பக்கங்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பண்பாட்டு விளையாட்டு (Cultural Play)

விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்ற தளத்தில் இருந்து விலகி பல தளங்களில் செயல்பட்டு வருகின்றது. ஒரு சமூகத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பவை அந்த சமூகத்தின் பண்பாட்டு அசைவியக்கங்களை பிரதிபலிப்பவையாக உள்ளன. சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுகளின் வழியே வெளிப்படுத்துகின்றது. (தொ. பரமசிவன், 2009, 90). விளையாட்டு என்பது மனித பண்பாட்டு உருவாக்கத்தின் அடிப்படைக் கூறு.(Johan Huizinga, Homo Ludens, 1938). விளையாட்டு என்பது சமூக பண்பாட்டு கட்டமைப்பு, சமூக நெறிமுறைகள் ஆகியவற்றோடு தொடர்புடைய ஒன்றாகவே இருந்து வருகின்றது.
Roland Barthes இசை குறித்த தன் Musica Practica என்ற கட்டுரையில் இசை இரு வடிவங்களில் உள்ளதாக குறிப்பிடுகின்றார். 1) இசைப்பது 2) கேட்பது என அவர் குறிப்பிடுகின்றார். இரு வகையான கலை வடிவமும் தனக்கான வரலாறு, சமூக மதிப்பீடுகள், கலைத் தன்மை மற்றும் சிற்றின்ப தன்மையில் மாறுபடுகின்றது என குறிப்பிடுகின்றார். Barthes இன் இந்த கருத்தினை விளையாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க இயல்கின்றது. இவரது கருத்துப் படி விளையாட்டினை இரு வகையாக பகுத்துக் காணலாம்.
  1. விளையாடுவது (Played)
  2. வேடிக்கைப் பார்ப்பது (Audience)
இவை இரண்டு வகையான விளையாட்டு வடிவங்களும் பல தன்மைகளில் மாறுபடுகின்றது. வரலாறு, சமூகவியல், தனித்திறமை, சிற்றின்பத் தன்மை, அரசியல் பொருளாதாரம் ஆகிய தளங்களில் பல வேறுபாடுகளைக் கொண்டு பண்பாட்டு மாற்றங்களை வடிவமைகின்றது.
வரலாற்றின் அடிப்படையில் விளையாட்டு:
ஒரு சமூகத்தில் விளையாட்டு என்பது அந்த சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு பொருளாதார மாற்றங்களின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் நாடக வெளிப்பாடு என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள முடிகின்றது. விளையாட்டு என்பது தொன்மைச் சமூகத்தில் பொழுதுபோக்கு என்ற அர்த்தத்தில் இருக்கவில்லை. அவை அடுத்த தலைமுறையினருக்கு அந்த பகுதியில் உள்ள பெரியவர்கள் / முன்னோர்கள் கற்றுக் கொடுக்க விரும்பிய கருத்தியல் எண்ணங்களின் செயல் வடிவம். விளையாட்டின் மூலம் குழு உணர்வு, இன உணர்வு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் போரிடல் போன்ற நெறிமுறைகளைக் கற்றுக் கொடுத்து வந்தனர். மேலும் அந்த சமூகத்தில் ஏற்பட்ட சமூக மாறுதல்களும் கருத்தாக்கங்களும் விளையாட்டுகளில் பிரதிபலித்தன. தமிழ் சமூகத்தில் கபாடி, நாடு பிடித்தல், கல்லா? மண்ணா?, போன்ற விளையாட்டுகள் சமூக வெளி சார்ந்த உரிமைகளின் வெளிப்பாடாக உள்ளன. ''ஆடு நரி ஆட்டம்'' என்ற விளையாட்டு வேட்டைச் சமூகத்தில் உருவான ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு எல்லை மற்றும் உடைமை பாதுகாப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுப்பவையாக உள்ளன. இந்த விளையாட்டு சமூகத்தில் நிலவும் வர்க்கப் படிநிலைகளை பிரதிபலிப்பவையாக உள்ளது. ''ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்திச்சி'' என்ற விளையாட்டு தமிழகத்தில் முகமதியர்கள் படையெடுப்பின் பொழுது தமிழகத்தில் உள்ள பெண்களை மணந்து கொள்ள விரும்பி இழுத்துக் கொண்டு சென்று விடுவர். அந்த பெண் தான் மணமானவள் என்று கூறியதும் அவர்களை விட்டுவிட்டனர். இந்த நிகழ்வின் வரலாற்று எச்சம் தான் இன்று பெண் குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டு. 
குழந்தைகள் விளையாடும் பெரும்பாலான விளையாட்டுகள் பெரியவர்களின் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் ஒரு கற்பனைத் தன்மைக் கொண்டதாக உள்ளது. குழந்தை வளர் இளம் பருவத்தில் நிகழும் மாற்றங்களை இது பிரதிபலிக்கின்றது. இதனை பிராய்டு Latency stage என குறிபிடுகின்றார். 
சமூகவியலின் அடிப்படையில்:
விளையாட்டு என்பது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
  • வெளி மற்றும் கால அளவு
  • தொழில்
  • பாலின உறவு 
  • வயது 
ஆகியவற்றை அடிப்படையாக உள்ளது. 
விளையாட்டில் தனித்திறமை வெளிப்பாடு:
விளையாட்டின் பொழுது விளையாடப்படும் நபர், பார்வையாளர் ஆகியயோர் ஒவ்வொருவரும் தனித்தனி வகையில் தன்னை வெளிக்காட்ட முனைகின்றனர். பார்வையாளர்கள் எழுதிக் காட்டும் வாசகங்கள், உற்சாகமூட்டும் நடனம், குரலொலிகள் மற்றும் ஆரவாரங்கள். 
விளையாட்டின் சிற்றின்பம்:
விளையாட்டு எனபது பாலுணர்வு விருப்பங்களை குறியீட்டு அடிப்படையில் பொதுத் தளத்தில் வெளிப்படுத்தும் ஒரு செயலாகவும் இருந்து வருகின்றது. வெகு தளத்தில் விளையாட்டு என்பது பாலுணர்வு விருப்பங்களை நிவர்த்தி செய்பவையாகவும் இருந்து ஆக வேண்டிய கட்டாயத்தினை நவீன சமூகம் கட்டமைத்துள்ளது. பொதுவாக விளையாட்டு என்பது ஆண்களின் பால் விருப்பத்தினை வெளிப் படுத்துபவையாக உள்ளது. விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் வடிவம் கூட ஒரு வகையில் ஆண் விருப்பத்தின் வெளிபாடுதான். கால்பந்து விளையாட்டு என்பது "ஆண்குறி உந்துதல்'' என்ற பிராய்டின் கருத்தின் ஒரு வடிவம் தான். தன் இன பெண்களின் மீது வேறு ஆண்கள் உரிமை கொள்ளக் கூடாது. அது அவர்களின் இனத்திற்கு ஏற்பட்ட ஒரு தோல்வியாக கருதப்படுகின்றது. இந்த கருத்து வெளிப்பாடு தான் கால்பந்து விளையாட்டு. பாண்டவர்கள் விளையாடிய சூது விளையாட்டும் இத்தன்மைக் கொண்டது. 
விளையாடும் பொழுது விளையாடுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் வெளிக்காட்டும் உடல் அசைவுகள், அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் ஆகியனவும் இதன் அடிப்படையில் பொருட்கொள்ளத்தக்கது. IPL விளையாட்டில் ஆடும் நடன மங்கைகள் ஆண் மைய சமூகத்தின் சிற்றின்பவிருப்பத்தின் ஒரு வெளிப்பாடு.
விளையாட்டின் அரசியல் பொருளாதாரம்:
விளையாட்டு விளையாடுவது, வேடிக்கைப் பார்ப்பது என்பது அரங்க செயல்பாடுகளைத் தாண்டி அது உலகளாவிய பொருளாதாரத்தினை வடிவமைக்கும் ஒரு காரணியாக விளங்குகின்றது. விளையாட்டு என்பது ஒரு சந்தைப் பொருளாக இங்கு பரிணமிக்கின்றது.

சனி, 24 ஆகஸ்ட், 2013

''கலை''யும் நினைவுகள் வாயிலாக பண்பாட்டு அரசியல்

ஒரு சமூகத்தின் அசைவியக்கத்தினை அறிய அந்த சமூகத்தினை பல தளங்களில் அணுகுதல் என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வகையில் ஒரு சமூகத்தின் கலைப் படைப்புகள் என்பவை அந்த சமூகத்தினை பற்றி அறிய உதவும் ஒரு தொடர்பியல் ஊடகம். ஓவியங்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் ஆகியன கலைத்தன்மை வாய்ந்த ஒரு ஊடகம் என்ற அளவில் மட்டுமல்லாது அவை மூலதனம் சார்ந்து இயங்கும் ஒரு உற்பத்தி பொருள். கருத்தியல் அளவில் மக்களை ஒடுக்கும் ஒரு ஆயுதம். பண்பாட்டளவில் உழைக்கும் மக்களை வெகுண்டெழ செய்யும் ஒரு போர் வாள். 

ஓவியங்கள், இசை, நடனம், சிற்பங்கள், திரைப்படங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்பவை வெறும் கலைத்தன்மை சார்ந்த ஒரு பொருள் மட்டுமன்று. அவை மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பவை. மக்களின் ஒருங்கிணைந்த எண்ணங்களின் ஒரு பண்பாட்டு நினைவுகளை உற்பத்தி செய்யும் ஒரு பொருள்.

ஜெர்மன் அறிஞர் Jan Assmann பண்பாட்டு நினைவு என்பது, "கடந்த கால நினைவுகள், பண்பாடு மற்றும் சமூகம் ஆகிவற்றோடு தொடர்புடைய ஒன்று என குறிப்பிடுகின்றார்.
பண்பாட்டு நினைவுகளின் தன்மைகளாக ஆறு தன்மைகளை குறிப்பிடுகின்றார். 
  1. பருப்பொருள் சார்ந்த அடையாளம் (The concretion of identity)
  2. மறுகட்டமைகும் தன்மை (capacity to reconstruct)
  3. ஒருங்கமைவு (Formation)
  4. நிறுவனமயம் (Organization)
  5. கடமை (Obligation)
  6. எதிர் கருத்தாக்கம் (Reflexivity)
  • செயல்முறை சார்ந்த எதிர்ப்பு (practice-Reflexive)
  • சுய எதிர்ப்பு (Self-Reflexive)
  • சமூக அமைப்பு சார்ந்த எதிர்ப்பு 
கடந்த காலம் பற்றிய நினைவுகள் என்பது நிகழ்காலத்தை சார்ந்தே உள்ளது. அதாவது, கடந்த கால நினைவு என்பது தொடர்ந்து மாறி வரும் தன்மை கொண்டது. (Pierre Nora, Rethinking France: Histories and Memories, Vol. 4, 2010) 
சமூகவியல் அறிஞர் Paul Connerton, உள்ளடக்கிய நினைவு(Embodied Memory) என்ற சொற்பதத்தை பயன்படுத்துகின்றார். இவரின் கருத்துப்படி, மனித உடல் என்பது நினைவுகளின் கொள்கலன். இவர்கள் இருவரின் கருத்துகளில் இருந்து, நினைவுகள் என்பவை இரு வகைமை கொண்டவை என புரிந்து கொள்ள முடிகின்றது.
  1. அகநினைவுகள் (தன்னை அறியாமலே மரபு வழியாக கடத்தப்படுவது)
  2. புறநினைவுகள் (நிகழ் கால சம்பவங்கள் கட்டமைக்கும் நினைவுகள்)
Siegfried Kracauer, நினைவுகள் பற்றி கூறும் போது நவீன தொழில்நுட்ப வடிவம், நினைவு எனும் கருத்துக்கு அச்சுறுத்தலாக உளது என குறிப்பிடுகின்றார். இவரது கருத்தும் Pierre Noraவின் கருத்தும் அடிப்படையில் ஒன்றாக திகழ்கின்றது.
இந்த கட்டுரையில் பண்பாட்டு நினைவுகளாக Jan Assmann குறிப்பிடும் தன்மைகளை தமிழகத்தின் சம கால அரசியலோடு ஒப்பிட்டு விவரிக்க முற்படுகின்றது. பண்பாட்டு நினைவுகள் என்பது மக்களின் கலைத் தன்மை சார்ந்த பொருள் சார்ந்த நினைவுகளுடன் தொடர்புடையது. நடுகல், முதுமக்கள் ஈமத்தாழி, செப்பேடுகள், கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகியன மக்களின் கடந்த கால நினைவுகளை உயிர்புறச் செய்கின்றன. அந்த வகையில் அடுத்த தலைமுறையினருக்கு நினைவுகளாக எஞ்சி நிற்பவைகளை நிர்மாணிப்பவை அரசே. சோழர் கால நினைவுகளாக இன்று நமக்கு இருப்பது தஞ்சை பெருங்கோயில் மட்டுமே. ஆனால் இராஜராஜசோழனின் ஏகாதிபத்தியம், வன்முறை பற்றிய நிகழ்வுகளின் வரலாற்றை இன்று பேசப்படுவதில்லை. இங்கு நினைவுகளை கட்டமைப்பதாக கோயில் எனும் கட்டிடக்கலை வடிவம் பயன்படுகின்றது. 
இன்றைய சமகால சூழலில் ஆளும் திராவிட கட்சிகள் தத்தம் பங்குக்கு ஏற்ப போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பற்றிய வரலாற்றினை கலை வடிவம் மூலம் நிறுவி வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழகம், தங்களது ஆட்சி சிறப்பினை தலைமைச் செயலக கட்டிடம், திருவள்ளுவர் சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழி மாநாடு இலச்சினை, இலவச திட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் கட்டப்பட்ட பாலங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகியனவற்றின் மூலமாக வெளிப்படுத்த முல்கின்றனர்.


அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தங்களது ஆட்சி சிறப்பினை ம.கோ.இரா. நினைவக நுழைவு வாயில், சென்னைப் பல்கலைக்கழக நுழைவு வாயில், முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிட மாற்றங்கள், விலையில்லா திட்டங்கள் ஆகியனவற்றின் மூலமாக நிறுவ முற்படுகின்றனர்.
(இங்கு கட்சிகள் என்று குறிப்பிடுவது தலைமையை மட்டுமே.)
Madras Cafe என்ற திரைபடம் குறித்த சர்ச்சைகள் என்பவை பண்பாட்டு நினைவுகளோடு தொடர்பு படுத்தி பார்க்க முடிகின்றது. அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் நினைவுகள் குறித்த செயல்பாட்டோடு தொடர்புடையதாக உள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்பாடுகள் என்பது பண்பாட்டு நினைவுகள் மீதான உரிமைகளை வெளிக்காட்டுவதாக அமைகின்றன.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

போரும் கலையும்

கலை என்பது பொய்த் தன்மைக் கொண்டது. ஆனால் அவை உண்மையை உணரத் தூண்டுபவையாக இருக்கும். - பாப்லோ பிக்காசோ 
War Pieta
போரில் இறந்த தன் மகனின் இறந்த உடலை வாரி அணைத்து அழும் ஒரு தாயின் கதறல்.
(Max Ginsburg - பிரான்ஸ் நாட்டு ஓவியர்.)
Foreclosure
வீதிகளுக்கு வெளியேற்றப்பட்ட நடுத்தர வர்க்கத்து மக்களின், மன வேதனையையும் ஏமாற்றங்களையும் காட்சி படுத்திய ஒரு ஓவியம்.
Torture Abu Ghraib 
ஈராக்கில் உள்ள Abu-Ghraib சிறையில், அமெரிக்க இராணுவத்தினரால் கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் மக்களை பதிவு செய்த ஒரு ஓவியம். அரசு அதிகாரத்தில் உள்ளவர்களின் குரோத எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இந்த ஓவியம் உள்ளது.
ஒருநாட்டு மக்களின் மீது போர் தொடுக்கும் போது ஒரு அரசு முதலில் அந்த நாட்டின் செல்வங்களை கைப்பற்ற முயல்கின்றது. பிறகு அந்த நாட்டு வளமையை அழிக்க முற்படுகின்றது. இயற்கை வளம் மற்றும் மனித வளத்தை அழிப்பதை செய்கின்றனர். ஒரு நாட்டு மக்களின் மீது அதிகாரத்தை செலுத்த அவர்களின் பண்பாட்டின் மீதும் அங்குள்ள பெண்களின் மீதும் வன்முறை செலுத்துகின்றது. ஆதிக்கத்தை அடுத்த தலைமுறை வரை நீடிக்க இனப்பெருக்கத்தை சிதைக்க முற்படுகின்றனர். எல்லா நாட்டு இராணுவமும் போரில் ஈடுபடும் போது பெண்களின் மீது வல்லுறவு கொள்வது இயல்பான ஒன்றாகவே இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக ஆண் வாரிசுகள் கொல்லப்படுவதும், பெண் பிள்ளைகளை எதிரி நாட்டினர் மணந்து கொள்வதும் நிகழ்ந்து வருகின்றது. அரசின் குரோத உணர்வுகள் மற்றொரு நாட்டின் செல்வம், பண்பாடு, மற்றும் இனவிருத்தி ஆகியவற்றை அழிக்க முற்படுகின்றது.
The Third of May 1808
ஸ்பானிஷ் ஓவியர் Francisco Goya வின் ஓவியம். மாவீரன் என்று கூறிக்கொள்ளும் நெப்போலியனின் படைகள் பெனின்சுலா நாட்டு மக்களின் மீது நடத்திய தாக்குதலை சுட்டும் ஒரு ஓவியம். இந்த போர் பின்னாளில் பிரெஞ்சு புரட்சிக்கு வித்தாய் அமைந்தது.
23, July, 1983
சிங்கள ஓளிப்பட வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க, இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம். நிர்வாணமாக்கப்பட்ட இளைஞனைச் சுற்றி சிரிந்து நடனமாடும் சிங்களவர்கள். இடம் பொரளை பேரூந்து தரிப்பிடம்.

போரின் நவீனத்துவம்:
ஒரு அரசுக்கு ஆயுதமாக இருப்பது வெறும் துப்பாக்கிகள் மட்டுமன்று. ஒரு நாட்டு மக்களை ஒடுக்க அந்த மக்களை கருத்தியல் ரீதியாக அடிமைப்படுத்தி வருகின்றது. அவ்வகையில் கலை என்பவை ஒரு ஆயுதமாக விளங்குகின்றது. சமூக புரட்சியாளர்கள் சமூக விடுதலையை கலையின் மூலம் வெளிப்படுத்தி வந்தனர். இன்றைய சூழலில் கலை என்பது ஒரு முனை மழுங்கிய ஒரு ஆயுதமாக புரட்சியாளர்களின் கைகளில் உள்ளதாக காண முடிகின்றது.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பேரன்புமிக்க கலைக்கு...

சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் கூட்டு வெளிப்பாடே கலை. ஒரு தனிப்பட்ட மனிதன் / குழுவின் விருப்பங்கள், ஆசைகள், சமூகம் குறித்த மதிப்பீடுகள் ஆகியவற்றினை பற்றி அறிய அந்த சமூகத்தில் உருவாகின்ற கலை படைப்புகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானது. 

René Magritte, The Lovers 1 (1928)

René Magritte, The Lovers 2 (1928)

Fidel Garcia, Dreams of love
S.Ilaiyaraja, 2011

S.Ilaiyaraja, 2011

S.Ilaiyaraja, 2011

S.Ilaiyaraja, 2011


வியாழன், 8 ஆகஸ்ட், 2013

உணவின் அதிகாரம்

உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவையாக உள்ளது. அந்த உணவை மனிதன் தேட முற்பட்டதில் பண்பாட்டு வளர்ச்சி தொடங்குகின்றது. வேட்டைச் சமூகம், வேளாண் சமூகம், இன்றைய நுகர்வுச் சமூகம் வரை மனிதனின் தேடு பொருளாக உணவு இருந்து வருகின்றது. உணவு இல்லாத நிலைமையையே கொடிய வறுமை என கருதப்படுகின்றது. உணவு என்பது சமூக பண்பாட்டு வளர்ச்சியில் மிக இன்றியமையாததாக விளங்குகின்றது. ஒரு சமூகத்தின் உணவு என்பது மக்களின் உற்பத்தி முறை, சுவை உணர்வு, பரிமாறும் முறை, வாழ்வியற் சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றது. சமூக அசைவியத்தில் உணவு என்பது எல்லா சமூகத்தினருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் அது வெளிப்பாட்டு முறைமைகளில் வேறுபடுகின்றது. உணவு தன்னை அனைத்து சமூகத்திலும் தன்னை பல மாறுதல்களுடன் வெளிப்படுத்துகின்றது.

விருந்தோம்புதலின் பண்பு:
                     “பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர் 
                      தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "- திருக்குறள் (322)
உணவை பகுத்துண்டு வாழ்வது பண்டைய தமிழர்களின் அறமாக இருந்தது. தமிழர்களின் தனிப் பண்பாக விருந்தோம்பல் கருதப்பட்டு வந்தது. உணவையும் நீரையும் விற்பது என்பது தமிழர்களின் வழக்கத்தில் இருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. வழிப்போக்கர்களுக்கு உணவழிக்க சத்திரமும் சாவடியும் இருந்ததை நாட்டார் கதைகளின் வாயிலாக அறிய முடிகின்றது. ஆகையால் பண்டைய தமிழ்ரகளிடையே உணவகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இன்றைய சூழலில் உணவகங்கள் என்பது ஒரு ஊருக்கு மிக அவசியமானதாகக் கருதப்படுகின்றது.உணவு விற்பது என்பது அநாகரீகமான செயலாக தொல்சமூகத்தினர் கருதி வந்தனர். ஆனால் இன்றைய நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில் உணவு என்பது பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. உணவகங்கள் மக்கள் கூடும் இடமாக உள்ளது. ஆனால் அவை அத்துடன் நின்று விடவில்லை. அவை அதிகாரத்தின் மையமாக திகழ்கின்றது. 

சமூக பண்பாட்டு அசைவியக்கத்தில் அதிகார மையங்கள் மூன்று வடிவங்களில் உள்ளது.
  • சமயம்/மதம் 
  • சமூக அரசியல் பொருளாதாரம் 
  • கருத்தியல்
உணவின் மூலம் இந்த மூன்று அதிகார மையங்கள் மக்களின் மீது தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.

சமயங்களில் உணவு:

தமிழத்தில் நிறுவன சமயங்களான சைவமும் சமணமும் உணவின் மீதான அரசியலை தொடங்கி வைத்தது. இந்த இரு நிறுவன சமயங்களும் சைவ உணவையே நல்லறமாக போதித்தன. ஆனால் மக்களின் உணவுப் பழக்கம் என்பது நாட்டார் தெய்வங்களை சார்ந்தே இருந்து வருகின்றது. 
நிறுவன மதங்கள் தமிழகத்தில் வேரூன்றிய பிறகு படையல் என்ற உணவு பிரசாதம் பார்ப்பன போஜனம், நைவேத்தியம் என மாறியதை சமூக வரலாற்று அசைவியக்கங்களின் மூலம் அறியலாம். 
வேதத்தில் உணவு அன்னம் என்று குறிப்பிடப்படுகின்றது. உணவு புனிதமானது என்றும், அதை இகழக் கூடாது, உற்பத்தியை பெருக்க வேண்டும் என வேதங்கள் குறிப்பிடும் தகவல். ‘அன்னம் ந நிந்த்யாத்’ (‘உணவை இகழாதே!’), ‘அன்னம் பஹு குர்வேத்’ (‘உணவை அதிகம் உற்பத்தி செய்’) என்ற உபநிஷத வார்த்தைகள் மூலம் இந்த தகவலை அறிய முடிகின்றது. இன்றைய போராட்ட களத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தின் அடையாளமாக உண்ணாவிரதம் இருப்பது கூட வேதத்தின் ஒரு நீட்சியாக உள்ளதை அறிய முடிகின்றது.
உணவு பற்றி பகவத் கீதையில்,
அன்னாத் பவந்தி பூதானி
பர்ஜன்யாத் அன்னஸம்பவ:
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ
யஞ: கர்ம ஸமுத்பவ:
என குறிப்பிடப்படுகின்றது. அதாவது "அன்னத்தினால் ஜீவராசிகள் வாழ்கின்றன; அந்த உணவு மழையினால் விளைகிறது; மழை, யாகங்களினால் பொழிகிறது; யாகங்கள் நற்காரியங்களினால் நடைபெறுகின்றன".
உண்கின்ற உணவு ஒருவனது குணத்தை நிர்ணயிக்கின்றது என வேதங்கள் குறிப்பிடுகின்றது. சத்வ, ரஜோ, தமஸ் ஆகிய குணங்களை வேதம் குறிப்பிடுகின்றது. இவ்வாறன கருத்துகள் சமூகத்தில் சாதிய வேறுபாடுகள் உருவாக காரணமாக அமைந்தது. இதன் காரணமாகவே இன்று வரை மாமிச உணவு உண்பவர்கள், குறிப்பாக பன்றி மட்டும் மாட்டு இறைச்சி உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்டு வருகின்றனர்.

வேதங்கள் மட்டுமன்றி இனக்குழு பண்பாட்டிலும் உணவு மற்றும் சமையலறை என்பது புனிதமான ஒன்றாகவே கருதப்பட்டு வருகின்றது. ஒரிசா மாநிலம்  சோனேபேடா பகுதியிலுள்ள பூஞ்சியா பழங்குடி மக்கள் சமையலறையை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர். தம் வீட்டு பெண்களாய் இருந்தாலும் திருமணமான பிறகு சமையலறைக்குள் செல்ல அவர்கள் அனுமதிப்பதில்லை. (ரெங்கையா முருகன் - வி.ஹரிசரவணன், அனுபவங்களின் நிழல் பாதை)

தெய்வங்களுக்கு விலங்குகளை பலியிடும் போது அது பொதுவாக ஆணாக இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் கோழி பலியிடப் படுவதில்லை. சேவல் மட்டுமே பலியிடப்படுகின்றது. அதே போல ஆடு, பன்றி என பலியிடும் போதும் ஆண் விலங்குகளே பலியிடப் படுகின்றன. 

உணவின் சமூக அரசியல்:

சமூக மாற்றங்கள், அதிகரத்துவத்தினை பிரதிபலிப்பதாக உள்ளது. இன்றைய துரித உணவகங்கள் சமகால சமூக கருத்தியலினை பிரதிபலிப்பதாக உள்ளது. (Ritzer, The McDonaldization of Society 1993) துரித உணவகங்கள் மக்களிடையே நுகர்வின் மீதான மோகத்தை அதிகப்படுத்தி, நுகர்வின் மூலமே தணிக்கின்றது. உணவுப் பண்பாடு என்பது உற்பத்தி மூலம் உருவாகின்றது. அந்த உணவு நுகர்வுப் பண்டமாக மாறிய பிறகு ஆதிப் பண்பாட்டில் ஒரு சிதைவு ஏற்படுகின்றது. உணவுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவு உற்பத்தி என்ற தளத்தில் இருந்து நுகர்வுத் தளத்தில் மாறிய பிறகு அதிகாரப் படிநிலைகளும் உருவாகத் தொடங்குகின்றது. நுகர்வின் மோகம் என்பது மக்களிடையே Branded அடையாளத்தை உருவாக்குவதன் மூலம்  ஓர்மைப் பண்பாடு மக்களிடையே திணிக்கப்படுகின்றது. இங்கு KFC, Coffee Day, Arabian Grilled Chicken and Coca Cola போன்றவை மக்களிடையே உருவாக்கியுள்ள நுகர்வு மோகத்தினை அறிந்து கொள்வதன் மூலம் உணவின் மீதான உலகளாவிய அரசியலைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை, உணவின் ஏகாதிபத்தியமாக கருதலாம். தமிழகத்தில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். அப்படி இருக்கும் பொழுது சைவ உணவினை அரசே அதிகாரப் பூர்வமாக மலிவு விலையில் விற்பது என்பது பண்பாட்டு ஏகாதிபத்யமாக விளங்குகின்றது. "சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது" என்ற செய்தியை செய்தித் தாள்களில் வாசிக்கும் போது, குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களின் உணவுப் பண்பாட்டின் மீது நடைபெற்றுள்ள ஒரு பண்பாட்டு படையெடுப்பாகவே காண முடிகின்றது. 

உணவும் பொது கருத்தியலும்:

சமூகத்தில் நிகழ்கின்ற பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்களை அடையாளப்படுத்துவதாய் அந்த சமூகத்தின் உணவுப் பண்பாடு இருந்து வருகின்றது. தொ.பரமசிவன் கூறுவது போல, ஒரு சமூகம் தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் கருத்தியல்களின் மக்களின் வாழ்க்கை முறையின் மூலம் வெளிப்படுத்துகின்றது. கவர்ச்சியான உடற்கட்டுடன் (Six Pack) இருப்பது தான் உடல் நலத்திற்கு நலம்பயப்பது என்ற கருத்து மக்களிடையே இருந்து வருகின்றது. தொப்பை போட்டு குண்டாக இருப்பது அசிங்கமானது என்றும் கருத்துகள் உள்ளன. பெண்களும் இதே கருத்தில் தான் உள்ளனர். குண்டாக இருப்பது அழகன்று என்ற கருத்தின் தாக்கத்தினால் உண்ணும் உணவின் அளவைக் குறைத்து, உணவுப்பழக்கத்தை மாற்றி சுழிய இடையளவு (Zero Size) என ஒல்லியாக இருக்க விருப்பப் படுகின்றனர். ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இருப்பது என்பது அவர்களின் மரபுகளுடன் தொடர்புடையது. இந்த அடிப்படையில் உணவு என்பது மக்களை பண்பாட்டளவில் ஒடுக்குகின்ற ஒரு கருத்தியல் ஆயுதமாக உள்ளதை அறிய முடிகின்றது. அதன் விளைவாக தான் இன்று ஒவ்வொரு தெருவிலும் அருகி வரும் உடற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப் படுகின்ற Tele Shopping விளம்பரங்கள். 

புதன், 7 ஆகஸ்ட், 2013

மொழியின் அதிகார அரசியல்

சமூகப் பன்மியம் பற்றிய சிந்தனை இன்றைய சூழலுக்கு அவசியமான  ஒன்று.எந்த வகையினில் எனில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த சமூகம் வேதம், மதம் மற்றும் சாதி அமைப்பு ஆகிய கட்டமைப்பில் உள்ளது. அந்த ஆதிக்க வேர்கள் மக்களின் அன்றாட வாழ்வு, பண்பாடு மற்றும் மக்களின் நம்பிக்கைகள் என பல தளங்களில் மக்களை நசுக்கி வருகின்றது. அந்த வேரினை அழிக்க முற்படாமல் சாதிய சமூக கட்டமைப்பு என்ற நச்சு மரத்தினை அழிக்க இயலாது.

மக்களின் இன்பம், துன்பம், ஏக்கம், விருப்பம், கடந்த காலம் குறித்த நினைவுகள் ஆகியனவற்றின் வெளிப்பாட்டு வடிவமாக மொழி/ வட்டார மொழி இருக்கின்றது. இந்த மொழி தான் மக்களின் தொடர்பியல் காரணியாக உள்ளது. மக்களிடையேயான உரையாடல்கள் என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மட்டுமன்று. அது  பண்பாட்டு வார்ப்புரு. அவர்கள் பேசும் அந்த மொழி தான் பண்பாட்டினை உருவாக்குகின்றது. பண்பாட்டு மாற்றங்களும் மொழி வழியே தான் வெளிப்படுகின்றது. 

தமிழ்நாட்டினைப் போன்ற பன்மியத் தன்மைக் கொண்ட ஒரு  சமூகத்தினை மொழி  சார்ந்த அளவில் புரிந்து கொள்ள, மக்கள் பயன்படுத்தும் மற்றும் அரசு/ஊடகம் அல்லது வெகு தளத்தில் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளின் பின்புலத்தை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இரு சுட்டு பெயர்களை எடுத்துக் கொள்ளலாம். "மகாத்மா" மற்றும் "பெரியார்". தமிழ் மரபில்  பெரியவர்களை மதிப்பது ஒரு சமூக அறமாக வலியுறுத்தப் பட்டு வந்துள்ளதை திருக்குறள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் அதனூடே சாதிய  சேர்ந்தே திணிக்கப் பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டியது அவசியம். ஆதிக்க சாதியினை சேர்ந்தவர்கள் தங்களை பெரியவர்களாக அடையாளப் படுத்திக் கொள்ள முற்பட்டதின் விளைவாக வயதில் பெரியவராயினும், சிறியவராயினும் ஆதிக்க சாதியினரை ஒடுக்கப் பட்டு வருகின்ற சாதியினர் மதிக்க வேண்டும். 

மேற்கத்திய பண்பாட்டு சூழலில் இருந்து பல கருத்துகளை இன்று நாம் உள் வாங்கிக் கொண்டிருந்தாலும், சாதி அமைப்பு எனும் நஞ்சு மரத்தின் விதை நம் அனைவரின் மனதிலும் அறிந்தோ அறியாமலோ விதைக்கப் பட்டுள்ளது. அதனால் தான் சக மனிதனையே துதி பாடும் ஒரு நிலைமை இன்று வரை நிலவி வருகின்றது. மதிப்பது வேறு வழிபடுவது வேறு. இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டால் மகாத்மா என்று எவரையும் குறிப்பிட மாட்டோம். வயல் காட்டில் வேலை செய்யும் விவசாயி, மலைகளில் வசிக்கும் மக்கள், சென்னை நகர நெரிசல்களுக்கு இடையே சாலையோரங்களில் வாழும் மக்கள், திருநங்கைகள் இவர்களெல்லாம் ஏன் மகாத்மா என குறிப்பிடப் படுவதில்லை. அவர்களைக் குறிப்பிட விளிம்பு நிலையினர், தாழ்த்தப்பட்டவர்கள், கீழ்சாதியினர் போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்துவதன் காரணம் சாதிய பின்னணி தான். அந்த அடிப்படையில் தான் "பெரியார்" என்ற பெயரும். மேலை நாடுகளில் இவ்வளவு வெளிப்படையாக யாரும் துதி படுவதில்லை. அதனால் தான் அங்கு காரல் மார்க்ஸ், ஹிட்லர், ஒபாமா, ஜான் கென்னடி, ரூசோ, சர்ச்சில் என அவர்களின் சொந்த பெயரிலியே சுட்டப்பட்டு வருகின்றனர். சாதிய நஞ்சு விதைக்கப் பட்ட இந்த சமூகத்தில் தான் மோகன் தாசும், ராமசாமியும் வேறு பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தெய்வங்களும் இந்த மொழியின் அதிகார அரசியலுக்கு அப்பாற்பட்டதன்று. அதனால் தான் இன்றும் சிறு தெய்வங்கள் என்ற வார்த்தைப் பயன்பாடு நம்மிடையே இருந்து வருகின்றது. தெய்வம் எவ்வாறு சிறு தெய்வமானது என்ற காரணத்தை அறிய முற்பட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் வழிபடுகின்ற தெய்வங்கள் என்ற காரணம் தான். திருவல்லிக்கேணி பள்ளிவாசலும், பார்த்தசாரதி கோயிலும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலும், சாந்தோம் தேவாலயமும் வெறும் வழிபாட்டு தளம் என்ற அளவில் மட்டுமல்லாது அது சமூகத்தில் ஆதிக்கத்தினை உண்டு பண்ணும் ஒரு நிறுவனங்கள் என்றும் புரிந்து கொள்ளுதல் அவசியம். அங்கு உள்ள தெய்வங்கள் என்ற அடையாளத்தில் இருந்து தன்னை பெருந்தெய்வம் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றது. ஆனால் அவை நிறுவன தெய்வங்கள் என்ற அர்த்தத்தில் நாம் உள்வாங்கிக் கொள்வது சரியானதாக இருக்கும். பிறகு அய்யனாரையும், சுடலை மாடனையும், மாரியாத்தாவையும் சிறு தெய்வங்கள் என்று குறிப்பிட மாட்டோம். அவை தெய்வங்களாகவே இருக்கும்.

திங்கள், 29 ஜூலை, 2013

ஆதிக்கத்தின் மச்ச அவதாரம் - மரியான்

கோமுகன் என்பவன் வேதங்களைத் திருடிக் கொண்டு மீன் வடிவில் கடலுக்குள் ஒளிந்து கொண்டதாகவும், அதைக் கண்டுபிடிக்க திருமால் என்பவன் மீன் வடிவில் சென்று அவனை அழித்து வேதங்களை மீட்டு வந்ததாகவும் கதைகள் கூறுகின்றன. இதில் இருவருமே மீன் அவதாரம் எடுத்துள்ளனர். ஆகையால் யார் எடுத்தது மச்ச அவதாரம் என்பதனை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன்...

ஒரு கலைப் படைப்பு என்பது அந்த சமூகத்தினைக் குறித்த சமகாலப் பதிவாக இருக்க வேண்டும். ஆனால் திரைப்படங்கள் அவ்வாறு இருப்பதில்லை. திரைப்படங்கள் என்பது மக்களை ஒடுக்கும் ஒரு கருத்தியல் ஆயுதமாக இருந்து வருகின்றது. இந்த ஆயுதம் ஆதிக்கவாதிகளின் கைகளில் தான் இன்னும் இருந்து வருகின்றது. ஆகையால் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது அதனை ஒரு கலைப்படைப்பாக மட்டும் பார்க்காமல், அதனை சமூகத்தின் வெகுசனப் பார்வையின் மீதான ஒரு அதிகார வெளிப்பாடாக காண்பது சரியானதாக இருக்கும்.

கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியினை நெய்தல் திணை என்பர். இந்தப் பகுதியில் வாழ்பவர்கள் பரதவர் ஆவார். பரதவர்களின் பிரதான தொழில் மீன் பிடித்தல், முத்துக்குளித்தல் ஆகியன என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த திணையின் உரிப்பொருள் இரங்கல். தலைவனுக்காக தலைவி காத்திருப்பது தான் நெய்தல் திணையின் உரிப்பொருளாக கூறுகின்றனர். திணையியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுதான் பெரும்பாலான இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன.

மரியான் படத்தின் கதைக் களம் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள நீராடி எனும் கடற்கரைப் பகுதி. கதை நாயகன் மீனவர். இந்த கதை நீராடி கிராமத்தில் இருந்து சூடான் நாட்டுக்கு பயணிக்கின்றது. தமிழ் நாட்டில் உள்ள மீனவர்களுக்கு சூடான் நாட்டில் இருப்பவர்கள் எதிரி போல இந்த கதை வெகுசன பார்வையாளர்களிடம் ஒரு கருத்தை உருவாக்க முயலுகின்றது. அதில் வெற்றியும் பெற்றுள்ளதை படத்தின் வசூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இந்த படம் பார்வையாளர்களின் பொதுப்புத்தியினை வெகுசனத் தளத்தில் மடைமாற்றம் செய்யும் ஒரு முயற்சி. தமிழ் நாட்டு மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இலங்கை இராணுவம். எல்லை தாண்டி வருகின்றனர் எனக் கூறி தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருவதை செய்தித் தாள்களின் மூலம் அறியப்படுகின்றது. செய்தித்தாள்களில் மீனவர்களுக்கு தமிழன் என்ற அடையாளத்தைக் கொடுக்கின்றவர்கள் இந்த திரைப்படத்தில் இந்தியன் என்ற ஒரு தேசிய அடையாளத்தைப் பூசி சூடான் நாட்டினரை எதிரியாக்கியுள்ளனர். ரோஜா படத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ளவர்களையும், பாகிஸ்தானியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து நாயகனின் மூலம் தேசியத்தை மக்களின் பொதுப் புத்தியின் மேல் உருவாக்கியது போல, இந்த படமும் உருவாக்கியுள்ளது. 

பிரெஞ்சு புரட்சியின் போது மக்களிடையே அரசின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம் தான், "தேசியம்". அரசு மற்றும் மக்களிடையே உள்ள உறவின் அதிகார வடிவம் தான் தேசியம் என்ற கருத்தாக்கம். மேற்கத்திய சூழலில் உருவான இந்த கருத்தாக்கம் இந்தியா (வேறு வார்த்தை கிடைக்கவில்லை) போன்ற பன்மியத் தன்மை கொண்ட ஒரு சமூகத்திலும் திணிக்கப்பட்டுள்ளது. மரபார்ந்த இனக்குழு அமைப்பு சிதைவுற தேசியம் அடிப்படையாக அமைந்தது எனலாம். உலகமயமாக்கலின் காரணமாக தேசியம் என்ற கருத்தாக்கம் அரசின் வாயிலாக மக்களிடையே தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு வடிவம் தான் பள்ளி பாடத்திட்டம், விளையாட்டு மற்றும் திரைப்படங்கள்.

இன்று வரை தமிழகத்தில் மக்கள் ஒடுக்கப்படுவதற்கு வேதங்களும், அதனையொட்டி உருவான சாதி மற்றும் ஆச்சாரம் என்று கூறிக் கொள்ளும் சில அபத்தங்களும் தான். இந்த படம், கடலில் இருந்து சில அபத்தங்களை திரையரங்கு வாயிலாக மக்களின் பெருந்திரள் நினைவுகளை ஆட்கொள்ள உருவெடுத்த ஒரு மச்ச அவதாரம் எனலாம். சமீபத்தில் வெளிவந்த நீர்ப்பறவை, கடல் ஆகிய இரு படங்களின் தொடர்ச்சியாக இப்படத்தை கருதலாம்.

திங்கள், 15 ஜூலை, 2013

இன்னும் ஒளிந்திருக்கும் சாதி

சமூக அசைவியக்கத்தினை அறிந்து கொள்ள அதன் பன்மியத் தன்மைகளை புரிந்து கொள்வது இன்றியமையாததாகின்றது. உலகமயமாக்கப்பட்ட சூழலில், சமூக மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வது முக்கியமாகின்றது. தமிழகத்தில் சமூக அசைவியக்கத்தினை புரிந்து கொள்ள வரலாற்று அடிப்படையிலான சமூக பார்வை அவசியமாகின்றது. இங்கு வர்க்க பேதங்களைக் காட்டிலும் சாதிய படிநிலைகளைக் கொண்டே சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது கவனிக்கத்தக்கது.

சமூகத்தில் ஒரு குழு தனது இருப்பினை, மற்றொருவர் மீது அதிகாரம் செலுத்துவதின் மூலம் உறுதி செய்கின்றது. அதிகாரத்தின் வடிவங்கள்,
  • பிற சமூகத்தினருடனான உணவுப் பரிமாற்றங்கள் 
  • மரபு மற்றும் பாரம்பரியங்களை (சடங்குகள்)
  • சொத்து மற்றும் நிலவுடைமை 
  • அகமணமுறை 
சமூகத்தில் சாதி என்பது, பிறப்பு, தொழில் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் பகுக்கப் படுகின்றது. 
வேத காலத்தில் சாதி என்பது பிறப்பின் அடிப்படியில் இல்லை. தாசி பெண்ணின் மகனாகப் பிறந்து, சூதாடும் மனைகளில் வளர்ந்தவரென்ற போதிலும், கவாக்ஷ மகரிஷி ஞானம் உடையவராகத் திகழ்ந்தார். வேத மந்திரங்களை ஞானக் கண்ணால் கண்ட மந்திர திரஷ்டா எனப்படும் மிகவும் உயர்ந்த ஆன்மிக நிலையில் வாழ்ந்த மகரிஷி அவர். அவரால் அருளப்பட்ட வேதமந்திரங்கள் மிக உயர்ந்த முக்தி நிலையை அளிப்பவை. அவரே சரஸ்வதி நதி தீரத்தில் நடந்த சோமயாகத்தின் எஜமானராக இருந்தருளினார் (ரிக் வேதம் - ஐதரேய  பிராம்மணம்). அவரே நீர் நிலைகளைக் கட்டுப்படுத்திய சுயநலவாதிகளை அழித்து நீர் நிலைகளை மக்களுக்கு பொதுவான வளமாக ஆக்கினார் (சாமவேதம் - கௌஷீதகீ பிராம்மணம்).
(http://www.santhan.com/index.php/cast1176)
வேத காலத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை என்பதை அறிய முடிகின்றது. ஆனால் பின்னாட்களில் சாதி தன்னுடைய வடிவங்களை மாற்றிக் கொண்டே வந்துள்ளது.

உணவில் ஒளிந்திருக்கும் சாதி:
  • உணவின் தன்மை மற்றும் உண்ணும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாதியக் கட்டுமானங்கள் சமூகத்தில் இருந்து வந்துள்ளன. உணவை விளைவிப்பவன் விவசாயியாக இருந்தாலும், மூலதனம் - உற்பத்தி - உழைப்பு ஆகியவற்றின் காரணமாக அவனுக்கான உணவைப் பெற முடிவதில்லை. அதனால் தான் உணவுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வருகின்றன. மூலதனம், உழைப்பு, உற்பத்தி ஆகியன சமூக வேறுபாடுகள் உருவாக ஒரு புறக்காரணி மட்டுமே. சமூக வேறுபாடுகள் உருவாக சாதி தான் அடிப்படியாக இருக்கின்றது.
  • உணவு சுவையானது, ஆரோக்கியமானது மட்டுமன்று. அது சமூக அடையாளங்களை உருவாக்குகின்றது. இன்றும் கிராமங்களில் சில சாதியினர் உணவை உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. குத்துக் காலிட்டு அல்லது நின்று கொண்டு தான் உண்ண வேண்டும்.(2013 ஆம் ஆண்டில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஒரு சிற்றூரில் கல்யாண விருந்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர், அனைவரும் சாப்பிட்ட பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் என கருதுபவர்கள் கீழே அமர்ந்து சாப்பிட்டனர்.) அசைவ உணவு என்பது குறிப்பாக மாடு மற்றும் பன்றி ஆகியன இழிவான ஒரு உணவு என்ற கருத்து நிலவி வருகின்றது. மாடு மற்றும் பன்றி இறைச்சி உணவு உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. உலகமயமாக்கத்தினால் உணவுப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சாதி என்ற கருத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்றைய உணவகங்களை பற்றிய அரசியலை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. 
  • விருந்தோம்பலில் முக்கியமானது சாப்பிட்ட இலையை அல்லது தட்டை உணவு பறிமாரியவரே எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த விருந்து இருவருக்கும் திருப்திகரமானதாக இருக்கும். நுகர்வு மயமான சூழலில் உணவகங்களில் சாப்பிட்ட இலையை எடுப்பது என்ற நிகழ்வு பல வித அர்த்தங்களை உருவாக்குகின்றது. சில இடங்களில் சாப்பிட்டவர் தங்கள் இலையை தாங்களே எடுக்க வேண்டும். அத்தகைய உணவகங்களை கூர்ந்து நோக்கும் பொழுது உணவாக உரிமையாளர், உணவு நுகர்வோர் ஆகியோருக்கு இடையேயான சாதிய வேறுபாடுகளை அறியமுடியும். உணவின் சாதிய அதிகார படிநிலைகளை புரிந்து கொள்ள உணவக உரிமையாளர், உணவு பரிமாறுபவர், உணவு உண்பவர் (நுகர்வோர்), இலையை எடுப்பவர் ஆகியோருக்கு இடையேயான உறவுநிலைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். உணவகங்கள் அமைந்துள்ள சூழலும் இந்த வேறுபாடு வெளிப்பட காரணமாக உள்ளது.
  • "வாயப் பாரு வண்ணாந் தாளியாட்டும்" என்ற பேசுகின்ற ஒரு வசவுச் சொல்லின் பின்னால் ஒரு சமூக வரலாறு புதைந்துள்ளது. வண்ணார் சமூகத்தினர் அழுக்குத் துணிகளை துவைத்ததற்கு கூலியாக அந்திப் பொழுதில் அவர்களின் வீட்டு பின் வாசல் வழியாக சென்று சோறு வாங்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வீடாக சென்று சோறு வாங்க வேண்டும். இதற்கு "ஊர்ச்சோறு" என்று பெயர். (பழைய தமிழ்ப் படங்களில் இந்த காட்சியை காணலாம். குறிப்பாக பாரதிராஜாவின் "கல்லுக்குள் ஈரம்" திரைப்படத்தில்.)
  • ராமநாதபுரம் வட்டார எழுத்தாளர் வேல.இராமமூர்த்தி, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களான அம்பட்டர், அருந்ததியர், சக்கிலியர், பகடை, வண்ணார் முதலானவர்களின் மீதான சாதிய வன்முறைகளை இவரது சிறுகதை சுட்டுகின்றது. ’ஆசை... தோசை...’ என்ற கதையில் ஒரு அம்பட்டர் ஓட்டலில் மேசையில் அமர்ந்து சாப்பிட்டதால் செருப்படி விழுந்ததை சுட்டுகின்றார்.
    ஊருகஞ்சி வாங்கிகுடிக்கிற வண்ணாப்பயளுக்கு என்ன திமிரு இருந்தா... கழுதைகளை விட்டு என் வெள்ளாமையை அழிப்பீங்க...! (வேலராமமூர்த்தி கதைகள், 2011 - 110) என ஆதிக்க சாதி தோப்புக்காரன், வண்ணானை அடித்துக் கொன்று விடுகின்றான்.
  • ஜெர்மன் சமூகவியல் அறிஞர் டோனீஸ் (Ferdinand Tönnies) சமூகம் மற்றும் சமுதாயம் (Gemeinschaft and Gesellschaft) என்பது பற்றி குறிப்பிடுகின்றார். அதில் சமூகம் என்பது, "ஒரு புறம் உறவுகள் மற்றும் சடங்குகள், பாரம்பரிய மரபுகளையும் மற்றொரு புறம் தனது நிபுணத்துவம் மற்றும் சுய ஆர்வங்களையும் ஒருங்கிணைக்கின்றது". நகரமயமாக்கல் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு பிறகு முதன்மையாக இருந்த விவசாயிகள் இரண்டாம் பட்சமாக மாற்றப்பட்டனர்.  அவர்களது சடங்குகளும் இரண்டாம் தரமானதாக மாறியது. இந்த கண்ணோட்டத்தில் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றும் நிகழ்வினை காண வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் திரைப்படங்களில் கூழ் ஊற்றும் சடங்கு பற்றி உருவாக்கியுள்ள தொன்மம் என்பது, கூழ் ஊற்றுபவர்கள் ரவுடிகள், ஏமாற்று பேர்வழி, பிச்சைக்காரர்கள் என்பதாகும். அதே வேளையில் நிறுவன கோயில்களில் அன்னதானம் வழங்குபவர்கள் உயர்வானவர்களாக சித்தரிக்கப் படுவதின் மூலம் அதிகாரம் எவ்வாறு நிலை நாட்டப் படுகின்றது என்பதனை உணர வேண்டியது அவசியம்.
  • ஆடி மாதங்களில் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் நிகழ்வும், ரமலான் நோன்பில் இஸ்லாமியர்கள் அளிக்கும் நோன்புக் கஞ்சிக்கும் இடையே உள்ள பண்பாட்டு ஒற்றுமைகளை காணலாம்.

தொழிலில் ஒளிந்திருக்கும் சாதி:
  • சாதி என்பது தொழில் அடிப்படையிலும், வாழ்க்கை முறை அடிப்படையிலும் இருந்து வந்தது. நகரமயமாக்கலுக்கு பிறகு மக்களின் தொழிலும், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. வேதங்களை ஓதுதல், கற்பித்தல் போன்ற செயல்களை செய்தவர்கள் பிராமணர்கள் என்றும்,  கொட்டடித்து செய்திகளை ஊருக்கு சொல்லியவர்கள் பறையர்கள் என்றும், தோலை பதனிட்டு தோல் சார்ந்த வேலைகளை செய்தவர்கள் சக்கிலியர் என்றும், மருத்துவ வேலைகளை செய்து வந்தவர்களை அம்பட்டர் என்றும், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வியாபாரங்களை செய்தவர்கள் கோனார் என்றும், கோவில்களில் இசையமைத்து வந்தவர்கள் நாவிதர் என்றும், தொழில் ரீதியான சாதி பகுப்புகள். ஆனால் இந்த வரையறைகள் எல்லாம் உலகமயமாக்கத்தினால் உண்டான நுகர்வு பண்பாட்டின் மூலம் தகர்த்தெரியப் பட்டுவிட்டன.
  • நுகர்வு பண்பாட்டில் தகர்த்தெறியப் பட்ட சாதிய வரையறைகளில் பல முரண்பாடுகளைக் காணலாம். கற்பித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள் பிராமணர்கள் எனின் இன்று ஆசிரியர் பணியில் பலதரப்பட்ட சாதியினர் உள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் பிராமணர் என்று குறிப்பிட முடியாது. கொட்டடித்து செய்திகளை ஊருக்கு சொல்லியவர்கள் பறையர் எனின், இன்று உள்ள ஊடக முதலாளிகளையும், நிருபர்களையும் பறையர் எனக் குறிப்பிட முடியாது. இதனால் சமூகத்தில் சாதி ஒழிந்துவிடவில்லை. ஒளிந்துக்கொண்டுள்ளது.

யோனியில் ஒளிந்திருக்கும் சாதி:
சாதி என்ற சொல் "ஜாதி" என்ற வட மொழிச் சொல்லில் இருந்து உருவானது. "ஜா" என்ற வட மொழிச் சொல்லுக்கு பிறப்பு என்று பொருள். வனஜா, கிரிஜா போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளது. இதன் அர்த்தம், வனஜா - வனத்தில் பிறந்தவள், கிரிஜா - கிரித்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள் என்று பொருள் படும்.
இவ்வாறு தொ.பரமசிவன் தன்னுடைய நூலில் குறிப்பிடுகின்றார். 
சாதி என்பது தமிழக பண்பாட்டு சூழலில், ஒரு பண்பாட்டு மீறலாக இருக்கின்றது. மனு தர்மங்களும், அரசியல் கட்சிகளும், சாதி நிறுவனங்களும், இந்த பண்பாட்டு மீறலை நியாயப் படுத்தி வளர்த்துவிடுகின்றன.

ஒரு சமூகத்தின் சாதி என்பது, அந்த சமூகத்தினரின் திருமண முறையில் தான் இன்று வரை மாற்றமின்றி வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் இங்கு சாதி வெறிக் கொலைகள் (கௌரவக் கொலைகள்) இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இனக்குழு மரபில் வாழ்ந்த சமூகங்களில் "அகமணமுறை" என்பது இருந்து வந்தது. தாய்வழிச்சமூகத்தின் எச்சமாக இன்றும் ஒரு குடும்பத்தின் மரியாதைச் சின்னமாக பெண்கள் இருக்கின்றனர். சமூக நீதிக் காவலர்கள் என்றுக் கூறி சாதியை காப்பாற்றும் ஆண்கள் தங்கள் சாதியை யோனியில் ஒளித்து வைத்துள்ளனர். தமிழக வரலாற்றில் சாதிய வன்முறைகளை ஒரு முறை புரட்டி பார்க்கும் போது அது பெரும்பாலும் பெண், நிலம் மற்றும் நீர் சார்ந்தே இருந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். (நிலம், நீர் ஆகியன பெண்ணாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.) மதுரைவீரன், காத்தவராயன், முத்துப்பட்டன் ஆகியோர் கதைகளில் சாதிய வன்முறை பெண்களை மையமிட்டே நிகழ்ந்துள்ளது. ஆனால் சாதிய வன்முறைகளுக்கு பெண்கள் காரணமன்று. தமிழக வரலாற்றில் மகண் மறுத்தல் (பெண் மறுத்தல்) என்பதன் பின்னாலும் சாதி உள்ளது. கிராமங்களில் உள்ள பெண் தெய்வங்களின் கதைகள் மகண் மறுத்தலின் காரணமாக தன் பெண்ணை அந்த குடும்பத்தாரே கொன்று தெயவமாக வழிபட ஆரம்பித்தனர் என்ற உண்மை விளங்கும்.

புதன், 3 ஜூலை, 2013

'பண்'பாடும் பண்பாடு


The Express Tribune
  • சில இசைக் குறிப்புகள்:
    - கலைத்தன்மைக் கொண்ட ஒரு இசைக்குறிப்பன்று. இசை குறித்த சில சமூக அவதானிப்புகள்.

    • மனிதமனம் அடிப்படையில் குரூரமான வன்மத்தையும் காமத்தையும் தன் ஆழ்மனதில் புதைத்து வைத்துள்ளது. பண்பாடு என்பது குரூரமான மனித மனதினை கட்டுப் படுத்தும் ஒரு நெறிமுறையாக உள்ளது. அந்த பண்பாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு வெளிப்படுத்தப்படும் குரூர எண்ணங்களே கலைப் படைப்புகள் ஆகின்றன. கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வளர்ச்சியும் பண்பாட்டு மாற்றங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஓவியம், சிற்பம், இயல், இசை, நாடகம் ஆகிய கலைகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக கருதப்படுகின்றது. 
    • இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமன்று. அது சமூக பண்பாட்டு பொருளாதரத் தளத்தில் பல அர்த்தங்களை கொடுக்கின்ற ஒரு பிரதியாக உள்ளது. இசை என்பது சமூக வரலாற்று நினைவுகளாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகின்றது. அவற்றை இசை வெளிப்பாட்டு முறைமைகளில் நேரிடையாக காணலாம். நாட்டார் வழிபாட்டில் ஒரு நிகழ்வான சாமியாட்டம் எனும் நிகழ்வு தொல் சமூகத்தினரிடையே இருந்த போர் நடனத்தின் நீட்சியாகவே காணப்படுகின்றது.
    • தமிழர்களின் வாழ்வில், ஆடலும் பாடலும் என்பது இறைவழிபாட்டோடும், சடங்கியல் முறையிலும் அன்றாட வாழ்வோடு இணைந்த ஒன்றாக உள்ளது. தாலாட்டு பாடல் முதல் ஒப்பாரி வரை ஒவ்வொரு செயல்களும் இசையுடன் இணைந்தே உள்ளது. நாட்டார் கதைப் பாடல்களை, "கடந்த கால நினைவுகளுக்கும், நிகழ்கால நிகழ்வுகளுக்கும் உள்ள முரண்பட்ட தொடர்பு" என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளலாம். மதுரை வீரன், காத்தவராயன் கதை, கான்சாகிபு சண்டை போன்ற நாட்டார் கதைப் பாடல்களில் காணப்படும் சோக முடிவுகளை, கடந்த கால வரலாறு - மக்களின் நினைவுகள் - சமகால சாதிய ஆதிக்கம் ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி காணலாம்.
    • பிரெஞ்சு அறிஞர்  Jacques Attali தனது Noise: The Political Economy of Music என்ற நூலில் இசை என்பது கொலைச்செயலின் கலைவடிவமாக உள்ளது எனக் கூறுகின்றார். தொன்மை சமூகத்தில் இசை என்பது போர் பற்றிய நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு கலை வடிவமாக இசை உள்ளது. இசை என்பது ஒரு பண்பாட்டு அடையாளம். அது இனவரைவியல் கூறுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. ஒரு சமுகத்தின் தனிப்பட்ட மற்றும் கூட்டாண்மை நினைவுகள் இசை மூலம் உருவாக்கப்படுகின்றது.
    • இசைக்கு மொழி இல்லை, அது ஒரு உலகப்பொது மொழி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் என்றாலும் இசை இயல்பில் அப்படி இல்லை. இசை தனக்கென ஒரு மொழியையும், தளத்தையும் கொண்டுள்ளது. 
    • மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் படி, முதலாளியம் என்பது ஒரு பெரு அமைப்பு. பண்டம் என்பது அதன் அடிப்படை அலகு. இன்றைய சூழலில் முதலாளிய சந்தைப் பண்டங்களுள் ஒன்றாக இசை திகழ்கின்றது. இசைக்கலைஞன், இசைக்கருவி, இசை ஆகியவற்றிற்கு இடையே உள்ள உறவு என்பது வெறும் கலைத்தன்மை வாய்ந்தது மட்டுமன்று. அது சமூக எதார்த்தங்களை பிரதிபலிக்கின்றது. "மூலதனம் சார்ந்து இயங்குகின்ற தொழில் நிறுவனங்களை காட்டிலும் கலைத் துறையில் பல தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்." (Zeidler, 2000, Entertainment and Internet collision course ahead).
    • சாலை முனைகளிலும், தொடர் வண்டிகளிலும் பாடல் பாடி யாசகம் கேட்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இசையின் அடிப்படைத் தன்மைகளை உணர்ந்த ஒரு நல்ல அறிஞர்களாக திகழ்கின்றனர். அதன் நேரெதிராக இசையை அதிகாரத் தன்மையோடு பயன்படுத்தும் ஒரு ஏகாதிபத்யவாதியாக திரை இசை, மேடைக் கச்சேரிகள், தொலைகாட்சிகள் மற்றும் பண்பலை ஆகியன திகழ்கின்றன. 

வெள்ளி, 31 மே, 2013

தமிழ் ஊடகங்களில் உடையின் அதிகார அரசியல்

சமூகம் என்பது பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. இத்தன்மை சமூக வேறுபாடுகளின் வாயிலாக வெளிப்படுகின்றது. அகநிலை சார்ந்த அளவில், சமூக வேறுபாடுகளுக்கு சுயம் மற்றும் சுயம் சார்ந்த உரிமைகளும் அடையாளங்களும் காரணாமாக உள்ளது. ஒரு மனிதனின் சுய வெளிப்பாட்டு உரிமையாக உடை உள்ளது. உடை என்பது சமூக செயல்பாடுகளில் முக்கியமான ஒரு பண்பாட்டு பிரதியாக விளங்குகின்றது. மனிதனின் இன்றியமையாத அடிப்படை தேவைகளுள் ஒன்றாக உடை இருந்து வருகின்றது.
உடை என்பது மனிதனுக்கு குளிர் மற்றும் வெப்பங்களில் இருந்து ஒரு பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. புவியியல் நில அமைப்பு மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப உடையின் தன்மை மாறுபடுகின்றது. தமிழர்கள் உடையை ஆடை என்றும் கூறி வருகின்றனர். உடையணிதல் என்பது அலங்கரித்துக் கொள்ளுதல் மற்றும் தன் சுய இரசனையை வெளிப்படுத்துதல் ஆகிய செயல் பாடுகளைக் கொண்டுள்ளது. ஒரு சமூகத்தின் அறவொழுக்கங்கள், ரசனைத் தன்மை ஆகியன அவர்கள் உடுத்தும் உடையின் மூலமாக வெளிப்படுகின்றது. உடை என்பது சமூகத்தில், ஒருவனது சமூக மற்றும் பொருளாதார படிநிலைகளை அடையாளப்படுத்தும் ஒரு பிரதியாக உள்ளது.
உடையணிதல் என்பது சமூக - பண்பாட்டு செயல்பாடுகளுள் ஒன்று. பாலின பாகுபாடு, சமூக படிநிலை மற்றும்  தொழில் ஆகியவற்றை அடையாளப் படுத்துபவையாக உடைகள் இருந்து வருகின்றது.

உடையின் அதிகாரம்:
உடையணிதல் என்பது அணியும் உடைகளைப் பொறுத்து சமூகத்தில் மக்கள் மீது தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. தமிழக வரலாற்றில், தென் தமிழகத்தில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டம் உடையின் சாதீய அரசியலை நமக்கு தெளிவு படுத்துகின்றது. "ஆண்களாயினும் பெண்களாயினும் தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்தவர்கள் கணுக்காலுக்கு கீழே உடையணியக் கூடாது." (தொ.பரமசிவன், 1997, 50). இங்கு பிராமணர்கள் குறிப்பாக வைணவர்கள் அணியும் உடையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. "இறைவன் ஒருவனே ஆண்", "ஆணுக்கு கட்டுப்பட்டவள் பெண்" "இறைவனின் முன்பு அனைவரும் பெண்" ஆகியன வைணவ கருத்தியல். அதனால் தான் சென்ற நூற்றாண்டு வரை பிராமணர்கள் மீசை வைத்துக் கொள்வதில்லை. இதில் விதி விலக்காக பாரதியார் இறைவனை பெண்ணாக வர்ணித்து பாடல் இயற்றினார். இந்த கருத்தியல்களின் நீட்சியே கணுக்கால்களுக்கு மேலே அணியும் ஆடைகள்.
சங்க காலங்களில் தமிழர்கள் மேலாடை அணிந்ததாக தரவுகள் இல்லை. சில உயர்குலப் பெண்கள் மட்டும் முலைகச்சை அணிந்ததாக சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. போர் காலங்களில் ஆண்கள் 'கச்சை' எனும் ஆடையை அணிந்துள்ளனர். இந்த ஆடை தொடைக்கு மேலே கட்டப் பட்டிருக்கும்.(பழைய எம்.ஜி.ஆர். படங்களில் சிலம்புச் சண்டையின் போது அணிகின்ற ஆடை). இன்றும் கிராமங்களில் ஏதாவது கோபமாக பேசும் போது, "ஏண்டா இப்படி கச்ச கட்டிக்கிட்டு வர..." என்று பெரியவர்கள் கூறும் வழக்கத்தில் இருந்து இந்த செய்தியின் உண்மையை அறிந்து கொள்ளலாம்.
கிராமங்களில் ஆதிக்கச் சாதியினர் தவிர மற்றவர்கள் ஆடை அணியும் போது கணுக்கால்களுக்கு கீழே அணியக் கூடாது. இந்த வேறுபாடுகளை கிராமத்தில் மக்கள் வேட்டி அணிவதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த வேறுபாடுகளை முழுக்கால் சட்டை (பேன்ட்) ஓரளவு களைந்துள்ளது. கிராமத்தில் உடையின் மற்றொரு அதிகாரச் சின்னம் 'துண்டு'. தோளில் துண்டு அணிதல் என்பது உயர் சாதியினர்களுக்கு மட்டும் உரியது. உழைக்கும் மக்கள் துண்டினைக் கொண்டு 'சும்மாடு கோணுதல்' மூலம் சுமைகளை தூக்கிச் செல்லும் போது தலைக்கு பாதுகாப்பாக பயன்படுத்துகின்றனர். தலைப்பாகை கட்டுதல் என்பது சிறப்புக்குரிய ஒரு செயலாக கருதப்படுகின்றது. துண்டினை இடுப்பில் கட்டுவது பணிவின் அடையாளமாக கருதப் படுகின்றது. கோயில் சிற்பங்களின் மூலம் இந்த தகவலை அறிந்து கொள்ளலாம்.

அதிகாரத்தின் பண்பாட்டு உலகமயமாக்கல்:
உடையின் மீது அதிகாரத்தை நிகழ்த்தி வந்த ஒரு சமூகம் உலகமயமாக்கலுக்கு பின்னர் அது தனது ஆதிக்கத்தை நவீனம், நாகரீகம் என்ற பெயரில் வெளிப்படுத்தி வருகின்றது. காலம் காலமாக மேலாடை அணியாத பெண்கள் பல ஆண்டு போராட்டங்களுக்கு பின்னர் 'ரவிக்கை' அணியும் உரிமையை பெற்றனர். நாகரிக உடை என்ற பெயரில் Sleeveless உடைகளை அணியும் பெண்கள் பல ஆண்டு போராட்டத்தை நுகர்வு பண்பாட்டில் மறந்து விடுகின்றனர். உடைகள் என்பது படையெடுப்பு, போர் மற்றும் இடப் பெயர்வு மூலம் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு வருகின்றது.
துண்டு என்பது அதிகாரத்தின் குறியீடாக இருந்து வந்ததின் நீட்சி தான் இன்றுவரை  விழாக்களில் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் மரபு. இன்றைய நவநாகரீக சூழலில் துண்டு எனும் அதிகார மையத்தின் மறு பிரதிநிதித்துவத் தன்மைக் கொண்டதாக coat suit ஆடைகள் விளங்குகின்றன. துண்டை இடுப்பில் கட்டிக் கொள்வதின் மறு வடிவமே சட்டையை மடித்துக் கொள்ளுதல் (Tug in).
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா','குட்டிச் சுட்டீஸ்', 'நாளைய இயக்குனர்' போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள் அணிந்து இருக்கும் கோட் உடை என்பது ஒரு பண்பாட்டு ஏகாதிபத்தியமாக உள்ளதை அறிய முடிகின்றது.

வியாழன், 9 மே, 2013

சில


சில : Some ideas on IPLT20 Cricket

சமூகத்தில் விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்குத் தன்மையைத் தாண்டியும் அது சில பண்பாட்டுக் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. விளையாட்டு என்பது நாட்டார் விளையாட்டு, நிறுவனமயமாக்கப்பட்ட விளையாட்டு என இரு வடிவங்களில் உள்ளது. அவை வெளிப்படுத்தும் பண்பாட்டு அரசியல் என்பது மிகவும் அபாயகரமானதாக உள்ளது. "சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுகளின் வழியே வெளிப்படுத்துகின்றது. (தொ. பரமசிவன், 2009, 90). விளையாட்டுகளில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களின் மூலம் சமூக அசைவியக்கங்களை புரிந்து கொள்ள இயலும்.

சமூக அசைவியக்கங்களில் அடிப்படையாக வன்மமும், காமமும், பொருளாதாரமும் உள்ளது. இவற்றின் அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடே பண்பாடு(Repression of Expression). இவை மூன்றும் சமூக நியதிகளுக்கு உட்பட்டு தன் எல்லைகளில் இருந்து மீற தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. பண்பாடு என்பது அசைவற்ற தன்மையினைக் கொண்டுள்ளது. எத்தகைய சமூக புரட்சிகள் ஏற்படினும் அது தன்னை தனக்கே உரிய பாணியில் தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றது.

கிரிக்கெட் என்ற விளையாட்டு காலனி ஆட்சி காலத்தில் இந்தியாவில் பரவிய ஒரு விளையாட்டு. ஒரு சமூகத்தினை அடிமைப் படுத்துவதற்கு அரசும், இராணுவமும் மட்டும் அவசியமில்லை. கலை மற்றும் பொழுதுபோக்கு பண்பாட்டின் மூலமும் தொடர்ந்து அடிமைப் படுத்தலாம் என்பதற்கு கிரிக்கெட் ஒரு சிறந்த உதாரணம். இந்த கிரிக்கெட் விளையாட்டு இன்றைய பொருளாதார தளத்தில் மிக இன்றியமையாத ஒன்றாக திகழ்கின்றது. பண்பாட்டில் IPLT20 கிரிக்கெட் என்ற விளையாட்டு, அறிவு சார்ந்த கருத்தியல் தளத்தில் பெருந்திரள் மக்களை குருட்டுத்தனமானவர்களாக மாற்றி வருகின்றது.

சமூக உருவாக்கம் மற்றும் மாற்றம் பற்றிச் சிந்திப்பவர்கள் விளையாட்டுகளின் பங்கினைக் கூர்மையாக மதிப்பிட்டு அறிய வேண்டும். (தொ. பரமசிவன், 2009, 95). இன்றைய சமூக சூழலில் விளையாட்டின் பாத்திரம் என்பது நுகர்வுப் பண்டமாக உள்ளது. அவை மக்களின் கூட்டாண்மை நினைவுகளை முன்னெடுத்துச் செல்லுகின்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு இன்றைய சமூக சூழலில் மதத்தின் நவீன வடிவமாக வெளிப்படுகின்றது.

பண்டைய காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெரும் போது அந்நாட்டில் இருந்து செல்வங்களைக் கொள்ளையடித்து வந்தது மட்டுமின்றி அந்நாட்டு மக்களை அடிமையாக கொண்டு வருவதை மரபாகக் கொண்டிருந்தினர். அவ்வாறு பிற நாடுகளில் இருந்து அடிமையாகக் கொண்டு வரப்பட்ட பெண்கள் பலவித சுரண்டல்களுக்கு உள்ளாயினர். ராஜராஜசோழன் காலத்தில் இத்தகைய வரலாற்று குரூரங்கள் நடைபெற்றதை வரலாற்று தரவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் தேவரடியார் மரபு (Devadasi) தமிழகத்தில் மீண்டும் உருவாக ராஜராஜசோழன் முக்கிய காரணமானார்.

பண்பாடு என்பது பெண்களின் மூலம் தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப் படுகின்றது என தொ. பரமசிவன் குறிப்பிடுகின்றார். அதனால் தான் ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்த அந்நாட்டு பெண்களை அடிமைப்படுத்த அனைத்து ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்களும் கருதுகின்றனர். 

பெண்களை அடிமைப்படுத்த மதங்களும் வேதங்களும் ஒரு கருத்தியல் ஆயுதமாக விளங்கியது. அதனை நடைமுறை படுத்த இசை, நடனம் போன்ற கலைகள் உதவி வருகின்றது. தமிழகத்தில் அவ்வாறு உருவாகிய ஒரு மரபு தான் தேவரடியார் மரபு.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் 'கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்' (லெஸ்லி சி.ஒர், 2005, பக்கம் 22) என குறிப்பிடுகின்றார். இருப்பினும் தேவரடியார் என்பவர்கள் ஆடற் பெண்டிராக இருந்தனர் என்பதனை தமிழக கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சிலப்பதிகாரத்தில் ஆடல் வகைகளில் ஒன்றாக அல்லியம் குறிப்பிடப்படுகின்றது. யானை வடிவில் வந்த கம்சனை கொள்வதற்காக கண்ணன் ஆடிய நடனம் அல்லியம் என்பது சிலப்பதிகாரம் தரும் செய்தி. பதுமைகளின் வாயிலாக இவ்வாடல் நடைபெற்று வந்ததை புறப்பாடல் ஒன்றின் மூலம் அறியப்படுகின்றது. 
".....வரி வனப் புற்றே 
அல்லிப்பாவை ஆடுவனப்பு ஏய்ப்ப"  (புறநானூறு : 33:16)
பாவைகளை வைத்து ஆடும் கூத்து சங்க காலத்தில் இருந்ததை இதன் மூலம் அறியலாம். (நர்மதா , 2013, பக்கம்- 36)
தஞ்சைக்கோவில் பணியாளர் 1100 பேரில் 400 பேர் ஆடல் மகளிர் ஆவர். இவர்கள் தளிச்சேரிப் பெண்டுகள் எனவும் அழைக்கப்பட்டனர்.(தொ.பரமசிவன், 2012, 80)

பண்பாட்டின் உலகமயமாக்கல்:

பண்பாடு என்பது உலக மயமாக்கத்தினால் அது பூதமாக மீட்டுருவாக்கப் படுகின்றது. கோயில்களில் ஆடற் பெண்டிர் என அடிமைப் பட்டுக் கிடந்த பெண்களை சமூக விடுதலை இயக்கங்கள் போராடி மீட்டதை இன்றைய உலகளாவிய வணிக பொருளாதாரம் மீண்டும் தனது நிலைக்கு செல்ல துணை நிற்கின்றது.
கிரிக்கெட் என்ற விளையாட்டு ஒரு வணிகப்பண்டமாக திகழ்கின்றது. அது ஒரு மதம் போல தன்னை உருவெடுத்துக் கொண்டது. பண்டைய சமூகத்தில் நிலவி வந்த அடிமை முறைகளும், தேவரடியார் முறைகளும் இன்று விளையாட்டு வீரர்களின் ஏல முறை, Cheer Leaders எனும் நடன மங்கைகள் என்ற வடிவில் தன்னை மீண்டும் உயிர்பித்துக் கொண்டது. 


மேற்பார்வை நூல்கள்:

அறியப்படாத தமிழகம், தொ.பரமசிவன், காலச்சுவடு, 2009
விடுபூக்கள், தொ.பரமசிவன், கயல் கவின் பதிப்பகம், 2012
தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள்,லெஸ்லி சி.ஒர், விடியல், 2005
பதினோராடல்கள், க.நர்மதா, அரிமா நோக்கு, காலண்டிதழ், சனவரி, 2013

வெள்ளி, 1 மார்ச், 2013

செய்திகளுக்கு அப்பால்...


பெருந்திரள் நினைவுகளும் தமிழக விவசாயிகளும்

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
                           குறள் 1038
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

   மக்களின் பெருந்திரள் புத்தி என்பது தனித்தனி மனிதர்களிடையே சிதறுண்டிருக்கின்ற கருத்துகளின் ஒருங்கமைவு ஆகும். அது நேர்மறையான அல்லது எதிர்மறையான கருத்துகளின் மீதான நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்குகின்றது. மக்களின் நினைவுகள் என்பது இன்றைய சூழலில் நிறுவனமயமாக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. மக்களின் பெருந்திரள் நினைவுகளை ஊடகங்கள் நிரனயிக்கின்றன. ஊடகங்கள், தற்போது நாம் கேட்பதை, பார்ப்பதை, படிப்பதை வடிவமைக்கின்றன.(Forbes magazine, 7/16/2012).
  சமுக பிரச்சனைகள் என்பது, உண்மையில் அது ஒரு சமுக பிரச்சனையாக கருதப்படுவதில்லை. ஒரு சமுகம், தற்போதைய சமுக பிரச்சனை இன்னதென்று புரிந்துகொள்ள ஒரு பொதுத்தளம் தேவைப்படுகின்றது. தொல் சமுகத்தில் கூட்டு ஒருங்கமைவு என்பது பஞ்சாயத்து என்ற வடிவில் இருந்தது. இது அரசியல் பங்களிப்பு, வியாபாரம், சமுக நீதி என்ற தளங்களில் இயங்கி வந்தது. இது சமுக நலத்திற்கும் ஜனநாயகத்தினை உறுதி படுத்தவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. இன்றைய சூழலில் கூட்டு ஒருங்கமைவு என்பதை ஊடகங்கள் என்ற எதிர்மறையான வடிவில் உள்ளது. அரசியல் பங்களிப்பு, வியாபாரம், சமுக நீதி என்ற தளங்களில் ஊடகங்களும் இயங்குகின்றது. ஆனால் இது ஜனநாயகத்தினை சார்ந்து இயங்கவில்லை.
       சமுக அசைவியக்கத்தில் உற்பத்தி என்பது அடிநாதமாக விளங்குகின்றது. உற்பத்தி மற்றும் உழைப்பாளர்கள் மீது அக்கறை கொள்ளாத ஒரு சமுகம் உருப்பட வழியில்லை. இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகின்ற கிராமங்கள் பற்றிய சமுக அக்கறை இன்றைய ஊடகங்களுக்கு பெரிதும் இல்லை. உலகுக்கு அன்னம் அளந்த கைகள் நியாய விலைக்கடைகளில் விலையில்லா பரிசுப்பொருட்கள் வாங்க வரிசையில் காத்துக் கிடக்கின்ற அவலம் தான் இங்கு உள்ளதுபருவமழை பொய்த்தது, பொருளாதார மாற்றம் ஆகியன விவசாயிகளின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயம் காவேரி நதிநீரை நம்பியே உள்ளது. காவேரி நதிநீர் பிரச்சனை என்பதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பிரச்சனையாக ஊடகங்கள் உருவகப்படுத்துகின்றன. இதனை சமுக பிரச்சனையாக கருதாமல் இரு மாநில அரசியல் பிரச்சனையாக சித்தரிக்கப் படுவது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தாது.