பக்கங்கள்

வெள்ளி, 29 ஜனவரி, 2016

மாமதுரை போற்றுதும்…

புகைப்படக் கலைஞர் ஹென்க் ஓச்சப்பனுடன் ஒரு நேர்காணல்
- அ. ஆரோக்கியராஜ்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு, தமிழக பண்பாட்டின் ஆன்மாவினை உள்ளடக்கியுள்ளது. சல்லிக்கட்டுக்குத் தடை என்பது மக்களை பண்பாட்டு அநாதையாக மாற்றுகின்றதுஎன பெல்ஜியம் நாட்டு புகைப்படக்கலைஞர் ஹென்க் ஓச்சப்பன் மதுரை குறித்த தமது அனுபவங்களைப் பற்றி பேசுகையில் இவ்வாறு தனது உரையாடலைத் தொடங்குகிறார். மதுரை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளின் மரபார்ந்த ஆன்மாவினை தனது கேமரா மூலம் படம்பிடித்து வருகின்றவர். மதுரை நகரில் உள்ள பெருவாரியான மக்களுக்கு பரிச்சயமானவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களின் வாழ்வியலை புகைப்படங்களாக பதிவு செய்து வருபவர். சல்லிக்கட்டு ஆதரவாளர். அவருடனான ஒரு நேர்காணல்
1. அது என்ன பெயர் ஹென்க் ஓச்சப்பன்…?
1994ஆம் ஆண்டு நானும் எனது நண்பனும் கொடைக்கானல் செல்வதற்காக வந்திருந்தோம். மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் பேருந்தில் பயணிக்கும் போது எங்களுடன் ஒரு ரிக்ஷா ஓட்டுநரும் பயணித்தார். அவர் கொடைக்கானலில் படிக்கும் தன் பிள்ளைகளுக்கு திண்பண்டங்களை வாங்கிக் கொண்டு அவர்களை பார்ப்பதற்காக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். எனக்கு தமிழ் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் எல்லோருடனும் இயல்பாக பேசி வந்தேன். அவ்வாறு அவருடனும் பேசிக்கொண்டு வந்தேன். அவருடனான அந்த பயணம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அவரிடம் உங்களை மதுரையில் எங்கு சந்திக்கலாம் என்று கேட்டேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் வந்தால் என்னை பார்க்கலாம் என்று சொன்னார். கொடைக்கானலில் எங்களின் வேலை முடிந்த பிறகு மதுரை வந்து அவரை சந்திக்கச் சென்றேன். அவர் மதுரையின் பல பகுதிகளுக்கு என்னை அழைத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல் எனக்குத் தமிழ்மொழியையும் கற்றுக்கொடுத்தார். அவருடைய நட்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அவருடைய பெயர்தான் ஒச்சப்பன். அதைத்தான் ஓச்சப்பன் என என் பெயரோடு சேர்த்து ஹென்க் ஓச்சப்பன் என மாற்றிக்கொண்டேன்.
# ஒச்சப்பன் என்ற பெயர், உச்சாண்டம்மன் என்ற அம்மனின் பெயரில் இருந்து வழங்கி வரும் பெயர். பெண் பிள்ளைகளாக இருந்தால் ஒச்சாயி, ஒச்சம்மாள் என்றும், ஆண் பிள்ளைகளாக இருந்தால் ஒச்சப்பன் என பெயரிடுவது வழக்கம். உச்சாண்டம்மன் என்பது தேவர் சமூகத்தினரின் ஒரு குல தெய்வப் பெயர்.
2. உங்களைப் பற்றியும் உங்கள் இந்திய பயணங்கள் பற்றியும்
நான் பெல்ஜியம் நாட்டின் அஸ்ட்வெர்ப் நகரைச் சேர்ந்தவன். ஜேக்கப்டேனியல் பெட்ரோனெல்லா எனது பெற்றோர். நான் கட்டடக் கலை பயில ஆசைப்பட்டு கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் அந்த வயதில் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக் கோளாறு காரணமாக எனது படிப்பைத் தொடர முடியவில்லை. அதனால் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டேன். பின்பு சிறைத் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். இப்போ எனக்கு வயது 66 ஆகின்றது.
நான் 1987 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்தியாவிற்கு வந்தேன். பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்குத் தான் நான் முதலில் வந்தேன். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நான் இங்கு வந்து கொண்டிருக்கின்றேன். நான் இந்தியாவில் புது தில்லி, ராஜஸ்தான், பாட்டியாலா, கல்கத்தா, டார்ஜிலிங், வாரணாசி, ஹரித்வார், ரிஷிகேஷ், மைசூரு, பெங்களூர், கேரளா உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். புது தில்லியில் உள்ள அனைத்து சமணப் பள்ளிகளுக்கும் சென்றுள்ளேன். இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்த இடம் தமிழ்நாடு. குறிப்பாக மதுரை. நான் கடந்த பிறவியில் தமிழனாக பிறந்திருப்பேன் என அடிக்கடி எனது மதுரை நண்பர்களிடம் கூறுவேன். அந்த அளவுக்கு எனக்கு மதுரை பிடித்துள்ளது. தமிழ்நாடு என் இரண்டாவது தாய் நாடு.
எனக்கு பைக் ஓட்டுவது மிக பிடிக்கும். மதுரையிலிருந்து ராமேஸ்வரம், பின் அங்கிருந்து கேரளாஆலப்பி, மூணார், வால்பாறை ஆகிய இடங்களுக்கு எனது பைக்கிலேயே சென்று வந்துள்ளேன். இந்திய சாலைகளில் வண்டி ஓட்டுவது கொஞ்சம் சவாலனது தான். ஏனெனில் இங்கு போக்குவரத்து நெருக்கம் மிகுந்து காணப்படுகின்றது. டெல்லி சாலைகளில் இரு புறங்களிலும் மூன்று வழிப் பாதைகள் இருந்தாலும் யாரும் அதை பின்பற்றுவதில்லை. அந்த அளவுக்கு நெரிசல் மிகுந்த சாலைகளாக உள்ளன. அதில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வண்டி ஓட்டுவது இன்னும் கொஞ்சம் சவால்தான். ஏனெனில் இது போன்ற சாலைகளில் வண்டி ஓட்டுவதற்கு அகண்ற பார்வைக் கோணம் தேவைப்படுகின்றது. ஹெல்மெட் போடுகின்ற போது பார்வை அளவு குறைவாகத்தான் உள்ளது. சட்டென்று திரும்பிக் கூட பார்க்க முடியாத சூழல். இருந்தாலும் உயிர் காக்க ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற தேவையை உணர வேண்டியுள்ளது.
3. மதுரை பற்றி
மதுரையில் முதலில் எனக்கு பிடித்தது, மக்கள் மரியாதையோடு பழகுவது தான். தமிழகத்தின் தலைநகரமான சென்னையைக் காட்டிலும் மதுரை மக்கள் மரியாதையோடு பழகின்றனர். இங்கு விருந்தினர்களை உபசரிக்கும் பண்பு மிகவும் மரியதைக்குரிய ஒன்றாக உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் குடும்ப உறவுகளுக்கு தமிழர்கள் அளிக்கின்ற மரியாதைக் குணம் என்னை மிகவும் ஈர்த்தது. அண்ணனின் முன்பு தம்பி சிகரெட் கூட பிடிப்பதில்லை. மதுரையில் மிகவும் என்னை ஈர்த்தது, மரபு, மதிப்பு, மரியாதை.
ஆனால் இங்குள்ள மக்களிடம் தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும் ஒரு மிகப் பெரிய பிழையை உருவாக்கி வைத்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகின்ற பெண்களை ஒரு காமப் படத்தில் வருகின்ற நாயகியைப் போல பார்த்து வருகின்றனர். அந்த பிழைக்கு மிக முக்கிய பொறுப்பு ஊடகங்கள் தான்.
4. மதுரை உங்களுக்கு பிடிக்க காரணம்
என்னைப் போன்ற வெளி நாட்டினர் மதுரைக்கு வந்தால் மீனாட்சி அம்மன் கோயிலைத் தான் சுற்றி பார்க்க விரும்புவர். ஆனால் எனக்கு அது மட்டும் போதுமானதாக இல்லை. ஒரு நகரின் ஆன்மா என்பது அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தான் இருக்கின்றது என நம்புபவன் நான். அங்கு தான் மக்களின் உண்மையான அடையாளத்தையும், எதார்த்தமான இயல்பையும் காண முடியும். ஆக நான் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களை நோக்கி எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.
இங்குள்ள கிராமங்களில் மக்கள் தங்கள் மரபையும் அதன் அடையாளங்களையும் இன்னும் பாதுகாத்து வருகின்றனர். இதற்கு மூன்று காரணங்கள் அடிப்படையாக உள்ளது. 1. குடும்பம்: உறவுகளை பிணைத்து வைக்கும் மிக முக்கியமான அம்சமாக இங்கு குடும்ப கட்டமைப்பு இருக்கின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள பந்தம், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே உள்ள பாசம் என்பது உறவுக்கான காப்பீடாக உள்ளது. 2. மதம்: மேற்கத்திய நாடுகளில் மதம் என்பது தனித்த ஒன்றாக உள்ளது. ஆனால் இங்கு மக்களின் வாழ்வில் ஒன்றுடன் ஒன்றாக கலந்திருக்கின்றது. பொட்டு வைத்தல், திருநீரு பூசுதல், பூ வைத்துக் கொள்ளுதல் என சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் மதத்தின் பிரதிபலிப்பு தெரிகின்றது. இது சமுக பிணைப்பை உறுதி செய்கின்றது. 3. நாட்டாரியல்(Folk lore): இங்கு கடவுள் மனிதரால் உருவாக்கப் படுகின்றது. இங்கு இன்னும் அதிகமாக மக்களின் பூர்வீகமான மரபு பின் தொடரப் பட்டு வருகின்றது. இது கிராமங்களை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கின்றது என நான் கருதுகின்றேன்.
5. மதுரை நகரின் தெருக்களைப் பற்றி
மதுரை நகரின் தெருக்களில் மக்களுக்கு இடையேயான சமூகத்தொடர்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனது நாடானா பெல்ஜியத்தில் வீடு, அலுவலகம், ஹோட்டல் ஆகிய இடங்களில் தான் மக்கள் பேசிக் கொள்வர். அங்கு தெரு என்பது வெறும் பயணிக்கின்ற ஒரு இடம் மட்டுமே. இதே நிலை தான் அங்குள்ள கிராமங்களிலும். வீடு, விவசாய நிலம் என மட்டுமே. சாலையில் நடந்து செல்லும் போது கூட பேசிக் கொள்வது அரிது. நான் எனது நாயுடன் நடைப் பயிற்சி செல்லும் போது முதலில் எனது நாய்க்கு தான் ஹாய் சொல்லுவார்கள். அதன் பிறகு வேண்டுமானால் என்னுடன் பேசுவர். ஆனால் இங்கு அப்படியில்லை. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளும் தெருக்களில் தான் நடக்கின்றது. இங்கு மக்களிடையே சமூகத் தொடர்பு அதிகம் உள்ளது. எதிர்படும் மனிதர்களிடம் இயல்பாக என்னால் பேச முடிகின்றது. மேலும் என்னிடம் இருக்கும் கேமரா மூலம் அவர்களை படம் எடுக்கும் போது அவர்களும் என்னுடன் சகஜமாக பேசத் தொடங்குகின்றனர். என்னுடைய நாய்க் குட்டியைப் போன்று இங்கு கேமரா செயல்படுகின்றது.
மேலும் இங்கு தெருக்கள் மிக அழகான ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக கிராமங்களில். மேற்கத்திய நாடுகளில் அழகியலோடு வரையப்படுகின்ற சுவரோவியங்கள் (Graffiti) போன்று இங்கு பெண்கள் வாசலில் கோலம் போடுவது ஒரு கலைத் தன்மையுடயதாக (Street Art) இருக்கின்றது. கோயில் சுவர்களும் அப்படியே. அதில் உள்ள கோடுகள் மிக அழகாக இருக்கின்றது. இப்படியிருக்க இன்னொரு புறம் தெரு என்பது உண்மையில் மாசு பட்டு இருக்கிறதென்றே கருத முடிகின்றது. மிகப் பிரம்மாண்டமான ஃப்ளெக்ஸ் பேனர்கள், சுவர்களில் வரையப்படும் விளம்பரங்கள் என தெரு தனது அடையாளத்தை இழந்து வருகின்றன எனக் கருத முடிகின்றது. எங்கள் நாட்டில் வீட்டு சுவரில் யாராவது அநாவசியமாக விளம்பரம் செய்யும் பொருட்டு பெயிண்ட் ஸ்பிரே கொண்டோ அல்லது பெயிண்ட் மூலமாகவோ ஏதாவது கிறுக்கி மாட்டிக் கொண்டால் அந்த நபர் அதை அழித்து விட்டு மீண்டும் அதே போல் பெயிண்ட் அடித்து தருவதற்கான மொத்த செலவையும் ஏற்க வேண்டும். ஆனால் இங்கு சில நிறுவனங்கள் தங்களை பிரபலப் படுத்திக் கொள்வதற்காக மக்களின் தனிப்பட்ட இடங்களான வீட்டுச் சுவர்கள், பொது வெளிகளைப் பயன்படுத்துவது மக்களின் மீது தங்களது கருத்துகளை திணிப்பதாக இருக்கின்றது.
இங்கு தான் ஒரு பொருளுக்கு அதிகப் படியான விளம்பரங்களைக் காண முடிகின்றது. எங்கள் நாட்டில் நாங்கள் ஒரு பொருளை வாங்கும் போது அந்த பொருளின் விலையை ஒப்பிட்டு பார்த்து, அதன் நிறை குறைகளை அறிந்து அதன் பிறகு பொருட்களை வாங்குவோம். ஆனால் இங்கு அதிகப் படியான விளம்பரங்கள் மக்களை அந்த பொருளை வாங்கச் சொல்லி திணிக்கின்றது. மக்களை எக்ஸ்ப்ளாய்ட் (exploit) செய்கிறது. மக்களின் ரசிக மனோபாவம் மிக உச்சமாக இருக்கின்றது.
6. அதிகமான சமணப் பள்ளிகளுக்குச் சென்று வந்துள்ளீர்கள். சமண சமயம் பற்றியும் தமிழர் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் உங்கள் கருத்து?
சமணமும் பௌத்தமும் சம காலத்தில் உருவான சித்தாந்தங்கள். அவை மதங்கள் அல்ல. அவை வாழ்வை மேம்படுத்துகின்ற தத்துவங்களைக் கொண்டவை. ஆனால் இந்துத்துவம் என்பது மதம். வாய்வழிக் கதைகள் இலக்கியங்களாக புராணங்களாக மாறி கடவுள் என்ற கட்டமைப்பில் உருவானது. பிரம்மா என்ற கடவுளில் இருந்து இந்து மதம் தனது கடவுள்களை விரிவு படுத்திக் கொண்டுள்ளது. திராவிடர்கள் இயற்கையை வழிபட்டவர்கள்.
இந்து மதம் நான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. சமணம் மற்றும் பௌத்த மதங்களை அழித்து வளர்ந்தது. ஆனால் திராவிடர்கள் தங்கள் பண்பாட்டை இன்னும் முற்றிலுமாக இழந்து விடவில்லை. இன்றும் விவசாயிகள் அவற்றை பின்பற்றி வருகின்றனர். கார்த்திகை தீபம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான ஒரு பண்டிகை. அது போல ஹோலிப் பண்டிகையை என்பது மிக நுட்பமாக நோக்கினால் அதன் அடிப்படை திராவிடம் என்பது புரியும். நான்காம் நூற்றாண்டில் இந்து மதம் எல்லா ஆவணங்களையும் அழித்தது. ஆனால் சமணர்கள் தங்களது ஆவணங்களைப் பாதுகாத்து வந்துள்ளனர். அதை இன்றும் கூட நூலகத்தில் பாதுகாத்து வருகின்றனர் சமணர்கள்.
7. ஜல்லிக்கட்டு குறித்த உங்களின் நிலைப்பாடு?
ஜல்லிக்கட்டு விவசாயிகளின் மிகவும் பழமையான விளையாட்டு. இது தமிழக கிராமங்களின் ஆன்மாவினை உள்ளடக்கியுள்ளது. மக்களின் பாரம்பரியமான பண்பாடுதான் அந்த சமூகத்தின் ஆன்மாவாக உள்ளது. ஒரு தேசம் தனது ஆன்மாவினை தொலைத்துவிட்டு எதை நோக்கி பயணிக்கின்றது? பாரம்பரிய பண்பாட்டினை இழந்த தலைமுறையினர் பண்பாட்டு அநாதைகளாக கருதப்படுவர்.
8. PETA போன்ற அமைப்புகள் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை கோரி வழக்குத் தொடர்ந்து போராடி வருகின்றன. இவ்விளையாட்டு எருதுகளை கொடுமைப் படுத்துவதாக கூறிவருகின்றனர். அது குறித்த உங்கள் கருத்து?
அமெரிக்காவைச் சேர்ந்த PETA என்ற மிருகநல அமைப்பு ஜல்லிகட்டுக்கு எதிரான வேலைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. ஜல்லிகட்டுக்கு தடைவாங்க முக்கிய காரணமாக விளங்கியதும் இந்த PETA அமைப்புதான். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான நாய் குட்டிகளையும் பூனைக் குட்டிகளையும் கொல்லும் இந்த PETAவிற்கு ஜல்லிகட்டு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? மாடுகளை மனிதர்கள் வளர்க்கவே கூடாது, பால் அருந்தவே கூடாது மாடுகளை கொண்டு சென்று காடுகளில் விட்டு விட வேண்டும் என்று கூறும் இந்த PETA அமைப்பு நம் விவசாயிகளின் எதிரி. தமிழர்களின் எதிரி.

சல்லிக்கட்டு என்பது காளைகளை வதைக்கும் ஒரு விளையாட்டு அல்ல. சல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிறகுதான் களத்தில் இறக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எருது பிடி விளையாட்டில் நடைபெற்று வந்து சூது காரணாமாக அங்கு இந்த அமைப்பு போராடி தடை வாங்கியது. அதே மனோநிலையில் சல்லிக்கட்டு விளையாட்டையும் PETA (இந்தியா) அமைப்பு அணுகி வருகின்றது. இங்கு சல்லிக்கட்டு என்பது பண்பாட்டின் ஆன்மா என்பதை உணர வேண்டும்.

நன்றி: தின இதழ், 13-14, சனவரி, 2016

வெள்ளி, 21 நவம்பர், 2014

ஓணான்

ஓணான்!
உனது ஈர்ம பார்வையை மிக விரும்புகின்றேன்.
அதனாலே! ஓணான்...
உன்னைக் கண்டு வியக்கின்றேன்.
நீ... உலகின் ஈர்மத் தன்மையை
எதிர் கொள்கின்றாய் மிக சாதூர்யமாக.
மனசுக்கும் அறிவுக்கும் இடையில் உள்ள
தூரத்தைக் கடந்து பயணிக்கும் வாழ்வுதான்
இங்கு வாய்க்கப்பட்டு இருந்தாலும்
இரு முடிவில்லா எல்லைகளுக்குஇடையே
அலைவுறும் இந்த ஆன்மாவினை என்ன செய்ய
இடையிடையே கொஞ்சம் அலறல்களும்
நகரின் பெருங்கூச்சல்களும் வேறு.
உன்னைப் போலவே இருக்க விரும்புகின்றேன்.
உலகின் ஈர்மத் தன்மையை ஏகாந்தமாய் உணர...
என் முன்னாள் இருப்பவை...
எனக்கு மிக பிடித்தது ஒன்று.
எனக்கு தெரிந்தது மட்டும் இன்னொன்று.
நான் தேடுகின்ற ஒன்று.
நான் கண்டு கொண்ட ஒன்று.
இரண்டும் வேறு வேறு அல்ல.
ஒன்றெனவே கருதுகின்றேன்.

I have put duality away,
I have seen that the two worlds are one;
One I seek, One I know,
One I see, One I call
- Rumi

திங்கள், 8 செப்டம்பர், 2014

பெண், தொடர்பியல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகம்

இந்த சமூகத்தில் பாரம்பரியம், ஒழுக்கம், கற்பு என்று பன்னெடுங்காலமாக கற்பித்து வருகின்ற அறநெறிகள் மீது, பன்னாட்டு வணிகப் பண்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் மிக நுட்பமான ஒன்றாகவே திகழ்கின்றது.
ஏற்கனவே உள்ள கருத்துகளின் மீது புதிய சாயம் பூசிக் கொள்வதைப் போன்றுதான் அந்த மாற்றங்கள் உள்ளன. 
சென்ற மாதம் வெளிவந்த ஏர்டெல் குழுமத்தின் இந்த விளம்பரம் 
(http://www.youtube.com/watch?v=_4WlLBGQSWc

அந்த மாற்றங்களை சற்று அடிக்கோடிட்டு காட்டுகின்றது.
அதில் ஒன்று...
கணவன் மனைவிக்கு இடையே உள்ள செல்லமான ஊடலா? அல்லது பெண்ணாதிக்கமா?
1. இந்த விளம்பரத்தில் Boss என்று அந்த பெண்ணை உருவகப் படுத்துகின்றனர். மொழியியல் அடிப்படையில் பார்க்கும் போது அது ஒரு ஆண்பாலை சுட்டுகின்ற மொழியாகும். ஒரு அலுவலகத்தில் உயர் அதிகாரியை 'Man'ager என்று தான் நாம் அழைத்து வருகின்றோம். ஒரு பெண் தலைவியை ஆங்கிலத்தில் (பிரிட்டிஷ்) Dame சொல்லினால் குறிப்பிடுவது சற்று சரியானதாக இருக்கலாம்.
2. உயர் அதிகாரியான அந்த பெண் ஒரு உயர் அதிகாரியாக வேலையை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டிகிறார். (கவனிக்க... கட்டளையிடவில்லை. Sorry Guys you have to manage it.) பிறகு அந்த பெண் வீட்டிற்கு சென்றவுடன் தன்னுடைய கணவனுக்காக சமைக்க ஆரம்பிக்கிறாள். கணவனை சீக்கிரம் வருமாறு ஃபோனில் கூறுகிறாள்.
3. அலுவலகத்தில் கணவன் என்றும் பாராமல் இந்த வேலையை விரைந்து செய்தே ஆக வேண்டும் என்று கூறுகிறாள்.
இது குறித்து நண்பர்கள் என்னிடம் பகிர்ந்த கருத்துகள் சில...
* பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொண்டு உயர் அதிகாரிகளை கவர்ந்து விரைவில் உயர் பதவிக்கு சென்றுவிடுகின்றனர்.
* ஆண்கள் தம்மு, தண்ணி அப்படினு அடிக்கிறதால வேலையை கொஞ்சம் பொறுமையா செய்து முடிக்கிறாங்க. பொன்னுங்ககிட்ட அந்த பழக்கம் இல்லாதனால அவங்க கவனம் வேலையில மட்டும் இருக்கிறதால் சீக்கிரம் உயர் பதவியை அடைகின்றனர்.
* பெண்களின் குணாதிசியமே அவர்கள் மென்மையானவர்கள். அவர்கள் எதையும் எளிதில் எடுத்துக் கொண்டு தங்கள் வேலையில் கவனமாக இருப்பர். அலுவலக வேலையானாலும் குடும்ப வேலைகளானாலும் அக்கறையுடன் இருப்பர்.
ஒரு வகையில் இந்த சமூகம் குடும்பம் என்ற அமைப்பின் மூலம் பெணகளின் உழைப்பை சுரண்டி வருகின்றது. (இரட்டைச் சுரண்டல் - அலுவலக உழைப்பு + வீட்டு வேலைகள்) ஆனால் இதே சமூகம் பெண்கள் இரவுநேரப் பணிகளில் ஈடுபடுவது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றது.
இறுதியாக...
”சில சமயம் ஒரே ஒரு ஸ்மார்ட் ஃபோன் உங்க வாழ்க்கையில மேஜிக்க ஏற்படுத்தும்” என்று இந்த விளம்பரம் கூறுகின்றது. ஆனால் அது எத்தகைய மாற்றம் என்று விளங்கவேயில்லை.


"Managera irunthum kanavanukku vagaivagaiya aaki podaravala kaanbithu irukkira saamarthiyam ungalai ponra aankalukkuthaan varum" https://www.facebook.com/sudaroli.vel?fref=ufi

"சேல கட்டினா மேலாளறாம் t - shirt jeansயும் போட்டிருந்தா மணைவியாம். புரியல( முடியல ) இது என்ன குறியிடா இருக்கும்"https://www.facebook.com/mrk88520?fref=ufi


வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பண்பாட்டு விளையாட்டு (Cultural Play)

விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்ற தளத்தில் இருந்து விலகி பல தளங்களில் செயல்பட்டு வருகின்றது. ஒரு சமூகத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பவை அந்த சமூகத்தின் பண்பாட்டு அசைவியக்கங்களை பிரதிபலிப்பவையாக உள்ளன. சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுகளின் வழியே வெளிப்படுத்துகின்றது. (தொ. பரமசிவன், 2009, 90). விளையாட்டு என்பது மனித பண்பாட்டு உருவாக்கத்தின் அடிப்படைக் கூறு.(Johan Huizinga, Homo Ludens, 1938). விளையாட்டு என்பது சமூக பண்பாட்டு கட்டமைப்பு, சமூக நெறிமுறைகள் ஆகியவற்றோடு தொடர்புடைய ஒன்றாகவே இருந்து வருகின்றது.
Roland Barthes இசை குறித்த தன் Musica Practica என்ற கட்டுரையில் இசை இரு வடிவங்களில் உள்ளதாக குறிப்பிடுகின்றார். 1) இசைப்பது 2) கேட்பது என அவர் குறிப்பிடுகின்றார். இரு வகையான கலை வடிவமும் தனக்கான வரலாறு, சமூக மதிப்பீடுகள், கலைத் தன்மை மற்றும் சிற்றின்ப தன்மையில் மாறுபடுகின்றது என குறிப்பிடுகின்றார். Barthes இன் இந்த கருத்தினை விளையாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க இயல்கின்றது. இவரது கருத்துப் படி விளையாட்டினை இரு வகையாக பகுத்துக் காணலாம்.
  1. விளையாடுவது (Played)
  2. வேடிக்கைப் பார்ப்பது (Audience)
இவை இரண்டு வகையான விளையாட்டு வடிவங்களும் பல தன்மைகளில் மாறுபடுகின்றது. வரலாறு, சமூகவியல், தனித்திறமை, சிற்றின்பத் தன்மை, அரசியல் பொருளாதாரம் ஆகிய தளங்களில் பல வேறுபாடுகளைக் கொண்டு பண்பாட்டு மாற்றங்களை வடிவமைகின்றது.
வரலாற்றின் அடிப்படையில் விளையாட்டு:
ஒரு சமூகத்தில் விளையாட்டு என்பது அந்த சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு பொருளாதார மாற்றங்களின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் நாடக வெளிப்பாடு என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள முடிகின்றது. விளையாட்டு என்பது தொன்மைச் சமூகத்தில் பொழுதுபோக்கு என்ற அர்த்தத்தில் இருக்கவில்லை. அவை அடுத்த தலைமுறையினருக்கு அந்த பகுதியில் உள்ள பெரியவர்கள் / முன்னோர்கள் கற்றுக் கொடுக்க விரும்பிய கருத்தியல் எண்ணங்களின் செயல் வடிவம். விளையாட்டின் மூலம் குழு உணர்வு, இன உணர்வு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் போரிடல் போன்ற நெறிமுறைகளைக் கற்றுக் கொடுத்து வந்தனர். மேலும் அந்த சமூகத்தில் ஏற்பட்ட சமூக மாறுதல்களும் கருத்தாக்கங்களும் விளையாட்டுகளில் பிரதிபலித்தன. தமிழ் சமூகத்தில் கபாடி, நாடு பிடித்தல், கல்லா? மண்ணா?, போன்ற விளையாட்டுகள் சமூக வெளி சார்ந்த உரிமைகளின் வெளிப்பாடாக உள்ளன. ''ஆடு நரி ஆட்டம்'' என்ற விளையாட்டு வேட்டைச் சமூகத்தில் உருவான ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு எல்லை மற்றும் உடைமை பாதுகாப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுப்பவையாக உள்ளன. இந்த விளையாட்டு சமூகத்தில் நிலவும் வர்க்கப் படிநிலைகளை பிரதிபலிப்பவையாக உள்ளது. ''ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்திச்சி'' என்ற விளையாட்டு தமிழகத்தில் முகமதியர்கள் படையெடுப்பின் பொழுது தமிழகத்தில் உள்ள பெண்களை மணந்து கொள்ள விரும்பி இழுத்துக் கொண்டு சென்று விடுவர். அந்த பெண் தான் மணமானவள் என்று கூறியதும் அவர்களை விட்டுவிட்டனர். இந்த நிகழ்வின் வரலாற்று எச்சம் தான் இன்று பெண் குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டு. 
குழந்தைகள் விளையாடும் பெரும்பாலான விளையாட்டுகள் பெரியவர்களின் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் ஒரு கற்பனைத் தன்மைக் கொண்டதாக உள்ளது. குழந்தை வளர் இளம் பருவத்தில் நிகழும் மாற்றங்களை இது பிரதிபலிக்கின்றது. இதனை பிராய்டு Latency stage என குறிபிடுகின்றார். 
சமூகவியலின் அடிப்படையில்:
விளையாட்டு என்பது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
  • வெளி மற்றும் கால அளவு
  • தொழில்
  • பாலின உறவு 
  • வயது 
ஆகியவற்றை அடிப்படையாக உள்ளது. 
விளையாட்டில் தனித்திறமை வெளிப்பாடு:
விளையாட்டின் பொழுது விளையாடப்படும் நபர், பார்வையாளர் ஆகியயோர் ஒவ்வொருவரும் தனித்தனி வகையில் தன்னை வெளிக்காட்ட முனைகின்றனர். பார்வையாளர்கள் எழுதிக் காட்டும் வாசகங்கள், உற்சாகமூட்டும் நடனம், குரலொலிகள் மற்றும் ஆரவாரங்கள். 
விளையாட்டின் சிற்றின்பம்:
விளையாட்டு எனபது பாலுணர்வு விருப்பங்களை குறியீட்டு அடிப்படையில் பொதுத் தளத்தில் வெளிப்படுத்தும் ஒரு செயலாகவும் இருந்து வருகின்றது. வெகு தளத்தில் விளையாட்டு என்பது பாலுணர்வு விருப்பங்களை நிவர்த்தி செய்பவையாகவும் இருந்து ஆக வேண்டிய கட்டாயத்தினை நவீன சமூகம் கட்டமைத்துள்ளது. பொதுவாக விளையாட்டு என்பது ஆண்களின் பால் விருப்பத்தினை வெளிப் படுத்துபவையாக உள்ளது. விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் வடிவம் கூட ஒரு வகையில் ஆண் விருப்பத்தின் வெளிபாடுதான். கால்பந்து விளையாட்டு என்பது "ஆண்குறி உந்துதல்'' என்ற பிராய்டின் கருத்தின் ஒரு வடிவம் தான். தன் இன பெண்களின் மீது வேறு ஆண்கள் உரிமை கொள்ளக் கூடாது. அது அவர்களின் இனத்திற்கு ஏற்பட்ட ஒரு தோல்வியாக கருதப்படுகின்றது. இந்த கருத்து வெளிப்பாடு தான் கால்பந்து விளையாட்டு. பாண்டவர்கள் விளையாடிய சூது விளையாட்டும் இத்தன்மைக் கொண்டது. 
விளையாடும் பொழுது விளையாடுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் வெளிக்காட்டும் உடல் அசைவுகள், அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் ஆகியனவும் இதன் அடிப்படையில் பொருட்கொள்ளத்தக்கது. IPL விளையாட்டில் ஆடும் நடன மங்கைகள் ஆண் மைய சமூகத்தின் சிற்றின்பவிருப்பத்தின் ஒரு வெளிப்பாடு.
விளையாட்டின் அரசியல் பொருளாதாரம்:
விளையாட்டு விளையாடுவது, வேடிக்கைப் பார்ப்பது என்பது அரங்க செயல்பாடுகளைத் தாண்டி அது உலகளாவிய பொருளாதாரத்தினை வடிவமைக்கும் ஒரு காரணியாக விளங்குகின்றது. விளையாட்டு என்பது ஒரு சந்தைப் பொருளாக இங்கு பரிணமிக்கின்றது.

சனி, 24 ஆகஸ்ட், 2013

''கலை''யும் நினைவுகள் வாயிலாக பண்பாட்டு அரசியல்

ஒரு சமூகத்தின் அசைவியக்கத்தினை அறிய அந்த சமூகத்தினை பல தளங்களில் அணுகுதல் என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வகையில் ஒரு சமூகத்தின் கலைப் படைப்புகள் என்பவை அந்த சமூகத்தினை பற்றி அறிய உதவும் ஒரு தொடர்பியல் ஊடகம். ஓவியங்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் ஆகியன கலைத்தன்மை வாய்ந்த ஒரு ஊடகம் என்ற அளவில் மட்டுமல்லாது அவை மூலதனம் சார்ந்து இயங்கும் ஒரு உற்பத்தி பொருள். கருத்தியல் அளவில் மக்களை ஒடுக்கும் ஒரு ஆயுதம். பண்பாட்டளவில் உழைக்கும் மக்களை வெகுண்டெழ செய்யும் ஒரு போர் வாள். 

ஓவியங்கள், இசை, நடனம், சிற்பங்கள், திரைப்படங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்பவை வெறும் கலைத்தன்மை சார்ந்த ஒரு பொருள் மட்டுமன்று. அவை மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பவை. மக்களின் ஒருங்கிணைந்த எண்ணங்களின் ஒரு பண்பாட்டு நினைவுகளை உற்பத்தி செய்யும் ஒரு பொருள்.

ஜெர்மன் அறிஞர் Jan Assmann பண்பாட்டு நினைவு என்பது, "கடந்த கால நினைவுகள், பண்பாடு மற்றும் சமூகம் ஆகிவற்றோடு தொடர்புடைய ஒன்று என குறிப்பிடுகின்றார்.
பண்பாட்டு நினைவுகளின் தன்மைகளாக ஆறு தன்மைகளை குறிப்பிடுகின்றார். 
  1. பருப்பொருள் சார்ந்த அடையாளம் (The concretion of identity)
  2. மறுகட்டமைகும் தன்மை (capacity to reconstruct)
  3. ஒருங்கமைவு (Formation)
  4. நிறுவனமயம் (Organization)
  5. கடமை (Obligation)
  6. எதிர் கருத்தாக்கம் (Reflexivity)
  • செயல்முறை சார்ந்த எதிர்ப்பு (practice-Reflexive)
  • சுய எதிர்ப்பு (Self-Reflexive)
  • சமூக அமைப்பு சார்ந்த எதிர்ப்பு 
கடந்த காலம் பற்றிய நினைவுகள் என்பது நிகழ்காலத்தை சார்ந்தே உள்ளது. அதாவது, கடந்த கால நினைவு என்பது தொடர்ந்து மாறி வரும் தன்மை கொண்டது. (Pierre Nora, Rethinking France: Histories and Memories, Vol. 4, 2010) 
சமூகவியல் அறிஞர் Paul Connerton, உள்ளடக்கிய நினைவு(Embodied Memory) என்ற சொற்பதத்தை பயன்படுத்துகின்றார். இவரின் கருத்துப்படி, மனித உடல் என்பது நினைவுகளின் கொள்கலன். இவர்கள் இருவரின் கருத்துகளில் இருந்து, நினைவுகள் என்பவை இரு வகைமை கொண்டவை என புரிந்து கொள்ள முடிகின்றது.
  1. அகநினைவுகள் (தன்னை அறியாமலே மரபு வழியாக கடத்தப்படுவது)
  2. புறநினைவுகள் (நிகழ் கால சம்பவங்கள் கட்டமைக்கும் நினைவுகள்)
Siegfried Kracauer, நினைவுகள் பற்றி கூறும் போது நவீன தொழில்நுட்ப வடிவம், நினைவு எனும் கருத்துக்கு அச்சுறுத்தலாக உளது என குறிப்பிடுகின்றார். இவரது கருத்தும் Pierre Noraவின் கருத்தும் அடிப்படையில் ஒன்றாக திகழ்கின்றது.
இந்த கட்டுரையில் பண்பாட்டு நினைவுகளாக Jan Assmann குறிப்பிடும் தன்மைகளை தமிழகத்தின் சம கால அரசியலோடு ஒப்பிட்டு விவரிக்க முற்படுகின்றது. பண்பாட்டு நினைவுகள் என்பது மக்களின் கலைத் தன்மை சார்ந்த பொருள் சார்ந்த நினைவுகளுடன் தொடர்புடையது. நடுகல், முதுமக்கள் ஈமத்தாழி, செப்பேடுகள், கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகியன மக்களின் கடந்த கால நினைவுகளை உயிர்புறச் செய்கின்றன. அந்த வகையில் அடுத்த தலைமுறையினருக்கு நினைவுகளாக எஞ்சி நிற்பவைகளை நிர்மாணிப்பவை அரசே. சோழர் கால நினைவுகளாக இன்று நமக்கு இருப்பது தஞ்சை பெருங்கோயில் மட்டுமே. ஆனால் இராஜராஜசோழனின் ஏகாதிபத்தியம், வன்முறை பற்றிய நிகழ்வுகளின் வரலாற்றை இன்று பேசப்படுவதில்லை. இங்கு நினைவுகளை கட்டமைப்பதாக கோயில் எனும் கட்டிடக்கலை வடிவம் பயன்படுகின்றது. 
இன்றைய சமகால சூழலில் ஆளும் திராவிட கட்சிகள் தத்தம் பங்குக்கு ஏற்ப போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பற்றிய வரலாற்றினை கலை வடிவம் மூலம் நிறுவி வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழகம், தங்களது ஆட்சி சிறப்பினை தலைமைச் செயலக கட்டிடம், திருவள்ளுவர் சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழி மாநாடு இலச்சினை, இலவச திட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் கட்டப்பட்ட பாலங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகியனவற்றின் மூலமாக வெளிப்படுத்த முல்கின்றனர்.


அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தங்களது ஆட்சி சிறப்பினை ம.கோ.இரா. நினைவக நுழைவு வாயில், சென்னைப் பல்கலைக்கழக நுழைவு வாயில், முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிட மாற்றங்கள், விலையில்லா திட்டங்கள் ஆகியனவற்றின் மூலமாக நிறுவ முற்படுகின்றனர்.
(இங்கு கட்சிகள் என்று குறிப்பிடுவது தலைமையை மட்டுமே.)
Madras Cafe என்ற திரைபடம் குறித்த சர்ச்சைகள் என்பவை பண்பாட்டு நினைவுகளோடு தொடர்பு படுத்தி பார்க்க முடிகின்றது. அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் நினைவுகள் குறித்த செயல்பாட்டோடு தொடர்புடையதாக உள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்பாடுகள் என்பது பண்பாட்டு நினைவுகள் மீதான உரிமைகளை வெளிக்காட்டுவதாக அமைகின்றன.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

போரும் கலையும்

கலை என்பது பொய்த் தன்மைக் கொண்டது. ஆனால் அவை உண்மையை உணரத் தூண்டுபவையாக இருக்கும். - பாப்லோ பிக்காசோ 
War Pieta
போரில் இறந்த தன் மகனின் இறந்த உடலை வாரி அணைத்து அழும் ஒரு தாயின் கதறல்.
(Max Ginsburg - பிரான்ஸ் நாட்டு ஓவியர்.)
Foreclosure
வீதிகளுக்கு வெளியேற்றப்பட்ட நடுத்தர வர்க்கத்து மக்களின், மன வேதனையையும் ஏமாற்றங்களையும் காட்சி படுத்திய ஒரு ஓவியம்.
Torture Abu Ghraib 
ஈராக்கில் உள்ள Abu-Ghraib சிறையில், அமெரிக்க இராணுவத்தினரால் கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் மக்களை பதிவு செய்த ஒரு ஓவியம். அரசு அதிகாரத்தில் உள்ளவர்களின் குரோத எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இந்த ஓவியம் உள்ளது.
ஒருநாட்டு மக்களின் மீது போர் தொடுக்கும் போது ஒரு அரசு முதலில் அந்த நாட்டின் செல்வங்களை கைப்பற்ற முயல்கின்றது. பிறகு அந்த நாட்டு வளமையை அழிக்க முற்படுகின்றது. இயற்கை வளம் மற்றும் மனித வளத்தை அழிப்பதை செய்கின்றனர். ஒரு நாட்டு மக்களின் மீது அதிகாரத்தை செலுத்த அவர்களின் பண்பாட்டின் மீதும் அங்குள்ள பெண்களின் மீதும் வன்முறை செலுத்துகின்றது. ஆதிக்கத்தை அடுத்த தலைமுறை வரை நீடிக்க இனப்பெருக்கத்தை சிதைக்க முற்படுகின்றனர். எல்லா நாட்டு இராணுவமும் போரில் ஈடுபடும் போது பெண்களின் மீது வல்லுறவு கொள்வது இயல்பான ஒன்றாகவே இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக ஆண் வாரிசுகள் கொல்லப்படுவதும், பெண் பிள்ளைகளை எதிரி நாட்டினர் மணந்து கொள்வதும் நிகழ்ந்து வருகின்றது. அரசின் குரோத உணர்வுகள் மற்றொரு நாட்டின் செல்வம், பண்பாடு, மற்றும் இனவிருத்தி ஆகியவற்றை அழிக்க முற்படுகின்றது.
The Third of May 1808
ஸ்பானிஷ் ஓவியர் Francisco Goya வின் ஓவியம். மாவீரன் என்று கூறிக்கொள்ளும் நெப்போலியனின் படைகள் பெனின்சுலா நாட்டு மக்களின் மீது நடத்திய தாக்குதலை சுட்டும் ஒரு ஓவியம். இந்த போர் பின்னாளில் பிரெஞ்சு புரட்சிக்கு வித்தாய் அமைந்தது.
23, July, 1983
சிங்கள ஓளிப்பட வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க, இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம். நிர்வாணமாக்கப்பட்ட இளைஞனைச் சுற்றி சிரிந்து நடனமாடும் சிங்களவர்கள். இடம் பொரளை பேரூந்து தரிப்பிடம்.

போரின் நவீனத்துவம்:
ஒரு அரசுக்கு ஆயுதமாக இருப்பது வெறும் துப்பாக்கிகள் மட்டுமன்று. ஒரு நாட்டு மக்களை ஒடுக்க அந்த மக்களை கருத்தியல் ரீதியாக அடிமைப்படுத்தி வருகின்றது. அவ்வகையில் கலை என்பவை ஒரு ஆயுதமாக விளங்குகின்றது. சமூக புரட்சியாளர்கள் சமூக விடுதலையை கலையின் மூலம் வெளிப்படுத்தி வந்தனர். இன்றைய சூழலில் கலை என்பது ஒரு முனை மழுங்கிய ஒரு ஆயுதமாக புரட்சியாளர்களின் கைகளில் உள்ளதாக காண முடிகின்றது.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பேரன்புமிக்க கலைக்கு...

சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் கூட்டு வெளிப்பாடே கலை. ஒரு தனிப்பட்ட மனிதன் / குழுவின் விருப்பங்கள், ஆசைகள், சமூகம் குறித்த மதிப்பீடுகள் ஆகியவற்றினை பற்றி அறிய அந்த சமூகத்தில் உருவாகின்ற கலை படைப்புகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானது. 

René Magritte, The Lovers 1 (1928)

René Magritte, The Lovers 2 (1928)

Fidel Garcia, Dreams of love
S.Ilaiyaraja, 2011

S.Ilaiyaraja, 2011

S.Ilaiyaraja, 2011

S.Ilaiyaraja, 2011