் தொடர்பியல் அசைவுகள்:
தொடர்பியல் தளத்தில் திருமண சடங்கு மற்றும் உணவு

அ.ஆரோக்கியராஜ்

அறிமுகம்:
பண்பாடு என்பது மக்கள் வாழ்வியலின் தொகுக்கப்பட்ட ஒரு கருத்தியல் சார் நெறிமுறை வடிவமாகும். அது மக்களின் சமய நம்பிக்கை, வழக்காற்றியல், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மொழி, வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றது. பண்பாட்டின் செயல் தன்மை என்பது ஒரு நபர்/இனக்குழு மற்றொரு நபர்/இனக்குழுவோடு தொடர்பு கொள்ளுதல், கூட்டு அடையாளங்களை உருவாக்குதல் ஆகியனவாக இருக்கின்றது. இதனை திருமண நிகழ்வினோடு ஒப்பிட்டு பார்க்கையில் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையேயான சம்மந்தம் கலத்தல், மணமக்களுக்கு கணவன் மனைவி என்ற அடையாளம், பெற்றோருக்கு சம்பந்தி என்ற அடையாளங்களை உருவாக்குகின்றது. தொடர்பியல் என்பது ஒரு செய்தியை பரிமாறிக் கொள்ளுதல், அடையாள வேறுபாடுகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. தொடர்பியலுக்கும் பண்பாட்டிற்குமான உறவு என்பது மிக நுட்பமானது. பண்பாடு தொடர்பியல் வாயிலாக உருவாக்கப்படுகின்றது. தொடர்பியல் பண்பாட்டின் உட்கூறுகள் மூலம் நடைபெறுகின்றது. ”பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சின்ன அசைவின் மூலம் நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றது.” (தொ.பரமசிவன், 2016:96) அத்தகைய அசைவுகள் (சடங்குகள்) தொடர்பியல் தளத்தில் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

பண்பாட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக சடங்குகள் உள்ளன. அவற்றுள் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளும் அடங்கும். பண்பாடு என்பது தனித்து ஒரு முழுமையான தொடர்பியல் ஊடகமாக இருப்பதில்லை. பண்பாட்டுக்கும் தொடர்பியலுக்கும் இடையே ஒரு பற்றாக்குறை, போதாமை இருக்கின்றது. அதனை மிக நுட்பமாக நிறைவு செய்யும் ஒரு பற்றுக்கோளாக சடங்குகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு மொழியை ஒரு தொடர்பியல் கருவியாக கருதினால் அதனால் முழுமையான தொடர்பியலை தனித்தே நிகழ்த்த இயலாது. இரு வேறு மொழி பேசுபவர்களுக்கு இடையே எழும் சிக்கலைவிட ஒரே மொழி பேசும் குழுவினரிடையே கூட மொழியால் முழுமையாக தனித்தே இயங்க(தொடர்பு கொள்ள) முடியவில்லை. அதற்கு உருவகங்கள் போன்றவை தேவைப்படுகின்றன. தான் விரும்பும் தலைவனின் தன்மைகளை வெளிப்படுத்த மொழியால் இயலமுடியவில்லை. ‘புரட்சி புயல்’ ‘எழுச்சி சூரியன்’ போன்ற சொல்லாடல்கள் இதற்கு உதாரணம். ஒரு நடிகனை தலைவனை அவன் தன்மைகளை விளிக்க புயல், சூறாவளி, நட்சத்திரம், சூரியன், சிங்கம் போன்ற சொற்கள் தேவைப்படுகின்றன. இதனை மொழியின் குறைபாடு (Language Deficiency) என குறிப்பிடுகின்றனர். இங்கு மொழியின் செழுமையாக உருவகங்கள் இருக்கின்றன. அது போல ஒரே குமுகத்தினரிடையே கூட பண்பாடு முழுமையான தொடர்பியலை நிகழ்த்தவில்லை. இங்கு பண்பாட்டின் மேன்மை (Sublime) பொருந்திய ஒரு வடிவமாக சடங்குகள் திகழ்கின்றன. காதலர்கள் மனம் ஒத்து சேர்ந்து வாழ்ந்தாலும், அதனை சமூக அளவில் அங்கீகரிக்க திருமணம் எனும் சடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மக்கள் கருதுகின்றனர். இங்கு சமூகவயமாதலில் மிக முக்கியமானதாக சடங்குகள் உள்ளன.

ஒரு தனி மனிதன் சமூகவயமாதலில் குடும்ப அமைப்பு என்பது மிக முக்கியமானதாக திகழ்கின்றது. குடும்ப அமைப்பினை உருவாக்குவதில் மிக முக்கியமான அம்சமாகவும், தமிழக பண்பாட்டில் மிக மதிப்புமிக்க ஒரு சடங்காகவும் திருமணம் இருக்கின்றது. கீழைத்தேய சமூகத்தில் துறவு நெறிகளை போதித்த பௌத்தம், சமணம் போன்ற சமயங்களை வீழ்த்த வைதீக சமயங்கள் மிக முக்கியமான கருத்தியலாக திருமணத்தினை முன்னிறுத்தியன என்ற புரிதல் திருமணத்தை இன்னும் அதிநுட்பமாக அறிந்து கொள்ள வழிவகை செய்யும். இன்று திருமணத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பந்தி உணவு. இந்த கட்டுரை திருமணம் குறித்த சமூக விழுமியங்களையும் அது உணவில் பிரதிபலிக்கும் தன்மைகளையும் பண்பாட்டியல் ஆய்வுப் பார்வையில் விவரிக்க முயல்கின்றது. குறிப்பாக விருத்தாசலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வழக்கத்தில் இருக்கும் ’கடலை உடைத்துக் கல்யாணம்’ என விளிக்கப்படும் திருமணங்களில் பந்தியில் இடம்பெறும் பொட்டுக்கடலை, வேர்கடலை மிட்டாய் போன்ற பயறு வகைகள் உருவாக்கும் தொடர்பியல் அசைவுகளையும் அது குறித்த உணவு பண்பாடு மற்றும் சமூக விழுமியங்கள் ஆகியவற்றை சமயங்களின் பின்னணியில் விவரிக்கின்றது.

தமிழர் திருமணம் எனும் கருத்தியல்:
தமிழர்களின் வாழ்வியல் சடங்குகளில் மிக பிரதானமான ஒன்றாக திருமணம் இருக்கின்றது. திருமணம், கலியாணம், இணையேற்பு விழா ஆகியன மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் சொற்களாகும். கலி+ஆணம் = கல்யாணம் என்ற இந்த சொல் மக்களிடையே அதிகம் புழக்கத்தில் உள்ள சொல்லாகும். ‘கலி’ என்பது மகிழ்ச்சி, எழுச்சி, விழா, வலி என்ற பொருளையும்; ’ஆணம்’ என்பதற்கு நேயம், பற்றுக்கோடு என்று பொருள் உண்டு. (அன்பு பொன்னோவியம், 2007:368) இதனை மங்கல நாள் என குறிப்பிடுகின்றனர். “இல்லற மல்லது நல்லற மன்று” என ஔவையாரும் “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை” என திருவள்ளுவரும் வீடுபேற்றினையும் திருமண வாழ்வின் முக்கியத்துவத்தினை குறிப்பிடுகின்றனர்.
தமிழரிடையே கொடை மணம், களவு மணம், கவர்வு மணம் ஆகிய முறைகள் இருந்தன. (தேவநேயப்பாவணர், 2000:8) தொல்காப்பியத்தில் எண்வகை திருமண முறைகளை குறிப்பிடப்படுகின்றது. வட மொழி நூல்கள் பிரம்மம், பிரஜாபத்யம், ஆர்ஷம், தைவம், கந்தர்வம், ஆசுரம், ராட்சசம், பைசாசம் ஆகிய எண்வகை திருமண முறைகள் இருந்தன என குறிப்பிடுகின்றன. (அன்பு பொன்னோவியம், 2007) திருமண மரபு பரிணமித்த வரலாற்றில் மூன்று நிலைகள் இருந்தன என தொல்காப்பியம் சுட்டுகின்றன. 1. களவு, 2. நால்வருணத்தாருக்கும் ஒரே வகைச் சடங்கு, 3. சூத்திரருக்கு மட்டும் தனி சடங்கு. இதிலிருந்து வெளிப்படும் மிக முக்கியமான விடயம் ’சடங்கு’. இங்கு சமூக அமைப்பிற்கு தனது அதிகார படிநிலைகளை தக்க வைக்கும் ஒரு உத்தியாக ஆயுதமாக சடங்குகள் உருப்பெற்றதை அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்களில் எந்த வித சடங்குகளும் அற்ற களவு மணமுறை இருந்ததை காண முடிகின்றது. சைவம், வைணவம் போன்ற வைதீக சமயங்கள் தமிழர்களிடையே கருத்துரு பெற ஆரம்பித்த பிறகு சடங்குகள் ஒரு புனிதத் தன்மை என்ற பெயரில் ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொண்டது. சிலப்பதிகாரத்தில் தீ வளர்த்து, பார்ப்பனர்களைக் கொண்டு வேதம் ஓதி திருமண முறை இருந்ததை அறிய முடிகின்றது. கொடுப்பது, எடுப்பது என்ற சொல்லாடல்கள் பெற்றோர் நிச்சயித்த திருமணங்களை சுட்டுகின்றன. மணமுறை என்பது ஒவ்வொரு குமுகத்தினரிடையே வேறுபட்டு காணப்படுகின்றன.

தமிழ் இலக்கியங்கள் தமிழர் வாழ்வை அகம், புறம் என வகுத்தனர். அகம் என்பது களவு, காதல் வாழ்க்கையையும், புறம் என்பது போர், பொருளீட்டல் போன்ற வீரம், உழைப்பு சார்ந்த வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றன. அதன் பிறகு உருவான திருக்குறள் உள்ளிட்ட நீதி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை வலியுறுத்திக் கூறின. இதில் மக்கள் வாழ்வுக்கு தேவையான வாழ்க்கை நெறிகள் வலியுறுத்தப்பட்டன. இதில் குடும்பம், இல்வாழ்க்கை, வீடு பேறு என்பவை வாழ்வின் ஓர் அம்சமாக இருந்தன. அதன் பிறகு உருவெடுத்த பக்தி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என குடும்ப அமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி வந்தன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த மதங்கள் ஆகும். (தொ.பரமசிவன், 2016:99) சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் துறவு நெறியை போதித்தன. ஆனால் அவை மக்களிடையே செல்வாக்கு பெறவில்லை. தொல்காப்பியம் கணவனும் மனைவியும் வாழ்நாளின் இறுதிவரை சேர்ந்து வாழ்ந்து அறஞ்செய்ய வேண்டும் என குறிப்பிடுகின்றது. சமணமும் பௌத்தமும் செல்வாக்கு பெற்றிருந்தாலும் அவை போதித்த துறவு நெறி என்பது மக்களால் ஏற்கப்படாததாக இருந்தது. சமணம் பௌத்தம் போதித்த துறவு நெறிக்கு மாறாகக் குடும்பம் என்ற நிறுவனத்தினைப் பேணியது பக்தி இயக்கத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஒன்று என தொ.பரமசிவன் (2016) குறிப்பிடுகின்றார். பக்தி இயக்கங்களில் எழுச்சிக்கு பிறகு திருமணங்களில் வைதீக சடங்குகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன.

அரசு-சமூக வளர்ச்சியின் மிக முக்கியமான அம்சமாக குடும்பங்களும் திருமண நிகழ்வுகளும் இருக்கின்றன. இன்று திருமணம் என்பது சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை தொடர்ந்து ஒரு நிலைப்புத் தன்மையோடு இருக்கச் செய்யும் பண்பாட்டு ஒடுக்குக் கருவிகளாக திருமணம் மற்றும் குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. ”ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு” என குடும்பத்தினை ஐக்கிய நாடுகளின் அமைப்பு வரையறை செய்துள்ளது. சமூக வயமாக்கலும் (Socialization) பண்பாட்டு வயமாக்கலும் (Enculturation) குடும்பத்தில் இருந்து தான் தொடங்குகின்றன. (பக்தவச்சல பாரதி, 2007:342) ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சமூக மனிதனின் ஆதிக்கம் உறைந்து போய்க் கிடக்கின்றது. திருமணம் என்பது மனித வாழ்வினை முழுமையாக்கும் ஒரு கருத்தியல் என கருதப்படுகின்றது. இன்று பதின்ம வயதினைக் கடந்த ஒவ்வொருவருடைய பெற்றோரின் முக்கிய கடமையாக திருமணம் செய்து வைத்தல் இருக்கின்றது. பாலியல் ஒழுக்கத்தையும் தேவையையும் உறுதிபடுத்தும் ஒரு அமைப்பாக திருமணம் உள்ளது.

உணவு, சடங்கு, தொடர்பியல்:
இனக்குழு சமுதாயத்தில் சடங்கே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே சடங்காகவும் அமைந்தன. அச்சடங்குகள் இனக்குழு சமுதாயத்தை இயக்கின. இணைத்தன. அச்சமுதாயம் உருவாக்கிய மதிப்புகளை உறுதி செய்தன. (சுப்ரமணியன், கா. 2011:10) இச்சடங்குகளில் பலி இடுதல், கூடி உண்ணுதல் போன்றவை தவறாமல் இடம் பெற்றிருந்தன. சமூக ஒருங்கிணைப்புக்கு அடிப்படையாக சடங்குகள் இருக்கின்றன. மக்கள் குழுவாக இணையும் பொழுது அங்கு ஒரு முக்கியச் செயல்பாடாக உணவு அமைந்துவிடுகின்றது. இது போல திருமண நிகழ்வுகளில் பந்தி உணவு முக்கியத்துவம் பெறுகின்றது. பந்தி என்பது வரிசையில் அமர்ந்து உண்ணுதல் என்று பொருள். (ஆ. சிவசுப்ரமணியன், 2010:1) பொதுவாக எல்லா சமயத்தினரும் பந்தி உணவினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் சாதிய மேலாண்மை, பொருளாதார வேறுபாடு என்பவை மக்களிடையே, மக்கள் மீது ஓர் அதிகார/ஆதிக்கத்தினை உண்டு பண்ணியது. இசுலாமிய வழிபாட்டில் கந்தூரி விருந்திலும் நொன்புக் கஞ்சி வழங்குவதிலும் இத்தகைய வேறுபாடுகள் களையப்படுகின்றன என ஆ. சிவசுப்ரமணியன் (2010) குறிப்பிடுகின்றார். அம்மன் கோயில் கூழ் ஊற்றும் நிகழ்வுகூட இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமணம் எனும் நிகழ்வானது மணப்பேச்சு, மண உறுதி, மணவிழா என மூன்று நிலைகள் இருக்கின்றன. (தேவநேயப்பாவணர், 2000:17-19) மணவிழாவின் போது பந்தல், அரசாணிக்கால், காப்பு கட்டுதல் போன்ற முன்னிகழ்ச்சிகளும், தெய்வத்தின் முன்னிலையில் தாலி கட்டிக் கொள்ளுதல் (கரணம்), வந்தோருக்கு உணவளித்து தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவை கொடுத்தல் போன்ற பின்னிகழ்ச்சிகளும் முக்கியமான சடங்குகள் ஆகும். கரணத்தோடு கூடிய திருமணத்தை வதுவை மணம் என அழைக்கப்படுகின்றது. வதுவை மணத்தில் பரிமாறப்பட்ட உணவு குறித்து அகநானூற்று பாடல் அளிக்கும் செய்தி
“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை / பெருஞ்சோற் றமலை நிற்ப …” (அகநானூறு:86)
உளுத்தம் பருப்போடு சேர்த்துச் சமைத்த கொழுமையான குழைந்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ என இப்பாடல் பதிவு செய்கின்றது. அகநானூறு 136 வது பாடல் இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெண்சோற்றையும் அளித்தனர் என பதிவு செய்கின்றது. இன்று அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப உணவு பரிமாறுகின்றனர். திருமண விருந்து அக்காலத்தில் வேளைக்கணக்காயிராது. நாட்கணக்காயிருக்கும். எளியர் ஒரு நாளும், செல்வர் ஏழுநாள் வரையும் விருந்தளிப்பர் என தேவநேயப்பாவாணர் (2000) பதிவு செய்கின்றார்.

தமிழகத்தில் பெருவாரியான சமூத்தினரிடையே ‘கடைக்குட்டிக்கு கடலைமிட்டாய் கலியாணம்’ என்ற சொல்லாடல் வழக்கில் உள்ளது. திருமணம் என்பது பெற்றோர், பெரியோர் நடத்தி வைப்பதாகவே இருக்கின்றது. பெற்றோரின் மிக முக்கியமான கடமையாக தான் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல் என கருதுகின்றனர். அப்படி எல்லா குழந்தைகளுக்கும் திருமணம் செய்துவைத்த பிறகு கடைசிப் பிள்ளையின் திருமணத்தின் போது பெற்றோர் தங்கள் வேலையை நிறைவேற்றிவிட்ட ஒரு திருப்தி அடைகின்றனர். அத்தகைய திருமணத்தில் பந்தியில் வழக்கமாக பரிமாறப்படுகின்ற உணவு வகைகளுடன் சேர்த்து கடலை மிட்டாய் அல்லது பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவை வைப்பது வழக்கம். இதனை ’கடலை உடைச்சி கலியாணம்’ என்றும் விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் குறிப்பிடுகின்றனர்.
பொட்டுக்கடலை அல்லது கடலை மிட்டாய் வைக்கப்படுவதின் காரணம், எங்கள் வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம் என்ற செய்தியை குறிக்கும் வகையில் இவை பரிமாறப்படுகின்றது. கொங்கு பகுதியினர் தரும் விளக்கம் என்பது, “இது கடைசி திருமணமன்று. அடுத்த இவர்கள் பிள்ளை பெற்று பேரக்குழந்தைகளின் திருமணமும் நடைபெறும். அதன் தொடர்ச்சியின் அறிவிப்பாக இவை பரிமாறப் படுகின்றன” என கூறுகின்றனர். இங்கு திருமணம் என்பது ஒரு குழுவுக்கான தொடர்பியல் தளம் என்ற அளவில் மட்டுமில்லாமல், குழுவிற்கு வெளியேயுமான தொடர்பியலை நிகழ்த்துகின்றது. அந்த தொடர்பியலை முழுமையாக்குபவையாக இத்தகைய சடங்குகள் இருக்கின்றன. அது உணவின் மூலம் மிக நுட்பமாக வெளிப்படுகின்றது.

இறுதியாக:
திருமணங்களில் பரிமாறப்படும் பந்தி உணவு தொடர்பியல் தளத்தில் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. திருமணம், குடும்பம் ஆகியவற்றின் மூலம் வைதீக மதங்கள் செல்வாக்கு பெற ஆரம்பித்து அதனூடே ஆன சடங்குகள் மூலம் தனது ஆதிக்கத்தினை மக்கள் மீது செலுத்தி வருகின்றது. இதனை எதிர்த்து பின்னாட்களில் திருமண முறைகளில் சீர்திருத்தங்கள் ஏற்பட ஆரம்பித்தன. சித்தூர் மார்க்கசகாய ஆச்சாரியார் பிராமணியத்தையும், மறைமலையடிகளும், திரு.வி.கலியாணசுந்தரனாரும் அஃதுடன் ஆரிய மொழியையும் எதிர்த்து புரட்சி செய்தனர். பெரியார் ஈ.வெ.ரா. இவற்றோடு வீண்சடங்குகளை விலக்கி, திருமணக் கரணத்தைத் (தாலி கட்டுதல்) திருத்தி புரட்சி செய்தார். தமிழர் பண்பாட்டில் இருந்து அந்நியப்பட்ட சடங்குகள் யாவும் தமிழர்களை ஒடுக்கி அதிகாரப் படிநிலைகளை உண்டு பண்ணும் ஒரு கருத்தியல் வடிவமாக இருக்கின்றது. அவ்வகையில் திருமணம் குறித்த சடங்குகள் சாதி வேறுபாடு, பெண்ணடிமை போன்ற கருத்தியல்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

திருமணங்கள் என்பது வீடுகளில், ஊர் மந்தையில் நடைபெற்றன என நாட்டார் தரவுகளில் இருந்து அறிய முடிகின்றது. மக்களுக்கான பொதுவெளி மீதான உரிமைகள் மறுக்கப்பட ஆரம்பித்த போது இங்கு திருமண மண்டபங்கள் உருவாகின. திருமண பந்தியில் பல வகையான உணவு வகைகள் இடம் பெற ஆரம்பித்தன. ஆயினும் வீட்டின் கடைசிப் பிள்ளைக்கு திருமணம் நடக்கும் போது பந்தியில் கடலை மிட்டாய், பொட்டுக்கடலை போன்ற பயிறு வகைகளை வைக்கும் சடங்கு என்பது ஆதிப் பண்பாட்டின் ஒரு தொடர்சியாகக் கருதப்படுகின்றது. இது இறப்புச் சடங்கில் அளிக்கப்படும் பயிறு வகைகளுடன் ஒரு தொடர்பு இருப்பதை அறிய முடிகின்றது. பெற்றோர் தம் வாழ்வு முழுமை (முக்தி) பெற்றதாக கருதி இதை செய்வதாக கருத இயல்கின்றது.

துணை நூற்பட்டியல்:
அன்பு பொன்னோவியம். (2007). உணவில் ஒளிந்திருக்கும் சாதி, சித்தார்த்தா பதிப்பகம்.
சிவசுப்ரமணியன், ஆ. (2010). பிள்ளையார் அரசியல்: மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள், பாவை பதிப்பகம்.
பரமசிவன், தொ. (2016) பண்பாட்டு அசைவுகள், முதல் பதிப்பு: 2001, காலச்சுவடு பதிப்பகம்.
பக்தவத்சலபாரதி, சீ. (2011) பண்பாட்டு மானிடவியல், அடையாளம் பதிப்பகம்.
மாடசாமி, ச. (2015). தமிழர் திருமணம்: அன்று முதல் இன்று வரை, எட்டாம் பதிப்பு, பாரதி புத்தகாலயம்.
தேவநேயப்பாவாணர், ஞா. (2000) தமிழர் திருமணம், பதிப்பாசிரியர்: அ. நக்கீரன், முதற்பதிப்பு:1956, தமிழ்மண் பதிப்பகம்.
சுப்ரமணியன், கா. (2011). சங்ககாலச் சமுதாயம், நியூ செஞ்சுரியன் புக் ஹவுஸ், ப.10.  



புதன், 14 பிப்ரவரி, 2018

நினைவின் வண்ணம்

நம் கோப்பைகளில் நிரம்பியுள்ள தேநீர்
என்ன வண்ணத்தில் இருக்கும்
நம்மை நனைக்கும் மழை
என்ன வண்ணமாக இருக்கும்
புன்னகைத்தவாறே
நீ அனுப்பும் ஸ்மைலிக்கள்
என்ன வண்ணத்தில்
என்னைப் பார்த்து சிரிக்கும்
உன் ஊரில்
நீ செல்லும் பாதையில்
பூக்கும் மலரின் வண்ணம் என்னவாக இருக்கும்
இங்கு என் தேநீர் கோப்பையில்
வானம் மிதந்து கொண்டிருக்கின்றது
உன் நினைவுகளும்...
நீயே சொல்
உன் நினைவின் வண்ணம்
என்னவாக இருக்கும்

பாரதி ஆரோக்கியராஜ்

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தொடர்பியல் தளத்தில் உணவகம்: சமகால பண்பாட்டு அரசியலும் தொழிலாளர் முறையும்

. ஆரோக்கியராஜ்
முனைவர் பட்ட ஆய்வாளர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை


அறிமுகம்:
அனைத்தும் வணிக மயமாகிப் போன சூழ்நிலையில் பண்பாட்டுக் கூறுகளின் தன்மையும் அவற்றின் அற மதிப்பீடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்க வேண்டிய தேவை உருவாகின்றது. கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் நுழைய அனுமதி மறுப்பதில் இருந்த எதிர்ப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான செயல்பாடாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று சிறப்பு கட்டண தரிசனம் என்ற முறை எந்த வகையான ஒதுக்குதலை நிகழ்த்துகின்றது என்பது இன்றைய அரசியலை புரிந்து கொள்ள உதவும். மநு தர்மத்தின்படி ஒரு சமூகத்தினர் கோயிலுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை இன்றைய வணிக சமூகம் அதை மற்றொரு வகையில் மீள் உருவாக்கம் செய்துள்ளது. சமூகம் பல மாற்றங்களை அடைந்து வந்த போதிலும் சமூகத்தில் இருக்கின்ற அதிகார கட்டமைப்பு தன்னை தொடர்ந்து தகவமைத்துக் கொண்டே வருகின்றது. இத்தகைய சூழலில் உலகமயமாக்கல், மதம், மநுதர்மம் குறித்த விவாதங்களை இக்கட்டுரை விவாதிக்க முயல்கின்றது.
இந்திய சமூகத்தில் சாதியின் தோற்றம் என்பது தொழில் அடிப்படையில் பகுக்கப்பட்டது. அது பிறகு பிறப்பின் அடிப்படையில் மாறியது என்ற கருத்தினை வெகு மக்கள் தளத்தில் நம்ப வைக்கப்பட்டுள்ளது. இன்ன தொழில் செய்பவர் இன்ன சாதியினர்; அந்த குடும்பத்தினர் அதை தொடர வேண்டும் என்ற கருத்து பெரும்பாலான மக்களிடையே நம்ப வைக்கப்பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் சாதி பார்ப்பதும், சாதி ரீதியாக இன்ன தொழிலை இவர்கள் தான் செய்ய வேண்டும் என பணிப்பதும் சமூக இணக்கத்திற்கு எதிரானதாகவே அமையும். அது சமூகத்தில் அதிகாரப் படிநிலைகளை உருவாக்கி மக்களை அடிமைப்படுத்துவதற்கு வழிவகை செய்யும். நவீன சமூகமாக அடையாளப் படுத்திக் கொள்கின்ற சமூகம் உலகமயமாக்கலிலும் எவ்வாறு தனது மநுதர்ம கொள்கைகளைக் கடைபிடிக்கின்றது என்பது குறித்த புரிதல் அவசியமாகின்றது. தொழில் முறையின் மூலம் சமூகத்தில் சாதி என்ற கருத்தாக்கம் இன்றளவும் நிலைபெற்று வருகின்றது. கழிவறை சுத்தம் செய்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பணியாட்கள் என்ற பணிகள் பல அளவில் சாதியத்தை தக்க வைக்கும் ஒன்றாக இருக்கின்றது. ஆக ஒரு சமூகத்தின் தொழில் முறை என்பது அச்சமூகத்தின் அதிகார படிநிலைகளை காட்டும் ஒரு காரணியாக இருக்கின்றது.
இன்று தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளம் தலைமுறைகளுக்கான வேலைவாய்ப்புள்ள கல்வி என்றால் நர்சிங், டீச்சர் ட்ரெய்னிங், கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனஜ்மெண்ட் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தான். இவை பெரும்பாலும் சேவைத் துறையாகவே இருக்கின்றது. இந்த வகையான பாடப்பிரிவுகள் உண்மையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு மட்டும் அளிக்கவில்லை. அவர்கள் முன்னேற்றத்தை அவர்கள் உரிமையை பறிக்கக் கூடியதும் கூட. அந்த வகையில் இன்று மிகப் பெரிய வணிக நிறுவனமாக இருப்பது உணவகங்கள். இதன் வலைப்பின்னல் என்பது உலகமயமாக்கலோடு நேரடி தொடர்புடையது. பண்பாட்டு தளத்தில் உணவகங்களில் நடைபெறும் தொடர்பியல் அம்சங்களில் அங்குள்ள தொழிலாளர் முறையும் அவசியமானது. தொழிலாளர் முறை என்பது சமூகத்தின் கருத்தியலை பிரதிபலிக்கும் ஒன்று. இந்த தளத்தில் இருந்து கொண்டு தொடர்பியல் பற்றிய விவாதம் என்பது பன்புலப் பார்வையை விசாலப்படுத்தும். அந்த நோக்கில் இக்கட்டுரை இருக்க முயல்கின்றது.
சாதீய சமூகமும் தொழில்முறையும்:
தொழில், உழைப்பு என்பது மக்களின் சமூக வாழ்வுக்கு மிக தேவையான ஒன்றாக ஆகின்றது. தொல் பழங்குடி நிலையில் இருந்த போது வேட்டையாடுதல், காடுகளில் சுற்றித் திரிந்து தமது உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். வேளாண் சமூகம், இன்றைய நவீன சமூகம் என பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இதில் சமூகத்தில் உருவான தொழில் முறையும் ஒரு முக்கியமான காரணி. மனிதன் தத்தமது உடல் சக்தி, அறிவுத்திறனுக்கு ஏற்றவாறு செய்யத் தொடங்கினர். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. எவரும் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருந்தது. சாதி அமைப்பு உருப்பெற தொடங்கியதும் சாதி அடிப்படையில் தொழில் முறைகள் பகுக்கப்பட்டன.
நால் வர்ண சாதிய முறையை இன்றளவும் இச்சமூகம் பின்பற்றி வருகின்றது. பார்ப்பனன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என நால்வர்ண சாதி பகுப்பு இருக்கின்றது. இந்த நால் வர்ணத்தில்  சேராதவர்கள் பஞ்சமர் என்று அழைக்கப்பட்டனர். முதல் மூன்று வர்ணத்தவருக்கு சேவை செய்யும் பொருட்டு ஏனைய சாதியினர் பணிக்கப்பட்டனர். ‘பள்ளு பறை பதினெண் குடிமக்கள்என்று வகைப்படுத்தி இவர்கள் மற்ற சாதியினருக்கு சேவை செய்ய பணிக்கப்பட்டனர். இது குறித்துஅபிதான கோசம்எனும் நூலில்ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் குடிகள் இருக்க வேண்டும்என்பதைக் குறிக்கின்றது. பஞ்சமர்கள், சூத்திரர்கள் ஆகியோர் மற்ற மூன்று வர்ணத்தவருக்கு பணிவிடை செய்ய வேண்டும். மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்பது மநு தர்மம் சொல்லும் நீதி.
தொழில் வேறுபாடுகளின் தன்மை குறித்து நெஸ்பீல்டு அவர்களின் கருத்து, “தூய்மை, தீட்டு ஆகிய தன்மைகளைக் குறித்து சாதி அமைப்பும் அதன் செயல்பாட்டையும் அறுதியிடும் காரணியாக தொழில்கள் உள்ளன.” என்கிறார். பெரியார் அம்பேத்கர் போன்றவர்கள் அழிக்க முற்பட்ட சாதியை இன்றைய நவீன சமூகம் உலகமயமாக்கல் என்ற பெயரில் மீட்டுருவாக்கம் செய்து வருகின்றது. தொழில் என்பது ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு மூளையையோ உடலையோ வருத்திச் செய்யும் செயலைக் குறிக்கும். ஒரு நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தம் இட நிலைக்கு ஏற்ப உழைப்பினில் ஈடுபடுகின்றனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என திணையைப் பொறுத்து தொழில் இருந்தது. அது சாதியாக உருப்பெற்ற போது சமூக முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்தது. அது இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. அது நம் வாழ்வின் அன்றாட செயல்பாடுகளிலும் இடம்பிடிக்கின்றது. மருத்துவமனைகளில் மருத்துவர் யார், செவிலியர் யார்; அவர்கள் எந்த பின்புலத்தில் இருந்து வருகின்றார்கள் என்பவை நாம் அன்றாடம் கவனிக்கத் தவறும் சாதீய அமைப்பின் விளைவுகள். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இவ்வாறாக தொழில் ரீதியான சாதிய அமைப்பின் தன்மைகளை அது உண்டு பண்ணியுள்ள ஏற்றத்தாழ்வுகளை பல இடங்களில் காண முடிகின்றது. அது மக்களின் உணவுப் பழக்கத்திலும் வெளிப்படுகின்றது.
உணவகங்களில் தொழில் முறைகளும் தொடர்பியல் படிநிலைகளும்:
இன்று உணவகங்கள் என்பது பண்பாட்டு பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான அலகாக உள்ளது. ஒரு சமூகத்தின் அசைவியக்கங்களை அறிந்து கொள்ள அவர் தம் உணவுப் பண்பாட்டை கூர்ந்து நோக்க வேண்டும். உண்மையில் பண்பாட்டாய்வு என்பது வீட்டு அடுக்களையிலிருந்து தொடங்க வேண்டும் என தமிழ் பண்பாட்டாய்வாளர் தொ. பரமசிவன் குறிப்பிடுகின்றார். வீடுகளில் சமைக்கப்படுகின்ற உணவு என்பது பெண்கள் சமைப்பதாகவே இருக்கின்றது. வீடுகளில் இருக்கும் தொழில் முறை என்பது ஆண் என்பவன் தொழில் செய்து பணம் ஈட்ட வேண்டும். பெண் என்பவள் சமைத்து, வீட்டை சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும் என நியதியாக உள்ளது. இந்த முறைமையில் உள்ளது ஆண்மை என்கிற அதிகாரம். அது தான் குடும்பத்தில் ஆதிக்கத்தையும் பாலின பாகுபாட்டையும் உருவாக்கி பெண்ணடிமைத் தனத்தை உருவாக்குகின்றது.
தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் என்பது தனித்த அடையாளம். தமிழகத்தில் உணவு என்பது விற்பனைப் பண்டம் அல்ல. உணவையும் நீரையும் விற்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டது. இலையில் உணவிட்டு விருந்தினரை உபசரிப்பது தமிழர் மரபு. சாப்பிட்ட பிறகு இலையை உள் பக்கமாக மடித்தல், வெளிப்பக்கமாக மடித்தல் என்பது உணவு பரிமாறியவருக்கும் சாப்பிட்டவருக்குமான தொடர்பை பிரதிபலிக்கும் ஒன்றாக இருந்தது. சாப்பிட்ட இலையை சாப்பிட்டவரே எடுக்கக் கூடாது, விருந்து பரிமாறியவர் தான் இலையை எடுக்க வேண்டும். அப்போது தான் அந்த விருந்து முழுமையானதாக கருதப்படுகின்றது. உணவு பரிமாறுதல் இலையெடுத்தல் என்பது அவ்வீட்டு பெண்கள் தான் செய்ய வேண்டும். அதனால் தான் சமையலுக்கு மாதுகரம் என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால் பெரிய விருந்துகளில் சமைப்பது ஆண்கள் தான். அதனை நளபாகம், பீமபாகம் என்றழைக்கின்றனர்.
தமிழகத்தில் உணவகங்களின் தோற்றம் என்பது நாயக்கர் ஆட்சிக்கு பிறகு உருவாக ஆரம்பித்ததாக கருதப்படுகின்றது. அது வரை இருந்த அன்னசத்திரங்கள் உணவகங்களாக மாற ஆரம்பித்தது. 1940களில் உணவகங்கள் என்பது பெண்கள் பரிமாறும் வெளியாக இருந்தது. தரையில் அமர்ந்து உண்ணும் வழக்கம் தான். பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கேயான பிரத்யேக வெளியாக இருந்தது. 1960களில் மேசை நாற்காலிகள் உணவகங்களில் இடம் பெற ஆரம்பிக்கின்றது. ஆண்கள் சப்ளையர்களாக உணவு பரிமாறினர். அந்நாட்களில் சர்வர் என்ற தொழில் ஒரு ஏழை எளிய மக்களின் தொழிலாக உருவாக ஆரம்பித்தது. சர்வர் சுந்தரம் என உள்ளிட்ட திரைப்படங்கள் இதை திரையில் பதிவு செய்துள்ளன. திராவிட இயக்க அரசியல் எழுச்சி பெற தொடங்கிய பிறகு உணவக வெளியில் சாதி ரீதியான அடையாளப் படுத்தல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவானது. இன்று நட்சத்திர உணவு விடுதிகள், இரவு நேர கொண்டாட்ட விடுதிகள், சாலையோர தள்ளு வண்டிக் கடைகள் (கையேந்தி பவன்கள்), வீட்டுக்கே வந்து உணவினை வழங்கும் இணைய சேவைகள் என தமிழர்களின் உணவு பரிமாறும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நுகர்வுப் பண்பாடு உருவாக்கியுள்ளது.
இன்று நகரம் தொடங்கி சிற்றூர் வரை எல்லா ஊர்களிலும் உணவகங்கள் என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. ஒரு ஊருக்கு கோயில், பள்ளிக்கூடம் போல தேநீர் கடைகளும் உணவகங்களும் மிக அவசியமானதாக இன்று உள்ளது. தேநீர் கடைகளும் உணவகங்களும் அந்த ஊரின் சாதி அமைப்பை பிரதிபலிக்கும் வெளியாக இருக்கின்றது. கிராமங்களில் இரட்டைக் குவளை முறை, சாதீய உணவகங்கள் என இவை வெளிப்படுகின்றன.
சிற்றூர்களில் உணவகங்களின் அமைவிடம் என்பது ஊரின் மையப்பகுதியிலோ குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் புழங்கும் வெளியிலோ தான் இருக்கின்றது. அந்த உணவகங்களை நடத்துவது பெரும்பாலும் உயர் சாதியினராகவோ இடைச் சாதியினராகவோ இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் பெரும்பாலும் உணவகங்கள் நடத்துவது இல்லை. உணவக வெளி என்பது அதை ஊர் - சேரி என்ற பாகுபாட்டை பிரதிபலிக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. இதை உணவகங்களில் இருக்கும்சாப்பிட்டவுடன் இலையை எடுக்கவும்என்ற பலகைகளில் கூட பார்க்க முடிகின்றது. இதனை இரு வகையான வாசிப்புக்கு உள்ளாக்க முடிகின்றது. ஒன்று மனித மாண்பு, ஒருவர் சாப்பிட்ட இலையை இன்னொருவர் எடுக்காமல் அவரே எடுப்பது என்ற எண்ணம். மற்றொன்று இன்று உணவகத்தில் எல்லா சாதியினரும் சாப்பிடுகின்றனர்.இவன் சாப்பிட்ட இலையை நான் எடுப்பதா என்ற சாதித் திமிர். பெரிய பெரிய உணவகங்களில் சாப்பாடு பரிமாற ஒருவர் இலையை எடுக்க ஒருவர் என தொழிலாளர்கள் இருக்கின்றனர். இங்கு இலையை எடுப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியினராகவோ வடமாநிலத் தொழிலாளராகவோ இருக்கின்றனர்.
நட்சத்திர உணவகங்களில் உணவு பரிமாறுதல் கலையாக பார்க்கப் படுகின்றது. அதற்காக பாடப்பிரிவை உருவாக்கி அதற்கென கல்லூரிகளும் ஊருக்கு ஊர் உள்ளது. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்து ஏழைக் குடும்பத்து பிள்ளைகளாகவே இருக்கின்றனர். அவர்கள் உணவு சமைத்தல், பரிமாறுதல், விடுதி அறைகளை பராமரித்தல், வாடிக்கையாளர்களிடம் முகம் சுழிக்காமல் சேவை செய்வது போன்றவை தான் அவர்கள் பாடமாக கற்கின்றனர். பார்ப்பனர், வைசியர், சத்திரியர் என்ற மூன்று வர்ணத்தவருக்கு சேவை செய்ய வேண்டும் என மநு தர்மம் எவ்வாறு சாதி ரீதியான ஒடுக்கதலை உண்டு பண்ணியதோ அதை இன்று முதலாளித்துவம் காலத்திற்கேற்ப மறு உருவாக்கம் செய்துள்ளது.
மநு தர்மத்தின் நவீன வடிவாமாக முதலாளித்துவம் உள்ளது. இவை இரண்டும் சமூகத்தின் தொழில் முறையை சாதியத்தினையும் ஆதிக்கத்தினையும் நிலைப்படுத்தும் காரணியாக கொண்டுள்ளது. இன்று உணவகம் மிகப்பெரிய பொருளாதார வலைப்பின்னலைக் கொண்டுள்ளது என்றால் அது உருவாக்கியுள்ள வேலை வாய்ப்புகள் தான். ஆனால் அவை மீண்டும் உருவாக்கியுள்ள தொழில் முறைமைகள் சாதியத்தின் மறு வடிவமே. இருந்தும் இதில் உள்ள ஒரு அம்சம் அது வாய்ப்புகளை எல்லோருக்கும் திறந்து வைத்துள்ளது. ஆனால் இன்னும் எல்லோருக்கும் கிட்டும் வண்ணம் சென்றடையவில்லை.
இறுதியாக:
வீடுகளில் உணவு சமைக்கும் போதும் பரிமாறும் போதும் அந்த வேலையை பெண்கள் தான் செய்ய வேண்டும் என பெண்ணடிமைத் தனத்தை கொண்டிருப்பதும், உணவகங்களில் இலையை எடுக்க ஒரு சாதி, சமைக்க ஒரு சாதி என சாதி அமைப்பை பின்பற்றுவதும் ஆதிக்கத்தை நிலை பெறச்செய்யும் ஒரு செயலாகும். வர்ணாசிரமக் கோட்பாடும் முதலாளித்துவமும் ஒரு அளவில் ஒரே போல செயல் படுகின்றன. இரண்டுமே தங்களுக்கு சேவை செய்ய ஒரு சமூகத்தை கட்டுப்படுத்தி வருகின்றது.
மெக்டொனால்ட், கே.எஃப்.சி போன்ற உணவுச்சாலைகளில் உணவு பரிமாறுதல் என்பது கிடையாது. அங்கு சுயசேவை வசதி தான். இந்த வகையான உணவகங்கள் பெரு முதலாளிகளுக்கான லாபம் தான் நோக்கம் என்ற போதிலும் அது சில சாதகமான மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளது. சுயசேவை என்பதால் தனியே தொழிலாளர்களை பரிமாறுவதற்கு கொண்டிருப்பதில்லை. இது மாதிரியான சுயசேவை உணவகங்கள் தொழிலாளர், நுகர்வோர், முதலாளி ஆகிய உறவில் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குகின்றதாக கருதமுடிகின்றது.

இன்று எச்சில் இலையை எடுப்பது என்பது சாதீய தொழில் அமைப்பின் ஒரு குறியீடாகத்தான் இருக்கின்றது. இதை மநு தர்மமும் முதலாளித்துவமும் சேவை என தொழில்முறையை நிலைப்படுத்தி வருகின்றது. தொடர்பியல் என்பது ஒன்றில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவது, அதன்மூலம் அதிகாரத்தை நிலைபெறச் செய்வது. உணவகங்கள் இத்தகைய அதிகாரத்தை நிலை பெறச் செய்கின்றது.

(டிசம்பர் 16-17 டிசம்பர் 2017 அன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ‘ஆர்” பன்னாட்டு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

திங்கள், 11 டிசம்பர், 2017

முகவரி மாறிய கடிதம்

இன்று காலை எனது அறைக்கு ஒரு கடிதம் வந்தது. முகவரி மாறி வந்த கடிதம் அது. யாரோ மேரி என்பவருக்கு எழுதப்பட்ட கடிதம் அது. எழுதிய நபர் எதற்காக எழுதியிருப்பார். மேரிக்கு ஏதேனும் முக்கிய தகவலை எழுதியிருப்பாரோ. நல்ல செய்தியா? கெட்ட செய்தியா? என தெரியவில்லை. இந்த கடிதத்தை. எழுதியவர் என்ன சூழ்நிலையில் எழுதியிருப்பாரோ. என்ன செய்வது என பிரித்து படித்தேன். அந்த கடிதம் 99 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம்.
அந்த கடிதம்...
கொஹரசெட், மாஸ்
01 அக்டோபர் 1918
அன்புள்ள மேரிக்கு,
நான் இன்று மாலை உன்னுடன் தொலைபேசியில் பேச முயற்சி செய்தேன். நீ அங்கு இல்லை. நான் நாளை மதியம் இங்கிருந்து கிளம்புவேன். ஊர் திரும்புவதற்கு முன் உன்னை ஒரு முறை பார்க்கவும், ஓர் மாலைப் பொழுதை உன்னுடன் கழிக்க வேண்டும் என்றும் ஆசையிருந்தது. நீ நாளை மாலை அங்கிருப்பாயா? உனக்கு வேறு வேலை ஏதாவது இருக்கிறதா? நான் அங்கு வரட்டுமா? மதியம் நான் ஸ்டேஷனுக்கு வந்துவிடுவேன். அங்கிருந்து உன்னைக் கூப்பிடுகிறேன்.
God bless you
சிநேகத்துடன்
கலீல்
காலம் கடந்து முகவரி மாறி வந்த கடிதத்தை என்ன செய்வது. கலீலும் மேரியும் சந்தித்து இருப்பார்களா. இந்த கடிதம் மேரிக்கு சென்றடைந்திருக்கும் என எண்ணி கலீல் இரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பாரோ. இந்த கடிதத்தை ஸ்கேன் செய்து மேரிக்கு மெயில் பண்ணலாமா? என ஒரு யோசனை. டெலிபோன் டைரக்டரிய எடுத்து மேரி யின் வாட்ஸ்அப் நம்பர் இருக்கா என பார்த்தேன். நல்ல வேளை கிடைத்தது. கலீல் நம்பரும் கிடைத்தது. கலீலுக்கு போன் செய்தேன். நம்பர் நாட் ரீச்செபிள். மேரிக்கும் போன் செய்து பார்த்தேன். Call போகவே இல்ல. சரி லட்டர மேரிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தேன். கொஞ்ச நேரத்தில் டபுள்டிக் காட்டியது. கலீலுக்கும் அனுப்பி வைத்தேன். கொஞ்சம் நேரம் கழித்து கலீல் மொபைலில் இருந்து Call வந்தது. நான் கலீல் ஜிப்ரான் பேசுகிறேன். இந்த கடிதம் உங்களுக்கு எப்படி வந்தது. இது நான் மேரிக்கு எழுதியது.
நான் இது மாதிரி முகவரி மாறி வந்ததைக் கூறினேன்.
அந்த கடிதத்தை மேரிக்கும் அனுப்பிவிட்டேன் என்றேன்.
மகிழ்ச்சி! இன்று (டிசம்பர் 11) மேரிக்கு பிறந்தநாள். என்னுடைய வாழ்த்தையும் அவருக்கு தெரிவித்துவிடுங்கள். நான் பயணத்தில் இருக்குறேன். நீங்கள் சொல்லிவிடுங்கள் என கேட்டுக் கொண்டார்.
சரி என சொன்னேன்.
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
நான் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியையும் சேர்த்து அனுப்பினேன். கொஞ்சநேரம் கழித்து ப்ளூ டிக் காட்டியது. ரிப்ளை ஏதும் வரவில்லை. கலீலுக்கு call பண்ணி இது மாதிரி Message sent ஆகிடுச்சி. அவங்க Seen பண்ணதா Blue tick காட்டுது. ஆனா ஏதும் Reply யே இல்லனு சொன்னேன்.
பரவால்ல... நான் காதலிப்பவன். காதலை கேட்பவன் அல்ல. உங்கள் அன்புக்கு நன்றி என அழைப்பை துண்டித்தார்.
மறுபடி Call பண்ணா "நீங்கள் அழைத்த எண்ணை சரிபார்க்கவும்" என்று கம்ப்யூட்டர் வாய்ஸ் சொன்னது.
கலீல் ஜிப்ரானும் மேரியும் சேரவேயில்லை. ஆனாலும் கலீல் ஏன் மேரிய இவ்வளவு லவ் பண்றாரு.
கலீல் ஜிப்ரானின் சிநேகத்தில் இனிமை இருந்தது. அது ஒரு ஆலமரம் போல நட்பால் நடப்பட்டு அன்பால் வளர்க்கப் பட்டது. அதன் வேர்களில் ஈரமும் கிளைகளில் பறவைகளும் விழுதுகளில் குழந்தைகளும் என அன்பு சூழ்ந்த ஒன்றாக இருக்கின்றது. ரிப்ளை வருமா வராதா என்று அவர் எதிர் பார்ப்பதில்லை. உலகிலேயே பிரம்மாண்டமான காதல் அவருடையது.
இதற்கெல்லாம் அவர் வருத்தப்படப் போவதில்லை.
மேரி ஹாஸ்கலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலீல் இப்போதும் எந்த ரயில்வே ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பார். நாளை மாலை மேரியை சந்திப்பாரா? தெரியவில்லை. அறியாத புதிரின் தேடல் தானே காதலின் உன்னதம்.
இருவரின் காதலுக்கும் பேரன்புகள். 

புதன், 1 நவம்பர், 2017

எஞ்சுபொருட்கிளவி

எஞ்சுபொருட்கிளவி

சொல்லோ பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பது எச்சம் என உரை எழுதுகிறார் இளம்பூரணர்.
எஞ்சு பொருட்கிளவி என நூற்பா சொல்கிறார் தொல்காப்பியர்.
பத்து வகையான எச்சங்கள் உண்டென வகுப்பெடுக்கிறார் தமிழாசிரியர்.
நானே சொன்னேன்
நீயோ சென்றாய்
இது பிரிநிலை எச்சம்.
காலம் மறைத்து நிற்கும் தொகைநிலைத்தொடர் வினையெச்சம்.
பிரிந்து தவித்தேன் இது கடந்தகால வினையெச்சம்
காதல் சொல்ல வந்தேன் இது நிகழ்கால வினையெச்சம்
நின் காதலை வேண்டி நின்றேன் இது எதிர்கால வினையெச்சம்
பேசாதே என கடந்தாய் இது என என் எச்சம்
எனை விட்டு விலகி நின்றாய்
புலம்பியவாறே
தலைவனை பிரிந்தாள் தலைவி
எனறேன்.
இது பெயரெச்சம் என சொன்னார் இளம்பூரணர்.
ஒழியிசை எச்சம் எதிர்மறை எச்சம் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை உன் பிரிவில்.
ஒரு கண்ணில் காதலும்
மறு கண்ணில் வெறுப்பும் தருகின்ற தலைவியை
பூவும் நெருப்பும் மொழியும் சொல்லாள் என்றேன்.
உம்மை எச்சம் என்றார் இளம்பூரணர்.
தலைவியே...
நீ வருவாய் என
நீ பேசுவாய் என
காத்திருந்தேன்.
இது என எச்சம் என வெறுப்பேற்றினார் இளம்பூரணர்.
இன்னும்
சொல் எச்சம்
குறிப்பு எச்சம்
இசை எச்சம்
என கடுப்புகளைக் கிளப்பிக் கொண்டிருந்தார் இளம்பூரணர் இலக்கண வகுப்பில்.
தொல்காப்பியரோ இளம்பூரணரோ சொல்ல மறந்து விட்டனர்.
நீ இல்லாமல் இருக்கும் நான் என்பது உயிரெச்சம் என்பதனை...
என் கண்மணியே இலக்கணம் போதும்
கொஞ்சும் இலக்கிய காதல் படிப்போம் வா

வெள்ளி, 27 அக்டோபர், 2017

பாலை நிலத்துக் காதல்

தமிழ் ஊடகங்களில் பெண்கள் மீதான சாதி மற்றும் குடும்ப அமைப்பின் பண்பாட்டு வன்முறை


.ஆரோக்கியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
arockia.raj49@gmail.com
அறிமுகம்:
மனித குல வரலாறு என்பது போர் மற்றும் காதலின் மீது எழுதப்பட்ட ஒன்று என கிரேக்கத்து ஹோமர், சீன செவ்வியல் இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், இராமாயணம் போன்ற உலகின் பல இலக்கியங்களில் இருந்து அறிய முடிகின்றது. தொல்காப்பியம் தமிழர் வாழ்வுதனை அகம் புறம் என இரு பெரும் பிரிவுகளாக பகுத்துள்ளது. உளவியல் அறிஞர்கள் மனித மனத்தினை வன்மமும் காமமும் கலந்ஒன்று என கூறுகின்றனர். மனித உணர்வுகளில் மிக மெல்லிய உணர்வாக காதலையும், முரட்டுத்தனமான பெருமைபடக்கூடிய ஒரு செயலாக வீரத்தினையும் இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழர் வாழ்வில் இவைதான் முதன்மையா? இவை இரண்டு உணர்வுகள் மட்டும் முதன்மையாக பேச என்ன காரணம்? காதல் எனும் உணர்வு எவ்வாறு சமூக அரசியல் தளத்தில் இன்று வரை ஒரு முக்கிய கருத்தியல் வடிவமாக இருந்து வருகின்றது? மனிதக் காதல் எவ்வாறு பக்திக்காதலாக மாற்றப்படுகின்றது? காதல் எனும் உணர்வு மனித வாழ்வினை ஒரு அமைப்புக்குள் எவ்வாறு கொண்டு வருகின்றது? குடும்ப அமைப்பின் உருவாக்கத்தில் கூடவே இணைத்து வருகின்ற சாதி, அரசு அதிகார ஆதிக்கத்திற்கு காதல் எவ்வாறு ஒரு அடிப்படை உணர்வாக அமைகின்றது என்பன போன்ற கேள்விகள் தமிழர் வாழ்வியலை இன்னும் மிக நுட்பமாக அறிந்து கொள்ள உதவும்.

வீரம் காதல் என்ற இரு உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று இயையுடையது. இவை இரண்டும் அரசு உருவாக்கத்திற்கு மிக அடிப்படையாக விளங்குகின்றது. வீரம் எனும் உணர்வு காதலைச் சார்ந்து தான் இருக்கின்றது. ஆக அரசு-அதிகார கட்டமைப்பில் மிக முக்கியமான காரணியாக காதல் எனும் உணர்வு இருக்கின்றது. காதல் எனும் சொற்பதம்அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில்ஆகிய பொருட்களை தருகின்றன என அகராதி குறிப்பிடுகின்றன. (விசயகுமாரன், 2012)

சங்க இலக்கியம் தொடங்கி கவிதை, சிறுகதை, புதினம், நாவல், திரைப்படங்கள், செய்தி ஊடகங்கள், இணையம் ஆகிய அனைத்து வகையான தொடர்பியல் ஊடகங்களிலும் காதல் ஒரு பேசு பொருளாக இருக்கின்றது. அந்த காதல் மனித வாழ்வினை எந்த அளவுக்கு பிரதிபலிக்கின்றது என்ற கேள்வி மிக அவசியமானதாகின்றது. காதல் எனும் உணர்வினைப் போல அது குறித்த பிரதிபலிப்புகளும் அரசின் ஒரு பண்பாட்டு அதிகார வளையத்திற்குள்ளேயே இருந்து வருகின்றது. இன்று காதல் குறித்த வன்முறைகள் எவ்வாறு ஒரு அரசியல் செயல்பாட்டின் ஒரு வடிவமாக இருக்கின்றது. உதாரணமாக சாதி ஒழிப்பு பேசுபவர்கள் காதலின் பொருட்டு நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகளை கண்டித்தும், சாதி அமைப்புகள் காதலினை நாடகக்காதல் என்றும் கூறுகின்றனர்.

காதல், வன்முறை, ஆன்மீகம், சமயம், சாதி, நவீனம், முதலாளித்துவம் ஆகியவற்றிற்கிடையே மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. இதனை இன்று உள்ள திரைப்படங்கள், செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இறைபக்தி, சாதி மறுப்புத்திருமணம், ஆணவக்கொலைகள், வணிக வளாகங்களில் கொண்டாடப்படும் காதலர்தினங்கள், இணையக்காதல்கள், காமம், கள்ளக்காதல், கொலை ஆகியனவற்றிற்கான தொடர்பு என்பது ஒரு காதலின் அரசியல் செயல்பாட்டு தொகை வடிவமாக இருக்கின்றது. இன்று ஊடகங்களில் காதல் பற்றிய செய்திகள் என்பன காதல் திருமணம் செய்தவர்கள் வெட்டிக்கொலை, காதலிக்க மறுத்த பெண் மீது வன்முறை (வெட்டிக்கொலை, அமிலம் வீசுதல், கடத்தி பலாத்காரம் செய்தல்) கள்ளக்காதல் காரணமாக கொலை என இவ்வாறாகத்தான் இருக்கின்றது.

காதல் எனும் கருத்தியல்:
காதல் என்பது இன்னொரு உயிரின் இருப்பினை ஏற்றுக்கொள்வது, நேசிப்பது. அதன்மீது ஆதிக்கம் செலுத்துவது/பணிந்து போவது. ஆக காதல் என்பது இந்த உலகில் தன்னுடைய இருப்புக்கும் இன்னொரு உயிரின் இருப்பிற்குமான விழைவே ஆகும். ”ஒரு மரத்தில் இருக்கும் கூட்டைப் போல, கூட்டில் வாழும் பறவை போல. பறவை பறக்கும் ஆகாயம்என இயற்கையின் இத்தகைய பிரம்மாண்ட காட்சிகள் ஒவ்வொன்றும் இன்னொன்றின் இருப்பினை ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்று உணர்த்துகின்றது. ஆனால் இன்று மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பிரமாண்டம் என்பதே அதிகாரம் சார்ந்த விஷயம். சமயம், சாதி, பெருவணிகம் என்ற அதிகார மையங்கள் இன்றைய பிரமாண்டங்களை உருவாக்குகின்றது. இந்த பிரமாண்டங்கள் இன்னொரு உயிரின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. (தொ. பரமசிவன், சமயம்:16) (ரஸ்ஸல், பெர்ட்ரண்ட்) காதல் எனும் உணர்வு இன்னொரு உயிரின் இருத்தலின் பொருட்டு உருவாகும் விழைவு மட்டுமின்றி அது ஒரு அதிகார அமைப்பின் ஒரு உணர்வியல் உருவகம். அது சமூக பண்பாட்டு தளத்தில் மிக முக்கியமான அரசியல் வடிவமாக உள்ளது. ஆக காதல் என்பதை இருபாலர்களுக்கு இடையே ஏற்படும் இணக்கம், கவர்ச்சி, பற்று என்று மட்டும் புரிந்துகொள்ளாமல் அதனை அரசியல் தொகைப்பாட்டின் வடிவமாகக் கருதவேண்டும்.

காதல் கொண்டவர்களைகாதலில் விழுந்துட்டாங்கஎன கூறுவது வழக்கில் உள்ள சொல்லாடலாகும். ‘தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்எனத் தொடங்கும் திரைப்பாடல் போன்றவை கவனிக்கத்தக்கது. விழுவது என்பது தனது சுயகட்டுப்பாடு இன்றி பலவீனமடைந்து வீழ்வதாகும். ஆக காதல் என்பது அவ்வாறாகவா இருக்க வேண்டும்? காதலில் விழுந்து விடாமல், தன்னுள் இருக்கும் காதலை அறிவது எப்படி என சிந்திக்கவேண்டும் என ஜிஷெக் (2016) கூறுகின்றார். கீழைத்தேய மரபில் தன்னுள் இருக்கும் காதலை அறிதல் என்பது இறைக்காதல் என்ற நிலையில் இருக்கின்றது. ஆண்டாள் திருப்பாவை, பாரதியார் பாடல்கள் என பல தமிழ் இலக்கியங்களில் உள்ளன. தன்னுள் இருக்கும் காதலை அறிதல் என்பது இறைக்காதலாக உருமாறுகின்றது. நடைமுறையில் அந்த காதலுக்கு தடைகள் எதிர்ப்புகள் உருவானதின் காரணமாக, நீதியற்ற செயல்கள் ஆகியவை அதை இறைத்தன்மையாக மாற்றுகின்றன. மதுரைவீரன், காத்தவராயன் போன்றோர் கதைகள் இதற்கு சான்று.

இன்னொரு புறம் பெண்களை துரத்தி துரத்திக் காதலிக்கும் போக்கினை தமிழ்த்திரைப்படங்களில் தொடர்ந்து காட்சியாக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம் என்பது போன்ற மனநிலையை பொது தளத்தில் உருவாக்கியுள்ளது. அதற்கு  இந்த சமூக அமைப்பும் ஒரு பின்புலக்காரணியாக இருக்கின்றது. பெண் என்பவள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு உடையவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு காரணமாகின்றது. ஆனால் ஒரு பெண்என் பின்னால் வராதேஎன்று சொன்னால் கூட அதை எதிர்மறையாக புரிந்து கொண்டு அந்த பெண்ணை தொடர்ந்து பின்தொடர்வது. அதையும் மீறி அந்த பெண் அறைந்தாலோ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தாலும்மோதல்ல தான் காதல் ஆரம்பிக்கும்’ ‘இன்னைக்கு அடிக்கிற கைதான் நாளைக்கு அணைக்கும்என்பன போன்ற மனநிலையை திரைப்படங்கள் பொதுபுத்தியில் உருவாக்கி இருக்கின்றது.

தமிழ் ஊடகங்களில் காதல், வன்முறை:
சமகாலத்திய தமிழ் ஊடகங்களில் காதல் குறித்த சித்தரிப்பு எவ்வாறாக உள்ளது என்ற புரிதலுக்கு தமிழ்சமூக வரலாற்றின் பின்புல அரசியலையும் புரிந்துகொள்வது அவசியமாகின்றது. காதல் என்பது பெண்ணின் மீது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது ஒடுக்குதலை நிலைப்படுத்தி அரசு தன்னை ஒரு அதிகார நிலையிலேயேயும், மக்களை ஒரு பதற்ற நிலையுடனும் வைத்திருக்க முயல்கின்றது. இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த செய்திகள் தினமும் ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றன. அதை ஊடகங்கள் எவ்வாறு செய்தியாக்குகின்றன, ஆதிக்க மனநிலை கொண்ட சமூகம் அதை எவ்வாறு உள்வாங்குகின்றது. பொதுத் தளத்தில் அது உருவாக்கி இருக்கும் கருத்து நிலை என்ன? என்பன போன்ற கேள்விகள் விவாதத்திற்கு உரியன. அதில் ஊடங்களில் கையாளப்படுகின்ற சொல்லாடல்களின் அரசியல் என்பது ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது.

கற்பழிப்பு என்பதனை வன்புணர்வு என்றும், கௌரவக் கொலைகளை ஆணவக் கொலை என்றும், ஒருதலைக் காதலை, துரத்தி துரத்தி காதலித்தலை (Stalking) வன்தொடர்தல் என்சொற்றொடர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் விபச்சார அழகி, கள்ளக்காதல் போன்ற சொற்றொடர்கள் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிலவுடைமை சமுதாயம் உருப்பெற தொடங்கியதன் அடிப்படையாக, குடும்பம், கற்பு, பெண்ணின் புனிதம் போன்ற கருத்தாக்கங்கள் உருப்பெறத் தொடங்கின. நிலம், பெண் ஆகியன ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம், வளமை ஆகியனவாக கருதப்பட்டு அதன்மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட அகமண முறை காரணமாக அமைந்தது. சமூகத்தில் ஒரு ஒழுங்கை உருவாக்க முயன்றது. இன்ன சாதியினர் இன்ன சாதியினரோடு தான் உறவு கொள்ள வேண்டும் என்ஒழுங்கு. ஒழுங்கு என்பதே வன்முறை பொதிந்த ஒரு கருத்தியல் ஆகும். (கு. காரல்மார்க்ஸ், 2016) ஒரு பண்பாட்டில் எங்கு ஒழுங்கிற்கான தேவை உருவாகின்றதோ அங்கு இலக்கியங்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவான இலக்கியங்களின் தொடர்ச்சியாக இன்றைய ஊடகங்களும் திரைப்படங்களும் இருக்கின்றன.

இங்கு காதல் அரசியலின் தொகை வடித்தினை மூன்று பகுதிகளாக காணலாம்.
1. ஆண் திமிர்: ஆதிக்க எண்ணம் கொண்ட ஆண் மனநிலையும் கிட்டதட்ட இதே நிலையில் செயல்படுகின்றன. அதன் காரணமாக தன்னை பிடிக்காத பெண்ணை துரத்தி துரத்திக் காதலிப்பது, அமிலம் வீசுதல், கொலை செய்தல், கடத்தி வன்புணர்வு செய்தல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்திய சமூக மரபில் பெண் என்பவள் ஆணுக்கு அடுத்த படிநிலையில் இருப்பவள். ஆக ஒரு ஆண், ’பெண்ணை தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல விரும்பலாம் காதலிக்கலாம், அந்த பெண் விரும்பவில்லை என்றபோதும்என்ற மனநிலை இருக்கின்றது. காதல் என்பது சமத்துவத்தை உருவாக்க வேண்டும். மாறாக  வன்முறையை உருவாக்கக் கூடாது. ”உயிர்கள் யாவும் தம்தம் உரிமைகளையும், தேவைகளையும் பிறர் தடையின்றியும் பிறர்க்கு இடையூறு இன்றியும் பெறுவதும், ஒரு உயிர் மற்றோர் உயிர்க்கு உதவியாக வாழ்தலுமாம்என பெரியார் ஈ.வெ.ரா. (22.01.1928) கூறுகின்றார். பெரியார் கூறுவது போல அழியட்டும் ஆண்மை என்பதே சமூகநீதியையும் சுயமரியதையையும் சமூக விடுதலையையும் உருவாக்கும் வழியாகும்.

2.சாதி: குறுந்தொகைப் பாடல் கூறும் யாயும் யாயும் யாராகியரோஎன்று இருந்த காதல் சாதியப் படிநிலை உருப்பெற்ற பின்பு காதல் திருமணங்கள் செய்வது என்பது சாதிஅமைப்பிற்கு, அவமானமானதாக கருதப்பட்டு பெற்றோர்களே தம்பிள்ளைகளை கொலை செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனை சாதி அமைப்புகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. ஜீன்ஸ் பேண்ட் போடுவதானால் தம் வீட்டு பெண்கள் மயங்கி விடுகின்றனர். கூலிங்கிலாஸ் போட்டு காதல் நாடகம் போடுகின்றனர் என்ற அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். காதல் திருமணங்கள் நீண்ட நாட்கள் நீடிக்காது, விரைவில் பிரிந்து விடுகின்றனர். என்பன போன்ற காரணங்களை சாதி அமைப்புகள் முன்வைக்கின்றன. ’காதலிக்கலைனா பையன் வெட்டுறான், காதலிச்சா அப்பன் வெட்டுறான்என பெண்களுக்கு இரு வடிவங்களிலும் ஆபத்து இருந்து  கொண்டே இருக்கின்றது. சாதியும் மதமும் மனித குலத்திற்கு எதிரானது என்ற சிந்தனை எல்லோரிடமும் உருவாகுவது இன்றைய தேவையாகின்றது.

3. குடும்ப அமைப்பு: சாதியின் தொடர்ச்சியாக குடும்ப அமைப்பு இருந்து வருகின்றது. கணவன் எப்படிபட்டவனாய் இருந்தாலும் திருமணமான பின்பு பெண் என்பவள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவன் கூடவே வாழ்ந்தாக வேண்டும். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற சொல்லாடல் குறிப்பிடத்தக்கது. குடும்ப அமைப்பினை புனிதப்படுத்த இங்கு காதல் கள்ளம் கற்பிக்கப்படுகின்றது. ஒரு  பெண் ஒருவனை காதலிக்கிறாள். இந்த விடயம் வீட்டினருக்கு தெரியவர உடனே அவர்களின் உறவுக்கார பையனுக்கு அப்பெண்ணை உடனே திருமணம் செய்து  வைத்து விடுகின்றனர். இனி அந்தப் பெண் தனது காதலனை காதலிக்கக்  கூடாது என்ற கருத்தியலை சாதிய குடும்ப அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்த ஆதிக்க மனநிலையின் ஒரு வெளிப்பாடுதான் எதையும் விசாரிக்காமல் கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு என செய்திகள் வருகின்றன. அங்கு நடைபெற்ற கள்ளத் திருமணங்களையோ, குழந்தை திருமணத்தையோ ஊடகங்கள் மூடிமறைக்கின்றன. அந்த ஏழு நாட்கள், மௌனராகம், ராஜா ராணி போன்ற படங்கள் காதலைவிட குடும்ப அமைப்பு புனிதமானது என்ற ஆதிக் ககருத்தியலை உருவாக்கிய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கன.

இறுதியாக:
அன்றாடம் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் இடம்பெறுகின்ற செய்திகளில் கணிசமான அளவு பெண்கள் மீதான வன்முறைகளாக உள்ளது. இன்று தமிழ் ஊடகங்கள் அதனை ஒரு கவர்ச்சியூட்டும் ஒரு வியாபார யுக்தியாகவும் சாதி சமய ஆதிக்க கருத்துகளை திணிப்பதாகவும் இருக்கின்றன. பாலியல் தொல்லை, ஆபாசபடம், விபச்சாரஅழகி, பலாத்காரம், உறவுக்கு இணங்க மறுத்தல் போன்ற சொல்லாடல்களை தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட இன்றைய தமிழ் ஊடகங்களில் காண முடிகின்றது. இந்த மாதிரியான சொல்லாடல்கள் என்ன சொல்ல வருகின்றன. அந்த செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறிப்பிடாமல் இத்தகைய கவர்ச்சிகரமான வார்த்தைகள் வாசகர்களை கவர பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு மதமும் சாதிய படிநிலைகளும் தொடந்து ஆட்சி செலுத்துகின்ற இச்சமூகத்தில் காதல் என்பதே ஒரு அரசியல் தொகை வடிவம்தான். அதனால்தான்  தெய்வீகக் காதல் என்பன போன்ற கருத்துநிலைப்பாடு இங்கு இருக்கின்றது. அந்த தெய்வீகக் காதல் செய்த ஒரு பெண்ணை சாதியை காரணம் காட்டி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த பிறகும்கூட அந்த பெண் தன் காதலன் மீது காதல் வயப்பட்டால் அது கள்ளக்காதலாக மாற்றமடைகின்றது. இங்கு குடும்ப அமைப்பின் புனிதத்தினை காக்க காதலின் மீது களங்கம் கற்பிக்கப்படுகின்றது. குடும்ப அமைப்பு என்பது அரசின் அதிகார மையத்தின் மிக முக்கிய காரணியாக உள்ளது. இது பெண் அடிமைத் தனத்தையும் சாதியப் படிநிலைகளையும் தொடர்ந்து நிலைப்படுத்துவனாக இருக்கின்றன.

காதல் என்பது அன்பை உருவாக்காமல் குற்றங்களையும் கொலைகளையுமே இன்று உருவாக்கியுள்ளது. பாலை நிலத்தில் வறுமை ஏற்பட்டால் அங்கு குற்றங்கள் அதிகரிக்கும் என திணைக்கோட்பாடு கூறுகின்றது. இன்றைய தமிழக சூழலில் காதல் குறித்த குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இன்றைய தமிழர் மனத்தில் காதல் என்ற உணர்வு மட்டும் தனித்து பாலை நிலத்தில் இருக்கின்றது. மக்களும் மனிதமும் சவநிலையில் இருக்கின்றன.

துணைநூற்கள்:
பெரியார் (2010) அழியட்டும் ஆண்மை, பெரியார் திராவிட கழக வெளியீடு
கா. விசயரத்தினம் (2012) சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும்
கு. காரல்மார்க்ஸ் (2016) புத்தகம் பேசுது இதழ் நேர்காணல்

SlavojZizek (2016) Love as a Political Category